இளம் சாயியின் வாழ்க்கையில் …
எனது வாழ்வே என் செய்தி
பகுதி 1
இளம் சத்யா பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியபோது மற்றப் பிள்ளைகளைப் போலில்லாமல், தமக்குக் கற்பிக்கப்பட்ட பாடங்களைப் பற்றிப் பேசுவதில்லை. அதற்குப் பதிலாக அங்கிருந்த சக வகுப்பு மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும், என்ன கற்பித்தார் என்பதைப் பற்றி பேசினார்.
ஐந்து வயதிலிருந்து ஏழு வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகள் விளையாடுவதற்கும், பஜனைகள் பாடுவதற்கும் சத்யாவிடம் வருவார்கள். சத்யா நன்னடத்தைக் கோட்பாடுகளைக் கற்பிக்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வார். அவர்களிடம் இவ்வாறு கூறுவார்: “உன் தாயார் தான் உன்னைச் சுமந்து பெற்றாள். எத்தனையோ கஷ்டங்களையும், அசௌகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு, உனக்கு உடலைக் கொடுத்தாள். உன் தந்தை உன்னை வளர்த்துக் கொண்டு வருகிறார். உனக்காகப் பல விஷயங்களைத் தியாகம் செய்கிறார். உன் பெற்றோரை நேசித்து, அவர்கள் சொற்படி நட. அவர்களுக்கு மகிழ்ச்சி கொடு. எந்தச் சூழ்நிலையிலும் சத்தியம் தவறாதிரு. உன் பெற்றோர்கள் உன்னைக் கண்டிப்பார்கள் என்று பயந்து கொண்டு, குற்றங்களை மூடி மறைக்காதே. அவர்கள் கண்டிக்கட்டும். சத்தியத்தின் ஆற்றல், அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு இவற்றின் ஆற்றலைவிட அதிகமானது. சத்தியத்தை விட உயர்ந்த வலுவான ஆயுதம் வேறு எதுவும் இல்லை. ஆனால் உண்மையை எவ்வாறு கூற வேண்டும் என்று தெரிந்து கொள். பிறருக்கு இனிமையாக இருக்கும்படி, எரிச்சல் தராமலும், துன்புறுத்தாமலும் இருக்கும்படி உண்மை பேச வேண்டும்.”
குழந்தைகளுக்கு வயது முதிர முதிர, நன்னடத்தை என்றால் என்ன என்று சத்யாவை அவர்கள் கேட்பார்கள். அதற்கு சத்யா இவ்வாறு கூறுவார்: “கோபம், படாடோபம், பொறாமை போன்ற கெட்ட குணங்களை விட்டுவிட்டு அன்பை வளர்த்துக் கொள். அதுவே உன் உயிர்மூச்சாக இருக்கவேண்டும். அன்பின் துணைகொண்டு நீங்கள் உலகம் முழுவதையும் வெல்ல முடியும்”. மேலும் கூறுவார்: “எதனையும் திருடலாகாது. உங்களுக்கு நிஜமாகவே உணவு, புத்தகம், பேனா தேவைப்பட்டால், சகமாணவர்களைக் கேட்டு, பிறகு எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குத் தெரியாமல் எதனையும் எடுக்கக்கூடாது”.
ஸ்வாமி குழந்தைகளிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். குழந்தைகளும் அவரை அருமையாக நேசித்தனர். அவரிடமும் அவரது உபதேசங்களிடமும் அவர்கள் கொண்ட அன்பு, அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்ட விதத்தி-ருந்து தெரிந்தது. கேசண்ணா, ரங்கண்ணா, சுப்பண்ணா, ராமண்ணா இன்னும் பிறர் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.
ஒருவன் : ராஜுவின் சொற்கள் மிக இனிமையானவை. எனக்கு மிகவும் அருமையானவன்.
இன்னொருவன் : உனக்கு மட்டும் அல்ல. நாம் எல்லோருந்தானே அவனை நேசிக்கிறோம்.
மற்றொரு பையன் : ராஜு நமக்கு பல நல்ல விஷயங்களைச் சொல்கிறான். நாம் ஏதாவது ஒன்றிரண்டையாவது பழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
கேசண்ணா : கடவுளே எனது தாயும் தந்தையும். அவரே என் உயிருமாவார்.
வேறொரு பையன் : நான் இப்பொழுதெல்லாம் உண்மையே தான் சொல்கிறேன்.
