Angulimala-ta
ஷ்ரவந்தியின் எல்லையில் உள்ள காட்டில் அங்குலிமாலா வசித்து வந்தான். அவன் தேர்ந்த வழிப்பறிக் கொள்ளைக்காரன். அப்பக்கம் பயணம் சென்றவர்களையும், தான் தங்கியிருந்த இடத்தை நெருங்கி வந்தவர்களையும் கொள்ளையடித்துக் கொலை செய்தும் வந்தான். அவனுக்கு அஞ்சி, மக்கள் அந்த வழியே போவதையே நிறுத்தி விட்டார்கள்.
அந்த பெருங்கொள்ளைக்காரன், அவர்களது உடமைகளை யெல்லாம் சூறையாடுவதோடல்லாமல் அவர்களுடைய சுண்டு விரல்களை வெட்டியும் வந்தான். அந்த விரல்களை மாலையாகக் கட்டி கழுத்தில் அணிந்திருந்தான் அவன்.
ஒரு நாள் அங்குலிமாலா யாராவது அவ்வழியே வருவார்களா என்று காத்துக் கொண்டிருந்தான். அவன் கட்டி வந்த சுண்டு விரல் மாலையில் மேலும் சில சுண்டு விரல்கள் அவனுக்குத் தேவைப்பட்டன. அப்போது தொலைதூரத்தில் சந்நியாசி ஒருவர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். “ஏய்! சந்நியாசி! அங்கேயே! நில்!” என்று அவரை நோக்கி ஓடியபடியேக் கத்தினான். மூச்சிரைக்க அவரிடம் ஓடினான் அவன். எவ்வளவு விரைவாக ஓடியும் அவரை எட்டிப் பிடிக்க அவனால் முடியவேயில்லை. உடனே, “ஓடாதே நில் அங்கேயே!” என்று கோபத்தில் கத்தினான். அந்த சந்நியாசி வேறு யாருமில்லை. புத்த பகவானே அங்ஙனம் வந்து கொண்டிருந்தார். அவர் அமைதியாக “நான் அசையக்கூட இல்லை. நீதான் ஓடிவருகிறாய்!” என்று கூறினார். “நீ என்ன சொல்கிறாய்?” என்று அவரை நெருங்கி விட்ட அவன் வியப்போடு கேட்டான். “குழந்தாய்!, நீ இன்னும் உன் மனதிற்கு அமைதி தேட வேண்டியவனாக இருக்கிறாயே” என்றார் புத்தர் கனிவுடன். “ஓ! யாரிவன்? என்னைக் குழந்தை என்று அழைக்கிறானே! அங்ஙனமே என்னை நினைத்துத் தான் சொல்கிறான்?” என்று தனக்குள் வியந்து கூறிக் கொண்டான், அந்த திருடன்.
“நான் யாரென்று உனக்குத் தெரியுமா? எனக்கு உன் அறிவுரை தேவையில்லை. எனக்குத் தேவையெல்லாம் உன்னுடைய சுண்டு விரல்” இடி முழக்கம் போன்ற குரலில் இங்ஙனம் புத்தரைக் கேட்டான் திருடன்.
“அப்படியானால் இதோ! எடுத்துக் கொள் மகனே!” என்றவாறு தன் இரு கைகளையும் அவன் எதிரில் நீட்டினார் புத்தர்.
“உன்னுடைய விரல்களோடு உன் உயிரையும் பறித்து விடுவேன்” என்று மேலும் அச்சுறுத்தினான் அங்குலிமாலா. “உனக்கு அது மன அமைதியைத் தருமானால் நீ என் உயிரையும் தயக்கமின்றி எடுத்துக் கொள்ளலாம்” என்று பொறுமையாக பதிலிறுத்தார் புத்தர்.
அங்குலிமாலா அவன் வாழ்நாளில் அதுவரை அத்தகைய அமைதியான அன்பான ஒருவரைச் சந்தித்ததேயில்லை அவரது பொறுமையும், சாந்தமும், கனிவும், கருணையும் அவனிடம் ஒரு பெரும் மாற்றத்தை உண்டு பண்ணி விட்டன. உடனே நெடுஞ்சாண் கிடையாக அவரது கால்களில் பணிந்தான். கண்களில் நீர் சோர, “தலைவா! இனி நான் யாரையும் கொல்ல மாட்டேன்,” என்று உறுதி கூறினான்.
புத்தர் அவனை வாரி எடுத்து அணைத்துக் கொண்டார். காட்டை அடுத்திரூந்த ஒரு மடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஆநந்தபிண்டகர் என்ற துறவியிடம்,” இதோ மற்றொரு சகோதரர் அங்குலிமாலா,” என்று அறிமுகப்படுத்தி ஒப்படைத்தார்.
அடுத்த நாள் காலையில் ஷ்ரவந்தி நாட்டு மன்னன் அந்த மடத்திற்கு வந்து புத்த பகவானுக்கு தன் வணக்கத்தைத் தெரிவித்தான். அவனை கூர்ந்து பார்த்த புத்தர், “நீ ஏதோ ஒரு படையெடுப்புக்குப் புறப்படுகிறாய் போல தோன்றுகிறதே,” என்று கேட்டார்.
“ஆம்! ஐயா! நான் அங்குலிமாலாவைக் கண்டுபிடித்து, உடனடியாக அவனைக் கொன்று விடவே விரும்புகிறேன். நான் ஏற்றுச் செல்லும் பணிக்கு தங்கள் மேலான ஆசியைப் பெற்றுப் போகவே இங்கு வந்தேன்.,” என்றான் மன்னன் பணிவாக.
ஓ! அரசனே! அங்குலிமாலா தன் கொடூரமான வழியை விட்டு விட்டு, ஒரு துறவியின் வாழ்வை மேற்கொண்டு விட்டானானால் அப்போது நீ என்ன செய்வாய்?” என்று அரசனைக் கேட்டார் புத்தர்.
“பிரபுவே! இதிலென்ன சந்தேகம்? அவனை நான் தலை தாழ்த்தி வணங்குவேன். ஆனால் அங்குலிமாலா ஒரு துறவியாவதை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை பிரபோ” என்று வியந்து கூறினான் அரசன்.
“வா! வந்து அந்தப் பக்கம் பார்! அவன் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறான்.” என்றார் புத்தர் அமைதியாக!
என்ன விந்தை இது! “தெய்வமே! என் உடல் வலிமை, மன வலிமையெல்லாம் பயன்படுத்தியும் அவனை அடக்க முடியாது திணறினேனே! ஆனால் தாங்கள் ஒரு விரலைக் கூட அசைக்காமல் அவனை வெற்றி கொண்டு விட்டீர்களே! உயிரினங்களை விரும்பும் கனிந்த இதயமும் அன்புடன், அமைதியுமான பாங்கும் கொண்ட புத்தர் பிரான் நீடூழி வாழ்க!” இங்ஙனம் பரவசமாகக் கிளர்ந்து கூறியவனாக அரசன் புத்தர் பிரானின் திருவடிகளில் வீழ்ந்தான்.
கேள்விகள்:
- வழிப்பறிக் கொள்ளைக்காரன் அங்குலிமாலா என்று ஏன் அழைக்கப் பட்டான்?
- அவனால் ஏன் புத்தரைப் பிடிக்க முடியவில்லை?
- திருடன் எப்படி மாறினான் என்று நீ நினைக்கிறாய்?