அதோ அந்த நர்ஸம்மா தான்!
ஸ்வாமி காருண்யானந்தா பகவான் பாபாவின் பக்தர், அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர். மரியாதைக்குரியவர். அவர், குஷ்டரோகிகளுக்கான ஒரு சிறு மருத்துவமனையும், ஆதரவற்றோர், ஊனமுற்றோருக்கான இல்லமும் நடத்தி வந்தார். ஒருநாள் ஒரு நிறைமாத கர்ப்பிணி, அவளிடம் இரக்கங்கொண்ட ஒருவரால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பெற்றாள். இந்த இடத்தில்தான் தகுந்த பாதுகாப்பும், உதவியும் கிடைக்கும் என்று அந்த நபர் நம்பினார். அந்தப் பெண் தன் கையில் இரண்டு வயதுக் குழந்தையைச் சுமந்து கொண்டிருந்தாள். ஸ்வாமி காருண்யானந்தா, அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து, அந்தக் குழந்தையை, சில பெண்களின் பராமரிப்பில் ஒப்படைத்தார்.
ஒருநாள் மாலை, மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் சினிமா பார்க்கச் சென்றனர். நள்ளிரவில் அவர்கள் திரும்பி வந்தனர். வந்தவர்கள், பிறந்த குழந்தையின் சத்தம் கேட்டு திடுக்கிட்டனர். அந்தச் சிறு மருத்துவமனையில் ஒரே ஒரு டாக்டரும், ஒரு நர்ஸýந்தான் இருந்தனர் (குழந்தை பிறக்க வெகுநேரம் ஆகலாம் என்று அவர்கள் நினைத்திருந்தனர்). ஓடிச்சென்று பார்த்தபோது அந்தப் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதைக் கண்டனர். அந்தக் குழந்தை நீரால் சுத்தம் செய்யப்பட்டு, வெள்ளைத் துண்டால் சுற்றப்பட்டு தொட்டி-ல் கிடத்தப்பட்டிருந்தது. தாயும் நன்கு கவனிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தாள்.
டாக்டரும், நர்ஸýம் அதிசயத்தில் ஆழ்ந்தனர். யார் அவளைக் கவனித்துக் கொண்டார் என்று கேட்டனர். அந்தப் பெண் “நான் பலமாகக் கூவி பிரார்த்தனை செய்தேன். அதிருஷ்டவசமாக இன்னொரு நர்ஸம்மா என் சப்தத்தைக் கேட்டு வந்தார்கள்” என்றாள். “இன்னொரு நர்ஸம்மாவா? அது யார்? இங்கு வேறு எந்த நர்ஸýம் கிடையாதே” என்று நம்பமுடியாமல் கேட்டனர். அந்தப் பெண் பாபாவின் படத்தைக் காண்பித்து, “அதோ அந்த நர்ஸம்மாதான்” என்றாள். “சில நிமிடங்களுக்கு முன்னால் இங்கிருந்தாள். இப்போது இன்னொரு நோயாளியைக் கவனிக்கச் சென்றிருக்கிறாள்” என்றாள்.
ஸ்வாமி காருண்யானந்தா புட்டபர்த்திக்குச் சென்றபோது, அவர் பேசுவதற்கு வாயைத் திறப்பதற்கு முன்னரே, பாபா அவரை மென்மையாகக் கடிந்து கொண்டார்: “மருத்துவமனையில் எல்லாப் பொருட்களையும் இன்னும் ஒழுங்கான, சீரான முறையில் வைத்துக் கொள்ளவேண்டும். எனக்கு வேண்டியவற்றைத் தேடி எடுத்துக்கொள்ள சிறிது நேரம் ஆயிற்று”.