விழாவின் உட்கருத்து

Print Friendly, PDF & Email
கோர்தாத் ஸல் விழா (ஜரதுஷ்டிரரின் பிறப்பு)

பார்ஸி மதத்தை ஸ்தாபித்தவர் தீர்க்கதரிசி ஜரதுஷ்டிரர் ஆவார். ஜரதுஷ்டிரரின் வைதிக குடும்பம் ‘ஸ்பிதாமா’ எனப்படும். இவர் ஈரானில் வேப்தைதி நதிக்கரையில் ‘ரே’ என்னும் நகரத்தில் பாக்ட்ரியா என்னும் இடத்தில் வருடத்தின் முதலாவது மாதமான ‘ப்ரவர்தின்’ மாதத்தின் ஆறாவது நாளில் (அதாவது கொர்தாத் நாளில்) தக்தோவா என்பவளுக்கும் பௌருஷஸ்ப என்பவருக்கும் பிறந்தார். இவர் பிறந்தவுடன் பேரொளி ஒன்று ‘ரே’ நகரத்தைச் சூழ்ந்து பரவியது. அறியாமை இருளைப் போக்கி அன்பொளியைப் பரப்பி அழியாத ஞானத்தைப் போதிக்க வல்ல அமரத்துவம் உடைய ஒருவன்.

அவதரித்துள்ளான் என்பதை இவ்வொளி தெரிவித்தது. பெற்றோர் இக்குழந்தைக்கு ஜரதுஷ்டிரர் என்று பெயர் சூட்டினர். இச்சொல்லுக்கு ‘பொன்போல் பிரகாசிக்கின்ற நட்சத்திரம்’ என்பது பொருள். இவரது பிறப்பால் பறவைகளும், விலங்குகளும் இயற்கையில் காணும் இதரப் பொருள்களும் கூட ஆனந்தம் கொண்டன என்று பார்ஸிமத நூல்கள் கூறுகின்றன.

எப்படியிருப்பினும், துன்மார்க்கர்கள் இந்தத் தெய்வீகக் குழந்தை தங்கள் அழிவுக்குக் காரணமாகலாம் எனப் பயந்தனர். இவர்களின் தலைவரான துராஸரன் குழந்தையைக் கொல்வதற்குப் பல திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டான். ஆனால் ஆண்டவனான அஹுரா மஸ்தாவின் அனுக்கிரஹத்தால் குழந்தை தப்பிப் பிழைத்தது. ஜரதுஷ்டிரர் அறிவும் பக்தியுமுடைய பையனாக வளர்ந்தார். துராஸரனுடைய ஆளொருவன் மருத்துவன் போல் நடித்து அவருக்கு விஷத்தைக் கொடுக்க முயற்சி செய்தான். ஆனால் ஜரதுஷ்டிரர் எளிதாக அவர்களுடைய சதியைப் புரிந்து கொண்டு மருந்தை ஏற்றுக் கொள்வதற்கு மறுத்துவிட்டார். ஏழாவது வயதில் ஜரதுஷ்டிரர் ‘போர்ஜின் குர்ஷ்’ என்பவரிடம் கல்வி கற்க அனுப்பப்பட்டார். அவரிடமிருந்து கற்க முடிந்ததை எல்லாம் கற்றுக்கொண்டார். அவர் ஜரதுஷ்டிரருக்கு ‘மஸ்தாயஸ்னின்’ மதப்படி தீக்ஷை செய்து வைத்தார். ஜரதுஷ்டிரரின் பதினைந்தாம் வயதில் புனித நூல் (பூணூல்) அல்லது குஷ்டி அணிவிக்கப்பட்டது. தமது இருபத்தைந்தாவது வயதில் மனித வாழ்வின் நோக்கத்தையும் பொருளையும் அறிவதற்கும் புரிந்து கொள்வதற்காகவும் ஒரு தனியிடத்திற்குச் சென்று பத்து வருடங்கள் தவம் புரிந்தார். ஒரு மலையுச்சியில் ஒரு இடையனுடைய குடிசைக்குப்.

பக்கத்தில் உள்ள குகை யில் தங்கி தவம் புரிந்தார். அவர் தவம் புரிந்த போது பக்கத்திலுள்ள இடையன் அவருக்கு பாலும் ரொட்டியும் கொடுத்து உதவினான். இத்தவத்தின் போது பார்ஸி மதத்தினருடைய புனித நூல்களான “கதங்கள்” அவருடைய புனிதமான அறிவில் வெளிப்பட்டன. ஆண்டவனிடமிருந்து மிகத் தெளிவாக புலன் கடந்த ஞானத்தை நாம் பெற்றோம் என்பதை உறுதி செய்து கொண்டபின் மலைக்குகையை விட்டு அவர் இறங்கினார். மஸ்தாயஸ்னின் மதத்தில் பரவியிருந்த தவறான எண்ணங்களைப் போக்கி தெளிவான ஞானத்தை நல்கும் தம் பணியை ஆரம்பித்தார்.ஜரதுஷ்டிரர் அரசன் விஷ்டாஸ்ப் அவையை அணுகினார். அவ்வரசன் ஜரதுஷ்டிரரின் போதனைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததும் மஸ்தாயஸ்னின் (பார்ஸி) மதம் ஈரானின் தேசிய மதமாக ஆகியது.

கொர்தாத் ஸல் என்னும் நாளன்று ஜரதுஷ்டிரர் மனித குலத்துக்கு நல்கிய உபதேசங்களை பார்ஸி மதத்தினர் நினைவு கூர்ந்து, அவற்றைக் கடைப்பிடிப்பதற்கு முயற்சி செய்து அவரை வழிபடுகின்றனர். ஜரதுஷ்டிரர் நல்கிய உபதேசங்களில் ‘அமேஷா ஸ்பென்டா‘ அல்லது ‘அழியாத புனிதங்கள் ஏழு‘ என்னும் தத்துவத்தை பார்ப்போம்.

