யானை கதை
பலம் பொருந்திய வெண்மை நிற யானை ஓன்று இருந்தது. அதன் தும்பிக்கை வலிமையானது. தந்தங்கள் நீளமானவை. அது ஓரு நல்ல பயிற்சியாளனால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது. பயிற்சியாளன், குருடர்கள் வசிக்கும் இடத்திற்கு யானையை அழைத்து வந்தான். யானை வந்த செய்தி அவ்விடத்தில் வேகமாகப் பரவியது. அங்குள்ள பார்வைத்திறன் அற்ற அறிஞர்களும், ஆசிரியர்களும் யானையின் அருகே வந்து அதை ஆராய ஆரம்பித்தனர்.
யானை சென்றதும், அவர்கள் ஓன்று கூடி யானையைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். தும்பிக்கையைத் தொட்டுப் பார்த்தவர்கள், யானை பெரிய கனமான பாம்பைப் போல் இருப்பதாகக் கூறினார்கள். வாலைத் தொட்டுப் பார்த்தவர்கள், யானை சிறிய பாம்பு போல் இருப்பதாகக் கூறினார்கள். காலைத் தொட்டுப் பார்த்தவர்கள், தூண் போல் யானை இருப்பதாகக் கூறினார்கள். உடம்பைத் தொட்டுப்பார்த்த சிலர், யானை பெரிய பீப்பாய் போல் இருப்பதாகக் கூறினர். தந்தத்தைத் தொட்டுப் பார்த்தவர்கள், யானை கடினமாகவும், வளைந்தும் இருப்பதாகக் கூறினர். செவிமடலைத் தொட்டுப் பார்த்தவர்கள், யானை முறம் போல இருக்கிறது என்று கூறினர்.
முரண்பாட்டின் காரணமாக ஒருவரையொருவர் திட்டி நிந்தனை செய்தனர். ஒவ்வொரு குருடரும் தத்தம் கருத்தில் உறுதியாக இருந்தனர். அவரவர் தொட்டு அறிந்த வழியில் அவர்கள் நேர்மையாக உள்ளனர் என்பதை யானைப் பயிற்சியாளர் புரிந்து கொண்டார். ஆனால் ஒட்டுமொத்தமான உண்மையை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார்.
அதே போல தான், வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் புரிந்து கொண்ட வழியில் கடவுளை விவரிக்கின்றனர். ஒவ்வொரு மதமும் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் இறுதியில் எல்லாப் பாதைகளும் இறைவனிடமே நம்மை இட்டுச் செல்கின்றன.
“கதையின் ஆழ்ந்த உட்பொருள்: ஆத்மா (கடவுள்) ஓன்றே. ஒவ்வொருவரும் அதன் ஒரு பகுதியை மட்டுமே பார்க்கின்றனர். வெவ்வேறு விதமாகக் கணிக்கின்றனர். அவர்கள் பார்த்த அனைத்தின் ஒட்டு மொத்தமே சத்தியம் (கடவுள்) ஆகும்.“
[“சத்ய சாயி அருளமுதம்” – வால்யும்-vi, அத்யாயம் – 44]