ஜைன மதம்
முன்னுரை பகவான் மஹாவீரரால் நிறுவப்பட்ட ஜைன மதம், ஹிந்து மதத்தின் ஒரு கிளை மதமே ஆகும். ஓர் ஆரிய மதமாக இருந்த போதிலும், ஜைனமதம் வேதத்தின் இறையாண்மையை (மேலான முக்கியத்துவத்தை) ஏற்கவில்லை.
கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு எழுந்தது. இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சில சடங்குகளையும், பழக்கவழக்கங்களையும் சில ஆரியப் பிரிவினர் ஒப்புக்கொள்ள மறுத்தனர். மிக முக்கியமாக தேவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், யாகங்களில் மிருகங்களைப் பலியிடுவதை வன்மையாகக் கண்டித்தனர்.
எல்லா உயிர்களும் புனிதமானவை. எந்த உயிருக்கும் தீங்கு இழைக்கக்கூடாது. மனிதன் எளிமையான வாழ்க்கை வாழவேண்டும். தன்னுடைய மிருக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இவர்கள் கூறிவந்தனர். இத்தகைய கொள்கைகளைக் கொண்டவர்கள், வர்த்தமான மகாவீரரைத் தலைவராகக் கொண்டு ஜைனமதத்தை உருவாக்கினர்.
மஹாவீரரின் வாழ்க்கை
“கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாட்னாவின் வடக்கே இருபது மைல் தொலைவிலுள்ள வைசா- என்ற இடத்துக்கருகில், பஸவா என்ற கிராமத்தில், க்ஷத்ரிய குடும்பத்தில் சித்தார்த்தர் – திரிசலா தம்பதிக்கு மகனாக பிறந்தார். திருமணம் ஆனவர். ஒரு பெண்ணிற்குத் தந்தையானார். அவர் இளமையிலிருந்தே எதையும் நுட்பத்துடன் ஆராயவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தமது 30வது வயதில் துறவு மேற்கொண்டார். பன்னிரு ஆண்டுகள் தவம் புரிந்தார். உயரிய ஞானம் கிட்டியது. முப்பது ஆண்டுகள் ஞானத்தைப் போதித்தார். 72ம் வயதில் உயிர்நீத்தார்.
தீர்த்தங்காரர்கள்
ஜைன அல்லது சமண மதம் ஸமஸ்கிருத பதமான ஜுனா என்பதிலிருந்து வந்ததாகும். அதன் பொருள் வெற்றி கொள்ளுதல். நம் உடலை வசப்படுத்தி அதன் பயனாக மிகச்சிறந்த புனித தத்துவத்தைப் பெற்று, பின் முடிவில்லா ஆனந்தத்தையும், முடிவில்லாத அறிவையும் பெறுபவனே ஜைனன். இந்த கருத்துக்களை முதன்முதலில் எடுத்துக் கூறியவர் ரிஷபதேவர் ஆவார். மிகச்சிறந்த முறையில் அரசாண்ட மன்னர் என்று இவரைப் பற்றி பாகவதம் குறிப்பிடுகிறது. இவர் பகவான் மஹாவிஷ்ணுவின் 21வது அவதாரம் என்று கருதப்படுகிறார். ரிக்வேதம் இவரை மிகச்சிறந்த ஞானி என்று புகழ்கிறது. ஜைனமதத் தலைவர்கள், தீர்த்தங்காரர்கள் எனப்படுவர். முதல் தீர்த்தங்காரர் ரிμ ரிஷபதேவர். பார்சவநாதர் 23வது தீர்த்தங்காரர். வர்த்தமான மகாவீரர் 24வது தீர்த்தங்காரர் ஆவார்.
புனித நூல்கள்
மஹாவீரர் நூல் எதுவும் எழுதவில்லை. அவரது சீடர்கள் மஹாவீரரின் உபதேசங்களை 46 நூல்களில் அடக்கினர். உமா ஸ்வாதி இயற்றிய ‘தத்துவார்த்த சூத்திரம்’ பகவத் கீதையைப் போலவே சமணர்களால் ஓதப்படுகிறது.
ஜைனமதக் கோட்பாடுகள்
ஜைனமதம் ஒவ்வொரு பொருளுக்கும் ஜீவன் (உயிர்) உண்டு என்று நம்புகிறது. ஆகவே, அவர்களால் பிராமணர்களின் உயிர்ப்பலியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொலை செய்வதன் மூலம் ஜீவனின் இயக்க விதிக்கும், அதனைச் சார்ந்த மறுபிறப்புக்கும் தடையாக இருக்கின்றோம். நாம் ஆன்மீகப் பரிமாணத்துக்கு இடையூறு செய்கிறோம். கொல்வதையும், உயிருக்கு ஊறு விளைவிப்பதையும் மஹாவீரர் வெறுத்தார்.
ஐந்து முக்கிய கொள்கைகள்:
- அஹிம்சை (துன்பம் தராத பரிவு)
- சத்யம் (உண்மை பேசுதல்)
- அஸ்தேயம் (திருடாதிருத்தல்)
- அபரிக்ரகம் (பிறர் பொருள் வேண்டாமை)
- ப்ரம்மச்சரியம் (எண்ணம், சொல், செயல் இவற்றால் ப்ரம்மத்தை நோக்கிச் செல்லுதல்)
ஜைன மதம் இறைவன் என்பதைப் பற்றிப் பேசவில்லை. ஜீவன் உலகத்தின் மாசுகளில் சிக்கிக் கொள்வதால், அளவற்ற பிறப்புக்களுக்கு ஆட்படுகிறது. இந்த மாசுகளை விலக்கிக் கொள்வதே வாழ்க்கையின் உண்மையான இலட்சியம்.
ஐந்து முக்கிய கொள்கைகள்:
- சரியான அறிவு – ஸம்யக் ஞானம்
- சரியான பார்வை (நோக்கு) – ஸம்யக் தரிசனம்
- சரியான நடத்தை – ஸம்யக் சாரித்திரம்
இம்மூன்றையும் கடைப்பிடித்தால், எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இதுவே வீடுபேறு அல்லது மோக்ஷத்திற்கான வழியாகும்