பார்ஸி மதத்தின் படி அஹுர மஸ்தா என்பது கடவுளைக் குறிக்கும் நாமம் ஆகும். அமேஷா ஸ்பென்டா என்றால் ஆண்டவனான அஹுரா மஸ்தாவின் ஏழு வகை அம்சங்கள் என்பது பொருள். முதல் அம்சம் “அஹுர மஸ்தாவே” ஆவார். அஹுர மஸ்தா பரம ப்ரபு, பரம்பொருள். அவர் எல்லா உள்ளங்களிலும் உறைகிறார். அவர் ஒவ்வொருவரிலும் அபுவாக இருக்கிறார். எல்லா உண்மைகளின் உண்மையாக இருக்கிறார். நிலையான உண்மை நம் எண்ணங்களிலும் செயல்களிலும் பிரதிபலிக்கப்பட வேண்டும்.

இரண்டாவது அம்சம் “வோஹுமனோ” அல்லது குற்றமற்ற, நேசிக்கும் நல்ல மனம். இறைவன் நல்ல மனமாக விளங்கும் நிலை வோஹுமனோ என்றழைக்கப்படுகிறது. நல்ல மனமே கடவுளின் ஸ்வரூபம். கடவுள் அன்பு உருவானவர். அன்பு அனைத்தையும் அளிக்கிறது. அனைத்துக் குற்றங்களையும் மன்னிக்கிறது. அன்புக்கு எல்லையுமில்லை வேறுபாடுகளுமில்லை. அன்பை அனைவரிடமும் எத்தனைதான் பகிர்ந்து கொண்டாலும் அது அளவில் குறைவதுமில்லை. அன்பை பரப்பாத மனம், குற்றங்களை மன்னிக்காத மனம், அகோமனோ அல்லது தாழ்மையான மனம் என்றழைக்கப்படுகிறது.

மூன்றாவது அம்சம் “அஷ வஹிஷ்டா”. இதன் பொருள் மிக உயர்ந்த அறம் என்பதாகும். ஆண்டவன், அறத்தின் வடிவில் தர்மஸ்வரூபமாக இருக்கிறார். ஆண்டவனுடைய தா்மஸ்வரூபமே அஷ வஹிஷ்டா. இது ஜரதுஷ்டிரரின் உபதேசங்களில் அடிப்படையான அம்சமாகும். அஷ வஹிஷ்டா உண்மையின் அடிப்படையில் அமைந்த எல்லா தர்மச் செயல்களையும் குறிக்கிறது.

நான்காவது அம்சம் “வோஹும் க்ஷத்ர வைர்ய ”. இதன் பொருள் சக்தி, பலம், திறமை. ஆண்டவன் சக்தி ஸ்வரூபமாக, பலமாக, திறமையாகப் பரிமளிக்கிறார். அஷாவாகிய அறவழியில் செல்வதால் ஏற்படும் அனுக்கிரஹம் இந்தத் தெய்வீகச் சக்தியாகும். இதனால் அஹங்காரம் குன்றித் தொண்டுள்ளம் ஏற்பட, மனிதர், விலங்கு, பறவை இவையிடத்தும் அருள் உண்டாகும்.

அறத்தை அல்லது தர்மத்தை ஒருவன் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் கடவுள் அனுக்கிரஹத்தால் ஏற்படும் நற்பலன்கள் கடைசி மூன்று ஸ்பென்டா க்களும் ஆகும். ஐந்தாவது ஸ்பென்டா “ஆர்மைதி அல்லது ஸ்மதாரபத்” என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் பணிவு, நம்பிக்கை, ஞானம். ஸ்பென்டா ஆர்மைதி மஸ்தாவின் மகள் என்பது பார்ஸி மரபு. இது ஞானத்தைக் குறிக்கிறது. ஞானம் அழியாத அமைதியை நல்குகிறது. நன்னெறியைக் கடைப்பிடிக்கும் நற்குணம் உடையவர்களிடம் இறைவன் ஞான ஸ்வரூபமாகவும் நம்பிக்கை ஸ்வரூபமாகவும் இருக்கிறான் என்பது இதன் குறிப்பு. ஆண்டவன் படைப்பின் ஏகத்வத்தையுணர்ந்து, வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களையும், ஏற்ற இறக்கங்களையும் சமமாகப் பாவிக்கும் சாந்த நிலை ஏற்படுகிறது.

ஆறாவது, “குர்தாத் ஹௌர்வதத்” (அல்லது கொர்தாத்) இதன் பொருள் முழுமை, பூரணத்துவம் என்பதாகும். இறைவன் முழுமையாகவும் பூரண ஸ்வரூபமாகவும் இருக்கிறான் என்பது இதன் கருத்து.

ஏழாவது அம்சம், “அமேரதாத்” அல்லது அழியாத தன்மை. மரணமில்லாத பெருவாழ்வு, அமரத்வம் என்பது இதன் பொருள். இறைவன் அழியாத் தன்மையாக விளங்குகிறான். அவன் அருளால், அழியக்கூடிய மனிதர்கள் அழியாத தன்மையை அடையலாம்.

இத்தகைய அரிய உபதேசங்களை உலகிற்கு நல்கிய ஜரதுஷ்டிரரின் பிறந்தநாளான கொர்தாத் நாளன்று கொண்டாடப்படும் பண்டிகை கொர்தாத் ஸல் அல்லது கொர்தாத்விழா என்று பார்ஸி மதத்தில் குறிக்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: