ஐம்பெரும்வேள்விகள்:பஞ்சமகாயக்ஞங்கள்
ஒவ்வொரு இல்லத்தானுக்கும் அவனது குடும்பத்தினருக்கு ஐந்து கட்டாயக் கடமைகளை மறை நூல்கள் விதித்துள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் புரியப்பட வேண்டிய ஐம்பெரும் வேள்விகள்பஞ்சமகாயக்ஞங்கள் என்றழைக்கப்படுகின்றன. அவை,1) தேவயக்ஞம் / தைவயக்ஞம் 2) ரிஷியக்ஞம் 3) பித்ருயக்ஞம் 4)அதிதியக்ஞம் 5) பூத யக்ஞம் எனப்படும்.
இவற்றைப்பற்றி ஓரளவுநாம் முன்பே விவாதித்திருந்தாலும், இவற்றின் உட்சிறப்பினை நன்கு புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
இயற்கைக்கு மனிதன் ஐந்து விதமாகக் கடன் பட்டிருக்கிறான். மேற்கண்ட வேள்விகளைத் தினமும் புரிவதன் மூலம் தனது கடனைத் தீர்க்க வேண்டும். இவ் வேள்விகளைப் புரிவதன் மூலம், நடக்கும் போதும், வீடு சுத்தம் செய்யும்போது, கறிகாய் நறுக்கும் போது, உணவு சமைக்கும் போதும் இது போன்று செயல்களைப் புரியும் போதும் அறியாமலும், தவிர்க்க முடியாமலும் புழுப்பூச்சிகள் உயிரிழக்கச் செய்யும் கொடுமைகளுக்குப் பரிகாரம் தேடலாம். இவ்வேள்விகள் சீவனின் நுண்ணுணர்வுகளைப் புனிதப்படுத்தி, ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவி புரிகின்றன. மனிதனின் அகங்காரத்தைக் கரையச் செய்து, ஓரளவு புலன்களின் கொந்தளிப்பை அமைதியுறச் செய்து, பிரபஞ்சப் பேரறிவுடனும்,ஆத்மாவுடனும் உள்ள ஒருமையுணர்வை அதிகரிக்கச் செய்கின்றன.
ஸ்ரீசத்ய சாயி பாபா இந்த வேள்விகளைக் (யக்ஞங்களைக்) கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளார்:
- தேவயக்ஞம் / தைவயக்ஞம்
- ரிஷியக்ஞம் (ஞான வேள்வி)
- பித்ருயக்ஞம் (மூதாதையரைப் போற்றும் வேள்வி)
- அதிதியக்ஞம்
- பூதயக்ஞம்:
ஒவ்வாரு வீட்டிலும், வீட்டிலுள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்தோ, தனித்தனியாகவோ இறைவனைப் போற்றி வழிபடுவதற்கென அமைக்கப்பட்ட வழிபாட்டறையொன்று இருப்பது வழக்கம். மிக விரிந்த, அளவிடற்கரியதின் பல்வேறு முகப்புகளை நினைவுப்படுத்தும் சின்னங்களாக (குறியீடுகளாக) வழிபாட்டறையில் கடவுளரின், தேவியரின் படங்களும் விக்ரகங்களும், வைக்கப்பட்டிருக்கின்றன. இப்புனித அறையில் தினமும் வழிபாடு நடைபெறுகிறது. இறைவனுக்கு முன் ஊறிப் பெருகி வரும் பிரார்த்தனைகள் அர்ப்பணிக்கப்படுகின்றன. அவ்வமைதியில் தியானம் நிறைவேறுகிறது. இறைவனின் திருநாமம் நாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் தீஞ்சுவை அனுபவிக்கப்படுகிறது. இதுவே தேவயக்ஞமாகும். வீட்டைப் புனிதப்படுத்தி, நாள் முழுவதும் ஈடுபடும் எல்லாச் செயல்களினூடேயும், இறைவனை நினைவுபடுத்துவதற்கு இந்த வேள்வி உதவி செய்கிறது.