அந்த நாளிலேயே, ஸ்வாமி பல மதங்களுக்கிடையே பல ஜாதிகளுக்கிடையே ஒற்றுமையை வளர்த்தார். புட்டபர்த்தி கிராமத்தில் பல முஸ்லீம்கள் இருந்தனர். அவர்கள் மொஹரம் (இரங்கல் தினம்) கொண்டாடுவது (அனுஷ்டிப்பது) வழக்கம். அப்போது சத்யா குழந்தைகளிடம் கூறுவார்: நீதி (ஒழுக்கம்) நெறி, மதத்தைவிட, வழிபாட்டு முறையை விட, முக்கியமானது. நீதிநெறியே நமது உயிர்மூச்சு. ஆகவே மதவேறுபாடு கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் தோழமை கொள்ளுங்கள். மொஹரத்தில் பங்கு கொள்ளுங்கள்.
ஒருநாள் கங்கண்ணா என்ற ஹரிஜனப்பையன் (இப்போது அவருக்கு 90 வயதாகிறது, அவரது மகன் பிரசாந்தி நிலையத்தில் நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிகிறார்) சத்யாவை தன் வீட்டுக்கு உணவருந்த அழைத்தான். சுப்பம்மா (சத்யாவின் வளர்ப்புத்தாய்) அவர்கூட வந்தார். அவர் பிராமண ஜாதியைச் சேர்ந்ததால், அவரைக் கண்டதும், அவன் பீதி அடைந்தான். சத்யா அப்போது கூறினார்: இவ்வாறு நீ பயப்படலாகாது. வேறுபாட்டு உணர்வுகளைக் கைவிடு. ஒருமையுணர்வுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து. ஒரேயொரு ஜாதிதான் உண்டு. அது மனித ஜாதி. ஒரே ஒரு மதந்தான் உண்டு. அதுவே அன்புமதம்.
சத்யா புக்கப்பட்டணத்தில் தொடக்கப்பள்ளியில் படித்தார். மேல்நிலைப்பள்ளியில் இடம் பெறுவதற்கு, மாணவர்கள் பரீட்சை எழுதித் தேர்வு பெறவேண்டும். அந்தப் பரீட்சை பெனுகொண்டாவில் நடைபெற்றது. அக்காலத்தில் போக்குவரத்துக்கு பஸ், ரயில் ஏதுமில்லை. முதன்முதலாக பெனுகொண்டாவுக்கு ரயில் வந்தபோது, அது காண்பதற்கு அதிசயமாக இருந்தது. கிராமத்தினர் அதை வருணிக்கும்போது, பாம்புபோல நீளமான ஒன்று தண்டவாளங்களில் ஊர்ந்து செல்கிறது; அதன் கண் ஒன்று பெரியதாக முன்பக்கம் ஒளிவீசுகிறது என்று கூறுவர்.
அக்காலத்தியக் கிராமத்தினருக்கு, புக்கப்பட்டணத்திலிருந்து பெனுகொண்டாவுக்குச் செல்வது, அமெரிக்கா அல்லது ரμயாவுக்குச் செல்லும் நீண்ட பயணம் போன்றது. ஈஸ்வரம்மா சில இனிப்புகளும், மற்ற தின்பண்டங்களும் சத்யா உண்பதற்கு தயார் செய்து, அவற்றை ஒரு துணியில் கட்டிக் கொடுத்தார். அக்காலத்தில் கிராமங்களில் டிபன்கேரியர் புழக்கத்தில் இல்லை. மற்ற சிறுவர்களுடன் சத்யாவும் சென்ற போது பெற்றோர் கண்ணீர் விட்டனர். மாட்டு வண்டியில் எட்டு சிறுவர்களும் அவர்களைக் கவனித்துக் கொள்ள ஒரு ஆசிரியரும் சென்றனர். சாலைகள் அனைத்தும் மேடு பள்ளங்களாக இருந்தன.
ஒவ்வொரு செங்குத்தான சரிவிலும், ஆசிரியர் எட்டு சிறுவர்களையும் தூக்கி வண்டியிலிருந்து கீழே இறக்கி விடுவார். அவர்கள் சிறிது தூரம் நடந்து செல்வார்கள். பிறகு ஆசிரியர் வண்டிக்குள் அவர்களை உட்கார்த்தி வைப்பர். அடிக்கடி இவ்வாறே நடந்தது. இவ்வாறு பெனுகொண்டாவுக்கு 3ணீ கி.மீ. தூரத்தைக் கடக்க, காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை ஆனது. சென்ற ஊரில் தங்குவதற்கு இடமோ, வசதியோ, சுகமோ எதுவுமே இல்லை. ஆகவே, நகருக்கு வெளியே கூடாரமிட்டு மூன்று நாட்கள் தங்கினார்கள்.
