புத்த மதம்

Print Friendly, PDF & Email
புத்தரின் வாழ்க்கை

கௌதமர் என்ற குடும்பப் பெயரை உடைய சித்தார்த்தன் கி.மு.567இல் சாக்கிய நாட்டு ராஜா சுத்தோதனருக்கும், ராணி மாயா தேவிக்கும் பிறந்தவர். சாக்கிய நாட்டின் தலைநகரம் கபிலவஸ்து. பிறந்தவுடனே சித்தார்த்தன் உலகமே போற்றுமளவு பேரரசராக ஆட்சி புரிவான் அல்லது உலகையே துறந்து பெரிய துறவியாவான் என்று அறிஞர்கள் கூறினர். அதனால் சுத்தோதனர் அவரை வருங்காலத்தில் மன்னனாக்கும் எண்ணத்துடன், வாழ்வின் கஷ்டநஷ்டங்கள் எதுவும் தெரியாத வகையில், அழகிய அரண்மனையை உருவாக்கி, செல்வச்செழிப்பில் வளர்த்தார். எல்லாவிதக் கலைகளிலும் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று, மகிழ்ச்சியாகத் தன் நண்பர்களுடனே அந்த மாளிகையில் சித்தார்த்தன் தன் இளமைப் பொழுதைப் போக்கினார்.

இயற்கையாகவே சித்தார்த்தன் இளகிய மனம் உடையவராக இருந்தார். அவர் யசோதரா என்ற அழகான பெண்ணை மணந்து ராகுலன் என்ற ஆண் குழந்தைக்குக் தந்தையானார். தமது முப்பதாவது வயதில், ஒருநாள் தேரில் ஏறி நகரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார். வெளி உலகை முதன்முதலாகக் கண்டு மகிழ்ந்தார். முதியவர், நோயாளி, மரணமடைந்த ஒருவர் ஆகியோரைக் கண்டு வருந்தினார். துறவி ஒருவரைக் கண்டு மகிழ்ந்தார்.

கௌதமர் முற்றிலும் மனமாற்றமடைந்து அரண்மனைக்குத் திரும்பினார். மனிதகுலம் மூப்பு, நோய், மரணம் இவற்றி-ருந்து விடுபட்டு வாழ ஏதாகிலும் ஒரு வழி தேட முனைந்தார்.

கவலையற்ற சுகபோகமான இளவரசு, வாழ்க்கை அவர் தேடிய நிம்மதியைத் தரவில்லை. இனியும் செயல்படாமல் இருப்பது தவறு என்று எண்ணினார். நடு இரவில் படுக்கையை விட்டு எழுந்து ஒரு கணம் தன் மனைவியையும் மகனையும் நினைத்துப் பார்த்தார். பின் மனித சமுதாயம் உய்ய வகை செய்யும் துறவறம் பூண முனைந்து விட்டார். அரண்மனையை விட்டு வெளியேறி, ஆறு, ஏழு வருடங்கள் அங்கும் இங்கும் அலைந்து தியானத்தில் மனதைச் செலுத்தினார். பெரிய ரிμகளையும், அறிஞர்களையும் சந்தித்துப் பேசினார். ஆனால், மனம் ஒரு நிலை அடையவில்லை. இறுதியில் கயா சென்று ஒரு போதி மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஞானம் பிறந்து கௌதமர் புத்தரானார்.

அங்கிருந்து வாரணாசி, சாரநாத் போன்ற இடங்களுக்குச் சென்று நிர்வாண நிலை அடையும் வழிகளைப் போதித்தார். புத்தர் தான் ஞானம் அடைந்த பின், தன் சீடன் ஆனந்தனுடன் அரண்மனைக்குச் சென்றார். தன் மகன் ராகுலனுக்கும் காஷாயம் (காவி உடை) வழங்கி ஞானோபதேசம் செய்தார். யசோதராவும் துறவற தீட்சை பெற்றாள். நாற்பது வருடங்கள் புத்தர் தன் நெறிகளைப் போதித்தார். தன் 80வது வயதில் இவ்வுலகை நீத்தார்.

புனித நூல்கள்

புத்தர் நூல் எதுவும் எழுதவில்லை. அவரது போதனைகளைச் சீடர்கள் தொகுத்தனர். இத்தொகுப்பு நூல்களுக்கு திரிப்பிடகம் (பிடகம்=பெட்டி) என்று பெயர். இந்து மதத்தில் கீதை எப்படியோ அது போல புத்தமதத்தில் தம்மபதம் அமைந்துள்ளது.

புத்தரின் உபதேசங்கள்

புத்தர் நான்கு அரிய கருத்துக்களைக் கூறியுள்ளார். அவையே புத்தமதத்தின் தலையாய மூலக் கருத்துக்களாகும்.

