வாய்மையே தெய்வம் II
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவின் அடிமைத் தளையைத் தகர்த்தெறியப் போராடிய மகாத்மா காந்தியோடு உறுதுணையாக நின்று செயலாற்றிய பெரியோர்களில் பாலகங்காதர திலகரும் ஒருவராவார்.
அவர் மாணவராயிருந்த போதே அறிவுகூர்மையும், ஒழுக்கமும், பணிவன்பும் மிக்க மாணவன் என்று ஆசிரியர்களால் போற்றப்பெற்றார். பள்ளியில் ஒரு நாள் ஓர் ஆசிரியருக்கு ஒரு புதுமையான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. இடைவேளையின் போது யாரோ சில மாணவர்கள் நிலக்கடலையை உரித்துத் தின்று விட்டுத் தோல்களை ஆசிரியரது மேசை அருகில் இறைத்துப் போட்டிருந்தனர். இடைவேளைக்குப் பிறகு உள்ளே வந்த சிறுவன் ஒருவன் கூட அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. பள்ளி மணியடித்து அனைத்து மாணவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். ஆசிரியர் உள்ளே நுழைந்ததும், அவர் கண்களில் மேசை அருகில் இறைந்து கிடந்த வேர்க்கடலைத் தோல்கள் தென்பட்டன. உடனே அவரது கோபம் கட்டுக் கடங்காது எழுந்தது.
“யார் இத்தகைய இழிந்த குறும்பைச் செய்தது?” என்று வெடித்துக் கேட்டார். ஒருவரிடமிருந்தும் ஒரு சொல் கூட வெளிவரவில்லை. “மறுபடியும் கேட்கிறேன், யார் செய்த குறும்புச் செயல் இது? தவறு செய்த மாணவன் எழுந்து நிற்காமற்போனால், அவன் செய்த குற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவன் எழுந்து அவனைக் குறிப்பிடட்டும்” என்று கோபத்தின் உச்சியில் உரக்கக் கத்தினார் ஆசிரியர்.
மாணவர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பெரும்பான்மையினர் குற்றவாளி யாராக இருக்கலாம் என்று வியந்து நோக்கினர். ஆனால் யாருமே எழுந்து நிற்கவில்லை.ஒருவரும் ஒரு வார்த்தையும் பேசவுமில்லை.
தாங்கமாட்டாத சினத்தில் பொங்கிக் கொண்டிருந்த ஆசிரியர் மேசையில் இருந்த பிரம்பைக் கையில் எடுத்தார். “நீங்கள் யாருமே தவறு செய்தவனைக் கண்டு பிடிக்க எனக்கு உதவாததால், நான் உங்கள் ஒவ்வொருவரையும் அடிக்கப் போகிறேன்,” என்று இரைந்தார். பின்னர் முதல் வரிசையில் முதலில் அமர்ந்திருந்த பையனை அடிக்க நெருங்கினார். அப்போது பாலன் எழுந்து நின்று துணிவாக, ”ஐயா! எங்களில் பலருக்கு உண்மையாகவே யார் இத்தகைய இழிச் செயலைச் செய்தவன் என்று தெரியாது. இது போன்று வேர்க்கடலைத் தோல்கள் கீழே இறைந்து கிடப்பதையே அறியாதவர் பலரும் இங்கு உள்ளனர். அதனால், இடைவேளையின்போது நாங்கள் எல்லோரும் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் வேறு வகுப்பு மாணவன் எவனாவது தான் இந்தக் குறும்புச் செயலைச் செய்திருக்க வேண்டும். அப்படியிருக்கும்போது,குற்றமற்ற பையன்கள் ஏன் அடிபட வேண்டும் ஐயா?” என்று விளக்கினான்.
ஆசிரியருக்குப் பாலனின் நல்லியல்புகள் பற்றித் தெரியும். அதனால், தன் கோபத்தை அடக்கி நிலைமையை உணர முயன்றார். ஆனால் தன் முயற்சியில் தோற்கவே, மறுபடியும் கோபம் கிளர்ந்து எழ, “அதிக அறிவாளியாகப் பேசாதே பாலன்! உங்களில் யாராவது ஒருவனுக்காவது குற்றவாளியைத் தெரிந்திருக்க வேண்டுமென்றே நான் நம்புகிறேன். அவன் எழுந்து உரைக்காது போனால், நான் வகுப்பு முழுவதற்குமே தண்டனை கொடுக்க வேண்டியதுதானே!” என்றார்.
பாலன் உடனே மரியாதையுடன், ”ஆனால், ஐயா! இது நியாயமானதும் அன்று, நேர்மையானதும் அன்று என்று நான் நினைக்கிறேன். எங்களுடைய குற்றமற்ற தன்மையைக் குறித்து நான் கூறியது முற்றிலும் உண்மையே! ஏதும் அறியாத பேதை மாணவர் அடி படுவதைக் காண நான் பொறுக்க மாட்டேன். அதனால் நான் வகுப்பை விட்டு வெளியேற அனுமதி தாருங்கள்,” என்று கூறிவிட்டு, ஆசிரியர் பதில் கூற இயலாது மலைத்து நிற்கும் போதே அறையை விட்டு வெளியேறினான்.
மாணவர்கள் பாலனுடைய எதற்கும் அஞ்சாத துணிவு, நீதி, நேர்மையிடம் கொண்டிருந்த ஆர்வம் இவற்றைக் கண்டு வியந்து போற்றினர். ஆசிரியராலும் பாலனைப் புகழ்ந்து போற்றாமல் இருக்க முடியவில்லை. வகுப்பைப் பார்த்து, “பாலன் ஒரு சாதாரணமான பையன் இல்லை. அவனைப் போலவே ஒவ்வொரு மாணவனும் வாய்மையும் ஒழுக்கமும் நிறைந்தவனாக இருந்தால் நம் நாட்டின் எதிர்காலம் மிக மிக உன்னதமாக இருக்கும்,” என்றார்.
வாய்மைக்கும் நேர்மைக்கும் பாலன் கொண்டிருந்த அடங்காத ஆர்வமும், அன்புமே அவனை நாட்டின் மாபெரும் தலைவராக உயர்த்தியது. அவர் பிற்காலத்தில்“லோக மான்ய திலகர்” என்று போற்றி அழைக்கப்பெற்றார். தம் நல்லியல்புகளினால் நாட்டு மக்களால் பேரன்போடு மேன்மையாக மதித்துப் பாராட்டிப் போற்றப் பெற்றார் அவர்.
கேள்விகள்:
- ஆசிரியர் செய்த தவறு என்ன?
- பாலன் ஏன் வகுப்பை விட்டு வெளியேறினான்?
- அந்த நிகழ்ச்சி நடந்த அன்று நீ பாலனுடைய வகுப்பிலிருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?