பரம்பொருள் ஒன்றே
தொலைதூர ஊருக்கு பாரசீகர், துருக்கியர், அரேபியர் மற்றும் கிரேக்கர் ஆகிய நான்கு நபர்கள் இணைந்து பயணம் செய்தனர். வழியில் உள்ள ஊரைச் சென்றடைந்ததும் அவர்கள் தெருவில் நின்று கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரேயொரு காசு(நாணயம்)தான் அவர்களிடத்தில் இருந்தது. ஒவ்வொருவரும் அக்காசை வைத்து தமக்கு விருப்பப்பட்ட பொருளை வாங்க ஆசைப்பட்டனர்.
“நான் ’ஆங்கூர்’ வாங்க விரும்புகிறேன்” என்றார் பாரசீகர். ’இனாப்’ வேண்டும் என்றார் அரேபியர். “’உஸும்’ தான் வேண்டும்” என்றார் துருக்கியர். “அதெல்லாம் வேண்டாம் எனக்கு ’ஸ்டஃபில்’ தான் வேண்டும்” என்றார் கிரேக்கர்.
அவ்வழியாக வந்த ஒரு புத்திமான் நால்வரும் சண்டையிடுவதைக் கவனித்தார். புத்திமானுக்கு அந்த நால்வர் பேசும் மொழிகளும் நன்றாகத் தெரியும். “அந்தக் காசை (நாணயத்தை) என்னிடம் தாருங்கள். உங்கள் நால்வரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்கிறேன்” என்றார் அவர்.
புத்திமானை முதலில் அவர்கள் நம்பவில்லை. ஆலோசனைக்குப் பின் காசை புத்திமானிடம் கொடுத்தார்கள். புத்திமான் ஒரு பழக்கடைக்குச் சென்று நான்கு சிறு திராட்சைக் கொத்துக்களை வாங்கிக் கொண்டு வந்தார்.
’ஆ! இதுதான் என்னுடைய ‘ஆங்கூர்’ என்றார் பாரசீகர். ’நான் விரும்பிய ‘இனாப்’ கொண்டு வந்திருக்கிறீர்களே!’ என்றார் அரேபியர். ’ஆஹா! என் ‘உஸும்’ கிடைத்துவிட்டது’ என்றார் துருக்கியர். ’இதுதான் நான் கேட்ட ’ஸ்டஃபில்’ என்றார் கிரேக்கர். ஒருவர் பேசும் மொழியை மற்றவர் அறியாமல் இருந்ததே அவர்கள் சச்சரவுக்கான அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்தனர்.
”தெய்வீக வடிவினரே! இங்கே (சுவாமி அருகில்) வந்த பின்பு, ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனம், மொழி, ஜாதி, மதம், மதக்கோட்பாடு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, நாம் இறைவனின் குழந்தைகள் என்பதை நீங்கள் உணர வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும்.” [20-10-1988 அன்று பகவான் பாபா ஆற்றிய தெய்வீக உரையிலிருந்து]
“பசுக்களின் நிறம் பலவானாலும் பாலின் நிறம் வெண்மை தான் விண்மீன்கள் பலவானாலும் வானம் ஒன்று தான் நாடுகள் பலவானாலும் பூமி ஒன்று தான் உடல்கள் பலவானாலும் ஆத்மா ஒன்று தான் உயிர்கள் பலவானாலும் சுவாசக்காற்று ஒன்று தான் சமயங்கள் பலவானாலும் சத்தியம் (கடவுள்) ஒன்று தான்” -‘ஏகம் ஸத்- விப்ரா: பகுதா வதந்தி’ என்று வேதம் கூறுகிறது. “சத்தியம் (கடவுள்) ஒன்றே; ஆனால் புத்திமான்கள் வெவ்வேறு நாமங்களால் அழைக்கின்றனர்” என்பது இதன் பொருள்
“முஸ்லிம்களால் யார் அல்லாவாக வழிபடப்படுகிறாரோ,
யூதர்களால் யார் ஜெஹோவாக வழிபடப்படுகிறாரோ,
வைஷ்ணவர்களால் யார் விஷ்ணுவாக வழிபடப் படுகிறாரோ,
சைவர்களால் யார் சிவனாக வழிபடப்படுகிறாரோ
அவரை எப்படி வணங்கினாலும் சந்தோஷத்துடன் செவிசாய்ப்பார்.
புகழையும், அதிர்ஷ்டத்தையும் வழங்குவார்.
மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பொழிவார்.
அவர் ஓருவரே,
மேலான ஆத்மா. அவரை பரமாத்மா என்று அறிந்து கொள்”
என்று நம் அன்பிற்குரிய பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா கூறுகிறார்.
எம்மதமும் வேற்றுமையைப் போதிப்பதில்லை.