நேர்மை தந்த பரிசு
ராமு ஒரு நேர்மையான பால்காரன். பாலில் தண்ணீர் கலந்து விற்பதோ, கலப்படம் செய்வதோ, அவனுக்குப் பிடிக்காத செயல்கள். அவனது நேர்மையான பண்பைக் கிராமத்தார் அனைவரும் போற்றினர். ராமுவிற்கு சூரியன், சந்திரன் என்று இரண்டு பிள்ளைகள் இருந்தனர். பிள்ளைகள் இருவரையும் கண்ணின் மணிகளாக வளர்த்ததோடு பண்பின் சிகரங்களாகவும் வளர்த்து வந்தான் ராமு. “குழந்தைகளே! கூர்ந்து கவனியுங்கள். எப்பொழுதும் யாரையும் ஏமாற்றவோ, வஞ்சிக்கவோ முயலாதீர்கள். நேர்மையான உழைப்பினால் நாம் பெறும் ஊதியமே, நமக்கு வாழ்க்கையில் அமைதியையும், மகிழ்ச்சியையும் தரவல்லது” என்று சமயம் நேரும்போதெல்லாம் தன் மகன்களுக்கு அறிவுறித்துவான்.
ஒரு நாள் சூரியன், மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதில் சற்று தாமதமாகிவிட்டது. எதுவுமே குறிப்பிட்ட நேரத்தில் செய்து விடவேண்டும் ராமுவிற்கு. அதனால் அன்று சூரியனது செயல் அவனுக்குக் கடும்கோபத்தை விளைவித்துவிட்டது. கோபத்தில் சற்று மிகுதியாகவேக் கடிந்து, சூரியனைத் திட்டி விட்டான். அன்பைப் பொழியும் தந்தை அன்று திட்டியது சூரியனை மனம் நொந்துபோக வைத்துவிட்டது. நைந்த உள்ளத்தோடு அன்று முழுவதும் கலங்கினான். அவன் பலவாறு எண்ணி எண்ணிக் கலங்கி, இறுதியில் இனி இந்த வீட்டில் இருப்பதில்லை என்று தீர்மானித்து வீட்டை விட்டு வெளியேறி விட்டான். ஆண்டுகள் பல சென்றன. சூரியன் திரும்பி வரவேயில்லை. அவனை அவ்வாறு கடிந்து கொண்டதை நினைத்து நினைத்து வருந்தினான் ராமு. ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதுபோல நடந்து கொண்டோமே என்று தன் மேலேயே வெறுப்பு கொண்டான்.
இதனிடையில் அவனது உடல் வளமும் குன்றி வந்தது. நாளுக்கு நாள் நலிவுற்று, படுத்த படுக்கையானான். இறுதியில் இறந்து விடுவோம் என்ற நிலையில் அவன் சந்திரனை அழைத்து அவனிடம் ‘என் அன்பு மகனே! உன் அண்ணன் சூரியன் கோபித்துக் கொண்டு சென்றவன் திரும்பி வரவேயில்லை. அவன் எங்கிருக்கிறானோ எப்படியிருக்கிறானோ தெரியவில்லை. அவனை நீ எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும். நீ அவனை எளிதாகக்கண்டு கொள்ள ஓர் அடையாளம், கருப்பு மச்சம் போன்ற வடு அவனது நெற்றியில் காணப்படும். அவ்வாறு நீ கண்டு பிடித்து விட்டால் வீட்டிற்கு அவனை அழைத்து வந்து, நமக்கு இருக்கும் பத்து எருமைகளில் அவன் பங்காக ஐந்து எருமைகளை அவனுக்குக் கொடுத்துவிடு’ என்று கூறிவிட்டு இறைவனடி சேர்ந்து விட்டான் ராமு.
