எதுவும் உபயோகமற்றது இல்லை
பண்டைய நாட்களில் மாணவர்கள் கல்வி கற்பதற்காகக் குருகுலத்திற்குச் சென்று, குருவுடன் பல ஆண்டுகள் தங்கிப் பயில்வது வழக்கம். அவர்கள் கல்வி கற்றுத் தெளிந்த பின், குருவின் ஆசியுடன் தங்கள் வீட்டிற்குத் திரும்பி, வாழ்க்கையைத் தொடங்குவார்கள்.
ஒருமுறை மாணவர்கள் இருவர் குருகுலத்தைவிட்டுச் செல்லும்போது, குருவிற்குத் தாங்கள் என்ன தக்ஷிணைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள்.
குரு, மாணவர்களுடைய ஈடுபாடு, கட்டுப்பாடு, கடமை உணர்வு, அன்பு, நன்றியுணர்வு, ஆகியவற்றைக் கண்டு மிக மகிழ்ந்து, மாணவர்களது அறிவிற்கு இன்னும் மெருகேற்றவேண்டும் என்று நினைத்தார். “காட்டிற்குச் சென்று யாருக்கும் பயன்படாத உலர்ந்த இலைகள் கொஞ்சம் கொண்டுவாருங்கள் “ என்று குரு சொன்னார்.
அந்த மாணவர்கள் தம்மிடம் குரு கேட்பது ஒரு விநோதமான பரிசு என்று அதிசயித்து, குருவார்த்தைகளைத் தட்டாதவர்கள் என்ற காரணத்தினால் காட்டைநோக்கிச் சென்றார்கள். மரத்தடியில், காய்ந்த இலைகளின் குவியல் இருப்பதைக் கண்டார்கள். அந்தக் குவியலிலிருந்து கொஞ்சம் காய்ந்த இலைகளை எடுத்தார்கள். இதைக் கண்ட ஒரு விவசாயி, அவர்களிடம் ஓடிவந்து, இந்தக் காய்ந்த இலைகளை எரித்து சாம்பலாக்கி என் வயலுக்கு உரமாக இட்டு, விளைச்சலைப் பெருக்குவதற்காக சேமித்து உள்ளேன். எனவே அந்த காய்ந்த இலைகளைத் திருப்பிப் போட்டுவிடுங்கள்” என்று சொன்னார்.
மாணவர்கள் மேலும் சிறிது தூரம் சென்றதும், ஒரு பெரிய பறவை உயரமான ஒரு மரத்தின் அடியில் காய்ந்து கிடந்த இலைகளை எடுத்து, ஒரு சிறிய மரத்தில், இலைகளையும் புற்களையும் கொண்டு கூடு கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அந்த இலைகள் பறவைகளுக்குப் பயன்படுவதால் அவைகளை எடுத்துச் செல்ல அவர்கள் விரும்பவில்லை.
எனவே மாணவர்கள் காட்டினுள் சென்றனர். அங்கு மூன்று பெண்கள் கூடைகளில் காய்ந்த இலைகளைப் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டிருந்தனர். மாணவர்கள் அவர்களை, “ஏன் காய்ந்த இலைகளை சேகரிக்கின்றீர்கள்?” என்று கேட்டனர்.
முதல் பெண், “அவற்றால் வெந்நீர் தயாரிக்க” என்றாள்.இரண்டாவது பெண்மணி, “அந்தக் காய்ந்த இலைகளில் கிடைக்கும் ஈர்குச்சிகளைக் கொண்டு இலை முதலியன தைத்துக் கோவில்களிலும், ஆசிரமங்களிலும் விற்பேன். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டுக் குழந்தைகளுக்கு உணவளிக்கின்றேன்” என்று சொன்னாள். மூன்றாவது பெண்மணி சொன்னாள், “என்னுடைய கணவர், மருத்துவர். அந்த இலைகளைக் கொண்டு, பல வியாதிகளைப் போக்க மூலிகை மருந்துகள் தயாரிக்க இவை பயன்படுகின்றன” எனக்கூறினார்.
யாருக்கும் பயன்படாத, காய்ந்த இலைகளை குரு தக்ஷிணையாகக் கேட்டார். ஆனால் அவர்களால் அது இயலாமல் போகவே, குருகுலத்திற்குத் திரும்ப நினைத்தனர். அப்போது அங்கே குளத்தில் பெரிய காய்ந்த இலை ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அந்த இலை யாருக்கும் பயன்படவில்லை என நினைத்து, அதை எடுக்கும்போது அந்த இலையில் இரண்டு பெரிய சிவப்பு எறும்புகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்த இலையை ஒரு மாணவர் கையிலெடுத்ததும் அவை அசைவதை நிறுத்தின.அந்த செயல் “அந்தக் காய்ந்த இலை, எங்கள் உயிர் காக்கும் படகு. அது இல்லை என்றால் நாங்கள் இந்நேரம் இந்தக்குளத்தில் மூழ்கி இறந்திருப்போம்” என்று உணர்த்துவது போல் இருந்தது. எறும்புகளைக் கரையில் விட்டுவிட்டு, அந்த இலையைக் குளத்திலேயே வேறு ஜீவராசிகளுக்குப் பயன்படும் வகையில் போட்டனர். பின்பு மாணவர்கள், இனி யாருக்கும் பயன்படாத இலைகளைத் தேடுவதில் பயனில்லை என உணர்ந்து, குருவிடம் சென்று தங்கள் அனுபவங்களை விரிவாகக் கூறினர். குரு கேட்டதக்ஷிணையைக் கொடுக்க முடியாமல் போனதற்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டனர்.
குரு “நான் உங்களிடம் விரும்பிய தக்ஷிணை எனக்குக் கிடைத்து விட்டது. நீங்கள் பெற்ற அறிவே எனக்கு உண்மையான குரு தக்ஷிணையாகும். ஒரு உலர்ந்த இலை, மனிதர்களுக்கும், பறவைகளுக்கும், ஊர்வனவற்றுக்கும் பயனைத் தரும் போது, மதிப்புள்ள இம்மனித உடலை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தி, மேலும் மதிப்புள்ளதாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஆகவே உங்கள் உடல் நலனைப் பேணிப்பாதுகாத்து, உங்கள் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
மேலும் அவர், ”தேவை உள்ளவர்களுக்கு, உடனே உதவி செய்யும் வாய்ப்புகளை நழுவவிடாதீர்கள். உடல்நலம் குன்றியவர்கள், வயதானவர்கள், ஒன்றும் அறியாதவர்கள், ஏழை எளியவர்கள் இவர்களுக்குச் சேவை செய்யத் தவறாதீர்கள். இதன் மூலம் கற்ற பாடத்தை, ஒரு போதும் மறவாதீர்கள்”. என்று ஆசீர்வதித்து அருளினார்.
கேள்விகள்:
- பலனற்ற உலர்ந்த சருகுகளைத் தேடிச் சென்ற சீடா் இருவரும் ஏன் ஏமாற்றத்தோடு திரும்பி வந்தனா்?
- சருகுகளைப் பற்றியும், மனித உடலைப் பற்றியும் ஒப்பிட்டு குரு இரண்டு சீடா்களுக்கும் கற்பித்தப் பாடம் என்ன?
- சாதாரணமாகப் பயனற்றவை என்று கருதப்பட்டு, நல்ல வண்ணமாகப் பயன்படுத்தக் கூடியவா் கையில் கிடைத்தால் உயாிய பொருள்களாக உதவும் இரண்டு பொருள்களைக் கூறுக.