இராமதஸரின் துன்பமும் அவர் துறவற மேற்றலும்
இராமதாஸர் பாதுகாப்பு இன்றிய நிலையிலும், பதைபதைப்பான கவலையிலும், நெஞ்சம் நோக வைக்கும் துன்பங்களுமாக ஓர் இருண்ட உலகத்தில் உழன்று கொண்டு இருந்தார். அது ஒரு பயங்கரமான இறுக்கமான, மனம் பலவாறு அலைபாயும் நேரமாக அவருக்கு இருந்தது. “இதிலிருந்து எப்படி விடுபடுவது? எங்ஙனம் அமைதி பெறுவது” என்று அவரது உள்ளம் நைந்து அழுதது.
ஒரு நாள் அவருடையத் துயரக் குரல் இறைவரால் கேட்கப்பட்டது. அசரீரியாக ஒரு குரல், “கவலைப்பட வேண்டாம். என்னை நம்பு, விடுதலை பெறுவாய்,” என்று அறிவுறுத்தியது. பேரலைகள் சீறி எழுந்து மோதும் பெருங்கடல் ஒன்றில் அகப்பட்டு, உயிருக்காக மன்றாடி வரும் ஒருவனுக்கு, ஒரு பெரிய மரப்பலகை கிடைத்தது போல இருந்தன. ஸ்ரீ இராமரது உற்சாக மூட்டிய அந்த அசரீரிச் சொற்கள் நீரின்றி வறண்டு கிடக்கும் பாலைவனத்தில் நிலையாக மழை பெய்வதுபோல, ஆதரவற்று தவித்த இராமதஸரது நொந்த நெஞ்சத்தை ஆற்றி நலமுறுத்தி உறுதிபடுத்தியது அந்த சொற்கள். அதன் பிறகு அவரது மனம் நாள் முழுதும் உலக இயல்களிலேயே செலவிட்டு வந்த நேரத்தில், ஒரு பகுதியை இராமரைக் குறித்து தியானத்தில் ஈடுபட்டது. அந்தத் துயரமான நேரத்தில், அவர் மனதிற்கு அமைதியும் ஆறுதலுமான விடுதலை தந்ததே அந்த மகாபுருஷன் இராமர்தானே!
அமைதி அருளிய இராமரிடம் இராமதாசர் கொண்ட பேரன்பு, நாளாவட்டத்தில், மெதுமெதுவாகப் பெருகிக் கொண்டே வந்தது. எவ்வளவுக்கெவ்வளவு இராமதாசர் தியானம் செய்து வந்து, இராம நாமத்தை ஓதினாரோ அவ்வளக்குக்கவ்வளவு அவரது துயரங்கள் விடுபட்டு வந்து, மனம் இன்பம் எய்துவதை அவர் உணர்ந்தார். உலக அலைச்சல்கள் அற்ற இரவு நேரம் முழுதும் ஒன்றிரண்டு மணி ஓய்வு தவிர இராம பஜனையிலேயே கழிந்து வரலாயிற்று. அவரது இராமபக்தி நாளாக ஆக, துடிப்பும் துள்ளலுமாக உற்ச்சாகத்துடன் பெருகி வந்தது.
பகல் நேரங்களில், செலவினமும் மற்ற தொல்லைகளையும் பற்றிய கவலையும் பதைபதைப்பும் இராமதசரை ஆட்கொண்டிருக்கும்போது, இராமர் பல எதிர்பாராத வழிகளில் வந்து அவருக்கு உதவுவார். உலக கடமைகளிலிருந்து விடுபட்டு, ஓய்வாக இருக்கும் போதெல்லாம் அது எவ்வளவு குறைந்த நேரமாயினும், உடனே தியானத்தில் அமர்ந்து இராம நாமத்தை ஓதத் துவங்கி விடுவார் இராமதாசர்.சாலைகளில் நடக்கும் போது கூட அவரது வாய் ‘இராம் இராம்’ என்று உச்சரித்துக் கொண்டேயிருக்கும். இங்ஙனமாக இராமதாசர் கொஞ்சம் கொஞ்சமாக உலகப் பொருள்களின் மீதுள்ள ஆர்வம் குறைந்து வரலானார்.