ஒவ்வொரு நாளும் சத்யா அனைவருக்கும் சமையல் செய்தார். சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு அனைத்தும் தானே தயாரித்தார். அந்தப் பரீட்சையில் சத்யா மட்டுமே தேறியிருந்தார். மற்றப் பிள்ளைகள் பயணத்தின் கடுமையால் தளர்ந்து, பரீட்சை விதிகளாலும் நடைமுறைகளாலும் திகைத்துக் குழம்பினர். ஆகையால், பரீட்சை சரியாக எழுதவில்லை. சத்யா மட்டுமே முதல் வகுப்பில் தேறியதாகக் கேள்விப்பட்ட மக்கள் கிராமத்தின் வழியாக கட்டை வண்டியில் ஊர்வலமாக சத்யாவை அழைத்துச் சென்று விழா கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
சத்யா தன் மூத்த சகோதரர் சேஷமராஜுவின் வீட்டில் தங்கிக் கொண்டு கமலாபுரத்தில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் படித்தார். எப்போதும் அங்கு தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவி வந்தது. குடிநீர் கிடைப்பது கடினமாக இருந்தது. ஆகவே சத்யா தினமும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவார். இதுபோல ஒரு நாளைக்குப் பலமுறை சென்று வரவேண்டும். காலை ஒன்பது மணி வரையில் இந்த வேலை செய்யவே நேரம் சரியாக இருக்கும். முந்தைய நாள் சமைக்கப்பட்ட ராகி களி, உப்பு நீரில் ஊறியிருக்கும். அதை ஊறுகாயுடன் சேர்த்து அவசரமாகச் சாப்பிட்டு, சத்யா பள்ளிக்கூடத்துக்கு ஓடுவார்.
பள்ளியில் சத்யா இரு மாணவர்களுக்கிடையே உட்கார்ந்திருந்தார். அவர்களது பெயர் ரமேஷ், சுரேஷ் என்பதாகும். அந்த சமயத்தில் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர், சாரணர் படை ஒன்று தொடங்கி இருந்தார். ஒவ்வொருவரும் சாரணப்படையில் சேரவேண்டும் என்றும் ஒரு வாரத்திற்குள் காக்கி காற்சட்டை, மேற் சட்டை ஜோடி ஒன்றும், பாட்ஜ் ஒன்றும், பெல்ட் ஒன்றும் தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். சாரணர் படை, புஷ்பகிரியில் நிகழும் வருடாந்திர கால்நடைச் சந்தையில் பங்கேற்று அங்கிருந்த மக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும்.
சத்யாவிடம் ஒரு பைசா கூட இல்லை. ராஜு குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். ஆகவே, வெங்கப்பராஜு அதிகப்பணம் கொடுக்க இயலாதிருந்தார். சத்யா பள்ளிக்கூடம் சேர்ந்தபோது அவர் சத்யாவுக்கு இரண்டு அணாக்கள் கொடுத்திருந்தார். ஆனால் அதற்குப்பிறகு ஆறு மாதங்கள் கழிந்துவிட்டன. அதற்குள் சத்யாவும் அவற்றைச் செலவழித்துவிட்டார். அந்தக் காலத்தில் இரண்டு அணாக்களுக்கு மதிப்பு அதிகம். வகுப்புத் தலைவனாக இருந்ததாலும், சாரணர் படைக்கு தலைமை வகித்ததாலும், சத்யா புஷ்பகிரிக்கு கட்டாயம் செல்ல வேண்டும். பணம் கையில் இல்லாதபோது, இது எவ்வாறு இயலும் என்று சத்யா யோசனை செய்தார்.
இக்காலத்துக் குழந்தைகளுக்கு இருப்பது போல சத்யாவிடம் டஜன் கணக்கில் ஆடைகள் இல்லை. அவரிடம் ஒரே ஒரு காற்சட்டையும், ஒரு மேற்சட்டையுந்தான் இருந்தன. அவற்றை மிகக் கவனமாகப் பராமரித்தார். பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியதும், தனது உடைகளைக் கழற்றி வைத்து, இடுப்பில் ஒரு துண்டைச் சுற்றிக் கொண்டு, அவற்றைத் துவைத்து காயப்போடுவார். பிறகு ஒரு வெண்கலச் செம்பில் கங்குகளை இட்டு அதைக் கொண்டு, துணிகளுக்கு இஸ்திரி போடுவார். மடிப்புகள் இருப்பதற்காக சத்யா அவற்றைக் கனமான தகரப் பெட்டியின் கீழ் வைப்பார். இவ்வாறு சத்யாவின் துணிகள் எப்போதும் தூசில்லாது, சுத்தமாகவும், மடிப்புக் கலையாமலும் இருக்கும். இவ்வாறு வருடம் முழுவதும் ஒரே காற்சட்டை, மேற்சட்டையை உடுத்தி வந்தார்.
