ஸ்ரீ சத்ய சாயி எஜூகேர் (ஸ்ரீ சத்யசாய்விழுக்கல்வி) – பஞ்ச பூதங்கள்
‘மனித மேம்பாட்டுக் குணங்களை நிலை நிறுத்துவதற்காகவே பரிசாக அளிக்கப்பட்டது இந்த உடல்’ என்ற உறுதியான நம்பிக்கையை வளர்த்துக்கொள். மனிதனின் ஒவ்வொரு செயலிலும், ஒழுக்க நெறிமுறைகள் அடித்தள நீரோட்டமாக இருக்க வேண்டும். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தெய்வீகப் பேருரைகள் -22-11-1998.
எஜுகேர் அல்லது விழுக்கல்வி என்பதன் பொருள் உள்ளிருப்பதை வெளியே கொண்டு வருவதாகும். மனித மேம்பாடுகள் சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை இவை அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கின்றன. எஜூகேர் என்பது மனித மேம்பாடுகளை வெளியே கொண்டு வருதல் எனும் பொருள் கொண்டது. வெளியே கொண்டு வருதல் என்றால், அவற்றை செயலில் கடைப்பிடித்தல் என்பதாகும்.
பகவான் ஸ்ரீசத்ய சாயி பாபா கூறுகிறார்-“இந்தப் பேரண்டம் முழுவதும் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. ஒலி, தொடுதல், வடிவம், சுவை, மணம் ஆகியவை,அவற்றின் தன்மைகள். இவை அனைத்தும் “சத்-சித்- ஆனந்தத்திலிருந்து வெளி வந்தவை”. மனிதனுக்கும் பஞ்ச பூதங்கள், அதன் ஐந்து குணங்கள், ஐந்து புலன்கள், ஐந்து மனித மேம்பாடுகள் ஆகியவைகளுக்கு இடையே இயல்பாகவே இசைவான தொடர்பு உள்ளது.”