பத்ராசலம்
ஆந்திர பிரதேசத்தில் கோதாவரி ஆற்றின் வடகரையில், தெலுங்கானா பகுதியில், பத்ராசலம் மிகத் தொலைவில் அமைந்துள்ள ஒரு புண்ணிய தலமாகும். அங்கு பத்ரர் என்ற ரிஷி வெகு காலமாகத் தங்கியிருந்ததால் அவரது பெயரால் அவ்வூர் வழங்கப் பெற்றது.
இராமர், சீதை, இலட்சுமணர் அங்கு வந்து தங்கியிருந்ததால் அந்த இடம் ஒரு தெய்வீகமான இடமாகப் போற்றப் பெறுகிறது. கதைப்படி பார்த்தால், பத்ராசலத்திலிருந்து முப்பத்திரண்டு கிலோ மீட்டர் தொலைவில், பர்ணசாலை என்ற இடத்தில் தான் அவர்கள் தங்கள் வனவாசத்தின் போது தங்கியிருந்தார்கள். அங்கு தான் ஒரு சிறிய குடிலில் இருந்த சீதையை இராவணன் அபகரித்துச் சென்றான். இராமரும் சீதையும் வசித்த இடத்தில் ஒரு குடிசை இப்போதும் இருந்து அந்த நிகழ்ச்சியைக் குறிக்கிறது. அந்த குடிசையின் முன்னர், அரக்கன் பொன்மானாக வந்து சீதையை மயக்கிய இடம், இலட்சுமணன், தான் இராமரைத் தேடித் போன போது சீதை குடிலை விட்டு வெளிவராதவாறு கிழித்தக் கோடு எல்லாமே இப்போதும் தெளிவாக இருக்கின்றன.
அந்த குடிலுக்கு எதிரில், பளிங்கு போல தெளிந்த நீரோடும் சிற்றாறு ஒன்றும் இருக்கிறது. அதில் தான் இராமர், சீதை, இலட்சுமணன் மூவரும் தினமும் குளித்து வந்ததாகக் கூறப் பெறுகிறது. அது ஒரு சுவையான நிகழ்ச்சி. இலட்சுமணன், தங்கள் இருப்பிடத்தின் அருகில், நல்ல நீர் கிடைக்காது போகவே, அம்பு ஒன்றை பூமியினுள் எய்து, அதனால் ஓர் ஊற்று மேலெழச் செய்ததாகவும் அந்த ஊற்று நீரே, தெளிந்த நீரோடையாக ஓடுவதாகவும் ஒரு கதை கூறப் பெறுகிறது.
சீதா தேவியைத் தேடுவதற்காக, இராமர் இலங்கையை நோக்கிப் போன போது, கோதாவரி நதியை அவர் கடந்த இடத்தில் தான் பத்ராசலம் கோவில் கட்டப்பெற்றது என்றும் கூறப் பெறுகிறது. 17ஆம் நூற்றாண்டில் கோபண்ணா என்பவரால் அது கட்டப் பெற்றது. கோல் கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்களில், இறுதியான அரசரான அப்துல் ஹசன் தானே ஷாவின் காலத்தில், கோபண்ணா பத்ராசலம் பகுதியில் தாசில்தாராகப் பணி புரிந்தார்.
கோபண்ணா ஓர் ஆர்வம் மிக்க இராம பக்தர். ஆழ்ந்த இராம பக்தியில் தம்மையே ,மறந்து, லயித்தவராய் கோபண்ணா, அலுவலகப் பணிகளில் கூட சரியான கவனம் செலுத்துவதில்லை. பத்ராசலத்தில் ஸ்ரீ ராமருக்குக் கோவில் கட்டும் ஆவலில் அரசாங்கப் பணத்திலிருந்து ஆறு இலட்ச ரூபாய்கள் எடுத்து விட்டார் அவர்.
அரசன் தானேஷா இதை அறிந்து, அரசாங்க பொருளைத் தவறாகக் கையாடிய குற்றத்திற்காக கோபண்ணாவை சிறையில் அடைத்து விட்டான். அவர் கோல் கொண்டாவிற்குக் கொண்டு வரப் பட்டு, அங்குள்ள கோட்டையில் ஒரு சிறிய அறையில் சிறை வைக்கப் பட்டார். நீண்ட நாட்கள் சிறையில் கிடந்தது, வாடி மெலிந்த, கோபண்ணா, தம்மீதே பெரிதும் வெறுப்படைந்தவராய் ஒரு நாள் உயிரையே மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.
அன்று இரவு ஸ்ரீராமர் அவரது கனவில் தோன்றி கோபண்ணா கோவில் கட்ட எடுத்த பணத்தைத் திருப்பிக் கட்டி விட்டதாக அவரிடம் கூறி, அதற்குண்டான வரவு பற்று சீட்டையும் காண்பித்தார்.