ஞானிகளையும், ஞானம் தரும் எவற்றையும் ஆராதிக்கின்ற (வழிபடுகின்ற) செயல்கள் அனைத்தையும் ‘ரிஷியக்ஞம்’ என்றசொல்குறிக்கின்றது. புனித மறை நூல்களைப் படித்து வாழ்க்கையில் கடைபிடிப்பதே’ ரிஷியக்ஞமாகும்’ இம்மறை நூல்கள், முனிவர்கள் தமது இடைவிடாத தவத்தினால் அடைந்து, எதிர்கால மக்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று அளித்த ஞானச் செல்வங்களாகும். இவற்றுள் வேதங்கள் மிகப்பழமையானவை, அவை தத்துவங்கள் நிறைந்த, ஆழ்ந்த கருத்துள்ள மிகப்பெரும் தொகுப்புகள். மறை நூல்கள் அனைத்தும் வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடியவை, எல்லோருக்கும் பொதுவானவை. இவைதவிர, நற்குணங்களுக்கும் தீயகுணங்களுக்கும் இடையே உள்ள நிரந்தரப் போராட்டத்தையும், நல்லசக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தையும், என்றுமுள்ள இறைவனருளானது நல்லது வென்றிடச் செய்வதையும் சித்தரிக்கின்ற, இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற புராணங்கள் ஆகிய அனைத்தும் படித்து, உணர்ந்து, பயிலத் தக்கவையாகும். இவையும் இவை போன்ற பிறநூற்களும். மனத்தின் மாசு நீங்கச் செய்கின்றன. மனத்திற்கு ஆறுதல் அளிக்கின்றன. மனத்தை உயர்த்துகின்றன. அந்நிலையிலே நிலை நிறுத்துகின்றன. மனத்தைத் திருத்தி, அதன் ஐயந்திரிபுகளை நீக்குகின்றன. மனத்தை பக்தி, பணிவு, தன்னம்பிக்கை, தைரியம் இவற்றால் நிரப்புகின்றன. வலிமைக்கு உயிரூட்டும் இவ்வூற்றுக்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதுமிகவும் வருந்துதற்குரியது. இதற்குப் பதிலாக மக்கள் மனத்தைக் காயப்படுத்துகின்ற, அலட்சியப் போக்கினை வளர்க்கின்ற, கேலித் தன்மையை வளர்க்கின்ற, கீழ்த்தரப்படுத்துகின்ற, நாண முறச் செய்கின்ற புத்தகங்களையும், நிலையான புத்தியில்லாமல் செயற்படுகின்ற துரதிருஷ்டசாலிகளைப் பற்றிய புத்தகங்களையும் படிக்கின்றனர். இதனால் அவர்களது உண்மையான முன்னேற்றத்துக்கும், மன நலனுக்கும் எத்தகைய கெடுதல்? பயனற்ற புத்தகங்கள் மனோ வேக சகதியிலும், பாவச் சேற்றிலும் மனிதனை அழுத்துகின்றன. மனிதனைக் கொடிய விலங்குகளின் குரூர வழியில் இட்டுச் செல்கின்றன. தான் மனிதன் என்பதை நினைவுபடுத்திக் கொள்வது நமது கடமையின் பாதி மட்டுமேயாகும். சொல்லாலும், எண்ணத்தாலும், செயலாலும் தான் விலங்கல்ல என்று தனக்குத் தானே பிறருக்கும் சேர்ந்து நிரூபித்துக் கொண்டே வருவது மற்றொரு பாதியாகும். இது முதற் கூற்றின் மறு புறமாதலின் இதனைப் புறக்கணிக்கலாகாது. மனிதனாகவே இரு; விலங்குத் தன்மையிலிருந்து விலகியிரு. உனது புலன்களையும், மனோ வேகங்களையும், உணர்ச்சிகளையும் விவேகம் (நல்லது எது, கெட்டது எது, நிலையானது எது,நிலையற்றது எது, பயனுள்ளது எது, பயனற்றது எது என்பதைப் பிரித்தறியும் திறன்), வைராக்கியம் (பற்றற்ற, விடுபட்ட மனபாங்கு) ஆகிய கடிவாளங்களால் கட்டுப்படுத்த வேண்டும். உயர்ந்த நூற்கள் உபதேசிப்பதும் இதுவே. அறிவுரைக்கும், உயிரூட்டத்துக்கும் இவற்றை நாடிச் செல்ல வேண்டும்.
இது பெற்றோரையும், முன்னோரையும், முன்னிட்டுச் செய்யப்படுவதாகும். ”மாத்ரு தேவோ பவ, பித்ருதேவோ பவ” (அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்) என்பது வேதங்களின் கட்டளையாகும். இது காது புளிக்கும் வண்ணம் எல்லோராலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் பெற்றோருக்கு மதிப்பளித்து வணங்குபவர் யார்? தாய் தந்தையருக்கு மதிப்பளித்து, அவர்களைப் போற்றி வணங்காத சந்ததியினர் அழிவில் முடிவது உறுதி. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காகத் தமது அவசியத் தேவைகளையும், சுக சௌக்கியங்களையும் விட்டுக்கொடுத்து, மிகுந்த துன்பங்களைப் பெற்றோர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் அவர் மக்களுக்கு நன்றியுணர்வு இருப்பதில்லை. பெற்றோரை சீண்டிக் கேலி செய்கிறார்கள். அவர்களது மனோபாவங்களையும், பழக்கங்களையும் கேலி செய்தும், அவர்களது அறிவுரையினைப் புறக்கணித்தும், அவர்களுக்கு மனத்துன்பத்தையும்,மனவேதனையையும் அளிக்கிறார்கள், உனது உடலும், மனவளர்ச்சியும் அவர்களது வரப்பிரசாதமாக இருக்கும்போது, நீ அவர்களை இவ்வாறு நடத்துவது தெய்வக் குற்றமல்லவா? கண்கண்ட தெய்வங்களை நீ அவ்வாறு நடத்தும் போது, காணாத கடவுளை உன்னால் எவ்வாறு போற்றித் துதிக்க முடியும்? உனது பெற்றோரை நீ மதித்துப் போற்றினால், உனது மக்களும் உன்னை மதித்துப் போற்றக் கற்றுக் கொள்வார்கள். இதுபற்றிய ஒரு அழகான கதை புராணங்களில் உள்ளது.
தெய்வத் தம்பதியராகிய சிவனும், பார்வதியும், தமது மக்களாகிய கணபதிக்கும், சுப்பரமணியருக்கும் ஒரு சோதனை வைத்தனர். இருவரும் உலகைச் சுற்றி விட்டுத் திரும்ப இவர்களிடம் வரவேண்டும். இருவரில் யார் முதலில் வருகின்றாரோ, அவர் பரிசு பெறுவர். சுப்ரமணியர் வெகு வேகமாகக் கிளம்பி, மலைகள் நதிகள் வழியாக விரைந்து சென்றார். ஆனால் கணபதி பெற்றோரை வலம் வந்து பரிசைப் பெற்றுக் கொண்டார். ஒரு மகனுக்குப் பெற்றோர்தான் இவ்வுலகத்தில் உள்ள சகலமும் ஆவர் என்றார். சிவனும் பார்வதியும் கணபதி கூறியதை ஏற்றுக்கொண்டு, ஞானத்துக்கு அதிபதியாகவும் மக்களுக்கு ஏற்படும் தடங்கல்களை நீக்கும் தலைவராகவும் அவரை நியமித்தனர். தாய் தந்தையரை ஆதரித்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுக்கே முதலில் கௌரவம் கொடுத்தல் வேண்டும் என்பதே இதன் நீதியாகும். இதுவே உண்மையான பித்ருயக்ஞம். இத்தகைய மரபும், தியாக உணர்வுமே நமது பண்பாட்டைப் பிரதிபலிப்பவை. பெற்றோரை மறந்து தன்னிச்சையாக வாழுகின்ற படாடோபமான நிலையற்ற பெருமைகள் நமது பண்பாட்டுக்கு விரோதமானவை. சிவனை சாம்பசிவன் என்று அழைப்பதுண்டு. அம்பா என்பது தெய்வத் தாயினையும், ‘சிவ’ என்பது தெய்வத் தந்தையினையும் ‘ஸ” என்பது ஸர்வவியாபி (எங்கும் உள்ளவர்) ஸத்யா, ஸர்வக்ஞர்(எல்லாம் அறிந்தவர்) ஸாக்ஷாத்காரம் (தன்னையறிதல்) ஆகியவற்றையும் குறிக்கும் குறிப்பெழுத்துகள்.
இது வீட்டுக்கு வந்து ஒருநாள் தங்குகின்ற விருந்தினரை (அதிதி – ஒரே ஒருநாள் தங்குபவர்) உபசரித்து, அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் செயல்களைக் குறிக்கும். உணவோ, தங்குமிடமோ வேண்டி உம்மை நாடி வரும் புதியவரைக் குறிக்கும். வழிபாட்டுணர்வுடன் அவருக்குத் தேவையானவற்றை அளிக்கவேண்டும் .கடவுளால் அனுப்ப்ப்பட்டவர் என்றோ, கடவுள் என்றோ, கருதி அத்தகைய தெய்வீக உணர்வுடன் சேவை புரிதல் வேண்டும். இது வேதங்களில் அறிவுறுத்தப்பட்ட புனிதப் பணியாகும். நீ உண்ணும் வேளையில், யார் வந்து உணவு கேட்டாலும் உனது உணவை பகிர்ந்து கொள்ள வேண்டும். உமது பசியைத் தீர்த்துக் கொள்வதற்கு முன், அவரது பசியைத் தீர்க்க வேண்டும்.
எருது, பசு, ஆடு, குதிரை போன்று தமது உழைப்பினால் உமக்கு உதவுகின்றவையும், பூனை, நாய் போன்று உம்மை மகிழ்விப்பவையுமாகிய வீட்டு விலங்குகளைப் போஷித்துச் சுகமாக வாழச் செய்வது பூதயக்ஞம் எனப்படும். அவை பட்டினியால் வருந்தலாகாது. அவற்றை அதிகம் வேலை வாங்கலாகாது. உமது அன்பினையும், ஆதரவையும் சார்ந்துள்ள எந்தப் பிராணி கண்ணீர் சிந்தினாலும், அதன் பயனாக நீர் மிகவும் துன்பம் அனுபவிப்பீர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அன்பும் மரியாதையுமே, தியாகத்துக்கும் யக்ஞத்துக்கும் ஊற்றுக்களாகும். நமது எண்ணங்கள், சொற்கள் செயல் அனைத்தும், அன்பினாலும், புனித மரியாதையினாலும் நிரம்பியிருத்தல் வேண்டும். அப்போது தான் நம்மிடம் அசைக்க முடியாத, நிலையான சாந்தியும், மகிழ்ச்சியும் நிலவும்.
இல்லத்து விளக்காகத் தொடங்கு
வெளிச்சத்தை வெளியிடத்துக்குக் கொண்டு செல்.
பின் தெருவிளக்குப் போல
ஒளியுமிழ்ந்து, பிறருக்கு ஒளிவழங்கி,
மற்றவருக்குவழிகாட்டு……