அழகான கைகள்
“அழகான கைகள்”- கதை
ஒரு முறை, கடவுள் ஒரு தேவதையை அழைத்து, “நல்ல அழகான கையை உடைய ஒரு மனிதனை அழைத்து வா” என்று அனுப்பினார். அந்த தேவதை, நள்ளிரவில் இவ்வுலகத்துக்கு வந்து, அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது, அருகில் சென்று அழகான கையை உடையவர் யார்? என்று பார்க்க, முதலில் அரண்மனைக்குச் சென்றது.
இராணியின் கையை விட யார் கை அழகாக இருக்க முடியும் என்று நினைத்து உள்ளே சென்றது. இராணியின் கைகள் வாசனைத் திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டு, நிறைய ஆபரணங்களையும் அணிந்திருக்கும் அன்றோ! ஆகவே முதலில் இராணியின் அந்தபுரத்துக்குச் சென்றது. ஆனால் இராணியின் கைகள், பல தீய, கொடூரமான செயல்களை செய்திருந்த காரணத்தினால், துர்நாற்றம் வீசியது. அதே போல் அரசனது கைகள், பிரபுக்கள், சிற்றரசர்கள், வியாபாரிகள் இன்னும் பலரது கைகளையெல்லாம் தேவதை சென்று பார்த்தது. ஆனால் தேவதைக்குப் பெருத்த ஏமாற்றமே.
இறைவன் தனக்கு இட்ட பணியை முடிக்கவில்லையே என வருத்தத்துடன் இருந்த போது, திடீரென நல்ல நறுமணம் வீசியது. நள்ளிரவாக இருந்ததால், எங்கு யாரிடமிருந்து நறுமணம் வீசுகிறது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. தேடி அலைந்தபின், தூரத்தில் ஒரு விவசாயி, பாயை விரித்து வயலில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். தேவதை அவரிடம் சென்று பார்த்த பொழுது, அவரது உள்ளங்கைகள் உரமேறி, கரடு முரடாக இருந்தாலும் நல்ல ஒளியும், நறுமணமும் வீசியது. கைகள் பார்ப்பதற்கு சுருக்கம் விழுந்து, மிகுந்த உழைப்பினால் நிறம் மாறியிருந்தாலும், அந்த கைகள் தாம் தான் தேடி வந்த கைகள் என்று தேவதை உணர்ந்து, அந்த விவசாயியை இறைவனிடம் அழைத்துச் சென்றது.
தேவதை இறைவனை நோக்கி, அரசன், அரசியின் கைகளை விட இந்த விவசாயி அழகான கைகளைப் பெற்றிருக்கக் காரணம் கேட்டது. இறைவன் தேவதைத் தேர்ந்தெடுத்தது தகுதியான கைகள் தாம் எனக் கூறி, விவசாயி உழைப்பதற்காக உபயோகப்படுத்தி, தன் பணி இறைப்பணி என்ற நல்ல அறிவைப் பெற்று, அதனைப் பிறருக்கும் அளித்ததால் தான், அக்கைகள் நல்லொளி பெற்று, நறுமணம் வீசுபவைகளாக இருக்கின்றன என்று கூறினார். மேலும், அந்தக் கைகளால் வயல்களில் மிகக் கடுமையாக உழைத்து, தானியங்களை விளைவித்தார். தானும் பல வளங்கள் பெற்றார். தேவைப்பட்டவர்களுக்கும் கொடுத்து உதவினார். பிறருக்கு ஏற்ப்பட்ட காயங்களைத் தன் கைகளால் ஆற வைத்து உதவினார். பெருமைப்பட்டுக் கொள்ளாமல், இறைவனை எப்போதும் கூப்பிய கைகளுடன் வணங்கினார். புனித காரியங்களை அந்தக் கைகளால் செய்தார். ஆகவே, அவர் இறைவனை அடைந்து இறைத் தன்மையையும் பெற்றார்.
[Illustrations by Dhanusri, Sri Sathya Sai Balvikas Student]
[Source: Gurus Handbook – Group I First Year]