இறைவனைச் சரணடையும் யாவரும் ராதையே; ராதை என்பது பெண்ணை மட்டும் குறிப்பதன்று:
பாபா சொல்கிறார், “உன் சிந்தனைகளையும் செயல்களையும் இறைவனிடம் அர்ப்பணிக்கும் பொழுது நீ ராதை எனும் நிலையை அடைகிறாய். அதனால் ராதா என்னும் சொல் பெண்ணை மட்டும் குறிப்பதல்ல. கிருஷ்ணரைச் சரணடையும் யார் ஒருவரும் ராதையாக ஆகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.”
அறிவாலும் ஞானத்தாலும் தலையை நிரப்புவது மட்டுமல்லாமல் அளவற்ற அன்பினால் நம் உள்ளத்தை நிரப்பவேண்டும் என்பதை ராதா கற்றுத் தருகிறாள். அவள், அறிவால் தலையை நிரப்புவதை விட அன்பால் உள்ளத்தை நிரப்புவதே சாலச் சிறந்தது என்று கற்றுத் தருகிறாள். அனைத்திற்கும் பொதுவாகிய தெய்வீகத்தை இனங்கண்டுகொள்ளத் தெரியவேண்டும் என்று ராதா கூறுகிறாள். மேலும் அவள், நம் புலனுறுப்புகளைக் கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்கிறாள்.
ராதா, மாறக் கூடியதும் நிலையில்லாததும் ஆகிய இந்த உலகை நாம் நம்புதல் கூடாது என்கிறாள். நிலையான தன்மையுடைய இறைவனின் மீது நம் கவனத்தை வைக்கவேண்டும் என்கிறாள். இந்த உலகத்தை நம்பவேண்டாம் என்றும் மரணத்தைக் குறித்து அஞ்சுதல் கூடாது என்றும் இறைவனை ஒருபோதும் மறக்கக் கூடாது என்றும் அவள் கூறிக் கொண்டே இருக்கிறாள். இம் மூன்று விதிகளையும் அவள் மட்டுமே வலியுறுத்துகிறாள்.
ராதா, நாம் எல்லா நேரங்களிலும் எல்லா குணங்களிலும் (மனோபாவங்களிலும்) பேரானந்த நிலையில் திளைத்திருக்க வேண்டும் என்கிறாள். பொறாமைக் குணத்தை விட்டுவிட வேண்டும், குறிப்பாக மற்றவர்களின் செல்வச் செழிப்பைப் பார்த்து பொறாமைக் கொள்ளக் கூடாது என்கிறாள் ராதை. ராதை ஒருவளே மற்ற கோபிகைகளின் மனத்திலிருந்து குற்ற உணர்ச்சிகளையும், பொறாமையையும் அகற்றியவள் ஆவாள்.”
[Source: https://sssbpt.info/summershowers/ss1978/ss1978-23.pdf]