இராமேஸ்வரம்
ஒரு தெய்வம் ஒரு தெய்வத்தை வழி பட்ட இடம்
தென்னிந்திய காசி என்று போற்றப் பெறும் இராமேஸ்வரம், ஒரு தனித்தன்மை வாய்ந்த இணையற்ற இடமாகும். ஏனெனில் அங்கு, இராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையைத் தேடி வந்த இராமர் சிவனாரை வழிப்பட்ட இடமே இராமேஸ்வரம். இராமர் தமது பெரும் படையுடன் இலங்கை மீது படையெடுத்தார். ஆனால் படைவீரர் மாபெருங்கடலைக் கடக்க அதன் மீது ஒரு பாலம் அமைக்க வேண்டியிருந்தது. பகல் முழுதும் குரங்குகள் அரும்பாடு பட்டு கட்டிய பாலத்தை இரவில் இராவணன் அடியோடு அழித்து வந்தான். அதனால் அவர்கள் முயற்சி பயனற்று வந்தன. இறுதியில் ஜாம்பவான் ஒரு யோசனை கூறினான். தாங்கள் கட்டும் பாலத்தின் மீது ஒரு சிவன் கோவிலை அமைத்து விட்டால், சிவனாரின் சிறந்த பக்தனான இராவணன் அந்த பாலத்தை அழிக்கத் துணிய மாட்டான் என்று கருதினான் ஜாம்பவான். அங்ஙனம்தான் இராமேஸ்வரம் கோவில் கட்டப்பெற்றது.
இது குறித்து மற்றொரு வரலாறும் கூறப்பெறுகிறது. இதிலும் இராமர் தாம் சிவன் கோவிலைக் கட்டினார். அவர் இராவணனை வென்று, சீதையுடன் அயோத்தித் திரும்பும் வழியில், நன்றியோடு கூடிய இன்ப உணர்வில் அவர் சிவனாரை வழிபட நினைத்தார். உடனே ஹனுமான் சிவனாரின் அருவுருவமான லிங்கம் அமைக்க ஒரு கல்லை எடுத்து வர ஓடினார். அவர் எடுத்து வருவதற்குள் இராமரே ஒரு சிவ லிங்கம் செய்து வைத்து, வழிப்பாட்டைத் துவக்கி விட்டார். அதைக் கண்டதும் ஹனுமாருக்கு வருத்தமாகி விட்டது. அவரை அமைதிப்படுத்தி அவர் கொண்டு வந்த கல்லுக்குத்தான் முதலில் வழிபடு நடத்தப்பெறும் என்று இராமர் உறுதி கூறினார். அவர் கூறியவாறே இன்றும் நடைபெற்று வருகிறது. இராமரால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற சிவலிங்கத்தை வழிப்படும் முன், பக்தர்கள், ஹனுமாரால் கொண்டு வரப்பெற்று, இராமரால் நிறுவப்பெற்ற, விஸ்வேஸ்வரரைத்தான் வழிபட வேண்டும். பிறகே இராமேஸ்வரரை வழிபடுவர். இந்தியாவெங்கும் உள்ள பக்தர்கள் நாடி வந்து விரும்பித் தொழும் இடமாக இந்த புண்ணியத் தலத்தின் புகழ், பரவியிருக்கிறது. மோட்சம்பெற காசிக்குச் செல்லுபவர்கள், இராமேஸ்வரமும் செல்ல வேண்டும் இல்லையெனில் அவர்களது புனித யாத்திரை முழுமை பெற்றது ஆகாது.