இரவுநேரம் ஒன்றிரண்டு மணி நேர உறக்கம் தவிர இராம சிந்தனையில் கழிந்தது. உயர்ந்த ஆடைகள் அழகிய உடுப்புகள் களையப்பட்டு தூய கதராடைகள் அணியப் பெற்றன. மெத்தென்ற படுக்கை போய், ஒரு வெற்றுப் பாயே படுக்கையாகிவிட்டது. உணவும் அங்ஙனமே, இரண்டு வேளையாகி, பிறகு ஒரு வேளையாகி, சில நாட்களுக்குப் பிறகு, வெறும் வாழைப் பழமும், அவித்த உருளைக்கிழங்குமாக குறைந்துக் கொண்டே வந்து விட்டது. மிளகாயும் உப்பும் அவரது உணவிலிருந்து அறவே அகற்றப்பட்டன. இராம நாமத்தைத் தவிர எதிலுமே சுவையற்றவராய் இடைவிடாது தியானத்தில் ஆழலானார் இராமதாசர். மெதுமெதுவாக அத்தகைய தியானம் உலகக் கடமைகள் செய்யும் பகல் நேரத்தையும் உரிமை கொண்டு விட்டன.
இந்த நிலையில் ஒரு நாள் இராமதாசருடைய தந்தையார் அவரிடம் வந்து, அவருக்கு இராம மந்திரத்தை உபதேசித்தருளினார். “ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்” என்ற அந்த மந்திரத்தை இடைவிடாது ஓதி வந்தால் இராமர் அவருக்குப் பேரின்ப முக்தியை நல்குவார் என்று அவர் அறிவுறுத்தினார். தந்தையே குருவாக ஏற்ற இராமதாசர் அவர் பணித்தபடியே ஓதி வரலானார். இந்த இராம மந்திரம் இராமதாசரது ஆன்மீக முன்னேற்றத்தை வேகமாக வளர்த்தது. அடிக்கடி கிருஷ்ணரது பொன் மொழிகள் ‘பகவத்கீதை புத்தரது “ஆசியாவின் விளக்கு”, ஏசு கிறிஸ்துவின் “புது பைபிள்”, (New Testment) மகாத்மா காந்தியின் ‘யெளவன இந்தியாவும்’, ‘பண்பாடமைந்த நாடும்’ இவற்றை படிக்கும் படி, இராமரால் இராமதாசர், தக்க தருணங்களில் ஊக்கமுறுத்தப்பட்டார். இராமதாசரது மென்மையான மனத்தில் துளிர்விட்டு முளைத்த பக்தி என்னும் சிறிய செடி, இத்தகைய மகான்களுடைய அறிவுரைகள் எழுப்பிய மின் ஆற்றல் போன்ற சூழ்நிலையில் செழிப்பாக வளர்ந்து வந்தது. அந்த நேரத்தில் அவருடைய மனத்தில், இராமர் ஒருவர் தாம் நிலையான பரம்பொருள். மற்ற அனைத்துமே நிலையற்றவை என்ற எண்ணம் மெதுமெதுவாக எழுந்தது. உலக பொருள்களின் மேல் ஆசையும் ஆர்வமும் குறையக் குறைய, ‘நான்’ ‘என்னுடையது’ என்ற ஆணவம்மிக்க எண்ணமும் குன்றி வந்தது.
சொந்தம் கொண்டாடும் இயல்பும், உறவினன் என்ற பந்தமும் அவரைவிட்டு மறைந்து வந்தன. நினைவுகள் எல்லாம், மனம் எல்லாம் ஆத்மாவெல்லாம் இராமர் மேலேயே ஒரு முகமாக குவிந்து நின்றன. இராமரே எல்லாவற்றையும் ஆட்கொண்டார், அவரே அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். உலக வாழ்க்கையின் பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்கு இராமதாசருக்கு வலிமையும் துணிவும் தேவைப்பட்டன. மெய்ப்பொருளை அறியாமலும் ஞான வாழ்வில் பண்படாமலும் இருந்த தம் அடியவர்களை கடுமையான தவ ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையில் ஈடுபடுத்தி வெற்றி நல்க இராமர் கருதுகிறார். அவரது கருத்தை நிறைவேற்றவே இராமதாசருக்கு வலிமையும் அஞ்சாத துணிவும் தேவைப்பட்டன. ஒரு நாள், இராம நாமத்தின் இனிமையில் லயித்து இருந்த போது இராமதாசர் சோர்வுடன் பின்வருமாறு நினைவுகூர்ந்தார்.
