பொறுமை
நாம் பேரரசர் ஜனகரைப்பற்றி நன்கு அறிவோம். அவர் அரசை ஆள்வது, மக்களுக்கும் நாட்டினருக்குமான பணிகளை நலமார்ந்து செய்வது போன்ற உலகியல் கடமைகளைச் செய்யும்போது கூட தன் நினைவலைகளை இறை உணர்வில் இயங்கவிட்டுக்கொண்டே செய்வது வழக்கம். அங்ஙனம் செய்வது அவரால் இயன்றது, போற்றற்குரியதாகும்
மிதிலைக்கு அருகிலுள்ள காட்டில் மேன்மைமிக்க ரிஷி சுக முனிவர் தம் முடைய சீடர்களுக்குப் பலப்பல பொருள் பற்றி அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். அவரது சிறப்பைக் கேள்வியுற்ற ஜனகர் தாமும் சுகமுனிவரது சீடராகி பாடம் கேட்க விரும்பினார். எனவே காட்டிற்குச் சென்று பணிவோடு சுக முனிவரை வணங்கினார். அவரது கணக்கற்ற சீடர்களோடு தம்மையும் ஒருவராக ஏற்று அவர் கற்பிக்கும் பாடங்களைக் கற்றுக்கொள்ள அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார் .
அன்றிலிருந்து ஜனகரும் சுகமுனிவரது சீடர்களில் ஒருவரானார்.ஒரு நாள் ஜனகர் வரச்சற்று தாமதமாகிவிட்டது. அவர் வரும் வரை சுக முனிவர் பாடங்களைத் துவக்காது காத்திருந்தார். தாம் தாமதப்படுத்துவதன் காரணத்தை மற்ற சீடர்களுக்கும் சொன்னார். ஜனகர் வரும்வரை காத்திருக்கும்படி சுக முனிவர் சீடர்களிடம் சொன்னதும் அவர்களிடையே ஒரு முணுமுணுப்பு ஏற்பட்டது . அவர்கள், “ இந்த முனிவரிடம் பாடம் கற்க வந்த காரணமே, இவர் அரசன், பெரும் பதவியுள்ளவர்கள் என்றும் எளியவர் ஏழை என்றும் பாரபட்சம் பாராட்டாது கற்பிப்பவர் என்பதால் தான். இப்போது இங்கனம் செய்கிறாரே.” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர்.
அன்றிலிருந்து அவர்களுக்குத் தங்கள் குருவிடம் இருந்த பக்தியும் நம்பிக்கையும், சற்று குன்றிவிட்டது. ஜனகரையும் வெறுப்போடும் பொறாமையோடும் பார்த்தனர்
சுகர் தம் சீடர்களது மனோ நிலையை- பொறாமையும் வெறுப்பும் கொண்ட அவர்களது இயல்பை- புரிந்து கொண்டார். அவர்களுக்கு ஒரு சிறந்த பாடம் கற்பிக்க எண்ணினார் அவர். எதிபார்த்திருந்த தருணமும் விரைவில் வந்துற்றது. எல்லா சீடர்களின் கண்களுக்கும் மிதிலை நகரம் பற்றி எரிவது போல ஒரு மாயத்தோற்றம் செய்தார் சுகர். உடனே நகரம் எரிந்து விட்டால் என்னவெல்லாம் நேரிடக் கூடும், விளைவுகள் என்னென்ன ஏற்படும் அவரவர்கள் வீட்டில் எப்படியெல்லாம் துன்புறுவார்கள் என்று சீடர்கள் அனைவரும் பலவாறு எண்ணிக் குழம்பியவண்ணம் அமர்ந்திருந்தனர். சிலர் விரைந்து மிதிலைக்கு ஓடவும் முயன்றனர்.
ஆனால் மிதிலையின் அரசரான ஜனகர் இத்தகைய குழப்பங்களால் honesty 1தாக்கப்பட்டவராகவே தெரியவில்லை. இடத்தைவிட்டு அசையாது அவர் அமர்ந்திருந்தார். பற்றி எரியும் தீ அரன்மனைக்கும் பரவி விடக் கூடும் என்றும் உடனே நகரத்திற்குச் சென்று அரன்மனையிலுள்ளவர்களைக் காப்பாற்றும்படியும் சுக முனிவரே ஜனகரை கேட்டுக் கொண்டபோது கூட ஜனகர் இளநகை அரும்ப, “ எப்படியும் கடவுளின் கட்டளை நிறைவேற்றப்படும்” என்றும், “ அதை யாராலும் மாற்ற முடியாது” என்றும் உறுதியாகக் கூறினர். பொறாமை பிடித்த சீடர்கள் மிதிலை நகருக்கே ஓடினர். ஆனால் அங்கு ஒன்றுமே தீப்பற்றி யிருக்கவில்லை. அது நம்பிக்கையூட்டிய ஒரு மாயத்தோற்றமே என்று தெளிந்தனர். திரும்ப வந்து சுகரிடம் அதைக் கூறினர். அப்போது எதற்கும் கலங்காது பொறுமையாக திடமான சித்தத்துடன் தெளிவாக அமர்ந்திருந்த ஜனக மன்னரைக் கண்டு வியந்து நின்றனர். பொறாமையால் வெந்த சீடர் களை நோக்கி, “மன வலிமையற்ற பல சீடர்களைப் பெற்றிருப்பதைவிட ஜனகரைப்போல ஒழுக்கமுள்ள ஒரு சீடனை பெறுவது நலம் பயக்கும்.” என்று சுகர் கூறினார்.
கேள்விகள்:
- ஜனகரிடம் சுக முனிவரது சீடர்கள் ஏன் பொறாமை கொண்டனர்?
- சுகர் தேர்ந்தெடுத்த இடம் எது?
- ஜனகர் என்ன செய்தார்?
- சீடர்கள் எப்படி நடந்துகொண்டனர்?