பத்ரிநாத் கேதாரிநாத்
பனிக்கோட்டை போன்றுள்ள இமாலயமலை, இந்துக்களுக்கு ஒரு புனிதமான இடமாகும். “மலைகளில் நான் இமாலயம்” என்று கிருஷ்ண பிரானே பகவத் கீதையில் கூறியுள்ளார். இந்த தெய்வீகமான மலைத்தொடரில், மூவாயிரம் மீட்டர் உயரத்தில், புகழ் வாய்ந்த பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. உயர்ந்த மலைகளால் அந்தக் கோவில் சுற்றிலும் சூழப் பெற்றிருக்கிறது. அதற்கு ஒரு புறம் நாராயண பர்வதம் அமைந்திருக்கிறது. மறுபுறம் அலகாநந்த நீர் வீழ்ச்சி உள்ளது.
அங்கு கோவில் கொண்டுள்ள பத்ரி நாராயணர் மஹா விஷ்ணுவின் அவதாரமாகும். எழில்மிக்க அந்தத் திருவுருவம், தியானத்தில் அமர்ந்துள்ள நிலையில் உள்ளது. அவருடைய நெற்றியில், ஒரு பெரிய வைரம் பொருந்தியிருக்க்றது. அவரது உடலை பலபல வகைகளில் செய்யப் பெற்ற பொன் அணிகள் அலங்கரிக்கின்றன. பத்ரிநாத் பழம் பெருமை வாய்ந்த புனித தலமாக இருந்தபோதிலும், அந்த கோவிலும் அதிலுள்ள இறைவனும் வெகு நாட்கள் ஒருவராலும் கவனிக்க பெறாமலே இருந்தன. பின்னர் சங்கராச்சாரியார் தமது தியானத்தின் போது அந்த திரு மூர்த்தி, அலகா நந்தாவின் நீருக்கடியில் மூழ்கியிருப்பதாக அறிந்து, அதையெடுத்து பழைய வழிப்பாட்டு நிலைக்குப் புதுப்பித்துச் சிறப்பித்தார். அந்த கோவில் ஓர் ஆண்டில் ஆறு மாத காலமே திறந்து வைக்கப் பெற்றிருக்கும். மிகுதி ஆறு மாதங்கள் இயற்கை, தான் மட்டும் அவரை வழிபட தனித்து வைத்திருப்பது போல, பனிக்கட்டிகளால் மறைக்கப் பெற்றிருக்கும். அத்தகைய காலங்களில் மூலவருக்குப் பதிலாக மாற்று திருவுருவம் ஒன்று ஜோதிநாத் என்ற இடத்தில் முறைப்படி வழிப்பாடாற்றி வரப்பெறும். பனிக்காலத்திற்குப் பிறகு அந்த கோவில் திறக்கப் பெற்றால், பக்தர்கள் மாபெரும் அதிசயம் ஒன்றை அங்கு காண்பர். பனிக்காலம் துவங்கும் முன்பு கோவில் கதவுகளை மூடுவதற்குமுன், குருக்கள் ஏற்றி வைத்த விளக்கு ஆறு மாதத்திற்குப் பிறகும் அத்தகைய பனியின் குளிர்ச்சியினால் அணையாது ஒளிவீசி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு பக்தர்கள் அனைவரும் பரமனருளைப் போற்றுவர்.
கேதார்நாத் கோவில் சிவனாரை வழிபட ஏற்பட்டதாகும். கேதார்நாத்துக்குச் செல்லும் பாதையும் ஆறு மாத காலம் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருக்கும். அதுபோது மாற்றுத் திருமூர்த்தி யுக்ஹி நாத் என்ற இடத்தில் முறையாக வழிபடப் பெறும். பாண்டவ சகோதரர்கள் தாங்கள் மேற்கொண்ட “மஹாப்ரஸ்தானம்” என்ற இறுதி யாத்திரையின் போது கேதார்நாத்தில் வந்து நின்றனர் என்று ஒரு வரலாறு கூறுகிறது. திரௌபதி அங்கு சேரு முன்பே உடலை விட்டு விட்டாள். கேதார்நாத் உற்றதும் சகாதேவன் மடிந்து விழுந்தான். இயற்கையெழில் சூழ்ந்த அந்த இடத்தில் மிகுதியிருந்த பாண்டவர் நால்வரும் சிவனாரைக் குறித்து தியானத்தில் ஆழ்ந்தனர். அன்றிலிருந்து தான் சிவனார் பக்தர்கள் வழிபட அங்கு கோவில் கொண்டார் என்று கூறப் பெறுகிறது.