வாய்மையே தெய்வம் I
உலகம் போற்றும் பெரியோர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், அவர்களுடைய மாண்புமிக்க பண்புகளில் சத்தியத்தின் சிறப்பு, தலைசிறந்த பண்பாக அமைந்திருப்பதைக் காணலாம். வாய்மை பேசுவதில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வம், போற்றுதற்குரியதாகச் சிறப்புற்றிருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்கள் இறைவன் விரும்பி ஏற்றுக்கொள்ளும் இயல்பாகிய சத்தியத்தில் முழு நம்பிக்கைக் கொண்டு ஒழுகி வந்துள்ளனர். இளம் வயதிலேயே இங்ஙனம் வாய்மையை விரும்பிக் கடைப்பிடித்து ஒழுகி வந்ததால், வளர்ந்து பெரியவர்களான பின்னரும், அவர்கள் உலகத்தின் தீய சக்திகளை எதிர்த்து நிற்கும் ஆற்றலும் துணிவும் பெற்றிருந்தனர். சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்கள், லோகமான்யதிலகர் போன்ற நாட்டுப்பற்று மிக்கப் பெரியோர்கள், இவர்களிடமிருந்து விலைமதிப்பற்ற சத்தியத்தின் சிறப்பினை நாம் அறிந்து கொள்கிறோம். சிறுவயதிலிருந்தே அவர்கள் வாய்மையைக் கடவுளாக மதித்துப் போற்றினர்.
சுவாமி விவேகானந்தர் என்று பின்னர் போற்றப் பெற்ற மகான், பள்ளியில் படிக்கும் போது நரேந்திரதத்தா என்று அழைக்கப் பெற்றார். சிறு பையனாக இருந்த போதே அவர் கொண்டிருந்த வாய்மையையும் துணிவையும் அனைவரும் போற்றினர். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர் ஒரு சிறு பொய் கூடச் சொன்னதில்லை. தாம் செய்துவிட்ட தவறை மறைக்கவும் அவர் புனைந்துரைத்ததில்லை. வியக்கத்தக்க அவரது பண்பு, பெற்றோரையும் மற்றோரையும் பெருமிதம் கொள்ளச் செய்தது. ஒரு நாள், பள்ளியில் புவியியல் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அன்று ஆசிரியர் வாய்மொழித் தேர்வு நடத்தினார். மாணவர்கள் ஒருவரை அடுத்து ஒருவராக அவரது கேள்விகளுக்கு விடையளித்து வந்தனர். நரேந்திரனுக்கு அடுத்துள்ள ஒரு மாணவனது முறை வந்தது. ஆசிரியர் அவனை ஒரு கடினமான கேள்வி கேட்டார். விடை தவறாக இருக்குமோ என்ற அச்சத்தோடு, தயங்கித் தயங்கி, மெலிந்த குரலில் பதில் சொன்னான் அவன். அவனது செயலால் ஆசிரியர் மிக்க கோபம் கொண்டார். “என்ன இது! உன் புவியியல் அறிவு இவ்வளவு மோசமாக இருக்கிறது! வகுப்பில் நான் கற்றுத்தரும் போது நீ கவனிப்பதில்லை. வீட்டிலும் படிப்பதில்லை போலும்!” என்று உரத்த குரலில் திட்டிவிட்டு பிரம்பை உயர்த்தி, ”உம்!கையை நீட்டு!” என்று ஆங்காரமாகக் கட்டளை இட்டார்.
