த்வன்னாம
த்வன்னாம
கேட்பொலி
வரிகள்
- த்வன்னாம கீர்த்தன ரதாஸ்தவ திவ்யநாம
- காயந்தி பக்தி ரஸபான ப்ரஹ்ருஷ்டசித்தா:
- தாதும் க்ருபாஸஹித தர்ஶனம் ஆஶுதேப்ய:
- ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்.
விளக்கவுரை
உன்னுடைய நாமஸங்கீர்த்தனம் செய்வதில் விருப்பமுள்ளவர்கள், பக்தி ரஸத்தைப் பருகியதால் மிகவும் மகிழ்ந்த உள்ளங்கள் உடையவர்களாய், உன்னுடைய தெய்வீகமான நாமங்களைப் பாடுகிறார்கள். அவர்களுக்கு, கருணையுடன் கூடிய தரிசனம் அளிப்பதற்கு எழுந்தருள்வாய். உனக்குக் காலைப்பொழுது மங்களகரமானதாயிருக்கட்டும்.
பதவுரை
த்வந் | உன்னுடைய |
---|---|
நாம | நாமங்களை |
கீர்த்தன | கீர்த்தனம் செய்வதில் |
ரதா: | விருப்பமுள்ளவர்கள் |
தவ | உன்னுடைய |
திவ்ய | தெய்வீகமான |
நாம | நாமங்களை |
காயந்தி | பாடுகிறார்கள் |
பக்திரஸ | பக்திரஸத்தை |
பான | பருகியதால் |
ப்ரஹ்ருஷ்ட | மிகவும் சந்தோஷமுள்ள |
சித்தா: | உள்ளங்கள் உடையவர்களாய் |
தாதும் | கொடுத்துப்பதற்கு |
க்ருபாஸஹித | க்ருபையுடன் கூடியவரே |
தர்ஶனம் | தரிசனத்தை |
ஆஶு | விரைவில் |
தேப்ய: | அவர்களுக்கு |
த்வன்னாம சுலோகம் :
விளக்கம்
இந்த வரிகளில் சாதனை மற்றும் நாம சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். குழுவாக இறைவனது புகழைக் கூறும் பக்தி பாடல்கள், உண்மையான பக்தியுடனும், பாவத்துடனும், ராகத்துடனும், தாளத்துடனும் பாடப்படும் போது நமது பக்தி இனிமையான தாரையாகப் பொழிகிறது. நம்முள் இருக்கும் உயரிய எண்ணங்கள் மேலே துளிர்த்தெழுந்து நமது இதயத்தில் முகிழ்க்கிறது.
தெய்வானுபவத்தில் திளைத்து, நாம் சாயி கிருஷ்ணா, சாயி ராமா அல்லது வேறு வடிவம் கொண்ட ஒரு தெய்வத்தின் குணங்களையும், லீலைகளையும் உரக்கப் பாடுகிறோம், எல்லா சாதனங்களிலும் எளிதானது நாம சங்கீர்த்தனம். கூட்டாகப்பாடும்போது ஒரு நல்லதிர்வும் உண்டாகும்.மேலும் நமதுகுருவின் வடிவத்தை நாம் தியானம் செய்வதற்கும் வழி ஏற்படுகிறது.
இதற்கு முன் பகுதியில் நம்மை நாம் உள்ளார்ந்த நிலையில் எழுப்பிக் கொள்வதைப் பற்றிப் பார்த்தோம். அறிவு என்ற சூரியன், அறியாமை என்ற இருளை நீக்கினான். இங்கு குரு என்பவர் அவருடைய அருள், ஸ்பரிசம், இவற்றால் நமது அறியாமையைப் போக்கி ஸாதனையைப் பெருக்குவதற்கு ஒரு உந்துதல் தருகிறார்.
இங்கே நாம், பஜனையில் கூட்டாக நமது நினைவு, நடத்தை, இவற்றை ஒருமுகப்படுத்துகிறோம். நாம சங்கீர்த்தனத்தின் மூலம், ’பிராணமய கோசம்’ என்ற பாதையை நோக்கிப் போகிறோம். ’நாம ஸங்கீர்த்தனம்’ நீண்டும், குறுகியும் வருகிற போது நமது மூச்சும் ஒரு குறிப்பிட்ட அசைவில் முறையாகிறது.
கதை-1
ஒரு முறை நாமதேவரும், ஞானதேவரும் ஒரு காட்டு வழியே சென்றார்கள். அவர்கள் தாகத்தால் களைப்புற்று இருந்தனர். வழியில் ஒரு கிணறு இருந்தது. தண்ணீரோ, மிகவும் ஆழத்தில் இருந்தது. மேலும் கிணறு செங்குத்தாகவும் இருந்தது. இப்போது அவர்கள் நீர் பெறுவது எவ்வாறு? ஞானதேவர் ஒரு ஞானி. அவர் யோக சக்தி மிக்கவர். அவர் ஒரு பறவையாக மாறி கிணற்றுள் சென்று நீர் அருந்தித் தாகத்தை தீர்த்துக் கொண்டார். நாமதேவரோ இப்படிப்பட்ட யோக சக்தி இல்லாதவர் ஆனால், ஆழ்ந்த இறைபக்தி உடையவர். அவர் தாகத்தால் வருந்திய போதும் இறை நாமத்தைச் சொல்வதிலே ஆழ்ந்திருந்தார். இறை அன்பில் ஆழ்ந்து அந்த இனிமையில் தன்னை மறந்து இறை அருளில் ஆழ்ந்தார். எனவே கிணற்றின் அடியிலிருந்த நீர், தானாக மேலெழும்பி நீர் ஊற்றாகப் பீறிட்டு அவர் தாகத்தைத் தீர்த்தது. நாமதேவர் தண்ணீரை பெற எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. ஞானி தன் யோக சக்தியை நம்பினார். ஆனால், பக்தரோ இறைவனை நம்பி தானாகவே தண்ணீரைப் பெற்றார். இறைநாமம் அத்தகைய சக்தி வாய்ந்தது. பக்தரின் தேவையையும் விருப்பத்தையும், அவர் தம் வீட்டுக் கதவைத் தட்டி, இறைவன் தானாவே வழங்குகிறார்.கதை-1
2. ஒருவன் எண்ணப்படியே அவன் உருவாகிறான்.
ஒருநாள் ஒரு குளவி, ஒரு புழுவை எடுத்து மண் கூட்டில் புதைத்து வைத்தது. பின்பு ஒவ்வொரு நாளும் அந்தக் கூட்டருகே அமர்ந்து கொஞ்ச நேரம் ரீங்காரம் செய்து, அந்த துவாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும். அந்த துவாரத்தின் வழியாகக் குளவி சுற்றிக் கொண்டேயிருந்ததைக் கண்ட புழு அஞ்சியது. தன்னைக் குளவி எந்நேரமும் கொட்டலாம், தான் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று புழு அஞ்சியது. இறுதியில் புழு தன் அழகில்லா உருவத்தை இழந்து, ஒரு அழகான வண்டாக மாறியது.
”இது போலவே ஜீவன், ஆத்மாவாக (or) பிரம்மனாக தன் தவ வலிமையால் மாறும். ஐீவன் தன் புலன் உணர்வுகளை இழந்து, தன் கர்வத்தையும், தன் தனித்தன்மைகளையும், தவத்தால் விட்டு விட்டு, உலக மாயையையும் துறந்தால் விடுதலை பெறும். அதாவது தனது உறவு மறுப்பு, தன் முனைப்புச்செயல்கள் இவை யாவும் மாறும். குறுகிய பார்வை, எண்ணம் உணர்வு, மனம் இவையெல்லாம் அழிந்து, ஆன்ம உணர்வுபெறும். மெய்யுணர்வு, உயர்பார்வை வரும். அவனது எண்ணம், வார்த்தை, செயல் இவற்றில் தெய்வீக உணர்வு விளையும். அவனிடம் ஆன்மீகம் தோன்றி, அவனது உடல், மனம், இவற்றில் ஒரு வகை ஒருமைப்பாடு தோன்றும். மனிதன் தெய்வ ஒளி பெறுவான். “மனிதன் தேவனாகிறான்” என்று பாபா கூறுகிறார்.
3. கிருஷ்ணனிடம் துரௌபதி காட்டிய ஆழ்ந்த பக்தி
துரௌபதியிடம் கிருஷ்ணன் காட்டிய அன்பைப் கண்டு, ருக்மணியும், சத்யபாமாவும் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு நாள் துரௌபதியின் கூந்தலைத் தன் இரு மனைவியரையும் வாரிவிடுமாறு கிருஷ்ணன் ஆணையிட்டார். ஆனால் அந்த நாளோ கௌரவர்கள் தண்டிக்கப்படும்வரைத் தன் கூந்தலை வாரி முடிப்பதற்கில்லை என்று அவள் விரதம் ஏற்றிருந்த காலம். அப்போது கிருஷ்ணனின் மனைவியர், துரௌபதியின் கூந்தலை வாரத் தொடங்கிய போது, அவளது ஒவ்வொரு முடியிலும் “கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று ஒலி எழும்புவதைக் கேட்டார்கள்.
ஹனுமனின் ஒவ்வொரு முடியும் “ராம, ராம” என்று ஒலித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. ஆகவே நாமும் கூட ஸ்ரீஸாயியை நேசித்தால், எப்போதும் “ஸ்ரீஸாயி, ஸ்ரீஸாயி” என்று சொல்ல வேண்டும்.
ஸர்வதா- எப்பொழுதும் ஸர்வ காலேஷு –எல்லா நேரமும் ஸர்வத்ர- எல்லா இடத்திலும் ஹரிசிந்தனம்- தெய்வ சிந்தனையில் இருப்பது.