நட்பும் தன்னலமற்ற தியாக உணர்வும்
அனில், சுனில் இருவரும் கல்கத்தாவில் பெயர் பெற்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மிக்க கெட்டிக்கார மாணவர்கள். மேலும் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாகவும் இருந்தனர். ஒருவரையொருவர் சொந்த சகோதரர்களைப் போலவே நேசித்து வந்தனர். சுனில் எப்போதும் வகுப்பில் முதல் மாணவனாகவே வருவான். அனில் இரண்டாம் இடத்தில் நிற்பான். பலப்பல தேர்வுகள் வந்து போய்க் கொண்டிருந்தன. அனைத்திலும் இருவரும் தங்கள் தகுதியான இடத்தை வகுப்பில் தளராது பெற்று வந்தனர்.
அப்போது சுனிலின் வாழவில் பேரிடி ஒன்று விழுந்தது. விதவையாக இருந்து வந்த அவனது அன்னையார் திடீரென நோய்வாய்ப்பட்டார். உலகில் அவனுடைய ஒரே உறவான அன்னையாருக்குச் சுனில் இரவு பகலாக கவனித்துப் பணி விடை செய்து வந்தான். ஆனால் அவளது நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. இரண்டு மாதம் இங்ஙனம் நலிவுற்று வருந்திய பிறகு ஒரு நாள் தன் மகனைக் காப்பாற்றும் படி இறைவனை வேண்டியபடியே அவள் இறந்து விட்டாள்.
மனம் ஒடிந்து போன சுனில் அதன் பிறகு இரண்டு மாதங்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவது கண்டு, ஓரளவு மனத்தைத் தேற்றிக் கொண்டு மறுபடியும் படிக்கலானான். தேர்வில் முதல் தகுதி பெறவும் முயன்றான். ஆனால் இடையிடையே அன்னையின் நினைவு வந்து அடிக்கடி மனதைத் துன்புறுத்தியதால் ஒருமுக மனக்குவிப்புடன் அவனால் படிக்க இயலவில்லை. அதனால், சுனில் உட்பட எல்லோரும் அவ்வாண்டு அனில்தான் முதல் மதிப்பெண் பெறுவான் என்று எண்ணினார்கள்.
தேர்வுகள் முடிவடைந்தன. அனிலுடைய விடைத்தாள்களைத் திருத்தி வந்த ஆசிரியர் அதிர்ச்சியுற்று வியந்து போனார். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதானவையே ஆனாலும், அனில் அவற்றில் சிலவற்றிற்கு விடையே எழுதவில்லை. ஆசிரியர் அனிலை வரச்சொல்லி ஆளனுப்பினார். அவன் வந்ததும் இத்தகைய எளிய கேள்விகளுக்கு விடை எழுத அவனால் எப்படி இயலாமற் போயிற்று என்று கேட்டார். தான் எழுதாததன் இரகசியத்தை ஆசிரியரிடம் வெளியிடலாமா வேண்டாமா என்று யோசிப்பது போல ஒரு நொடி நேரம் அனில் வாளாவிருந்தான். பிறகு வருத்தம் தோய்ந்த குரலில், ஐயா! சுனில் இத்தனை ஆண்டுகளாக வகுப்பில் முதல் தகுதி பெற்று வருவது உங்களுக்குத் தெரியும். இவ்வாண்டு அவன் தன் அருமைத்தாயாரை இழந்தான். அவன் ஓர் அனாதை. ஆனால் எனக்குத் தாய் தந்தையர் நலமாயுள்ளனர். இவ்வாண்டு சுனில் தேர்வில் முதலிடத்தை இழந்து விட்டானானால் அது அவனுக்கு மற்றொர் இடியாக இருக்கும். நான் முக்கியமாக அந்த இரண்டு கேள்விகளுக்கும் அதனால்தான் விடை எழுதாது விட்டு விட்டேன். ஏனெனில்,அப்போதுதான் சுனில் என்னைவிடக் கூடுதலான மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெறுவான். அங்ஙனம் பெறுவது அவன் துயரை நீக்கி உற்சாகமூட்டி இன்பத்தைத் தரும்,” என்றான்.
அதன் பிறகு அவன் ஆர்வமாக மேலும், ”ஆனால் ஐயா! இந்த இரகசியத்தை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். இதை வேறு யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது. சுனில் இதை அறிய நேர்ந்தால் நான் இங்ஙனம் செய்வதைக் குறித்து மேலும் துன்பத்திற்குள்ளாவான். அவன் என் உயிர்த் தோழன். அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று கூறினான்.
ஆசிரியர் கனிவோடு அனிலின் முதுகில் தட்டிக்கொடுத்தார். “அன்பு மிக்க அனில் செல்வ! என்றைக்கும் விட இன்று உன்னைப் பற்றி மிகவும் பெருமைப் படுகிறேன். உங்கள் தூய நட்பு, அடர்ந்த அன்பு, தன்னலமற்ற தியாக உணர்வு மூன்றுமே மிகச் சிறந்த பண்புகளாகும். ஒரு நாள் அவை உங்களை மக்களில் உயர்ந்தவராக மேன்மையுறச் செய்யும்,” என்று வாழ்த்தி அனுப்பினார்.
கேள்விகள்:
- தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் வாய்ப்பை ஏன் அனில் தானாக இழந்தான்?
- ஆசிரியரிடம் தான் கூறிய செய்தியை இரகசியமாக வைத்திருக்கும்படி ஏன் அனில் கேட்டுக்கொண்டான்?
- இவன் உண்மையான நண்பன், இவன் அப்படிப்பட்டவன் அல்லன் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பாய்? உன் சொந்த அனுபவத்திலிருந்து உதாரணம் கொடு.
- உன் வீட்டில் நண்பனுக்காகவோ, சகோதரனுக்காகவோ, சகோதரிக்காகவோ அல்லது மற்றவருக்காகவோ எப்போதாவது தியாகம் செய்துள்ளாயா, அப்படியாயின் உன் அனுபவத்தைக் கூறு.