அழகி

Print Friendly, PDF & Email
அழகி

இராஜராஜன் கி.பி 985 லிருந்து1014 வரை அரசாண்ட ஒரு வலிமை மிக்க மன்னன். தென் இந்தியா சிலோன் அனைத்தும் அவனது ஆட்சியின் கீழ் வந்தன. அவன் ஒரு பெரிய கப்பற்படையை வைத்திருந்தான். இப்போதுள்ள மலேசியா, இந்தோனேஷியா பர்மாவில் சில பாகங்கள் எல்லாம் அவனது ஆதிக்கத்தில் இருந்தது. அவ்வளவு சிறந்த ஆற்றலும் நிறைந்த புகழும் பெற்றிருந்த போதிலும் இறைவன் முன்பு அவன் தாழ்மையுடன் நெகிழ்ந்து நிற்பான்.

அவன் கட்டிய கோவிலைப்பற்றி, உற்சாகமான சுவைமிக்க கதை ஒன்று கூறப் பெறு கிறது. அந்தக் கோவில் கி.பி. 1003இல் துவங்கப் பெற்று, கி.பி.1009 இல் முடிவடைந்து கும்பாபிஷேகமும் செய்யப்பெற்றது. இன்றும் சோழப்பேரரசர்களின் செறிந்த வீரத்தையும், ஆழ்ந்த பக்தியையும் குறிக்கும் நினைவுச் சின்னமாக அது கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது. நாடெங்கிலும் இருந்தும் மேலை நாடுகளிலிருந்தும் வரும் சுற்றுப் பயணிகளை கவர்ந்து ஈர்க்கும் தென்னிந்திய கண்கவர் காட்சி இடமாக அது உள்ளது.

Alagi serving buttermilk to workers

எழில் வாய்ந்த மங்கை என்று பொருள்படும் பெயர் பெற்ற அழகி, நகரத்தில் வசித்த ஒரு சாதாரண மூதாட்டி. பொறுமை, தயாள குணம், பணிவான பண்பு, ஆண்டவனிடம் அடர்ந்த அன்பு இவற்றுடன் கூடிய எளிய பக்தை அவள். ஆனால் அவள் என்றுமே இறைவனிடமிருந்து எந்த ஒரு பொருளையும் பெற்றுக் கொள்ள விரும்பியதேயில்லை. அத்தகைய சிறந்த ஆசிகளை ஐயனிடமிருந்து பெறுதற்கு அத்துணை உயர்ந்தவள் அல்ல என்று தன்னையே தாழ்மையுடன் நினைத்தாள். உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் கடவுளின் தோற்றங்கள் தாம் என்று எண்ணினாள். அதனால் அவளால் செய்யக்கூடும் அளவுக்கு பிறர்க்கு சேவை செய்வதில், அதிலும் குறிப்பாக தெய்வ அருள் பெற்ற பெரியோர்களுக்கு செய்வதில் அவள் தயங்கியதேயில்லை.

அரசன் இறைவனுக்கு ஒரு பெரிய கோவிலைக் கட்டுகிறான் என்று அவள் தெரிந்து கொண்டாள் அதன் பிறகு கோவிலில் வேலை நடக்கும் இடத்திற்கு அவள் தினமும் செல்லலானாள். அங்கு சிற்பிகள், கொத்தனார்கள், தச்சர்கள் ,பொறியியல் வல்லுனர்கள் என்று அனைவரும் செய்யும் பணியை ஆர்வமோடு பார்த்துக் கொண்டே நின்றாள். அவர்கள் ஆண்டவனுக்கு ஆற்றும் பணியைப் பார்க்கும்போது அவளுக்கு சற்று பொறாமையாகக் கூட இருந்தது அவளும் அவர்கள் கூட வேலை செய்ய விரும்பினாள். ஆனால் மிகவும் வயசான கிழவியாக இருந்ததால் அவளை அவர்கள் சேந்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அவளது பக்தி நிறைந்த மனம், இறைவன் பணியில் எப்படியாவது உதவ மாட்டோமா என்று இடைவிடாது ஆராய்ந்து வந்தது. தன்னைப் போன்றோரிடம் அவள் கொண்டிருந்த அளவு கடந்த அன்பு சேவை செய்ய ஒரு வழி காட்டியது.

அவள் நாள் முழுவதையும் கட்டிட வேலைகளை கவனிப்பதிலேயே கழித்துவந்தாள் குளிர்ச்சியான காலைப்பொழுது,வெப்பமான பகல்வேளை, காற்று வீசும் மாலை நேரம் என்று எப்போதும் அங்கேயே கிடந்தாள். வெப்பம் மிகுந்த நண்பகல் நேரங்களில் வேலை செய்பவர்கள் நா வரட்சியுற்று களைத்துப் போய்விடுவதை அவள் கண்ணுற்றாள். அவர்களுக்கு உதவ அவளது அன்பு மனம் உடனே விழைந்தது. அன்றிலிருந்து சில பானைகளில், நீர்மோர் எடுத்துச்சென்றாள். கடுகு, இஞ்சி, கருவேப்பிலை இட்டு மணம் பெற தாளித்த மோர் மிக்க சுவையாகவும் இருந்தது.

பணியாற்றுபவர்களிடம் சென்று குளிர்ந்த நீர் மோரை ஆளுக்கு ஒரு குவளை தந்தாள் அழகி. இந்த சேவை அவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கால மறிந்து செய்யப்பெற்ற இந்த உதவியை அவர்கள் போற்றி அழகிக்கு, அவர்கள் நன்றி கூறினர் குளிர்ந்த நீர்மோர் அவர்கள் தாகத்தை தணித்து புத்துணர்ச்சியை ஊட்டியது. அதனால் அவர்கள் பிற்பகல் வேலயை சோர்வின்றி உற்சாகமாக செய்யவும் இயன்றது

இந்த சிறந்த பணியை அவள் நீண்ட காலம் செய்து வந்தாள்.இறுதியாகக் கட்டிட வேலைகள் முடிவுறும் நாள் வந்தது. நடுவில் ஐயனின் திருவுருவத்தை நிறுவும் புனிதமான இடத்தில் 216 அடி உயரத்தில் உயர்ந்த விமானம் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் இருந்தது. அப்போது அழகிக்கு ஓர் ஆசை ஏற்பட்டது.

“தோழர்களே! உங்களிடம் ஒரு சிறு விருப்பத்தை விண்ணப்பித்துக் கொள் கிறேன். இந்தக் கிழவியின் வேண்டுகோளுக்கு நீங்கள் இணங்குவீர்களா?” என்று கேட்டாள். பல ஆண்டுகளாக அவள் தங்களுக்கு. செய்து வந்த சேவையினால் அவர் கள் பெரிதும் நன்றி உணர்வுடன் இருந்தனர். அதனால் இயல்பாகவே ஒருமித்து இணங்கியவர்களாய் அவளது ஆவலை முடித்துவைக்க விரும்பினர். அவர்களது தலைவன் உடனே, “பாட்டி! தங்கள் விருப்பத்தை கூறுங்கள். மகிழ்ச்சியோடு அதை நாங்கள் நிறைவேற்றுகிறோம்” என்றான்.

“என் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய அகன்ற கற்பாறை இருக்கிறது. அதனால் எனக்கு ஒரு பயனும் இல்லை. அது கோவிலின் நடுவில் அமைக்கப்பெறும் விமானத் தின் மேல் தளமாகப் பொருத்திவைக்க உதவும் என்று நினைக்கிறேன். இறைவன் பணியில் நானும் சிறிது பங்கேற்க விரும்புகிறேன். நீங்கள் அந்த கல்லை எடுத்துவந்து விமானத்தில் பொருத்துவீர்களா? அங்ஙனம் செய்தால் நான் பெரிதும் மன நிறைவு பெறுவேன் ” என்றாள் அழகி.

“இன்றே எடுத்து வந்து பொருத்திக் கட்டி விடுகிறோம் என்று தலைவன் கூறிவிட்டு அழகியின் வீட்டுக்குச் சில வேலையாட்களுடன் சென்றான். அந்தக் கல் தேவைக்கு வேண்டிய அளவில் பொருத்தமாக இருந்தது. அதை எடுத்து வந்து சமமாகச் செதுக்கி, உரிய நேரத்தில் உச்சியில் பொருத்தி வைத்து கட்டிவிட்டனர் பணியாட்கள்.

Lord Shiva in King's dream

கோவில் கட்டும் பணி உரிய காலத்தில் செவ்வனே முடிவடைந்தது. அரசரது புரோ கிதர்கள் கும்பாபிஷேகம் செய்ய நல்ல நாள் பார்த்து குறித்து தந்தனர். அதற்கு முன் தினம் வழக்கம் போல மன்னன் கோவிலுக்கு வந்து அனைத்தையும் உன்னிப்பாகப் பார்வையிட்டான். சிவபெருமானாருக்கு எழுப்பப் பெற்ற மாபெரும் ஆலயத்தின் பணிகள் அனைத்தும் அழகுற முற்றுப்பெற்றன என்று அறிந்து அரசன் மிகவும் மகிழ்ந்தான்.இறைவன் திருப்பணி செய்யவே தான் அவரால் பொறுக்கி எடுக்கப் பட்ட கருவி என்று சற்று தன்னைப்பற்றியும் தற்பெருமை கொண்டான்.

எல்லாம் சரிவர ஆற்றப்பெற்றிருப்பதைகண்டு மகிழ்ந்தவனாய் கும்பாபிஷேகம் நடைபெற இறுதியாக சில முக்கிய கட்டளைகளையும் அமைச்சர்களிடம் கூறிவிட்டு மறு நாள் நடைபெறப்போகும் திருவிழாவிலேயே மனம் ஒன்றியவனாய் அரண்மனை ஏகினான் அரசன். அன்று இரவு அவன் கனவில் சிவபிரானார் இறைவன் பிரஹதீஸ் வரராக வந்தார். “அரசனே! பெரிய கோவிலில் கிழவி அழகி அமைத்துத்தந்த நிழலின் கீழ் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று கூறினார் சிவனார்

இராஜராஜ மன்னன் திடுக்குற்று விழித்தான். அவனால் அவன் காதுகளையே நம்ப முடியவில்லை பேராற்றல் பெற்ற பரமன் கிழவி தந்த புகலிடத்தில் தங்குவதாவது! இயலாத செயல்! அவனல்லவா மாபெரும் கோவிலை திட்டமிட்டுக் கட்டினான்! கோவிலைக் கட்டுவது பற்றிய கருத்துரைகள், கட்டிடம் கட்டுவதற்கான முழுமையான திட்டங்கள், கட்டிடத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்த திறமை, மனித சேவை, பொருட்களின் சேவை, இவற்றையெல்லாம் திட்டமிட்டு சேகரித்த ஆற்றல், கட்டிட வேலைகளை உன்னிப்பாகத் தாமே முன்னின்று கவனித்து அவ்வப்போது அறிவுறுத்தி வந்த வேலைத்திறன், இப்போது நல்ல வண்ணமாக எல்லாம் செய்து முடித்துவிட்ட பெருமை, அனைத்துமே அவன் தானே அறிவு கூர்ந்து ஆற்றினான்! வேறு ஒருவரும் அவனுக்கு உதவவில்லையே! ஒரு கிழவியும் அந்த பணியில் கைவைக்கவில்லையே! எனினும் இறைவனே அங்ஙனம் கூறியிருக்கிறாரே1 அது பொய்யாகாதே! என்று பலவாறு குழம்பினான் இராஜராஜன். எனினும் இயல்பாகவே பெற்றிருந்த பணிவோடு மறு நாள் காலை கோவிலுக்குச் சென்றான். அங்கு கடவுள் கூறியபடி கிழவி யாராவது கட்டிடப்பணியில் பங்கேற்றாளா என்று வினவினான், அதுபோல யாரும் பணியாற்றியதாகத் தெரியவில்லை.. அமைச்சர்களை அழைத்து அவள் யாரென்றும் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து அழைத்துவரவும் ஏவினான். பெரிய அளவில் அவர்கள் விசாரித்த பின்னர் அழகியின் கதையை அறிந்தனர்.பிறகு அரசனிடம் வந்து அழகி என்ற பெயருடன் ஒரு மூதாட்டி பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த கட்டிட வேலைகளின் போது, பணியாட்களிடையே உலாவி வந்து, அவர்களுக்கு நல்ல வெயில் நேரத்தில் நீர்மோர் தந்து வந்ததாக தெரியவந்தது. உடனே அரசன் அவன் செய்து வந்த அந்த சிறிய சேவையே இறைவனை மகிழ்வுறுத்தி இருக்கிறது என்று புரிந்துகொண்டான். இறைவன் அவள் தமக்கு பாதுகாப்பாகத் தங்க இடம் அளித்துள்ளாள் என்று கூறும் வண்ணம் அவளது சேவை அமைந்திருந்தது.

இராஜராஜன் கூப்பிய கரங்களுடன் அவளது சிறிய குடிசைக்குச் சென்று அவளைக் கண்டு வணங்கினான்.பொது மக்கள் சூழ அவளை கௌரவித்து அழைத்து வந்தான். பிறகே கும்பாபிஷேக நிகழ்ச்சிகளைத் துவங்கினான்

அழகி,எப்போதும் போல பணிவு மிக்கவளாய் இறைவர் முன்னிலையில் தலைதாழ்ந்து நின்றான். தன் எளிய தாழ்மையான சேவையை அவர் ஏற்றுக்கொண்டதற்கு மிகவும் மகிழ்ந்தாள். எஞ்சிய வாழ் நாட்களை அவள் இங்ஙனமே இறைபணியிலும் அவரது தொண்டர்களின் சேவையிலும் கழித்து வந்தாள். அவளது எளிய சேவையை இறைவன் எத்துணை பெரிதாக மதித்துப்போற்றினார் என்பதை அறிந்து மக்கள் வியந்து போற்றி நின்றனர். அவளது பக்தியை மக்கள் பழம்பெருமை வாய்ந்த கதைகளாகவும் புரான கதைகள் போலவும் போற்றிக் கூறி வந்தனர், அவள் வாழ்ந்து வந்த இடம் அழகி பூங்காவாக இப்போது உருப்பெற்றுள்ளது. அதன் முன்னர் ஒரு சிறிய குளம் வெட்டப்பெற்று “அழகி குளம்” என்று பெயர் பெற்றுள்ளது.11 ஆம் நூற்றாண்டில் அவள் குடி கொண்டிருத்த குடிசை இருந்த இடத்தில் இப்போது 20 ஆம் நூற்றாண்டில் நகராட்சி கழக அலுவலகம் உயர்ந்து நிற்கிறது.

கேள்விகள்:
  1. அழகி யார்?
  2. கோவில் கட்டும் ம்பணியில் அவள் எப்படி பயனுள்ள தாக உதவி செய்தாள்?
  3. அவளுடைய ஒரே ஓர் ஆசை என்ன?
  4. இறைவன் அரசன் கனவில் வந்து என்ன கூறினான்?
  5. அரசன் இராஜராஜன் அழகியின் கதையிலிருந்து என்னபாடம் கற்றுக்கொண்டான்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன