ஐந்து விரல்களின் வாக்கு வாதம்
ஒருநாள் ஐந்து விரல்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டன. ஒவ்வொரு விரலும் தான்தான் முக்கியமானவன் என்று பறை சாற்றியது.சுண்டு விரல் கூறியது : நான்தான் முதல் விரல். ஆதலால் நானே முக்கியமானவன். மோதிர விரல் கூறியது: நான் இக்கூற்றை மறுக்கிறேன். எனக்குத்தான் மோதிரம் அணிவித்து ராஜமரியாதை செய்கின்றனர். நடு விரல் கூறியது: ஐவரில் நான் தான் உயரமானவன். உருவில் பெரியவனாகிய நானே முக்கியமானவன்.
ஆள்காட்டி விரல் கூறியது: எதையும் யாரையும் சுட்டிக் காட்டப் பயன்படுவது நான் மட்டுமே. எனவே நான்தான் முக்கியமானவன். கட்டை விரல் மற்ற விரல்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கூறியது: ஏன் வீண் சர்ச்சை? நானில்லாமல் இந்தக் கையால் எதுவும் செய்ய இயலாது. ஆகவே நானே முக்கியமானவன்.
கதையின் உட்பொருள், ஐந்து விரல்களும் முக்கியமானவை. எல்லா விரல்களும் ஒருங்கிணைந்து செயல்படும்பொழுது ஆற்றும் பணி சிறக்கும். அதுபோல எல்லா மதங்களும் முக்கியமானவையே. எல்லா மதங்களும் இணைந்து செயல்பட்டால், ஒற்றுமை ஓங்கும்; இன்முறை இனிக்கும்; அமைதி மலரும்; ஆனந்தம் ஆனந்தமாகும்.
“பல்வேறு மதங்களும் வாழட்டும்; வளரட்டும்; செழிக்கட்டும்.
பரம்பொருளின் திருப்புகழை அனைத்து மொழிகளிலும்,
விதவிதமான மெட்டுகளிலும் நாம் பாடுவோம்.
அதுவே சர்வ மதங்களின் லட்சியமாக இருக்க வேண்டும்.”