நல்ல செயல் ஒவ்வொன்றும் நலமான பரிசு பெறும்
முன்னொரு காலத்தில் ரோம் நகரத்தில் ஆண்ட்ரகில்ஸ் என்ற அடிமை இருந்தான். அவனை விலைக்கு வாங்கியவன் மிக்கக் குரூரமான கொடுமைக்காரன். அவன் ஆண்ட்ரகில்ஸை இரவு பகலாக வேலை வாங்கினான். சிறு தவறு செய்தாலும் அவனைச் சவுக்கால் அடித்தான். அதனால் ஒரு நாள் ஆண்ட்ரகில்ஸ் தன் தலைவனது மாளிகையிலிருந்து தப்பி ஓடி ஒரு காட்டில் மறைந்து ஒளிந்து கொண்டான். அந்தக் காட்டில் அவன் பதுங்கியிருப்பதற்கு ஒரு குகையைக் கண்டு பிடித்தான்.
ஒரு நாள் விடியற்காலையில் ஆண்ட்ரகில்ஸ் அண்டத்தையே கிடுகிடுக்க வைக்கும் ஒரு பேரொலியைக் கேட்டுத் திடுக்குற்று விழித்தான். அந்த ஒலி வரவர நெருங்கி வந்தது. அது வலியினால் துன்புறும் ஒரு சிங்கத்தின் கர்ஜனையாகும். சற்றுப் பொறுத்து அவன், வலியினால் முனகிக் கொண்டு, நொண்டி நொண்டி நடந்து வந்த ஒரு சிங்கத்தைக் குகை வாயிலில் கண்டான். குகைக்குள் வந்த சிங்கம் ஒரு மூலையில் போய்ப் படுத்துக் கொண்டது. வீங்கிப் போயிருந்த தன் பாதத்தை நாக்கால் நக்கியது. அந்தச் சிங்கத்தின் துன்புற்ற நிலையைக் கண்டு ஆண்ட்ரகில்ஸ் உருகிப் போனான். துணிவை வரவழைத்துக் கொண்டு அவன் மெதுவாக நகர்ந்து நகர்ந்து சிங்கத்திடம் சென்றான். அதன் அடிபட்ட பாதத்தைக் கூர்ந்து கவனித்தான். அதன் காலில் ஒரு பெரிய கூரிய முள் பாதத்தின் உள் பாகம் வரை ஊடுருவித் தைத்திருந்தது. எச்சரிக்கையாக அவன் அந்த முள்ளை அகற்றினான். பிறகு பல மூலிகைகளைக் கொண்டு வந்து புண்ணில் வைத்துக் கட்டினான். மூன்று நாட்களில் அந்தப் புண் முற்றிலும் ஆறி விட்டது. சிங்கம் நன்றியுணர்வோடு அவனது கைகளை நக்கிக் கொடுத்து விட்டுக் குகையை விட்டு அகன்றது.
ஆண்ட்ரகில்ஸ் சில நாட்கள் குகையிலேயே தங்கி இருந்தான். பிறகு ஒரு நாள் அடுத்துள்ள நகரம் ஒன்றிற்குச் சென்றான். அவனுடைய பொல்லாத நேரம், அந்த வஞ்ச நெஞ்சனான தலைவனும் அதே நேரத்தில் அந்த நகரத்திற்கு வந்து அவனைக் கடைவீதியில் பார்த்துவிட்டான். உடனே ஆண்ட்ரகில்ஸைக் கைப்பற்றிச் சென்று சிறையில் அடைத்து விட்டான். தன் தலைவனை விட்டுத் தப்பி ஓடும் அடிமைகளுக்கு ரோமானியர்களது ‘சட்டம்’ அந்தக் காலத்தில் கடுமையான தண்டனைகளைத் தந்து வந்தது. அவனைக் கடும் பசியோடு இருக்கும் ஒரு சிங்கத்திடம் எறிந்து விடுவர். சிங்கத்துடன் போராட அவனிடம் ஒரு சிறு குத்துவாள் தரப்படும். அரசன், தன் குடும்பத்தினர் மற்றும் திரளான மக்களுடன் இந்த இரக்க மற்ற காட்சியைக் கண்டு களிப்பான். எப்போதும் அந்தக் கொடிய விலங்கு அடிமையைக் கொன்று தின்று விடுவதிலேயே அந்த நிகழ்ச்சி முடிவுறுவது வழக்கம்.
சட்டத்தின்படி ஆண்ட்ரகில்ஸ் கையில் ஒரு குத்துவாளுடன் மிகப் பெரிய இரும்புக் கூண்டினுள் நுழைந்தான். சில நொடிகள் கழித்துப் பசியோடிருந்த சிங்கம் கூண்டினுள் விடப்பட்டது. ஆண்ட்ரகில்ஸை நோக்கிப் பாய்ந்து வந்தது சிங்கம். ஆண்ட்ரகில்ஸ் தன் குத்து வாளை உயர்த்து முன்னரே, திடீரென அந்தச் சிங்கம் நின்றது. கர்ஜிப்பதையும் நிறுத்திவிட்டது. மெதுவாக, ஒலியின்றி ஆண்ட்ரகில்ஸை நோக்கி வந்தது. அருகில் வந்து அவனது கைகளையும், கால்களையும்நக்கிக் கொடுத்தது.
ஆண்ட்ரகில்ஸ் உடனே புரிந்து கொண்டான். காட்டு குகையில் பழக்கமான தன் தோழனைத் தெரிந்து கொண்டான். அன்பு மீதூரத் தன் கரங்களால் சிங்கத்தின் கழுத்தை வளைத்து அணைத்துக் கொண்டான்.
இவையனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் கூண்டினுள் ஏதோ ஓர் அற்புதம் நிகழ்ந்திருப்பதை உணர்ந்தனர். உடனே கரவொலி செய்து கத்திக் கூச்சலிட்டு மகிழ்ந்தனர். அரசனும் அவனைச் சார்ந்தவர்களும் ஆண்ட்ரகில்ஸை அழைத்து வந்து, எப்படி அவன் அத்துணைக் கொடிய மிருகத்தை வெற்றி கொள்ள முடிந்தது என்று ஆவலோடு கேட்டனர். அவனிடமிருந்து அவனுடைய இரக்கமற்ற தலைவனைப் பற்றி அறிந்து கொண்டனர். அவன் தப்பி ஓடிய விவரமும் தெரிந்து கொண்டனர்.
“ஆனால் குகையில், அடிபட்ட சிங்கத்தை நெருங்குவதற்கு உனக்கு அச்சமாக இல்லையா?” என்று அரசன் வினவினான். “இல்லவே இல்லை! கடுமையான தலைவனிடம் அடிமையாக இருந்து துன்புறுவதை விடக் கடும் பசி கொண்ட சிங்கத்துக்கு இரையாகி ஒரேயடியாக ஒழிந்து போவது நல்லது என்று நினைத்து விட்டேன்,” என்று வருத்தத்தோடு கூறினான் ஆண்ட்ரகில்ஸ்.
அரசன் அவனது விடையால் மனம் இளகியவனாய் நெகிழ்ந்து போனான். உடனே கூட்டத்தினரை நோக்கி,”ஆண்ட்ரகில்ஸ் இனி ஒரு அடிமைஅல்ல, அவனுடைய இரக்கமற்ற தலைவன் அவனை விடுதலை செய்ய வேண்டுமெனக் கட்டளையிடுகிறேன். ஆண்ட்ரகில்ஸ் இன்றிலிருந்து ஒரு சுதந்திர மனிதன்,” என்று அறிவித்தான்.
ஆண்ட்ரகில்ஸ் சிங்கத்திற்கு ஒரு சிறிய உதவியே செய்தான். அதற்குப் பதிலாகச் சிங்கம் கூண்டில் அவன் உயிரையே தந்ததோடல்லாமல், எக்காலத்துக்கும் அவனை அடிமைத்தளையினின்றும் கூட விடுவித்து விட்டது.
கேள்விகள்:
- குகையில் ஆண்ட்ரகில்ஸ் சிங்கத்திடம் சென்ற போது அது ஏன் அவனைத் தாக்கவில்லை?
- இந்தக் கதையிலிருந்து நீ என்ன தெரிந்து கொள்கிறாய்?
- உனக்கு எந்த விலங்குகள் பிடிக்கும்? ஏன் அவற்றை விரும்புகிறாய்? நீ எப்போதாவது அவற்றிற்கு ஏதாவது உதவி செய்திருக்கிறாயா?