  1. வாழ்க்கையே துன்பம்: இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் துன்பத்திற்குள்ளாகிறது. பிறப்பு துன்பமயம்; வியாதியோ அதைவிடவும் துன்பம்; நிறைவேறாத ஆசைகள் துன்பம் விளைவிக்கின்றன; நம் மனம் மகிழாத எல்லாச் செயல்களும் துன்பமே.
  2. ஆசையே துன்பத்திற்குக் காரணம் : இந்தக் கருத்து நம் வேத சாரமாகும். அதாவது ஆசையே நம்மைப் பிறப்பிலும் இறப்பிலும் மறுபடியும், மறுபடியும் உழல வைக்கிறது. அழியும் பொருட்களின்மீது நாம் வைக்கும் அழியாத ஆசையே துன்பத்தைத் தருகிறது.
  3. துன்பத்தை நீக்கக் கட்டாயம் வழி காண முடியும் புத்தர் எதிலும் தீயதையே காண்பவர் அல்லர். அதனால் எத்தகைய துன்பங்கள் வாழ்வில் இருந்தபோதிலும், அவற்றைப் போக்கும் வழி உண்டு என்கிறார். நாம் அறிவாலும், நம்மை நாமே உணர்ந்து கொள்வதாலும், பேரானந்த நிலையை அடையலாம் என்பது அவர் கருத்து. மனிதன் நற்குணமுடையவனாய் அறியாமையை நீக்கி ஞானம் உடையவனாய் இருந்தால், துன்பம் இல்லை.
  4. துன்பத்தை நீக்கக் கீழ்க்காணும் எட்டும் முக்கியமானவை:
  1. சரியான பார்வை (ஸம்யக் திருஷ்டி)
  2. சரியான மனோபாவம் (ஸம்யக் பாவம்)
  3. சரியான பேச்சு(ஸம்யக் வாக்கு)
  4. சரியான செயல் (ஸம்யக் கர்மா)
  5. சரியான ஜீவனம் (ஸம்யக் ஜீவனம்)
  6. சரியான முயற்சி (ஸம்யக் ஷ்ரத்தா)
  7. சரியான மனக்குவிப்பு (ஸம்யக் ஏகாக்ரதா)
  8. சரியான எண்ணம் (ஸம்யக் மனஸ்)
பஞ்ச சீலம் (ஐந்து ஒழுக்கம்):
  1. யாருக்கும் தீங்கு செய்யாதிருத்தல் (அஹிம்சை)
  2. பொய் பேசாதிருத்தல் (ஸத்யம்)
  3. திருடமாட்டேன் என்ற முடிவு (அஸ்தேயம்)
  4. உடல் இன்பத்தில் ஈடுபடாதிருத்தல் (பிரம்மச்சர்யம்)
  5. போதைப் பொருட்களைத் தேடாதிருத்தல்

புத்தரின் காலத்தில் இந்துமதம் நலிவடையத் தொடங்கியது. வேதத்தின் தூய கருத்துக்கள் மூடப் பழக்கங்களால் மாசடைந்தன. மக்கள் தங்கள் உலகியலுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே சிறந்த வாழ்க்கை என்று எண்ணினர். இந்துமதக் கலாச்சாரக் கோட்பாடுகள் மக்களுக்குப் பின்பற்றக் கடினமானவையாகத் தோன்றின. சடங்குகள், மந்திரங்கள், தத்துவங்கள் எல்லாம் உபயோகமற்றவையாகக் கருதப்பட்டன. புத்தர் மக்களுடைய கவனத்தைக் கடவுளுக்கு படோடோபமாக பூஜை செய்வதி-ருந்து சாதாரண ஏழை மக்களுக்குத் தொண்டு செய்வதற்கு திருப்பினார். அஹிம்சையை அடித்தளமாகக் கொண்டார். மக்களின் நடைமுறைக்கு உரிய எளிய கருத்துக்களைப் போதித்தார். அதுவே பிற்காலத்தில் முழுமையான தத்துவக் கோட்பாடாக வடிவெடுத்தது.

புத்தர் கடவுள் அல்லது ஆத்மாவைப் பற்றி குறிப்பிடவே இல்லை. உள்மனதைப் பகுத்தறிந்து ஆராய்ச்சி செய்தார். வேதாந்தக் கருத்துக்கள் பலவற்றை ஏற்றுக்கொண்டு, நடைமுறைக்கு உகந்தவாறு எளிதாக்கிப் போதித்தார். அவர் கர்மக்கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு, நிர்வாணம் பெற வழியும் கூறினார். அறநெறித் தூய்மை அதன் அடிப்படையாகும். புத்தமதம் ஓர் அன்பு மதமாகும். ஏராளமான மக்கள் அதைப் பின்பற்றினர். இந்தியாவில் புத்தர் அவதார புருஷராகவே மதிக்கப்படுகிறார். புத்தம் ஷரணம் கச்சாமி (சத்சங்கத்தால் புத்தியைத் தூய்மையாக்கு) சங்கம் ஷரணம் கச்சாமி (சமுதாயப் பணிக்கு புத்தியைப் பயன்படுத்து) தர்மம் ஷரணம் கச்சாமி (அறவழியில் வாழ்ந்து அகிம்சையைப் பின்பற்று) என்ற உறுதிப்பாடுகளே புத்தமதத்தை நிலைபெறச் செய்தன.

ஏழை, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள்பால் புத்தர் கொண்ட ஈடுபாடு; அவர்களுக்குச் செய்த சேவை; ஜாதி, மத பேதமற்ற கோட்பாடு போன்றவையே புத்தரை உலகம் போற்றும் மஹானாக்கின.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன