குருவாயூர் தெற்கு துவாரகை
கண்டவுடனே கையெடுத்துத் தொழத்தக்க கம்பீரமான தோற்றம் கொண்ட குருவாயூரப்பன், மகாவிஷ்ணுவின் பூரண அவதாரமாக விளங்குகிறார். கிருஷ்ணாவதாரத்தின் போது வாசுதேவரால் தேவகிக்கு இங்ஙனம் சொல்லப் பெற்றுள்ளது. கஸ்யபரும் அவரது மனைவி அதிதியும் வாசுதேவராகவும், தேவகியாகவும் பிறப்பெடுத்தனர். இறைவன் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர்களது மகனாகப் பிறந்தார்.
குருவாயூரிலுள்ள திருவுருவம் ஆதியில் நாராயணாராலேயே வழிபடப் பெற்றது. பிறகு அவர் அதை பிரம்மாவிடம் தந்தார். குருவாயூரப்பன் திருவருள் துணையோடுதான் பிரம்மா தன் படைத்தற் தொழிலைச் செவ்வனே ஆற்றி வர முடிந்தது. அதே திருவுருவம் பின்னர் தேவகி வாசுதேவரால் வழிபடப் பெற்றது. கிருஷ்ணர் துவாரகை அரசராக ஆன பிறகு, ஓரு கோவில் கட்டி, அதில் அந்தத் திருவுருவை நிறுவினார்.
துவாபர யுக முடிவில் கிருஷ்ணர் தாம் அவதாரம் எடுத்த பணி முடிவுற்றது என்றும் அவர் விரைவில் வைகுண்டத்திற்கு ஏகிவிடுவார் என்றும் உத்தவரிடம் அறிவித்தார். அவரது மறைவினால் கலியுகம் துவங்கி, உலகத்துக்கு நேரிடப்போகும் பெருந்துன்பத்தை நினைத்த உத்தவர், துயரம் மனத்தை நிறைக்க, நைந்து நின்றார். ஆனால் இறைவர் அவரை அமைதிப் படுத்தி, துவாரகை கோவிலில் நிறுவியுள்ள திருவுருவத்தில் தாமே அவதரித்துப் பக்தர்களைக் காத்து அருளப் போவதாகக் கூறினார். மேலும் இறைவன் உத்தவரிடம் வரப்போகும் அஞ்சத்தக்கப் பெரு வெள்ளத்தின் போது அந்த திருவுருவை எச்சரிக்கையாகப் பாதுகாக்கும்படியும், தேவர்களின் குருவான பிரஹஸ்பதியைக் கலந்து கொண்டு, அவர் கூறும் புனிதத் தலத்தில் அதை நிறுவும் படியும் கூறினார்.
அதன்படி பிரஹஸ்பதியும் வாயுவும் திருவுருவத்தின் பொறுப்பை ஏற்றனர். அதைப் பிரதிஷ்டை செய்ய ஒரு தெய்வீகமான இடத்தைத் தேடி நாடு முழுதும் அலைந்தனர். அங்ஙனம் போகும்போது வழியில் பரசுராமரை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அவரும் நாரதர் அறிவுரைப்படி, அந்தத் திருவுருவத்தையே தேடி வந்தார். அவர்கள் அனைவரும் அழகு மிக்கத் தாமரை மலர்கள் அடர்ந்து மலர்ந்திருக்கும் ஒரு தடாகத்தின் அருகில் குழுமினர். அந்த தடாகத்தின் ஒரு புறம் சிவனாரும் பார்வதியும் அவர்களை வரவேற்க ஆயத்தமாக நின்றிருந்தனர். வெகு நாட்களுக்கு முன்னரே நாராயணரது திருவுருவத்தை நிறுவ இந்த இடம் குறிக்கப் பெற்றுள்ளது என்று சிவபெருமான் அவர்களிடம் கூறினார். பிறகு, திருவுருவத்தின் மீது, புனிதமான நீர் தெளித்து, அதை முறைப்படி வணங்கினார். பின்னர் குரு பிரஹஸ்பதியும் வாயுவும் நின்ற பக்கம் திரும்பி, “நீங்கள் தாம் இந்த தெய்வீக இடத்தைக் கண்டு பிடித்தவர்களாகையால், உங்களிருவர் கைகளாலேயே இந்தத் திருவுருவை பிரதிஷ்டை செய்யுங்கள், இனி இந்த ஊர் குருவாயூர் (குரு+வாயு) என்று அழைக்கப்பெறும்.” என்றார். இங்ஙனம் பகர்ந்து விட்டு பார்வதியும், சிவனும் ஏரியின் மறுபக்கம் சென்று விட்டனர். அங்கு இப்போது, குருவாயூர் கோவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிவன் கோவில் ஓங்கியுயர்ந்து, இந்த நிகழ்ச்சிக்குச் சான்றாக நிற்கிறது.
குருவாயூரின் புகழ், இங்ஙனமாக, தெய்வீகத் திருவுருவினால் சிறக்கப் பெற்றுள்ளது. சங்கு, சக்கரம், தடி, தாமரைகளைப் பற்றியிருக்கும் நீண்டு அழகு பொருந்திய கரங்களுடன் உலகத்தையே கவர்ந்து ஈர்க்கவல்ல எழில் மிக்க திருவுருவம் அது. முத்து மாலைகளும் கழுத்தை அலங்கரிக்க, உள்ளத்தை அள்ளும் உன்னத அழகோடு ஒளிவீசி காட்சி தருகிறார் குருவாயூரப்பன். பக்தர்கள் கூப்பிடும் குரலுக்குப் பரிந்து வந்து கருணை புரியும் தெய்வங்களில் குருவாயூரப்பனின் பெயர்தான் எளிதில் மனத்தில் உதிப்பதாக இருக்கிறது.
குருவாயூர் இறைவன் தம்மைத் தஞ்சம் அடைந்தவர்களைப் பாதுகாக்க வேண்டி திருவருள் புரிந்த சுவையான நிகழ்ச்சி ஒன்று கூறப் பெறுகிறது. ஒருவன் பாரிச வாயுவினால் நீண்ட நாட்களாகத் துன்புற்று வந்தான். மருந்தர்கள் இனி நலமுறுத்த வழியில்லை என்று அவனைக் கைவிட்டனர். அவன் பிறகு, குருவாயூரப்பனின் திருவடிகளே தஞ்சம் என்று அடைந்து விட்டான். அதே நேரத்தில் மற்றொரு ஏழை மனிதன், கோவிலுக்கு ஐயனிடம் பொருள் வேண்ட வந்திருந்தான். தன்னுடைய பணப்பையை ஆற்றங்கரையில் வைத்துவிட்டு, பாரிசவாயு நோயாளி, ஆற்றில் முழுகிக் குளிக்க மிக மெதுவாக இறங்கினான். இதைப் பார்த்துக் கொண்டே நின்ற, பணம் வேண்டி வந்த ஏழை, காலதாமதமின்றி ஒரே எட்டில் அந்தப் பணப்பையை எடுத்துக் கொண்டு ஓடலானான். அதைக் கண்ணுற்ற நோயாளி அவனைப் பிடிக்க ஓடினான். பணத்தைப் பறிகொடுத்த பதைபதைப்பில், அது வரை கால்கள் முடங்கிக் கிடந்த, தான், எப்படி இவ்வளவு வேகமாக ஓட முடிந்தது, எந்த பேராற்றல், தன கால்களைத் திடுமெனச் சரி படுத்தி விட்டது என்று நினைக்கக் கூட நேரமில்லாமல் திருடன் பின்னே ஓடினான். அப்போது வானின்றும் ஒரு குரல், “ஓடாதே! நில்! மன நிறைவு பெறு, உன் வேண்டுகோள் அருளப்பெற்றது. அவனுடையதும் அப்படியே,” என்று கூறிற்று.
இது போல தன்னலமும், பேராசையும் மிகுந்தவர்கள் கூட, அவரிடம் வரப் பெற்றால், அவரது கருணையைப் பெருகின்றனர். பணமும் பதவியும் “அன்பும் ஆற்றலும்” பெற அங்கு குவிந்து வருபவர்கள் அனைவரும், முடிவாக அவரது கருணையையே வேண்டி நிற்பவராகி – விடுகிறார்கள். ஆர்த்தி , அர்த்தார்த்தி, ஜிக்ஞாசு, ஞானி என்ற நான்கு விதமான பக்தர்கள் தம்மை வணங்குவதாக இறைவரே கூறியுள்ளார் அல்லவா? எல்லோரையும் ஈர்த்து இழுக்கும் அவர் தம்மிடம் வருபவர்களை இறுதியில் ஞானியாக மாற்றி விடுகிறார்.