தந்தை மறைந்தபிறகு, அண்ணனை முழு முயற்சியோடு தேடலானான் சந்திரன். அடுத்த கிராமங்களில் சந்தைகள், திருவிழாக்கள், நாடகங்கள் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியன எங்கு நடந்தாலும், அங்கு சென்று, அவனது கண்கள் சூரியனை இனம் கண்டுகொள்ளக் கூட்டத்தில் துழாவின. எனினும் நெடுநாட்கள் அவனது முயற்சிகள் பயனற்றுப் போய் அவனால் சூரியனைக் கண்டுபிடிக்க இயலவில்லை. அவனைப் பார்க்கவே முடியாது என்று பல நாட்கள் சோர்ந்து விடுவான் அவன். ஒரு நாள் அண்ணன் நினைவோடு மேய்ச்சலில் இருந்து மாடுகளுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் சந்திரன். வழியில் மரத்தடியில் யாரோ ஒரு வழிப்போக்கன் அமர்ந்திருந்தான். அழுக்குப் பிடித்த, கிழிந்த துணிகளை உடுத்திக்கொண்டு அவன் பரிதாபமாக அமர்ந்திருப்பதைக் கண்ணுற்ற சந்திரன் ஏதோ ஒரு பரிவினால் உந்தப்பெற்று அவனருகே சென்றான்.
என்ன வியப்பு? அங்கு அமர்ந்திருந்த வழிப்போக்கன் வேறு யாருமில்லை! சூரியனே தான்! அங்கு ஒரு பிச்சைக்காரனைப் போல அமர்ந்திருந்தான். ஆம்! அவன்சாயலில் சூரியனைப் போன்றே இருப்பதோடு, தந்தை குறிப்பிட்ட கருப்பு மச்சமும் அவனது நெற்றியில் காணப்பட்டது. சந்திரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது?.
அதே சமயம் அண்ணனின் ஏழ்மைக்கோலம் அவனது நெஞ்சைப் பிழிந்தது. கண்களில் நீர் சோர ஓடிச்சென்று அவனது கைகளைப் பற்றிக் கொண்டு, ”சூர்யா அண்ணா! உனக்கு ஏன் இந்தநிலை? நீ ஏன் வறுமையில் வாடவேண்டும்? என்னுடன் நம் வீட்டுக்கு வா! அப்பா விட்டுச் சென்ற பத்து எருமைகளில் ஐந்தினை நீ எடுத்துக்கொள். அவை தரும் பால், தயிர், வெண்ணை இவற்றை விற்று மகிழ்வுடன் வாழ்” என்று உளம் கனியக் கூப்பிட்டான்.
சூரியனும் மெல்ல எழுந்து தம்பியுடன் வீட்டுக்குச் சென்றான். ஆனால் வாய் திறந்து அவன் ஏதும் பேசவில்லை. வீட்டை அடைந்ததும் இருவரும் சாப்பிட்டு விட்டு ஒரு பெரிய விரிப்பில் படுத்து உறங்கினர்.
பொழுது விடிந்தது, வழக்கம்போல் அதிகாலையிலே விழித்த சந்திரன், பக்கத்தில் சூரியன் இல்லாததைக் கண்டு திடுக்குற்றான். விரைந்து சென்று தோட்டத்திலும் வீட்டிலும் தேடினான். எங்குமே அவனைக் காணவில்லை. அதோடு மாட்டுகொட்டிலில் இருந்த பத்து எருமைகளில் ஐந்து எருமைகளையும் கூடக் காணவில்லை. சந்திரனுக்கு உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது. அண்ணனைப் போலவே ஒரு வடுவை நெற்றியில் பொருத்திக் கொண்டு மோசடிக்காரன் எவனாவது வந்து தன்னை ஏமாற்றி ஐந்து எருமைகளைக் களவாடி சென்றுவிட்டானா என்று ஐயுற்றான். சூரியனாக இருந்தால் என்னிடம் சொல்லாமல், எனக்குத் தெரியாமல் ஏன் மாடுகளை எடுத்துச் செல்லவேண்டும்? என்று அஞ்சினான். எனினும் அப்பா அறிவுறுத்தியபடி நான் நேர்மையாக நடந்து கொண்டேன். இதற்கு இறைவனே சான்று. அதனால் நான் வருந்த வேண்டியதில்லை என்று தெளிந்து அமைதி கொண்டான்.
சில நாட்கள் சென்றன. ஒரு நாள் அழகிய மாட்டு வண்டி சந்திரன் வீட்டின் முன்பு வந்து நின்றது. சந்திரன் வீட்டினின்றும் வெளியே வந்து பார்த்தான். பெரிய செல்வந்தர் போலத் தோற்றம் அளித்த ஒருவர் உயரிய ஆடை அணிகலன்களுடன் கம்பீரமாக வண்டியிலிருந்து இறங்கினார். என்ன விந்தை அது! அவரது நெற்றியிலும் பெரியதோர் கருப்பு வடு இருந்தது. வியப்பினால் வாயடைத்துப் போய்விட்டான் சந்திரன். அண்ணனின் சாயல் அவரிடமும் தெரிந்ததால் அவனால் ஒரு உறுதியான முடிவிற்கு வர முடியவில்லை.
