திருவிழாவின் உட்கருத்தும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பும்

Print Friendly, PDF & Email

திருவிழாவின் உட்கருத்து

இயேசு கிறிஸ்து அவதரித்த நிகழ்ச்சியைக் குறிப்பதற்காகக் கிறிஸ்துமஸ் விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ‘மாஸ்’ என்றால் கோயில் வழிபாடு. Christmas (கிறிஸ்து மாஸ்) என்றால் கிறிஸ்துவுக்குச் செய்யும் வழிபாடு என்பது பொருளாகும். கிறிஸ்துமஸ் X-mas என்றும் அழைக்கப்படுகிறது. X என்னும் எழுத்து கிரேக்க மொழியில் கிறிஸ்துவினுடைய பெயரின் முதல் எழுத்தாகும். இந்த முதல் எழுத்தான X, கிரேக்க நாட்டில் ஒரு புனிதமான சின்னமாகக் கருதப்படுகிறது.

ஆனந்தமான பாட்டுக்களை பாடுதல், கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிய நாடகங்களை நடித்தல், அலங்காரங்களைச் செய்தல், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் வெகுமதிகளையும் பரிமாறிக் கொள்ளுதல், விருந்துண்ணல் இவை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களாகும். ஆனால் இவைகளில் எதையும் உண்மையான பண்டிகை என்று அழைக்க முடியாது. இயேசு கிறிஸ்து நமது உள்ளங்களில் பிறக்க வேண்டும், அங்கு நிறைய வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து போதித்த ஏதேனும் ஒரு இலட்சியத்தையாவது கடைபிடித்தால்தான் நாம் உண்மையான கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியவர்களாவோம். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை சுயநலமற்ற அன்பும், தொண்டும் நிறைந்ததாகும். மனிதர்கள் சகோதரர்களாக வாழ்ந்து ஒருவருக்கொருவர் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று அவர் கற்பித்தார். அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, ஆண்டவரிடம் நம்பிக்கை என்ற இந்த அருங்குணங்களை மக்களின் மனங்களில் அவர் புகுத்தினார். இயேசு பிறந்தபோது கிழக்குத் திசையில் தீர்க்கதரிசிகளால் பார்க்கப்பட்ட நட்சத்திரம் உண்மையில் நட்சத்திரமன்று. கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்க பெத்லஹெமில் வானத்தை ஒளிரச் செய்து தோன்றிய மிகப்பெரிய சுடரொளிப்பிழம்பாகும். அது தீமை, அறியாமையென்னும் இருளை மக்களின் உள்ளங்களிலிருந்து போக்கி அன்பொளியைப் பரப்பப் போகும் ஆண்டவனுடைய திருமகன் அவதரித்துள்ளார் என்பதைத் தெரிவித்தது. இயேசு மனித குலத்தின் நன்மைக்காக, தம் நலன், பாதுகாப்பு, வாழ்வு இவையனைத்தையும் தியாகம் செய்தார். உண்மையைப் பரப்பும்போது அதிகார வர்க்கத்திலுள்ளவர்களின் விரோதத்தை அவர் சம்பாதித்த போதும் தைரியமாக அதனை ஏற்று எல்லா சூழ்நிலைகளிலும் தான் அரியதெனப் போற்றும் இலட்சியங்களைக் கடைப்பிடித்தார். அகங்காரத்தை அறவே விடுவது செயற்கரியது. இயேசு தம் வாழ்வில் இதனைச் சாதித்தார். நாம் இக்குணங்களுக்காக அவரைப் போற்றுகிறோம்.

இயேசுவின் தாயாரான மேரி மனிதனுடைய இதயத்தைப் பிரதிபலிக்கிறார். கிறிஸ்து இதயத்துள் உண்டாகும் இறைமை இன்பத்தைச் சித்தரிக்கிறார். இதனால் தான் மேரி குழந்தை கிறிஸ்துவைத் தன் மடியில் வைத்துள்ளதாகச் சித்தரிக்கப்படுகிறாள். உத்தமமான இறைமை இன்பம் இதயத்தில் இருக்கிறது என்பது இதன் உட்பொருள். கிறிஸ்து உபதேசித்த நெறிகளைக் கடைப்பிடித்து இறைமை இன்பத்தை அடைவதுதான் கிறிஸ்துமஸ் பண்டிகையின் உண்மையான உட்பொருளாகும்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு

இயேசு பிறப்பதற்கு முன்னால் ரோமப் பேரரசான அகஸ்டஸ் சீஸர் உரோமப் பேரரசின் கீழுள்ள ஒவ்வொரு குடிமகனும் தன் சொந்தக் கிராமத்துக்குச் சென்று தன் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று ஆணையைப் பிறப்பித்தான். ஆகவே தம்பதிகளான ஜோசப்பும் மேரியும் கலிலீ என்னும் இடத்திலுள்ள நாஸரேத் என்னும் நகரத்திலிருந்து டேவிட்டின் நகரமான ஜுடியாவில் உள்ள பெத்லஹெம் என்னும் இடத்திற்கு தம் பெயரைப் பதிவு செய்து கொள்வதற்காகச் சென்றனர். பெத்லஹெமில் தம் பெயரை பதிவு செய்ய வந்த ஜனக்கூட்டம் அதிகமாக இருந்ததால் எல்லாச் சத்திரங்களிலும் இடம் இல்லையென்று சொல்லிவிட்டனர். ஜோசப்பும் மேரியும் ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்தும் அவர்களுக்கு எங்கும் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. முடிவில் ஒரு விடுதிக் காப்பாளர் மேரியின் தளர்ந்த முகத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்டுத் தன் விடுதிக்குப் பின்புறமுள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் அவர்கள் தங்க அனுமதி அளித்தார். மேரியும் ஜோசப்பும் அவர்பால் நன்றியுணர்வு உடையவர்களானார்கள். இரவில் மாடுகளோடு ஓய்வெடுப்பதற்கு எளிய இடமொன்று கிடைத்தது பற்றி மகிழ்வுற்றனர். அன்றிரவு மேரி தன் முதல் மகவை பெற்றெடுத்தாள். மென்மையான இனிமையான பச்சிளங் குழந்தையை மடிப்புகளையுடைய துணிகளால் மிருதுவாகச் சுற்றித் தொழுவத்தில் இருந்த வைக்கோல் மேல் படுக்க வைத்தாள்.

இரவில் பெத்லஹெமுக்கு வெளிப்புறத்திலுள்ள வயல்களில் தம் மந்தைகளைப் பார்த்துக் கொண்டு சில ஆட்டிடையர்கள் ஒரு சிறு நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிட்டியது. அவர்களுக்கு முன் திடீரென ஒரு தேவதூதன் தோன்றினார். அவரது ஒளி சுற்றிலும் பரவியது. முதலில் இதைப் பார்த்ததும் ஆட்டிடையர்கள் பயந்து கொண்டு ஒருவரையொருவர் கட்டிக் கொண்டனர். தேவதூதன் அவர்களிடம் பயப்படாதீர்கள். நல் மக்களுக்குப் பேரானந்தம் அளிக்கவல்ல நற்செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். டேவிட்டின் நகரத்தில் இன்று எல்லா மக்களையும் காக்கும் இரட்சகரான கிறிஸ்து ஆண்டவன் அவதரித்துள்ளார். இந்த அடையாளத்தினால் நீங்கள் அவரைக் கண்டுகொள்ளலாம், பல மடிப்புகளுள்ள துணியால் சுற்றப்பட்டு அத்தெய்வீகக் குழந்தை வைக்கோல் தொழுவத்தில் கிடப்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று கூறினார். திடீரென்று வானத்தில் தேவதைகளின் கூட்டம் தோன்றி, ‘மிக உயர்ந்த நிலையிலுள்ள கடவுளின் மஹிமை விளங்கு வதாக! பூவுலகில் அமைதியும் மக்களிடையே நன்னம்பிக்கையும் ஏற்படட்டும்’ என்று துதி செய்தனர். நாம் பெத்லஹெமுக்கு இப்போதே சென்று தேவதூதன் மூலம் கடவுள் நமக்கு அறிவித்ததை, நேரில் பார்ப்போம் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். அவர்கள் பெத்லஹெம் நகருக்கு விரைந்து பல இடங்களிலும் தேடினர். முடிவில் விடுதிக்கு பின்னுள்ள மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தனர். அங்கு மேரியையும் ஜோசப்பையும் தொழுவத்திலுள்ள குழந்தையையும் பார்த்தனர். அவர்கள் இச்சிறு குழந்தையின் முன் மண்டியிட்டு அடி பணிந்தனர். தமக்கு அறிவிக்கப்பட்ட உண்மையை நேரடியாகப் பார்த்தபின்பு மேரிக்கும் ஜோசப்புக்கும் அதைப்பற்றி தெரிவித்தனர். இறைவனைத் துதி செய்து அவரது தெய்வீகத் திட்டத்தையும் புகழையும் போற்றிய பின்பு அவர்கள் திரும்பினர். இந்த ஆட்டிடையர்கள் சொன்ன தெய்வீக நிகழ்ச்சிகளை மேரி தன் இதயத்துக்குள் பதித்து அதைப் பற்றி நன்கு ஆழ்ந்து யோசனை செய்தாள்.

கிறிஸ்து பெத்லஹெமில் பிறந்தபோது, ஜெருசெலம் என்னும் தலைநகரத்தில் ஹெராடு என்னும் அரசன் ஆண்டு கொண்டிருந்தான். அப்போது, கிழக்குத் திசையிலிருந்து தீர்க்க தரிசிகள், வானத்தில் இதுவரை காணாத பேரொளியொன்றைக் கண்டு, அதை விசாரித்தறிய ஜெருசெலம் வந்தனர். யூதர்கள் அரசனாகப் பிறந்தவன் எங்கிருக்கிறான்? “நாங்கள் கிழக்கில் ஓர் பேரொளியுடைய நட்சத்திரத்தைக் கண்டோம். இந்த நட்சத்திரம் யூதர்களின் அரசன். தெய்வீக புருஷன் (யூத நூல்களில் குறிப்பிட்டபடி) அவதரித்துள்ளார் என்பது தெரியவந்தது. நாங்கள் அவரை வழிபட வந்திருக்கிறோம்” என்று தீர்க்கதரிசிகள் தெரிவித்தனர். அரசன் ஹெராடு இதனைக் கேள்வியுற்றுக் கலங்கினான். அவன் தலைமை குருக்களை அழைத்துப் புனித நூல்கள் கூறும்வண்ணம் கிறிஸ்து எங்கு பிறப்பார் என்று கேட்டான். அவர்கள் ஜுடியாவிலுள்ள பெத்லஹெமில் என்று பதிலளித்தனர். இதுகேட்டு அரசன் ஹெராடு தன் மன அமைதியை இழந்து கோபமுற்றான். தனது அரசநிலையை இழந்து விடுவோமோ என்று பயந்தான். கிழக்குத் திசையிலிருந்து தீர்க்கதரிசிகளை ஈர்த்த இந்த தெய்வீகக் குழந்தை யாராக இருக்கமுடியும் என்று அவன் அதிசயித்தான். இரகசியமாகத் தீர்க்கதரிசிகளை தன்னிடம் அழைத்து “பெத்லஹெமுக்குச் சென்று, தெய்வீகக் குழந்தையினை முயன்று தேடுங்கள். நீங்கள் அக்குழந்தையைக் கண்டு பிடித்த பின்பு எனக்குச் சொல்லியனுப்புங்கள். நானும் அந்த தெய்வீகக் குழந்தையை வழிபடுகிறேன்” என்று வஞ்சகமாகக் கூறினான்.

