ஸ்துதியுடன் தொடர்புடைய கதை
விஷ்ணு “ஸாந்தாகாரன்” என்று விவரிக்கப்படுகிறவர். அதாவது அமைதியும் நிலையான மனமும் கொண்டவர். ஒரு முறை காஸ்யப முனிவர் ஒரு யாகம் நடத்தியபோது, மற்றைய முனிவர்களும் கூடியிருந்தனர். அப்போது அவர்களுள் மூன்று தேவருள் யார் சிறந்தவர்? என்ற சந்தேகம் அவர்களுக்குத் தோன்றியது. அப்போது நாரதர், “ தேவர்களுள் பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரர் மூவருமே பெரிய கடவுள்கள். அவர்களில் விஷ்ணுவே மேம்பட்டவர்” என்று கூறினார். ஏனென்றால் விஷ்ணு, புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் உட்படாதவர். முனிவர்கள் இதை நிரூபிக்குமாறு நாரதரைக் கேட்டனர். உடனே நாரதர் பிருகு என்ற முனிவரைத் தனியே அழைத்து காதில் ஏதோ கூறினார். நாரதரின் மொழியைச் சரிபார்க்க பிருகு புறப்பட்டுப் போனார்.
பிருகு முதலில் பிரம்மலோகம்சென்றார். அப்போது பிரம்மா, படைப்புத் தொழிலில் ஈடுப்பட்டிருந்தார். பிருகு சொன்னார், “ ஓ பிரம்மா! படைப்புப் பற்றிய சரியான அறிவு உமக்கு இல்லை. உமது படைப்பில் எத்தனையோ குறைகளும், குற்றங்களும் உள்ளன. ஒரு படைப்பு கூட, பாராட்டும்படி இல்லை” என்றார். கேட்ட பிரம்மா சினந்து, சபிக்கப் போனார். உடனே பிருகு பிரம்மலோகத்தை விட்டு ஓடிவிட்டார். பின்பு அவர் சிவலோகம் சென்றார். அப்போது சிவன், தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். பிருகு சொன்னார், “ஓ இறைவா! நீர் உமக்குள்ள தொழிலை சரிவர செய்யவில்லை. உலகத் தீமைகளை ஒழிப்பது உமது வேலை. உலகில் இப்போது எங்கும் தீமையே நிரம்பியுள்ளது. நீரோ உம் தொழிலைச் செய்யாமல் நாட்டியம் ஆடிக்கொண்டு இருக்கிறீர். பின்னர், உம்மை நாங்கள் ஏன் வணங்கவேண்டும்?” என்றார். கோபமடைந்த சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணால் எரிக்க முற்பட்டபோது முனிவர் அங்கு இல்லாமல் ஓடிவிட்டார்.
பின்பு பிருகு முனிவர் வைகுண்டம் சென்றார். அங்கே விஷ்ணு ஆதிசேஷன் மேல் படுத்திருந்தார். பக்தனை வரவேற்காததைக் கண்ட பிருகு முனிவர் கோபமுற்றார். ஆனால் ஹரியோ லக்ஷ்மியோடு களியாட்டில் இருந்தார். முனிவர் விஷ்ணுவின் அருகில் சென்று அவர் நெஞ்சில் உதைத்தார். முனிவர் கோபம் தணிந்தபின், தன் செயலின் விளைவுகளை எண்ணி அஞ்சி ஓடத்தொடங்கினார். ஆனால் விஷ்ணுவோ முனிவரின் காலில் வீழ்ந்து வணங்கியதைக் கண்டு அதிசயித்தார். விஷ்ணு சொன்னார், “ஓ முனிவரே! நான் உம்மை கவனிக்காமலும், வரவேற்காமலும் இருந்ததால் நீர் கோபமுற்றீர். ஆகவே இரும்பு போன்ற என் நெஞ்சை உதைத்தீர். அதனால் உமது பாதம் நோகுமல்லவா?” என்று சொல்லி அவரது காலை இதமாக பிடித்துவிட்டார். எவ்வளவு பொறுமையுடையவர், எவ்வளவு நிதானம் தவறாதவர் என்று பிருகு முனிவர் எண்ணி விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார்.
யாகம் நடக்கும் இடத்தில கூடியிருந்த முனிவர்களின் கூட்டத்திற்கு பிருகு வந்தார். நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்கு எடுத்துச்சொன்னார். அவரது சந்தேகங்கள் தீர்ந்து, விஷ்ணு ஒருவரே ஸாந்தாகாரன் என்பதை நம்பினார்கள்.