சில நொடிகளில் பிரம்பு அம்மாணவன் கையை வீங்கச் செய்திருக்கும். அதற்குள் அருகிலிருந்த நரேந்திரன் முன் வந்து நின்று, உறுதியான குரலில், “அய்யா! அவனை அடிக்காதீர்கள். அவன் கூறிய விடை சரியானதே!” என்றார். அவரது துணிவு வகுப்பையே செயலற்று நிற்கச் செய்தது. ஆனால் ஆசிரியரோ அவரது செயலால் அதிக ஆத்திரம் அடைந்தவராய், “ ஓஹோ! எனக்கே நீ புவியியல் கற்றுத்தருகிறாய்! உம்! வா! உன் கையை நீட்டு!” என்று முழங்கிப் பிரம்பை ஓங்கினார். பிரம்பினால் அடிவாங்கித்துடித்த போதும், “அய்யா! அவன் கூறிய விடை சரியானதே!” என்று மீண்டும் மீண்டும் சொன்னார் நரேந்திரன். ஆசிரியர் அடித்து ஓய்ந்து ஆத்திரத்தைத் தணித்துக் கொண்ட பிறகும், வலியோடு நீர் சோர விம்மியபடியே, “அய்யா தயவு செய்து புவியியல் புத்தகத்தைப் பிரித்து விடையைச் சரி பாருங்கள். நான் உண்மையைக் கூறுகிறேன் அய்யா!” என்றார். நரேந்திரன் “உண்மை” என்று உறுதியாகக் கூறியது, ஆசிரியரது உள்ளத்தைத் தொட்டது. எனினும் நரேந்திரன் கூறியது பொய்யாகத் தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு, அதை நிரூபிக்கும் நோக்கத்துடன், ஆசிரியர் புவியியல் புத்தகத்தைத் திறந்து அந்தக் கேள்விக்கான விடை இருந்த பக்கத்தை எடுத்து மெதுவாகப் படிக்கலானார். மாணவர்கள் அனைவரும் அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்ற அச்சம் கலந்த ஆர்வத்துடன் ஆசிரியரின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆசிரியரின் முகமோ அந்த விடையைப் படிக்க படிக்கக் கறுத்துச் சுருங்கியது. படித்து முடித்ததும் ஆசிரியர், நரேந்திரனும் விடை சொன்ன மாணவனும் இருந்த இடத்தை நோக்கித் தளர்ந்த நடையுடன் வந்தார். “குழந்தைகளே! என் செயலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். நான் தான் விடையைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தேன்” என்று கூறி, இருவரையும் அணைத்துக் கொண்டார். பிறகு நரேந்திரனை நோக்கி, என் அன்பின் செல்வா! உன் வாய்மையையும் உறுதியான துணிவையும் நான் வியந்து பாராட்டுகிறேன். நீ மாணவர்களிடையே முன் மாதிரியானவன்.” என்று புகழ்ந்து தடவிக் கொடுத்தார். ஆசிரியரது புகழுரையைக் கேட்டவுடன், கையில் தான் பட்ட அடியும் அதனால் ஏற்பட்ட வலியும் நரேந்திரனுக்கு மறந்தே போயின. அதிலும், ஆசிரியர் தான் செய்த தவறுக்கு வருந்தியது அவனது நெஞ்சை நெகிழச் செய்தது. இறுதியில் வாய்மையே வென்றது என்ற உண்மை, மேலும் அவரது நெஞ்சத்தை மகிழ்ச்சியால் நிறைத்தது.
நரேந்திரனுக்கு உண்மை பேசுவதில் உள்ள ஆர்வமே பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து அவரிடமிருந்து இறைவனைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியுமான பேருண்மைகளை அறிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டியது. அவர் சுவாமி விவேகானந்தராக ஆனபோது, தாம் அறிந்துகொண்ட பேருண்மைகளை உலகம் முழுவதும் பரப்பினார். அதனால் மனித குலம் சீருற்று பண்பிற்சிறந்து இன்புற்று வாழ வழி வகுத்தார்.
அவர் காட்டிய வழியில், “வாய்மையே வெல்லும்” என்ற சிறப்பினை உணர்ந்து நடப்போமாக!
கேள்விகள்:
- தோழன் ஆசிரியரிடம் பிரம்படி படுவதைத் தடுக்க நரேந்திரதத்தா எது வலிவையும் துணிவையும் தந்தது?
- நரேந்திரனைப் பிரம்பால் அடித்த ஆசிரியரை எது தடுத்து நிறுத்தியது?
- உண்மையைப் பேசியதற்காக எப்போதாவது நீ அடியோ அல்லது வேறு தண்டனையோ பெற்று வருந்தியிருக்கிறாயா?
- உண்மை பேசியதற்காக எப்போதாவது நீ மகிழ்ந்து வெகுமதி பெற்றிருக்கிறாயா? உன் அனுபவங்களை முழுமையாக விளக்குக.