ஈத் பண்டிகை -உட்கருத்து
ஈத் பண்டிகை என்பது இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகையாகும். இது ரமலான் மாதம் முடிவதையும் ஷவ்வால் மாதம் பிறப்பதையும் குறிக்கும். இஸ்லாமிய மக்கள் ஒன்பதாவது மாதத்தை புனிதமாகக் கருதுவார்கள். அந்த மாதம் தான் ரமலான் எனப்படுவது. இந்த மாதத்தில் தான் “கொர் ஆன்” என்ற புனிதநூல் முழுவதுமாக எழுதப்பெற்றது. இஸ்லாமியர்கள் பக்தியுடன் இறைவனைத் துதிப்பார்கள். ரமலான் மாதத்தில் அவர்கள் பகல் முழுவதும் அன்ன ஆகாரமின்றி நோன்பு நோற்பார்கள். பின்பு ஷவ்வால் மாதம் பிறந்த அன்று சந்திரப் பிறையைத் தரிசனம் செய்த பின் நோன்பை முடித்து கொண்டாடப்படும் திருநாளே ஈகைத்திருநாள். “ஈத்-உல்-பிட்ர்” என்றால் “நோன்பை முடித்துக் கொண்டாடப்படும் திருநாள்” என்று பொருள். “ஈத்” என்பது இன்பத்தையும் “பிட்ர்” என்பது ஈதலையும் குறிக்கும். தானம் செய்வது இன்பம் தரும். ஆகவே அவர்கள் இறைவனையும் போற்றித் தொழுது ஏழைகளையும் நினைத்து அவர்களுக்கு வேண்டிய பொருட்கள் தருவார்கள். ரமலான் நோன்பு நோற்பது ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் தலையாயக் கடமையாகும். மனிதன் தான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் சமூகத்திலுள்ள அனைவரும் மகிழ்வாக இருக்கவேண்டும் என்று போதிக்கிறது . நோன்பு முடித்த பின், ஷவ்வால் மாதம் முதல் தினத்தில் இஸ்லாமிய மக்கள் ஈத் பண்டிகையன்று உற்றார் உறவினருடன் விருந்துண்டு மகிழ்ந்திருப்பார்கள்.