அப்போது அப்பெரியவர் அவனருகே வந்தார். “தம்பி! உனக்கு என்னைத் தெரியவில்லையா?” என்று கனிவோடு வினவினார். குரலைக் கேட்டதும் வந்துள்ளவர் சூர்யா அண்ணா தான் என்று சந்திரனுக்குப் புரிந்துவிட்டது. பாய்ந்து சென்று அவரை அணைத்துக்கொண்டான். “அண்ணா! நான் ஒரு பெரிய தப்பு செய்து விட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களைப் போலவே நெற்றியில் வடுவுடன் வந்த ஒரு மோசடிக்காரனை, தாங்கள் என்று நம்பி வீட்டிற்கு அழைத்து வந்தேன். உங்களுக்குரிய ஐந்து எருமைகளையும் அவனுக்குச் சொந்தம் என்று கூறினேன். மறுநாள் காலை, அவன் எனக்குத் தெரியாமல் உங்கள் எருமைகளை ஓட்டிச் சென்று விட்டான். அவ்வாறு நான் செய்த தவறுக்காக, உங்கள் பங்கை நீங்கள் இழப்பதை நான் விரும்பவில்லை. என்பங்கு ஐந்து எருமைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று பணிவோடு கூறி அண்ணனது கால்களில் பணிந்து வணங்கினான் சந்திரன். சூர்யன் உடனே தம்பியைத் தூக்கி அணைத்துப் பிடித்து அமைதிப்படுத்தினான். என் இனிய இளவலே! அன்பின் சந்திரா! நீ ஏதும் தவறு செய்யவில்லை! நானே தான் அன்று நைந்த உடைகளுடன் உன் நேர்மையைச் சோதிக்க வந்தேன். உண்மையாக நீ நம் மதிப்பிற்குரிய தந்தையரைப் போலவே நேர்மையில் சிறந்தவனாக இருக்கின்றாய். அவருடைய ஆசியால் நானும் ஒரு நல்ல வணிகத்தில் ஈடுபட்டுள்ளேன். பழங்கள் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறேன். நகரத்தில் வசதியான வீடொன்றைக் கட்டிக்கொண்டு நலமுடன் வாழ்கிறேன். இந்த அழகிய மாட்டு வண்டியும், ஒரு பெரிய பழத்தோட்டமும் கூட எனக்குச் சொந்தமானவை. இப்போது இங்கு எதற்கு வந்தேனென்றால் உன்னையும் நகரத்திற்கு அழைத்துச் செல்லவே தான். உனக்குக் கடை வீதியில் ஒரு சிறிய அறையை வாங்கியுள்ளேன். நீ அங்கு ஒரு பால் பண்ணை துவக்கி, பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை வியாபாரம் செய்” என்று அன்பொழுகக் கூறினான்.
பிறகு இருவரும் கைகோர்த்துக் கொண்டு தந்தையின் படத்தின் முன் நின்று பிரார்த்தித்தனர். “அப்பா! நேர்மையின் மேன்மையைத் தாங்கள் எங்களுக்கு வலியுறுத்திக் கற்பித்தீர்கள். பணத்தால் பெற இயலாத அமைதியையும் ஆனந்தத்தையும் தாங்கள் கற்பித்த நேர்மை எங்களுக்குத் தருகிறது. பல பிறவிகளில் நாங்கள் ஆற்றி வந்த நல்வினையால் தான் தங்களை நாங்கள் தந்தையாகப் பெற்றோம். தங்களுக்கு எங்கள் தலை தாழ்த்திய வணக்கங்கள்” என்று பணிந்து உவகை பொங்க நின்றார்கள்.
கேள்விகள்:
- சந்திரன் நேர்மையாக நடந்து கொண்டதனால் அவன் பெற்ற பரிசு என்ன?
- நேர்மையாக நடந்து கொண்டதால் சூர்யன் என்ன வெகுமதி பெற்றான்?
- இரண்டு சகோதரர்களும் தந்தையாரிடமிருந்து என்ன பாடம் கற்றனர்?