வேலையாட்களிடம் நமக்கு உள்ள கடமை
நமது வீட்டில் குடியிருக்கும் வேலையாட்களின் உண்மையான அந்தஸ்து என்ன, அவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு எத்தகையது, நம் முடைய வாழ்வுடன் அவர்கள் எவ்வாறு பின்னிப் பிணைகிறார்கள், அவர்களிடம் நமக்குள்ள பொறுப்பென்ன இவற்றையெல்லாம் பற்றி நாம் புரிந்த கொள்ளவும், அறிந்து கொள்ளவும் செய்கின்ற ஒரு சம்பவம் உள்ளது.
ஒரு பெண்மணிக்கு ஒரு பிரச்சினை இருந்தது; ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அறிவுரையினை அதற்காகக் கேட்க விரும்பினார். வேலைக்காரப் பையனைக் கூட்டிக்கொண்டு புட்டப்பர்த்திக்குச் செல்லத்தயாராக இருந்தாள். அவர்கள் திரும்பும் தருணத்தில் வெளியூரில் படித்துக் கொண்டிருந்த அவள் மகன் வீட்டுக்குத் திரும்ப வந்தான். வேலைக்காரப் பையனிடம் அவன் தன் கூட வரத் தேவையில்லை என்று கூறினாள். அவளது மகனுடன் கூட பாபாவை பார்க்கச் சென்றாள். பாபாவும் அவர்கள் விரும்பியவாறு பேட்டியளித்துப் பின் அவரது அனுமதி பெற்று வீட்டிற்குத்திரும்பினர். பாபாவின் அன்பினையும் ஆதரவையும் நினைந்து நினைந்து அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். அவர்கள் வீட்டிற்குத் திரும்பியதும் அவள் புட்டப்பர்த்திக்கு வர வேண்டுமென்று பாபா விரும்பியதாக ஒரு தந்தி வீட்டில் காத்திருந்தது. மகனோ மறுபடி படிக்க வேண்டுமென்று திரும்பச் செல்ல நேர்ந்தது. அப்பெண்மணி இந்தத் தடவை வேலைக்காரப்பையனைக்கூட்டிக்கொண்டு புட்டபர்த்திக்குச் சென்றார். அங்குச் சென்றடைந்தபோது, மறுபடி எதற்காக அவசரமாகக் கூப்பிட்டார் என்று கேட்டாள். பாபா அதற்கு, “சென்ற தடவை விட்டு ச்சென்றதால், உங்கள் வீட்டு வேலைக்காரப் பையன் எவ்வளவு அழுதான் தெரியுமா? அவன் அவ்வளவு ஏமாற்றமடைந்தான். உனக்கும், உன் மகனுக்கும் அளித்ததைப் போன்ற மகிழ்ச்சியினை அவனுக்கும் அளித்து அவனைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக மறுபடி உன்னைக் கூப்பிட்டேன்” என்றுகூறினார். திருந்திய அப்பெண்மணி வீட்டுக்குத் திரும்பினார்.
அதேபோல, பாபா, வீடுகளுக்கு விஜயம் செய்யும் போது, பெரிய மனிதர்கள் பலர் அவருக்காகக் காத்திருப்பார்கள். ஆனால் பாபா முதலில்வெளிப்புறத்தில் உள்ள சிறு வீட்டிற்கோ,சமயலறைக்கோ சென்று அங்குள்ள வேலையாட்களுக்கும் ,சமையல்காரருக்கும் தரிசனம் தந்த பிறகே அவ்வீட்டுச் சொந்தக்காரரையும் மற்றவரையும் திரும்பிப் பார்ப்பார் என்று கூறப்படுகிறது.
ஒருசமயம் ஒரு பெரிய மனிதர் தம்முடைய குடும்பத்துடன் பாபாவைக் காண (புட்டபர்த்தியில்) ஆசைப்பட்ட போது, பாபாஅவரை பேட்டிக்கு கூப்பிட்டார். பாபா அவர்களிடம் கேட்ட முதற்கேள்வி, “ நீங்கள் நான்கு பேர் மட்டுந்தானே இருக்கிறீர்கள் உங்களுடன் வந்த மற்றவர் எங்கே?’ என்பதாம். அதற்கு அவர்கள்,ஸ்வாமிஎங்கள் குடும்பத்தினர் நால்வர் தான்” என்றனர். “உங்களுடன் கூட வேலைக்காரரும் வந்தாரல்லவா, அவரையும் பேட்டிக்குக் கூட்டி வாருங்கள் என்றார். பாபாவின் கண்களில், நாமும் நமது வேலைக்காரர்களும் வேறு வேறாகத் தோன்றுவதில்லை. பலசமயங்களில், நமது வீடுகளில் உள்ள பூனை, நாய் போன்ற மிருகங்களிடமும் சுவாமி அன்பினைப் பொழிகிறார். அவரைப் பொருத்தவரை அவையும் நமது குடும்பத்தைச் சேர்ந்த மௌனியான “அங்கத்தினராவர்”.