சத்யா தன்னிடம் ஒரே ஒரு காற்சட்டை, மேற்சட்டை தான் இருக்கின்றன என்றும், தனக்கு சாரணர் யூனிபார்ம் துணிகள் வாங்கக் கையில் பணம் இல்லை என்று ஆசிரியரிடம் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், அவை குடும்ப கௌரவத்தை ஓரளவு பாதிக்கும். ஆகவே, சத்யா சொல்ல வேண்டாம் என்று திட்டமிட்டார். சத்யாவுக்குச் சில கஷ்டங்கள் இருப்பதையும், அதனால் சாரணர் படையுடன் செல்லாமல் இருக்க முயற்சி செய்கிறார் என்றும் வகுப்புத்தோழன் ரமேஷ் உணர்ந்து கொண்டான். ஆகவே தன் தந்தையிடம் சென்று, “அப்பா! சாரணர் யூனிபார்ம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அது மிகவும் எடுப்பாக இருக்கிறது. அதில் இரண்டு செட்டுகள் வேண்டும்” என்று கேட்டான்.
இரண்டு நாட்கள் கழித்து, ரமேஷ் அதிகப்படியாகத் தைத்த யூனிபார்ம் சட்டைகளை சத்யாவின் டெஸ்கில் வைத்து, அத்துடன் ஒரு குறிப்பும் எழுதி வைத்தான். “ராஜு, நீ எனக்கு சகோதரன் போன்றவன். நீ இந்த யூனிபார்மை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இல்லாவிடில், நான் உயிருடன் வாழ இயலாது”.
சத்யா இந்தக் குறிப்பைப் பார்த்ததும், அதைக் கிழித்துவிட்டு, இன்னொரு குறிப்பினை கீழ்க்கண்டவாறு எழுதினார்: “என்னுடைய நட்பினை நீ உண்மையாக விரும்பினால், இவ்விதமாக நன்கொடை எனக்குத் தந்து ஏற்றுக்கொள்ளச் சொல்லுதல் சரியல்ல. இது நமது நட்பைக் கெடுத்துவிடும். நமது சகோதரபாவம் குலையாமல், எனது நண்பனாகவும் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், இத்தகைய நன்கொடையினைக் கொடுக்காதே. நட்பு என்பது இதயத்துக்கும், இதயத்துக்கும் உள்ள தொடர்பு. நன்கொடை தருவது அதன் தூய்மையைக் கெடுத்துவிடும்”. ரமேஷ் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவன் மறுபடியும் யூனிபார்மை (சீருடையை) எடுத்துக் கொண்டான்.
புஷ்பகிரி சந்தை தொடங்க இன்னும் மூன்று நாட்களே பாக்கி இருந்தன. அனைத்துப் பையன்களும், “ராஜு, நீ போகவில்லையா?” என்று வினவினர். சந்தைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் சத்யாவுக்கு இதனால் ஏற்பட்டது. ஒவ்வொரு பையனும் பன்னிரண்டு ரூபாய் கொடுத்தான். பத்துரூபாய் பஸ் கட்டணம், இரண்டு ரூபாய் மற்ற செலவுகளுக்கு. பையன்கள் தங்கள் உணவைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். சத்யாவிடம் பனிரெண்டு ரூபாய் இல்லாததால், அந்தக் குழுவுடன் தன்னால் செல்ல இயலாது என்று தீர்மானித்தார். கடைசியில் கடுமையான வயிற்று வலி என்று சொன்னார். ஆகவே, ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை விட்டுச் செல்லும்படி ஆயிற்று.
அவர்கள் சென்றபிறகு, தனது பள்ளிக்கூடப் புத்தகங்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, கைப்பணத்தைக் கொண்டு, புஷ்பகிரிக்கு நடந்தே செல்வது என்ற கருத்து சத்யாவுக்கு உதயமாயிற்று. சத்யாவின் புத்தகங்கள் அனைத்தும் புத்தம் புதியவை. அவற்றை அவர் திறந்துகூடப் பார்த்தது இல்லை. தான் தேறிவந்த பழைய வகுப்புக்கு வந்திருக்கும் ஓர் ஏழை ஹரிஜனப் பையனை அவருக்குத் தெரியும். ஆகவே, சத்யா அவனிடம் நேரே சென்று “இந்தப் புத்தகங்கள் அனைத்தும் புதியவை. பாதி விலைக்கு உனக்கு நான் விற்க சம்மதிக்கிறேன்” என்றார். அவன் பாதிவிலை கூடக் கொடுக்க இயலாத ஏழை என்று அறிந்ததும், “எனக்கு ஐந்து ரூபாய்கள் கொடு போதும்; அதற்கு மேல் தேவையில்லை” என்று கூறினார். பஸ் கட்டணத்தைத் தவிர்த்ததால், உணவுக்கும் மற்ற செலவுகளுக்கும் இந்தப் பணம் போதும் என்று நினைத்தார். ஹரிஜனப் பையனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.