இளம் பருவக்கதைகள்– I

Print Friendly, PDF & Email
இளம் பருவக்கதைகள்–I

இன்று மட்டுமல்ல, அக்காலத்திலும் கூட ஸ்வாமி தன்னலமற்ற அன்பினையும், அஹிம்சையினையும் போதித்து வந்தார். கொண்டமராஜுவின் புதல்வர்களும் ஒரு மகளும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்ததால் சத்யா சுமார் 20 குழந்தைகளுக்கு நடுவில் வளர்ந்து வந்தார். ஒரு சமயம் தையற்காரர் புக்கப்பட்டினத்திலிருந்து பல நிறமான வண்ணத் துணிகளுடன் உடைகள் தைத்துக் கொடுக்க வந்தார். அனைத்து குழந்தைகளும் அவரவர் தமக்குத் தேவையான துணியைத் தேர்ந்தெடுத்துகொள்ள ஓடி முன்வந்தனர். அப்போது சத்யா ஒருபுறம் ஒதுங்கி நின்றார். அவரது அன்னை, “உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்” என்று வற்புறுத்தும் போது, “அவரவர் தமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளட்டும் எஞ்சிய துணி எனக்குப் போதுமானது” என்று கூறினார்.

ஒரு நாள் சத்யா பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு திரும்பும் சமயத்தில், அவரது நற்குணங்களைக் கண்டு பொறாமையடைந்த சில சக மாணவர்கள் அவரை மண்ணில் கீழே தள்ளினார்கள். அவரது சட்டையைக் கிழித்தனர். கால்களைப் பிடித்து தரதரவென்று இழுத்துச்சென்றனர். ஆனால் சத்யா மனம் குலையாது அமைதியுடன் இருந்தார். இவ்வாறு சக வகுப்பு மாணவர்களால் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டாலும், சத்யா இது பற்றி முறையிட்டதில்லை. குறை கூறியதுமில்லை. அவரது பெற்றோருக்கு அவரது இளம் நண்பர்கள் மூலமாகத்தான் இது தெரியவந்தது.

ஏகாதசித் திருவிழாவன்று சித்ராவதி ஆற்றுப்படுகையில் மாட்டு வண்டிப் பந்தயங்கள் நடத்துவது வழக்கம். அவைகளை வேகமாக ஓடச் செய்ய வாலை முறுக்கியும் சவுக்கால் அடித்தும் தடியால் அடித்தும் துன்புறுத்துவது உண்டு. இந்தப் பந்தயங்களைப் பார்க்கக் கூடாது என்று தம் தோழரை விலக்கி வந்தார். அவரவர் தந்தைமாரிடம் மாடுகளைத் துன்புறுத்தக்கூடாது என்று வற்புறுத்த வேண்டும் என்று கூறிவந்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு சில பக்தர்கள் மாட்டு வண்டிகளில் ஏறிக்கொண்டு பிரசாந்தி நிலயத்திலிருந்து சித்ராவதி ஆற்றின் வழியாகச் செல்லத் தொடங்கினர். ஸ்வாமி அவர்களை அழைத்து “கேளுங்கள், மணல் பகுதி வந்ததும் நீங்கள் கீழே இறங்கி நடக்க வேண்டும். வண்டிகளில் ஏறிக் கொண்டு மாடுகள் உங்கள் சுமையை மணலில் இழுத்துச் செல்ல வைத்து அவற்றைத் துன்புறுத்தாதீர்கள். என்ன புரிகிறதா? என்று பணித்தார். அக்காலத்தில் கிராமங்களில் கோழிச்சண்டைகளும் வழக்கமாக நடைபெற்றன. சேவல்களின் கால்களில் சிறு கத்திகள் கட்டப்பட்டன. அவை ஒன்றோடொன்று ஒரு சேவல் சாகும் வரையில் சண்டையிடும்படி தூண்டபடும். அடுத்த சேவலுக்கும் கணக்கில்லாத காயங்கள் ஏற்படும். சத்யா இத்தகைய களியாட்டங்களை அடியோடு வெறுத்து கடுமையாகக் கண்டித்தார். “நற்செயல்கள் செய்வதில் போட்டியிடுங்கள். இதுபோல் குரூரமான செயல்கள் செய்யவும் கூடாது. அவற்றில் போட்டியும் கூடாது” என்று கூறுவார்.

[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன