குடும்பம்

Print Friendly, PDF & Email
குடும்பம்

ஸ்ரீ சத்யசாயிபாபா பிறக்க வேண்டுமென்று தேர்ந்தெடுத்த ராஜு குடும்பம் துறவி வெங்காவதூதர் காலத்திலிருந்தே பக்திக்கு பெயர் பெற்றது.

அவரது பாட்டனார் திரு.ரத்னாகரம் கொண்டமராஜு 116 வருடங்கள் வாழ்ந்தார். மென்மையான அமைதியான மனிதர். இசையிலும் நடிப்பிலும் வல்லுனர். சொந்தமாக நாடகங்கள் எழுதுவதிலும திறமை பெற்றவர். லேபாக்ஷி வகை ராமாயணம் முழுவதையும் மனப்பாடமாக அறிந்தவர்.

லேபாக்ஷி என்ற ஊரிலிருந்து கவிஞர் இராமாயண நிகழ்சிகளை தொகுத்து தொடர் நிலைச் செய்யுட்களாகப் பாடியுள்ளார். இவற்றை மனப்பாடமாக அறிந்த கொண்டமராஜு லட்சுமணனாக நடிப்பதில் திறமை மிக்கவர். அவ்வாறு நடிக்கும் போது அவர் காட்டிய உறுதியான பக்தியும், சரணாகதியும் பார்த்த அனைவர் உள்ளத்தையும் தொட்டன. லட்சுமணனாக நடிக்கவேண்டுமென்ற இடைவிடாத வேண்டுகோள்கள் அவருக்கு வந்த வண்ணமே இருந்தன.

ராஜு குடும்பத்தினர் தான் கோபாலஸ்வாமி கோவிலைக் கட்டி கிராமத்தினருக்கு அளித்தனர். தவிர பக்தி மிகுந்த மரியாதைக்குகந்த பாட்டனார் கொண்டமராஜு கண்ணனின் தேவியான சத்யபாமாவிற்கு கோவில் ஒன்று எழுப்பினார்.

திரு கொண்டமராஜுவிற்கு பெத்த வெங்கப்பராஜு, சின்ன வெங்கப்பராஜு என்று இரு புதல்வர்கள் இருந்தனர். இருவருமே தமது தந்தையின் இசை அறிவும், நாடகவியல்பும், இலக்கியத்திறமையும் கைவரப் பெற்றிருந்தனர். அவர்களில் பிற்காலத்தில் சாயிபாபாவின் தந்தையாக இருக்கும் பெரும்பேறு பெற்ற மூத்தமகன் தூரத்து உறவினரான சுப்பராஜுவின் புதல்வி ஈஸ்வரம்மாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தெய்வீகத் திருமணத்தின் பயனாக சேஷமராஜு என்ற மகனும், வெங்கம்மா, பர்வதம்மா என்ற இரண்டு புதல்விகளும் பிறந்தனர்.

திரு கொண்டமராஜுவின் மனைவி லக்ஷ்ம்மாவுக்கு இறைவனதுஅருளாசிகளை அடைய வேண்டுமென்ற தீராத ஒரே ஒரு ஆசை இருந்தது. அது நிறைவேற வேண்டுமென்பதற்காக மறைநூல்கள் விதித்தபடி புனிதமான உண்ணானோன்புகள், விரதங்கள், கண்விழித்து நியமத்துடன் இறைவழிபாடு, இவற்றை மிகுந்த பக்தியுடன் முறை தவறாது நெறிவழுவாது கடைபிடித்துவந்தார்.

பாபாவின் பாட்டனாருக்கு வயது ஆக ஆக, நாடகங்களை எழுதவோ அவற்றில் நடிக்கவோ இயலவில்லை. அப்போது கிராமத்துக் குழந்தைகள் அனைவரையும் வரவழைத்து அவர்களுக்குக் கடவுளைப் பற்றியும், அவதாரங்களைப் பற்றியும், அடியார்களைப் பற்றியும் கூறி மகிழ்வார். குழந்தைகளும் அவர் படுக்கையைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு ஒருபொழுதும் அகலுவதில்லை. ஏனெனில் கதைகளிலே தம்மை மறக்கும் வகையில் அவற்றில் வரும் பாத்திரங்களையும், வீரவாழ்க்கை வரலாறுகளையும், தாமே பாடி நடித்து அவர்களை மகிழ்விப்பார்.

இத்தகைய எளிய பக்தி நிறைந்த குடும்பத்தில் தான் சாயிபாபா பிறந்தார்.

சைவ உணவு மட்டுமே உண்பதில் கொண்டமராஜு மிகத் தீவிரமாக இருந்தார். அவர் தமது சின்னப் பேரன் சத்யாவிடம் விசேஷ அன்பு கொண்டிருந்தார். சத்யா அசைவ உணவு சமைக்கும் இடத்திலேயே இருப்பதில்லை. ஏழு வயதிலேயே புத்திக் கூர்மையும் கற்பனை வளமும் மிகுந்த சத்யா தன் தாய், புதல்விகளின் உதவியுடன் சமைக்கும் நேரத்தைவிடக் குறைவான நேரத்தில் சோறு கறி வகைகள் சட்னி போன்ற உணவு வகைகளை மிகுந்த சுவை கூட்டி சமைத்து விடுவான்.

கிழவனார் மகிழும் வண்ணம் சிறுவன் சத்யா வசீகரமான குரலெடுத்துப்பாடுவான், நடிப்பான், நாடகங்களும் எழுதுவான்.

பிற்காலத்தில் கொண்டமராஜுவின் பேரனின்(பாபா) அருளாசிகளை நாடித் தேடி வந்த பக்தர்கள் சென்று கொண்டமராஜுவையும் கண்டபோது கடவுளே தன் குடும்பத்தில் அவதரித்திருக்கிறார் என்று அறிந்த மகிழ்சியில் அவர் கண்கள் மின்னுவதை கண்டனர். தமது குரு வெங்காவதூதர் கூறியதை நினைவுபடுத்தி கூறுவார். பூதேவி கண்ணீர் வடிக்கிறாள். ஸ்ரீமன் நாராயணன் வருவார். நீ அவரைக் காண்பாய். அவர் உன்னை நேசிப்பார். அவ்வாறே நடந்தது. ஸ்ரீமன் நாராயணன் சத்யசாயியாக அவர் வீட்டுக்கு வந்து அளவற்ற மகிழ்ச்சியாலும் ஆனந்தத்தாலும் நிறைந்திருக்கச் செய்தார்.

இறைவனது சேவையில் வாழ்ந்த இந்த பரிபூரண வாழ்வு 1950ல் முடிவுற்றது. வயது முதிர்ந்த போற்றுதற்குரிய இந்த கிழவனார் இராமாயணத்திலிருந்து பாடல்களை உரத்த குரலெடுத்து தனக்குதானே பாடிக் கொண்டிருக்கையிலேயே அவரது உயிர் உடலை விட்டுப் பிரிந்து இறைவனுடன் கலந்தது.

[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன