பிறப்பும் குழந்தைப் பருவமும்
பிறப்பும் குழந்தைப்பருவமும்
காலம் கழிந்தது. இறைவன் தேர்ந்தெடுத்த தாயான ஈஸ்வரம்மா இன்னொரு புதல்வன் பிறக்கவேண்டுமென்று விரும்பினார். அதற்காக சத்யநாராயண பூஜை செய்து பிரார்த்தனை செய்தார். இறைவனை சத்யநாராயண வடிவத்திலும் பெயரிலும் வழிபடுவதற்கான அனுஷ்டானங்கள் நிறைந்த விசேட விரதமே சத்யநாராயண பூஜை. விரைவிலேயே அவருக்குக் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
பாட்டனாரும் அவரது இரு புதல்வர்களும் புராணங்கள் இதிகாசங்கள் சார்ந்த கிராமிய இசை நாடகங்களில் ஈடுபாட்டுடன் இருந்ததால் அவர்கள் வீட்டில் ஒத்திகைகள் நடத்தப்பட்டன. ஒரு பெரிய தம்புரா, மத்தளம், அதற்குக் கீழே தரையில் வைக்கப்பட்டிருந்தது. இயல்பாக அவைகளிலிருந்து எந்த சத்தமும் தானாக வராது. ஆனால் ஆசைப்பட்டிருந்த மகன் பிறக்கும் சமயம் நெருங்க நெருங்க நடு இரவிலோ அல்லது அதிகாலையிலோ விற்பன்னர்கள் வாசிப்பது போன்று தம்பூராவிலிருந்து நரம்புகள் மீட்டி வரும் இசையொலியும் மத்தளம் வாசிக்கும் மெல்லிய ஒலியும் கேட்கத் தொடங்கின.
அறிவினைக் கடந்த இந்த நிகழ்ச்சிகளுக்குக் காரணம் என்ன, பயன் என்ன, என்று அறிவதற்கு பெத்த வெஙகப்பா புக்கபட்டினத்துக்கு விரைந்து சென்றார். அங்கு ஒரு படித்த சாஸ்திரி அது மங்கலமான நிகழ்ச்சி என்றும், நலந்தரும் தெய்வ சக்தி ஒன்று ஒருமைபாட்டையும், இனிமையையும், ஒழுங்கையும், ஆத்மீக உணர்வையும், ஆனந்தத்தையும் அளிக்கும் என்று விளக்கம் தந்தார்.
1926ம் வருடம் நவம்பர் மாதம் 23ந்தேதி அன்று சூரியன் உதிக்கும் நேரத்தில் ஒரு புதல்வன் பிறந்தான் (நமது பாபா). ஈஸ்வரம்மா சத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருந்த போது பிரசவ வேதனை தொடங்கியது. உடனே சத்தியநாராயண பூஜைக்காக அர்ச்சகர் இல்லத்துக்கு சென்றிருந்த அவரது மாமியார் லக்ஷ்மம்மாவுக்குச் செய்தி சொல்லியனுப்பப்பட்டது.
தெய்வ அருட் கருணையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அந்த அம்மா தன் விரத அனுஷ்டான விதிகளிலிருந்து தளர்ந்து கொடுக்க மறுத்துவிட்டார். பூஜை முடிந்த பின் வருவதாக செய்தி அனுப்பிவிட்டு பூஜையை முழுகவனத்தோடும், நியமத்தோடும் முடித்த பிறகு வீட்டிற்கு வந்தார். மருமகளுக்குப் பூஜையிலிருந்து கொண்டு வந்திருந்த மலரையும் தீர்த்தத்தையும் கொடுத்தார். அதற்குள் ஈஸ்வரம்மாவும் தன் பூஜையை முடித்திருந்தார். ஈஸ்வரம்மா மலரைத் தலையில் சூடினார். தீர்த்தத்தை பருகினார். சில கணங்களில் திருமகனும் அவதரித்தார்.
அன்று கிராமத்தினர் சிவநாமம் கூறிக்கொண்டிருந்தனர். அன்று கார்த்திகை மாதம் திங்கட்கிழமை. கார்த்திகை சோமவாரத்தன்று சிவனை நினைந்து சிவ வழிபாட்டிலே ஈடு பட்டிருந்தனர். அன்று ஆருத்ரா நக்ஷத்திரமும் கூட. இவ்வாறு மாதமும், நாளும், நஷத்திரமும் ஒருங்கு சேர்வது அபூர்வமானது. ஆகவே ஆலயங்களில் சிவனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
அந்த வருடமும் அக்ஷய வருடம். ஒருபொழுதும் குறையாதது. எப்போதும் நிறைந்துள்ளது என்பது அதன் பொருள்.
அக்குழந்தையின் அழகு வர்ணனைக்கு அடங்காதது. அவதாரத்திற்குரிய அனைத்து சக்திகளையும் பாபா தமது திருவுள்ளத்தினால் இப்போது வெளிப்படுத்தி வருகிறார்.
அறையின் ஒரு மூலையில் ஒரு பாய். அதன் மேல் படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. குழந்தையை குளிப்பாட்டி அதன் மேல் கிடத்தினார். அப்போது எதோ அடியிலிருந்து கொண்டு அப்படுக்கையை மேலும் கீழும் விசித்திரமாக நகர்த்தியது. அங்கிருந்த பெண்களின் கவனம் அங்கேயே நிலைத்தது. அதை அவர்கள் உற்று கவனித்த பின் படுக்கையை சோதித்தனர்.
படுக்கைக்கடியே நாகம் ஒன்று மண்டலமிட்டுப் படுத்திருப்பதைக் கண்டார்கள். அனந்தசயனனுக்கு ஆதிசேஷன்.
குழந்தைக்கு சத்யநராயணா என்று பெயர் சூட்டப்பட்டது. சத்யநாராயண பூஜைக்கும் அப்பூஜையில் ஏற்பட்ட பலனுக்கும் உள்ள தொடர்பை எண்ணி சத்யநாராயணா என்ற பெயருக்கு அக்குழந்தையின் தாயார் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். குழந்தையின் காதிலேயே மெதுவாகப் பெயரை உச்சரித்தார்கள். தாமே தீர்மானித்த அப்பெயரை அவர்கள் சூட்டுகிறார்களே எனக் குழந்தையின் உதட்டிலே அப்போது புன்னகை தவழ்ந்தது. சத்யம் என்றால் உண்மை என்று பொருள். நாராயணன் என்றால் மனிதனுள் இருக்கும் கடவுள் என்று பொருள். சத்தியத்தின் வழியை மனிதனுக்கு காண்பிக்கவும் மனிதனுக்குள் கடவுள் இருக்கிறார் என்பதைப் புரிய வைக்கவும் பாபா வந்திருக்கிறார்.
பாட்டனார் குடும்ப இல்லத்துக்கு அருகில் ஒரு சிறு குடிசையைக் கட்டிக்கொண்டார். கொண்டமராஜு பச்சிளம் குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சுவதற்காகப் பாட்டியார் அதனைக் குடிசைக்கு கொண்டு செல்வார். கிழவனார் குழந்தையை பூஜை அறைக்கு எடுத்துச் செல்வார். குழந்தை ஒரு பொழுதும் அவரது பிரார்த்தனைக்குத் தடையாக இருந்ததில்லை. மாறாக குழந்தை அங்கு இருந்தததால் மனதில் அமைதி நிரம்பி மனதை கடவுள் பக்கம் செலுத்த முடிந்தது என்பதைப் புரிந்துகொண்டார்.
சீக்கிரத்திலேயே சத்யா புட்டபர்த்தி கிராமத்திலுள்ள அனைவருக்கும் செல்லக் குழந்தை ஆயிற்று. அதன் கவர்ச்சி மிகுந்த புன்னகை அனைவரையும் கவர்ந்தது, அதனை கொஞ்சிக் குலாவவும், உணவு ஊட்டவும், ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இவ்விதமாக பெத்த வெங்கப்பராஜுவின் இல்லம் பார்க்க வரும் மக்களால் நிரம்பி வழிந்தது, அவர்கள் அன்றாடக் கவலையெல்லாம் மறந்து அதன் தொட்டிலைச் சூழ்ந்து கொஞ்சுவதில் ஈடுபட்டனர்.
ராஜுவின் வீட்டுக்குப் பக்கத்துவீடு கர்ணம் எனப்படும் கிராமத்துக் கணக்கு பிள்ளைக்குச் சொந்தம். கர்ணம், ஜாதியில் பிராமணர். அவர் மனைவி சுப்பம்மா குழந்தையைத் தூக்கி கொஞ்சி அணைத்துக் கொள்வார். குழந்தை மகிழ்ச்சியால் கொப்புளிப்பது போன்று சத்தமிடும். சுப்பம்மா வெற்றிப் பெருமிதத்துடன் குழந்தையைத் தன் வீட்டிற்கு கூட்டிச் செல்வார். அவர் வயதான மூதாட்டி. அவருக்கென்று குழந்தைகள் யாருமில்லை. ஈஸ்வரம்மாவின் கருணை மிகுந்த இதயம் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. சுப்பம்மாவின் வீட்டிற்கு தூக்கிச் செல்வதற்கு சத்யா சுறுசுறுப்புடன் இணங்குவதைக் கண்டு, இது ப்ராம்மணக் குழந்தை என்று மற்றப் பெண்கள் கேலி செய்வர். சுப்பம்மா வீட்டில் இருந்தது போல் தன் வீட்டில் கூட இவ்வாறு மகிழ்ந்ததில்லை. ஆகவே அந்த கிராமப் பெண்மணிகள் ஈஸ்வரம்மாவை தேவகி என்றும், சுப்பம்மாவை யசோதை என்றும் கேலி செய்வர். தனது குழந்தை நாளுக்கு நாள் இனிமை மிகுந்து வளர்வதையும் அனைவரின் அன்புக்கும் கவனத்துக்கும் பாத்திரம் ஆகி, வளர்வதையும் கண்டு ஈஸ்வரம்மா மிக்க மகிழ்ச்சியடைந்தாள்.
சின்ன சத்யா வளரும்போது பெரியவர்கள் போன்று விபூதி அணிவதில் மகிழ்ச்சியடைந்ததையும் அவை அழிந்ததும் மறுபடியும் அணிய வேண்டும் என்று வற்புறுத்தியதையும் கண்டு பார்த்தவர்கள் அதிசயமடைந்தனர். தவிர நெற்றி உச்சியின் மையத்தில் குங்குமப் பொட்டு அணிய விரும்பினான். இதற்காக அவன் அக்காவின் குங்குமப் பெட்டியை அபகரித்து குங்குமம் இட்டுக் கொண்டான்.
அவனே சிவன்; அவனே சக்தி; இறைவனும் இறைவனின் சக்தியுமாவான். ஆகவே தான் அவன் சிவபிரானின் புனித வெண்ணீற்றையும் சிவந்த குங்குமத்தையும் விரும்பினான். அசைவ உணவை அவன் மிகவும் வெறுத்தான். செம்மறியாடு, ஆடு, கால்நடை இவைகள் கொல்லப்படும் இடத்துக்கும், கோழிகளையும், மீன்களையும் பிடிக்கும் இடத்துக்கும் அவன் செல்வதே இல்லை. மாமிச உணவு தயாரிக்கப்படும் பாத்திரங்ளையும், சமயலறையையும், விலகித் தூர இருந்தான். சமையலுக்காக ஒரு பறவை கொல்லப்பட இருக்கிறது என்று கேள்விப்பட்டதுமே அந்த இடத்துக்கு ஒடிச் சென்று பறவையைக் கண்டு பிடித்து அதைக் கைகளால் இறுக அணைத்து தான் தரும் அதிகபட்ச அன்பு மூத்தோரை அதனை கொல்லும் எண்ணத்திலிருந்து விலக்கும் என்பது போன்று அதனைக் கொஞ்சுவான். கர்ணத்தின் வீட்டுக்கு ஓடிச்சென்று அவர்கள் சைவ உணவு மட்டுமே உண்பதால் அங்கு அவனது தாய் யசோதாவான சுப்பம்மாவினால் தரப்படும் உணவை அருந்துவான்.
படைப்பிலுள்ள அனைத்திடமும் அவன் கொண்டிருந்த அளவற்ற அன்பு தெளிவாகத் தெரிந்ததால் அண்டை அயலார் அவனை ப்ரம்மஞானி (தன்னை அறிந்தவன்) என்று அழைத்தனர்.
மிக இளம் பிராயமான 3, 4 வயதிலேயே மனிதர்களின் கஷ்டங்களைக் கண்டு பாபாவின் இதயம் உருகும். பிச்சையெடுப்பவன் எப்போது வாயில் படியில் வந்து குரல் எழுப்பினாலும் சத்யா விளயாடுவதை நிறுத்தி விட்டு சகோதரிகளிடத்திலே ஒடி அவர்கட்கு அரிசியோ அன்னமோ கொடுக்கும்படி வற்புறுத்துவான். அவர்கள் பொறுமை இழந்து சினங்கொண்டு பிச்சைக்காரனை சில சமயம் விரட்டுவார்கள். அப்போது சத்யா பலத்த குரலில் அழத் தொடங்குவான். அந்த பிச்சைக்காரனைஅழைத்து வந்தால் தான் இச்சிறுவன் அழுகை நிற்கும். இடைவிடாது பிச்சைக்காரர்கள் சத்யாவின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்ததால் சத்யாவின் அன்னை அவனை எச்சரிக்கும் முறையில் “இதோ பார் அவர்களுக்கு நீ உணவு கொடுக்கலாம், ஆனால் நீ பட்டினி கிடக்க வேண்டும்” என்று பயமுறுத்தினார்கள். இது அவனை அசைக்கவில்லை. வீட்டிற்குள் ஓடி உணவெடுத்து வந்து பசியால் வாடும் ஆட்களுக்கு கொடுப்பது வழக்கம். அப்படிச் செய்து விட்டு உணவருந்த வராது நின்று விடுவான். என்ன வற்புறுத்தினாலும் அவனை உண்ண வைக்க இயலாது.
யார் கண்ணிலும் படாத ஒருவர் சத்யாவுக்கு உணவளித்து வந்தார். நாட்கணக்கில் தொடர்ந்து உண்ணாமல் இருந்தபோது கூட தோற்றத்தில் பசியின் வாட்டமோ செயல்களின் களைப்போ தென்பட்டதில்லை. தன் அன்னையிடம் தான் உண்டதாகவும் ஒரு கிழவனார் தனக்குப் பாலும் சோறும் ஊட்டியதாகவும் கூறுவான். சொல்லியதை நிருபிக்க தனது உள்ளங்கையினை காண்பிப்பான். அவன் கையை அன்னை முகரும் போது இதுவரை தானே உண்டிராத பால், நெய், தயிர், வகையின் மணம் கமழும்.
வெளியே விளையாடும் அளவுக்கு வளர்ச்சியடைந்ததும் சத்யா சுற்று முற்றும் கவனித்து குருடர்கள், ஊனமுற்றவர்கள், நோயாளிகள், வேலை செய்ய இயலாதவர்கள், இவர்களையெல்லாம் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வருவான். அவனது சகோதரிகள் பிச்சையெடுப்பவனின் பாத்திரத்தில் உணவுகள் அல்லது தானியங்களால் நிரப்ப சின்ன சத்யா மகிழ்ச்சியுடன் இதனை பார்த்துக் கொண்டிருப்பான்.
கிராமத்திலிருந்த ஒவ்வொரு பெற்றோரும் சத்யநராயணனை இலட்சிய குழந்தைக்கு உதாரணமாக சுட்டிக் காட்டினார்கள். விரைவிலேயே அவனது சிறிய நண்பர்கள் அவனைத் தமது குரு என்று குறிப்பிடத்தொடங்கினர்.
அவனது குடும்பத்தினரும் இந்த அடைமொழியை ஒரு விசித்திரமான சந்தர்ப்பத்தில் தான் தெரிந்து கொண்டனர். ஒருநாள் இராமநவமியன்று இரவு வெகு நேரத்துக்குப் பின் கிராமத்தின் வழியே ஊர்வலம் ஒன்று வந்தது. ஸ்ரீ ராமபிரானின் பெரிய படம் ஒன்றை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி ஒன்றிலே வைத்து அதன்மீது அர்ச்சகர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். பக்தர்கள் கொடுக்கும் மாலையை அணிவிப்பதற்கும், சூட தீபாரதனை அப்படத்திற்கு செய்வதற்குமே, அவர் அங்கு அமர்ந்திருந்தார். நாதசுரக்காரர்களும், மத்தளக்காரர்களும், வாசித்த இசை முழக்கத்தால் இரவிலே பலர் உறக்கம் கலைந்தது.
சத்யாவின் குடும்பத்தினர் விழித்துக் கொண்டு பார்த்த போது சத்யா வீட்டில் இல்லை என்று கண்டுகொண்டார்கள். பின்னிரவானதால் பரபரப்புடன் தேடினர். அவர்கள் கவனம் அங்கு வந்த மாட்டு வண்டியை நோக்கியது. அவ்வண்டியில் ஸ்ரீ ராமரின் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ஐந்தே வயதான நம் சிறிய சத்யா அழகாக உடை உடுத்து அப்படத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டு அச்சிறுவர்களுக்கெல்லாம் தலைவனாக வருவதை பெத்தவெங்கப்பராஜுவும், அவர் வீட்டாரும் கண்டபோது அவர்களது ஆச்சரியம் அதிகரித்தது. அவன் ஏன் நடந்து வராமல் வண்டியின் மேல் உட்கார்ந்த்திருக்கிறான் என்று அச்சிறுவர்களைக் கேட்டார்கள். அவர்கள் உடனே அவர் எங்கள் குரு என்று பதில் கொடுத்தனர். ஆம். அவர் உலகின் எல்லா குழந்தைகளுக்கும் ஏன், அனைவருக்குமே குரு தானே?
புட்டபர்த்தியிலே சிறிய தொடக்கபள்ளி ஒன்றுண்டு. தனது தோழ்ர்களுடன் சத்யாவும் பள்ளிக்கு போவது வழக்கம். குறித்த நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டுமென்பதற்காக விசித்திரமான தண்டனை முறையொன்று அப்பள்ளியிலே இருந்தது. அதன்படி முதலாவதாக, இரண்டாவதாக வந்த மாணவர்கள் ஆசிரியருக்கு வணக்கம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கெல்லாம் பள்ளிக்கு வந்த வரிசைக்கிரமத்துக்கு தகுந்த பிரம்படி கிடைக்கும். இந்த சித்திரவதையிலிருந்து தப்புவதற்காக, மழையென்றும், பனியென்றும், பாராமல் சூரிய உதயத்துக்கு வெகு நேரத்துக்கு முன்பே பள்ளியின் தாழ்வாரத்திலே குழந்தைகள் வந்து கூடியிருப்பார்கள். தன் விளையாட்டுத் தோழர்கள் குளிரிலே நடுங்கும் நிலை கண்டு சத்யா பரிதாபப்படுவான். ஆகவே அவர்களையெல்லாம் பள்ளியின் தாழ்வாரத்திலே சந்தித்து அவர்களுக்கு வேண்டிய சட்டை துண்டு வேட்டி முதலியன வீட்டிலிருந்து கொண்டு வந்து போர்த்தி குளிரைப் போக்க வசதிசெய்வான். வீட்டிலுள்ள பெரியோர்கள் செய்யும் வகையறியாது வீட்டிலுள்ள துணிமணிகளைப் பூட்டி வைத்துக் கொண்டனர்.
சத்யநராயணா பிறவி ஞானியாதலால் யாரும் எதையும் சொல்லாமலே வெகு சீக்கிரத்திலேயே எந்த விஷயத்தையும் அறிந்துகொள்வார். வீட்டிலே கிராம நாடக சபைக்காக இயற்றப்படும் பாடல்களையும், தோத்திரங்ளையும் சத்யா நன்றாகப் பாடுவார். ஏழுவயது இளஞ்சிறுவனாக இருந்த போதே புராண நாடகம் ஒன்றிற்கான சில பாடல்களை இவரே இயற்றினார். இக்குழந்தையின் பாடலைப் பெரியோர்கள் பாராட்டி மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்கள்.
சத்யா, சுமார் எட்டு வயது நிரம்பிய போது உயர்நிலை தொடக்கப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு தகுதி உள்ளவர் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அவர் புட்டபர்த்தியிலிருந்து சற்றேறக்குறைய இரண்டரை மைல் தொலைவிலுள்ள புக்கபட்டினத்திலுள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டார். மழையிலும், வெயிலிலும், கல்லும், காடும் நிரைந்த வயல்களின் வழியாக அவர் பள்ளிக்கு நடந்தே சென்றார். கழுத்தளவு நீர் நிரைந்த ஆற்றையும் மழைக்காலத்தில் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அப்பொழுது புத்தகப் பையை பத்திரமாக தலையின் மேல் வைத்துக் கொண்டு செல்வார். பள்ளிக்கு போவதற்கு வெகு முன்னரே புறப்பட வேண்டியிருக்கும். அப்போது அவர் பழைய சோறும் தயிரும் அல்லது ராகிக்களியும் துவையலும் அருந்திவிட்டுச் செல்வது வழக்கம். மதிய உணவிற்காக எதையேனும் ஒன்றை ஒரு பையில் எடுத்துக்கொண்டு செல்வார். இவ்வாறு அவர் தமது தோழர்களோடு புக்கபட்டினத்துக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
எளிய சுபாவம், அடக்கம், நேர்மை, நன்னடத்தை, கீழ்ப்படிதல், தேவைக்குமேல் பேசாதிருத்தல், ஆகிய நற்குணங்களுடன்விளங்கினார். மற்ற மாணவர்களுக்கு முன்னனுதாரணமாகத் திகழும் வகையில் பள்ளிக்கு வெகு நேரம் முன்னரே வந்து ஏதேனும் ஒரு ப்ரதிமையையோ (image), படத்தையோ வைத்து மலர் தூவி பூஜை செய்து ஆரத்தி எடுத்து ஒரு பிரசாதமும் வழங்குவார்.
அவர் தம்முடைய பையிலிருந்து மாயமாக எடுத்து வழங்கும் பிரசாத பொருட்களுக்காக அவரை மாணவர்கள் சூழ்ந்து கொள்வார்கள். இவற்றையெல்லாம் நீ எப்படி செய்கிறாய்“ என்று கேட்ட போது ஒரு கிராம தேவதை தமது கருத்துக்குட்பட்டு தாம் விரும்பியது எதுவாயினும் தருகிறது என்று கூறுவார்.
ஒரு சமயம் ஆசிரியர்களுள் ஒருவர் இந்த கிராமதேவதையின் ஆற்றலை உணரும் சந்தர்ப்பம் பெற்றார். ஒரு நாள்ஆசிரியர் வகுப்பறையில் சத்யா தாம் சொல்வதை எழுதிக் கொள்ளாமலும் அதே சமயம் பஜனை பாடல்கள் இயற்றி தமது வகுப்புத் தோழர்களுக்கு வழங்குவதற்காக பிரதி செய்வதில் ஈடுபட்டும் இருப்பதை கண்டார். நீ ஏன் எழுதிக் கொள்ளவில்லை என்று ஆசிரியர் வினவ அதற்கு சத்யா நேர்மையான முறையில் ”ஐயா தாங்கள் சொல்லியதை எல்லாம் நான் உணர்ந்து கொண்டேன். அந்த பாடத்தை ஒட்டிய எந்த கேள்வியினையும் என்னிடம் கேட்கலாம். தக்க விடை அளிக்கிறேன்.ஆகவே நான் எழுதிகொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை என்று பணிவுடன் பதில் கூறினார். ஆசிரியர் அவர் கூறியதை ஏற்கவில்லை. சத்யா தண்டிக்கப்படுதல் வேண்டும். ஆகவே சத்யாவை பெஞ்சின் மேல் பள்ளிக்கூடம் விடும் வரையில் நிற்க வேண்டும் என்று ஆணையிட்டார். சத்யா உடனே கீழ்ப்படிந்தார். சகமாணவர்கள் தமது குரு இவ்வாறு பெஞ்சின் மேல் நிற்கும் நிலைமை ஏற்பட்டது நினைத்து வருந்தினார்கள்.
அப்பள்ளியில் ஜனாப் மஹபூப்கான் என்று இன்னொரு ஆசிரியர் இருந்தார். அவர் சத்யாவிடம் சொல்லுக் கடங்காத அளவுக்கு அன்பும் மதிப்பும் கொண்டவர். அவர் ஆங்கிலம் போதித்தார். அவரது போதனா முறையில் ஆர்வமும் தெளிவும் சிறப்பாக இருந்தன, அதனால் அவரிடம் கல்வி கற்ற மாணவர் அனைவரும் ஆங்கிலப் பாடத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றனர். சத்யா எத்தகைய முன்னுதாரணமாகப் பிற குழந்தைகளுக்கு விளங்குகிறார் என்று கண்ட போது சத்யாவிடம் பெரும் ஆற்றல் குடிகொண்டுள்ளது என்பதையறிந்து அதற்கு தகுந்தவாறு இணையிலா அன்புடன் அவருடன் பழகி வந்தார். அசைவ உணவு உட்கொள்ளும் இடங்களுடன் தொடர்பு கொண்ட எந்த உணவையும் சத்யா உண்ணமாட்டார் என்பது அறிந்து தனது வீட்டைப் பலமுறை சுத்தம் செய்து பிறகு பலகாரம் தயாரித்து அவற்றை உண்ணும் படி சத்யாவிடம் இறைஞ்சிக் கேட்டுகொள்வார். மஹபூப் கான் அமைதியாக சத்யா பக்கத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து தலைமுடியை வருடி, ”சத்யா, நீ மிகவும் ஆச்சரியமான பையன். மிகவும் சக்தி வாய்ந்தவன். நீ ஆயிரக் கணக்கான பேர்களுக்கு உதவி செய்வாய்” என்று கூறுவார்.
அத்தகைய மஹபூப் கான் அடுத்த பாடப் பிரிவிற்குரிய ஆசிரியர். அவர் வகுப்பறையில் நுழைந்தவுடன் சத்யா பெஞ்சின் மேல் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வகுப்பிலிருந்த ஆசிரியர் தாம் வந்ததும் எழுந்திராமல் இருப்பதைக் கண்டு வியந்து நோக்கினார். அப்போது ஆசிரியர், கானிடம் நாற்காலி தம்மோடு ஒட்டிக்கொண்டு விட்டதென்றும் அதனால் தம்மால் எழ முடியவில்லையென்றும் மெல்லிய குரலில் தெரிவித்தார். இதனைகேட்ட மாணவர்கள் இது சத்யாவின் கிராமதேவதையின் வேலை என்று தமக்குள் சிரித்துக் கொண்டனர். இது சத்யாவின் சங்கல்பம் என்று கான் சந்தேகித்து சத்யாவை கீழே இறங்கச் சொல்லும்படி ஆசிரியரிடம் கூறினார். சத்யா இறங்கியதுமே நாற்காலியும் ஆசிரியரிடமிருந்து விடுபட்டது.
பல ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்ச்சியை கூறும் போது பாபா தான் இவ்வாறு செய்ததன் காரணம் ஆசிரியரிடம் கொண்ட சினம் அல்ல. சினம் தன்னிடம் சிறிதும் இல்லை. தன் ஆற்றல் பற்றிய உண்மையை மனிதர்களுக்கு வெளிப்படுத்தவும் மக்கள் தனது வாழ்க்கையின் குறிக்கோள் (Mission), தனது தனித்தன்மை(Identity) இவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை சிறுகச் சிறுக அடைய இது உதவும் என்று கூறினார். தனது நோக்கத்தின் மூலமாகவும் தூய்மை மூலமாகவும் அடையப் பெற்ற ப்ரம்மஞானி என்ற பெயருக்கேற்ப சத்யா தான் கற்பித்ததன் மூலமாகவும் பிரார்த்தனைகள், பஜனைகள், பக்தி, மன நிறைவு, இவற்றின் மூலம் கிடைக்கும் இணயிலா ஆனந்தத்தைவிட இக்குறுகிய உலகின் அற்ப சுகங்கங்கள் மிகத்தாழ்ந்தவை என்று நிரூபித்தார். இத்தகைய நற்குணங்கள் படைத்த சாதுக்களின் வாழ்க்கைக் கதைகளை கூறுவதில் தான் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அந்த சிறு வயதிலேயே சத்யா கூட இருப்பதற்கும், அவரிடம் நற்பெயர் சம்பாதிக்கவும், வெற்றுப்பையிலிருந்து அவர் எடுக்கும் இனிப்புகளைப் பெருவதற்கும் விரும்பும் குழந்தை சுத்தமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.
[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]