புத்தாண்டு விழாவின் -உட்கருத்து
புத்தாண்டு விழாவின் -உட்கருத்து
கடந்த ஆண்டுக்கு விடை கொடுப்பதும் புத்தாண்டை வரவேற்பதும் மனிதர்கள் பொதுவாகக் கடைப்பிடிக்கும் செயல். எல்லையற்ற காலகட்டத்தில் புதிதாகத் துவங்கும் புதிய ஆண்டை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்.
கிறிஸ்தவர்கள் ஏசுவின் பிறப்பை ஒட்டி புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். மாதத்தின் பெயர்களான ஜனவரி, பிப்ரவரி போன்றவை பண்டையகால கிரேக்க மன்னர்களையும் பேரறிவாளர்களையும் குறிப்பிடுவதாகவே அமைந்துள்ளன. சீனர்களும் தங்கள் புத்தாண்டைக் கொண்டாடுவது வழக்கம். அது குளிர் காலத்தில் வந்தாலும் அவர்கள் அதை வசந்தகால கொண்டாட்டமாகக் கருதுவர். சீனப் புத்தாண்டு வருடத்திற்கு வருடம் மாறுபட்ட தேதியில் வரும். சீனர்கள் புத்தாண்டு நாள் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20 க்குள் வரும். அவர்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலண்டரை வைத்து புதுவருட நாளைக் குறிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. இந்தியர்கள் புத்தாண்டை ஒரே பேரிட்டுக் கொண்டாடினாலும் அதன் தேதி மாநிலங்களுக்குள் வேறுபடுகிறது. ஹிந்து மதப்படி யுகத்திற்கு யுகம், புத்தாண்டு மாதமும் மாறுகிறது.
கிருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம் கலியுகம் என்று யுகங்கள் நான்கு வகைப்படும். கிருத யுகம் வைகாசி மாதத்திலும், த்ரேதாயுகம் கார்த்திகை மாதத்திலும், த்வாபர யுகம் மார்கழியிலும் கலியுகம் சித்திரைமாதத்திலும் துவங்கும்.
நாம் கலியுகத்திலிருப்பதால் சித்திரையின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். இதை ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் யுகாதி என்றும், தமிழர்கள் தமிழ் புத்தாண்டு என்றும் கேரளத்தினர் இதை விஷு என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த தினம், இறைவன் காலத்தின் அதிபதி என்று நமக்கு உணர்த்துகிறது. யுகாதி என்பது சித்திரை மாதம் பிரதமைத் திதியில் முதல் மாதம் முதல் திதியாக இருப்பதால், அதை முதல் நாளாகக்கருதி இதை யுகாதி என்று பேரிட்டு அழைக்கின்றனர். தமிழ் நாட்டினர் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இந்த சமயத்தில் இயற்கை எழிலுடன், செழிப்பாகக் காட்சி அளிக்கிறது. மரங்களில் புதிதாகத் துளிர்விட்டு எங்கும் பச்சை பசேலென்று காட்சி அளிக்கிறது. குயிலினங்கள் போன்ற பறவைகள் செவிக்கு இனிமையான குரல்களில் ஒலிக்கின்றன. அதனால் இதை வசந்த காலம் என்கிறார்கள். வசந்த ருது எனப்படுவது பருவகாலங்களில் மிகச் சிறந்த காலமாகும். இப்படி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கையை (பிரகிருதியை) ‘விஷ்ணுப்ரியா’ என்றும் குறிப்பிடுவர். வசந்தகாலம் விஷ்ணுவின் வடிவமேயாகும். இதை வரவேற்கும் தினமே யுகாதிப்பண்டிகை தினமாகும்.
இந்த உலகம் ‘ஜகம்’ என அழைக்கப்பெறுகிறது. ‘ஜ’ என்றால் பிறப்பு, ‘கம்’ என்றால் “போவது அல்லது மறைவது” என்று பொருள். உலகத்தில் பிறந்த அனைத்தும் இறக்கவேண்டும் என்றும், மாறும் உலகில் மாறாதது இறைவன் மட்டுமேயாகும் என்பது நியதி. குறுகிய ஆயுட்காலமே கொண்ட மனிதன், எல்லையற்ற காலத்திற்கு ஆண்டு, மாதம், பக்ஷம், வாரம், நாள் என்று தாற்காலிகமான கால அளவு வகுத்து அனுபவிக்க முனைந்துள்ளான். ஒவ்வொரு வினாடி பிறப்பதையும் புதிய வருடம் பிறப்பதாகக் கொள்ளவேண்டும். உங்கள் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் உங்கள் முந்தைய கர்மாக்களே காரணமாகும். ஒரு ஆண்டில் 60X60X24X365 =31536000 வினாடிகள் உள்ளன. இந்த காலத்தை நன்முறையில் செலவழித்தால் எல்லா நாட்களுமே நல்ல நாட்களாக மலரும். புத்தாண்டு என்பது தன்னலமற்ற சேவையைப் பற்றி நமக்கு உணர்த்துகிறது.
VISHU CELEBRATIONS
TAMIL NEW YEAR CELEBRATIONS
CHINESE NEW YEAR