துவாரகை
துவாரகை இந்தியாவின் மிகப் புண்ணிய க்ஷேத்ரங்கள் நான்கினுள் ஒன்றாக விளங்குகிறது. கிருஷ்ணர் அரசாண்ட நகரம் அது. பழம் பெரும் சிறப்புப் பெற்ற புராண கால நகரங்கள் மனிதனால் உருவாக்கப் பெறாதவையாகும். கிருஷ்ணர் தலைநகர் அமைக்க அந்த இடத்தை தேர்ந்தெடுத்தப் பிறகு, விசுவகர்மாதான் அந்த நகரை உருவாக்கினார். மகாபாரதப் போர் முடிந்த சில ஆண்டுகளில் காந்தாரியின் சாபம் நிறைவேறியது. யாதவர்கள் அவர்களுக்குள்ளாக சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொன்று விட்டனர். துவாபர யுகம், கிருஷ்ணாவதாரம் நிறைவேறியதும் முடிவடைந்துவிட்டது. ஒரு காலத்தில் சுவர்க்க பூமியாக விளங்கிய துவாரகை, வெற்று நிலமாக மாறியது. பின்னர் அங்கிருந்த கிருஷ்ணரை நினைவூட்டும் பொருள்கள் அனைத்துமே கடல் நீரால் அடித்துக் கொண்டு போகப்பட்டன. இருந்தும் இன்று வரையில் மக்கள் துவாரகையில் திரளாகக் கூடுகின்றனர். கிருஷ்ணபிரான் அரசாண்டு வாழ்ந்த இடம், என்று புனித இடமாகவும், தெய்வத்தன்மை பொருந்திய இடமாகவும் துவாரகையைப் போற்றுகின்றனர்.
கோமதி ஆற்றங்கரையில் துவாரகையில் இப்போதுள்ள கோவில் கம்பீரமாக நிற்கிறது. நான்கு கரங்களுடன் கருணை மிக்க கடவுள் கிருஷ்ணரது திருவுருவம் அங்கு செல்லும் ஆழ்ந்த பக்தர்களது மனத்தில், அவரது இளமை பருவ விளையாட்டுகளை நினைவிற்கு கொண்டு வந்து மகிழ்விக்கிறது.
அங்கு தான் மீரா தன் வாழ்வின் இறுதி நாட்களைக் கழித்தாள். இறுதியில் அவள் அங்குள்ள இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டாள்