அடுத்த நாள் காலையில் அரசன் தானேஷா, கோல் கொண்டா சிறைக்கு வந்து, கோபண்ணாவைப் பார்த்தான். கோபண்ணா தவறாகக் கையாண்ட முழுத்தொகை ஆறு இலட்ச ரூபாயை முன்பின் தெரியாத ஓர் ஆள், அவனிடம் தந்துச் சென்ற மர்மமான அற்புத நிகழ்ச்சியைக் கூறினான் அரசன். அபோது கோபண்ணா, இராமர் தன் கனவில் வந்து, அரசனுக்குப் பணம் கட்டிவிட்ட பற்று சீட்டைக் காண்பித்ததாக சொன்னார்.
அதைக் கேட்டதும் அரசன் அயர்ந்து நின்று விட்டான். சிந்திக்காது கோபண்ணாவிற்குச் செய்து விட்ட தீங்கிற்கு அவரிடம் மன்னிப்பு கோரினான். உடனே அவரை விடுதலை செய்து, மிக்க மதிப்புடனும், பக்தியுடனும் அதன் பிறகு அவரைப் போற்றி நடத்தினான். கோவிலை நிர்வகித்து வர ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை, நன் கொடையாகத் தந்து வர ஏற்பாடுகள் செய்தான். இந்தத் தொகை அவனுக்குப் பிறகு அடுத்தடுத்து ஆண்டு வந்த முஸ்லீம் மன்னர்களால் 250 ஆண்டுகளுக்கு மேலாகத் தந்து வரப் பெற்றது. ஆன்மீக ஞான ஒளி பெற்ற பின்னர் கோபண்ணா “இராமதா” என்று அறியப் பெற்றார்.
பதினைந்து நாட்கள் நடைபெறும் இராமநவமி உற்சவங்களின் போது ஆயிரக்கணக்கில் யாத்ரீகர்கள், இந்தியாவின் எல்லா பகுதிகளிருந்தும் பத்ராசலம் வந்து குவிகின்றனர். அந்த விழாவின்போது முக்கியமான நிகழ்ச்சி, “சீதா கல்யாணம்” ஆகும். அன்று இராமர், சீதையைப் போலவே இரு அழகிய திருவுருவங்கள், கோதாவரியின் புனித நீரில் திருமஞ்சனமாட்டப் பெற்று அழகான அணிகளை அணிவிக்கப் பெற்று, அழகுறுவாக அலங்கரிக்கப் பெற்ற வெள்ளிப் பல்லக்கில், மிகப் பெரிய கல்யாண மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப் பெறுகின்றன. அங்கு சாஸ்திர முறைப்படி இராமர் சீதை திருமணம், வேதமந்திர ஒலியோடு, பக்தர் குழாம் பரவசமாக சூழ்ந்து நிற்க கோலாகலமாக நடைபெறும்.
பர்ணசாலையிலும் இராமர் சீதைக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. பத்ராசலம் கோவில் நிதியிலேயே பூசை புரிவது, பழுது பார்ப்பது போன்ற திருப்பணிகள் அங்கும் செய்யப் பெறுகின்றன. சில காலத்திற்கு முன்பு பர்ணசாலையில் மாபெரும் அற்புத நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பகுதியில் பூமி அதிர்வு ஒன்று ஏற்பட்டது. பூமிக்கடியில் கர்ஜிப்பது போலவும், இடி இடிப்பது போலவும் பேரொலி கேட்டது. அப்பகுதி மக்களை பீதி கொள்ள வைத்த இந்த பூமி அதிர்வின்போது அந்தச் சிறிய கோவில் இருந்த புனிதமான இடத்தை இரண்டு மீட்டர் சுற்றளவில் விட்டுவிட்டு மற்ற இடங்களில் பெரிதும் பாழடைந்தன. தெய்வீகமான அந்த தனியிடம் மட்டும் ஏதும் பாதிக்கப் பெறாமல் விக்ரகங்களும் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் வியக்கத்தக்க வண்ணமாக விளங்கின. இந்த அற்புத நிகழ்ச்சி, அங்கு அந்த காலத்தில் குடியிருந்தவர்களுடைய தலை சிறந்த பெருமையை விளக்கி மக்களிடையே அந்த நம்பிக்கையை உயர்த்துவதாக விளங்குகிறது. இப்போது தினமும் அந்தக் கோவிலில் வழிபாடாற்ற அநேகமாக ஒருவருமேயில்லை, என்பது வருந்தத் தக்கது ஆகும்.
கேள்விகள்:
- பத்ராசலம் எங்குள்ளது?
- அங்கு வழிப்படப் பெறுபவர் யார்?
- அந்தக் கோவிலை யார் கட்டியது? அவர் எப்படி கட்டினார்?
- இராமதா ஏன் சிறையில் அடைக்கப் பெற்றார்?
- அவர் எப்போது விடுதலை செய்யப் பெற்றார்?