”ஓ! இராமா! தங்கள் அடியார்கள் தாங்கள் எத்துணை ஆற்றல் பெற்றவர் என்பதையும் எத்துணை கருணை மிக்கவர் என்பதையும் உடனே தெரிந்து தெளிந்தார்களானால், பின்னர் ஏன் அவர்கள் கவலைப்பட வேண்டும்? தங்கள் கருணைக்கு அவர்களை அப்படியே அர்ப்பணித்துக் கொள்ளலாமே! அதற்கு ‘நான்’ ‘எனது’ என்ற அகந்தையை அவர்கள் அகற்றினால் போதுமே! அண்டங்களையே பாதுகாத்து ஆவன புரிந்து வரும் அதிபதி தாங்கள், அதையறியாத பேதை மக்கள்,”நான் இதை செய்தேன். இது என்னுடையது அது என்னுடையது”, என்று விளம்பரப்படுத்துகிறார்கள், ஓ இராமா! எல்லாம் தங்களுடையது, எல்லாமே தங்கள் ஒருவரால் மட்டுமே நடத்தப்பெறுகிறது. அடியார்கள் செய்யும் ஒரு பிரார்த்தனை அவர்களை, ‘நான்’ என்ற அகந்தையை நீக்கிவிட்டு தாங்கள் வழிகாட்டும் பாதையில் பாதுகாத்துச் செல்வார்களே!’
எல்லாவற்றையும் அக்கணமே துறந்து விட்டு, ஒரு பிச்சைக்காரனைப் போல தோற்றத்துடன் இராம தாகத்தில் பூமியில் திரியவேண்டும் என்ற ஒரு குழப்பமான ஆசையும் அவருள் எழுந்தது. உற்ற நேரத்தில் இராமர், தற்செயலாக நிகழ்வதுபோல இராமதாசரை அவர் முன் இருந்த, ”ஆசியாவின் ஜோதி” என்ற புத்தகத்தைப் பிரிக்கச் செய்தார். பிரித்த பக்கத்தில் அவரது பார்வை நிலைத்தது. அதில் மாபெரும் துறவு நிலையைப் பற்றி புத்தர் கூறியருளியது குறிப்பிடப் பெற்றிருந்தது.”என் இதயம் அடைக்கப்பட்டிருந்த இந்த பொன்னான சிறையிலிருந்து உண்மைப் பொருளைக் கண்டு பிடிப்பதற்காக நான் வெளியேறும் தருணம் வந்துற்றது. மனித குலம் உய்வதற்கு நான் மேற்கொண்ட இந்த தேடும் பணி உண்மையைக் கண்டு பிடிக்கும் வரை தொடரும்.”அதே போல கிறிஸ்துவின் “புது பைபிளில் ( New Testament) ஒரு பக்கத்தைப் பிரிக்கத் தூண்டினார் இராமர். அதில் கிறிஸ்து கூறியவற்றை இராமதாசர் படித்தார்.”எவனொருவன், தன் வீட்டை, சகோதரர், சகோதரிகளை, தகப்பனை, தாயை, மனைவியை, குழந்தைகளை, நிலங்களை துறந்து என் பெயரை நாடி வருகிறானோ அவன் அதைப் போல பலநூறு மடங்கு இன்பம் பெற்று, நிலையான வாழ்வும் பெறுவான்.” அதேபோல பகவத் கீதையிலும் இராமதாசர் படித்தார். “எல்லா கடமைகளையும் ஒதுக்கிவிட்டு எவனொருவன் என் அரவணைப்பில் வருகிறானோ அவன் துன்புறாமல் இருக்க அவனைப் பாவங்களிலிருந்து நான் விடுதலைசெய்கிறேன்.”
இராமர் இங்ஙனமாக, புத்தர், கிறிஸ்து, கிருஷ்ணர் இவர்கள் வாயிலாக இராமதாசரோடு பேசி அறிவுறுத்தினார். எல்லோருமே ஒரே பற்றற்ற துறவற பாதையைக் காட்டினர். உடனே இராமதாசர் துணிந்து எழுந்தார். அப்போது விடியற்காலை ஐந்துமணி. எந்த உலகம் அவரது முழு கவனத்தையும் ஈர்த்து வந்ததோ எந்த உலகத்தில் தன்னுடையது என்று அவர் ஏதுமே உரிமை கொள்ள முடியாதோ அந்த உலகுக்கு ஒரு வணக்கம் செலுத்தினார். உடல், மனம், ஆன்மா அனைத்துமே அன்பு நிறைந்த, நிலையான பரம் பொருளான இராமரது பாதங்களில் பணிந்து விட்டன.