அஷ்டோத்திரம் – முன்னுரை
ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திர சத நாமாவளி
அர்சனம் என்ற சொல் ‘அர்ச்’ என்ற பகுதியிலிருந்துப் பிறந்தது. ‘அர்ச்’ என்பதன் பொருள், வழிபாடு செய்தல் என்பதாகும். ஸ்ரீமத் பாகவதத்தில் பிரகலாதன் கூறும் ஒன்பது வகைப்பட்ட பக்தி நிலையில் அர்ச்சனம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஓம் என்ற பிரணவ ஒலியுடன் இல்லாத எந்த மந்திரமும் அல்லது இறை நாமமும், குண்டு இல்லாத துப்பாக்கிப் போலானது.
அஷ்டோத்தரஸத நாமங்களையோ அல்லது அஷ்டோத்தர ஸஹஸ்ர நாமங்களையோக் கூறும்போது, நாமங்களை ‘ஓம்’ என்ற பிரவணத்தோடு ஆரம்பித்து ‘நம:’ என்னும் சொல்லோடு முடிக்க வேண்டும். ‘ஓம் விநாயகாய நம: ஓம் விக்னராஜாய நம: ஓம் கணநாதாய நம:” என்று கூற வேண்டும். ‘விநாயகாய நம: ஓம்; விக்னராஜாய நம: ஓம்; கணநாதாய நம: ஓம் என நாமாவளி ஓம்காரத்தில் முடியக்கூடாது.நாமாவளி எப்போதும் ‘நம:’ எனும் சொல்லோடு முடிய வேண்டும்.
‘நம’ என்பதன் நேரிடையான பொருள் வணக்கம் என்பதாம். ‘நம’ எனும் சொல் ‘நம்’ என்னும் பகுதியிலிருந்து பிறந்தது. ‘நம்’ என்பதன் பொருள் தாழ்ந்து குனிதல் என்பதாம். வணக்கம் செய்யும் செயலில் ஒருவன் தாழ்ந்து குனிவதால் ‘நம:’ எனும் சொல் வணக்கம் எனப் பொருள்படுகிறது. இதன் தத்துவக் கருத்து என்னவெனில் ‘நமம’ என்பதாம். ‘ந’ என்றால் இல்லை என்று பொருள். ‘மம’ என்றால் என்னுடையது என்று பொருள். நமம-என்னுடையதில்லை, என்னுடையதில்லை என்று பகவானை விளித்துக் கூறி எல்லாம் பகவானுடைய அருள் என்னும் சிறப்பையும், நம்முடையதில்லை என்னும் அஹங்காரத்தின் இறப்பையும் நினைவுபடுத்திக் கொள்கிறோம் .
“ஓம்” விநாயகாய நம: ஓம் விக்னராஜாய நம:” என்று கூறும்போது, நாமத்தோடு நான்காம் வேற்றுமை உருபான ‘ய’ என்பது சேர்ந்து வருகிறது. ‘ய’ என்பது பாணினி கூறியபடி ‘ஏ’ எனும் நான்காம் வேற்றுமை உருபின் திரிபாகும். ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கும் ஏ, ய என்னும் நான்காம் வேற்றுமை உருபுகள், தமிழில் கு என்னும் நான்காம் வேற்றுமை உருபைக் குறிக்கின்றன. ‘விநாயகாய நம:” என்றால் விநாயகருக்கு வணக்கம் என்று பொருள்.
பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவின் பக்தர்களில் பலர் பகவான் என்ற சிறப்புப் பெயரை பாபாவின் திருநாமத்துடன் எப்போதும் சேர்த்துச் சொல்கின்றனர். பகவான் என்ற சொல்லின் பொருள் என்ன? பகவான் யார்? என்பதன் விளக்கம் விஷ்ணு புராணத்தில் சொல்லப்படுகிறது.
‘ஐஸ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸ்ஸ்ரீய: ஞான வைராக்ய யோஸ்சைவ ஷண்ணாம்பக இதீரணா’
யார் ஸர்வலோக பிரபுத்வம் (ஐஸ்வர்யம்), வீரம் (வீர்யம்- அஞ்சாமை), புகழ் (யஸ:) செல்வம் (ஸ்ரீய:), ஞானம், பரிபூரண வைராக்கியம், ஆகிய ஆறு கல்யாண குணங்களைப் பெற்றுள்ளாரோ, அவரே பகவான் ஆவார். ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா அவர்கள் இந்த ஆறு குணங்களையும் பெற்றுள்ளார் என்பதை உறுதியாகக் கூறமுடியும். (உண்மையில் ஸ்ரீ ஸத்ய ஸாயி பொன் விழா மலரில் ‘அவதாரம்’ என்ற கட்டுரையை நோக்குக).
ஸ்ரீ எனும் மங்களச் சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. முக்கியமாக, செல்வம், நற்கீர்த்தி, தெயிவீகத்தன்மை, திருமகள் என்னும் பொருள்கள் உள்ளன. தெய்வம், தெயிவீகத்தன்மையுடையவர்கள் – இவர்கள் நாமத்திற்கு முன்பு ‘ஸ்ரீ’ எனும் சொல்லைச் சொல்வது தொன்மையான மரபு.
ஓம்:
“பிரபஞ்சத்தின் இதயத்திலும் உன்னுடைய இதயத்திலும் எதிரொலிக்கிற ஓம் என்ற ஆதிமுதல் பிரணவத்தை உற்றுக் கேள். -பாபா
இதுவே பிரம்மத்தின் அடையாள இசையாகும். எனவே அது நம் சுவாமி பாபாவின் அடையாள இசையாகவும் உள்ளது.
ஸ்ரீ :
அனைத்து அம்சங்களிலும்/ தன்மைகளிலும் கீர்த்தி, புகழ்
நமஹ:
‘நம’ என்பதன் பொருள் தாழ்ந்து குனிதல் என்பதாம். பத்து விரல்களையும் சேர்த்து இரு கரம் கூப்பி வணங்குதல் என்பது, உள்ளும் புறமும் உள்ள பத்து புலன்களாலும் இறைவனைப் பணிவதைக் குறிக்கிறது. நம் மனதளவிலான சரணாகதியை வெளிப்படுத்துவதாகும்.
இதன் மற்றொரு தத்துவக் கருத்து என்னவெனில் ‘நமம’ என்பதாம். ‘ந’ என்றால் இல்லை என்று பொருள். ‘மம’ என்றால் என்னுடையது என்று பொருள். நமம- என்னுடையதில்லை, என்னுடையதில்லை என்று பகவானை விளித்துக் கூறி எல்லாம் பகவானுடைய அருள் என்னும் சிறப்பையும், நம்முடையதில்லை என்னும் அஹங்காரத்தின் இறப்பையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
(ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ், ப்ரைமர் – 11 – ஸ்ரீ சத்ய சாய் புக்ஸ் & பூப்பிளிகேஷன்ஸ் டிரஸ்ட்)
தொடர்ந்து சத்ய நாராயண விரத பூஜை நடத்தி, ‘பாபா’ வினை மகனாகப் பெறும் பாக்கியம் ஈஸ்வராம்பாவிற்கு கிடைத்தது. எனவே பிறந்த குழந்தைக்கு ‘சத்யநாராயணா’ என்ற பெயரும் சூட்டினர். பதினான்கு வயது வரை சத்யா என்று அழைக்கப்பட்ட பாபா, தான் அவதாரம் என்று அறிவிக்க தக்க நேரம் வந்து விட்டது என்று உணர்ந்து, தான் ‘ஸாய் பாபா’வே தான் எனவும், மீண்டும் அவதரித்துள்ளதாகவும் தெரிவித்தார். பக்தர்கள் அவரை ஸாய்பாபா / சத்யஸாய்பாபா என அறிவர்.
ஸாயி என்றால் தலைவன், சர்வேஸ்வரன் என்றும் பொருள் உண்டு. ஆயி என்றால் அன்னை. பாபா என்றால் தந்தை . எனவே ஸாயிபாபா என்றால் ‘தலைவன்’, அன்னை, தந்தை’ என்றும் பொருள் உண்டு.
(ஆதாரம்: அஷ்டோத்திர சதநாம மாலை – ஆசிரியர் – திரு.என். கஸ்துரி.)
பக்தி சிரத்தையுடன் ஒரு முறை நமஸ்காரம் செய்தால்கூட போதுமானது. ஆனால் அவ்வாறு நீங்கள் செய்வதில்லை. தன்னியல்பாக, யந்திர கதியில், அசிரத்தையுடன் நமஸ்காரம் செய்வது எதற்காக?
பத்து விரல்களைச் சேர்த்து இரு கரம் கூப்பி நமஸ்காரம் செய்யும்போது, ஐந்து ஞானேந்திரியங்கள் மற்றும் ஐந்து கர்மேந்திரியங்களால் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவனின் பாதத்தில் சமர்ப்பிப்பதாக எண்ணி உணர்ந்து நமஸ்காரம் செய்யுங்கள்.
மேலும் நமஸ்காரம் செய்வதன்மற்றொரு நோக்கம், இறைவனின் பாதத்தைத் தொட்டு, ஸ்பரிசனம் செய்வதற்காகவே. மாயாசக்தி மற்றும் மகாசக்தியின் நேர்முனை எதிர்முனை சக்திகள் ஒன்று சேர்ந்து, அதனால் வெளிப்படும் ஆன்மீக சக்தி / மின்சாரம், உன்னுள் செல்ல வேண்டும்.- பாபா
[ஆதாரம்: www.saidarshan.org]