அரசன் சொன்னதைக் கேட்ட தீர்க்கதரிசிகள் ஒட்டகங்கள் மீதேறிப் புறப்பட்டனர். தாம் கிழக்கில் பார்த்த பேரொளியை மீண்டும் கண்டு ஆனந்தம் கொண்டனர். அதைப் பின்பற்றிச் சென்றனர். இறுதியில் கிறிஸ்து பிறந்த இடத்தில் அவ்வொளி நின்றது. மாட்டுத் தொழுவத்தில் நுழைந்து அன்னையுடன் இருந்த தெய்வீகக் குழந்தையைக் கண்டு கீழே விழுந்து வணங்கினர். பிறகு தாம் கொண்டு வந்த பொருள்களைக் குழந்தைக்குச் சமர்ப்பித்தனர். தங்க நாணயங்கள் நிறைந்த ஒரு சிறுபெட்டி, வாசைன நிறைந்த தூபப் பொடிகள் அடங்கிய நேர்த்தியாகச் செய்யப்பட்ட ஒரு பெட்டி, உடல் மேல் பூசுவதற்கு சாம்பிராணித் தைலம் அடங்கிய ஒரு ஜாடி இவற்றை அக்குழந்தைக்குச் சமர்ப்பித்தனர்.

இறைவன் இத்தீர்க்கதரிசிகளின் கனவில் தோன்றி அவர்கள் ஹெராடிடம் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தார். அதனால் அவர்கள் இன்னொரு வழியாகத் தம் நாட்டுக்குச் சென்று விட்டனர். அவர்கள் புறப்பட்டதும் ஜோசப்பின் கனவில் ஒரு தேவதூதன் தோன்றி “விழித்தெழுந்து இவ்விளங்குழந்தையையும் அதன் தாயாரையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்கு ஓடிவிடுங்கள். நான் மறுபடியும் உங்களிடம் சொல்லும் வரை அங்கேயே தங்கி இருங்கள். ஏனெனில், இந்த இளங்குழந்தையைக் கொல்வதற்காக ஹெராடு தேடி வருவான்” என்று சொன்னார். ஜோசப் விழித்தெழுந்ததும் தம் கனவை மேரியிடம் கூறினார். அவர்கள் விரைவாகத் தம் பொருள்களைக் கட்டிக் கொண்டனர். மேரி சிறு கழுதையின் மேல் உட்கார்ந்து, துணிகளால் நன்கு சுற்றப்பட்ட இளங்குழந்தையைத் தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டாள். இரவிலேயே தென் திசையிலுள்ள எகிப்தை நோக்கித் தனித்த வழியில் அவர்கள் புறப்பட்டனர்.

பல நாட்கள் கழிந்தன. தான் தீர்க்க தரிசிகளால் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டு ஹெராடு பெருங்கோபங் கொண்டான். “ஒரு சிறு குழந்தையால் என் அரசு கவிழ்வதை நான் அனுமதிக்கமாட்டேன்” என்று குதித்தான். பெத்லஹெமிலும், சுற்றிலுமுள்ள கடற்கரையிலும் பிறந்துள்ள இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தான்.

ஹெராடு இறந்ததும் எகிப்திலுள்ள ஜோசப்பின் கனவில் மீண்டும் தேவதூதன் தோன்றி, “இப்போது இந்தக் குழந்தையையும் தாயாரையும் அழைத்துக் கொண்டு இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லுங்கள்” என்று அறிவித்தார்.

ஆகவே, இச்சிறு குடும்பம் மறுபடியும் பாலைவனத்தின் வழியாகத் தனித்த வழியில் இஸ்ரேல் நாட்டுக்குத் திரும்பியது. குழந்தை பத்திரமாக இருந்ததைக் கண்டு மேரியும் ஜோசப்பும் ஆனந்தம் கொண்டனர். அவர்கள் கலிலீயிலுள்ள நாஸரேத் நகரிலுள்ள தம் வீட்டிற்குத் திரும்பி வாழத் தொடங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன