தேஶாந்தராகத

Print Friendly, PDF & Email
தேஸாந்தராகத
கேட்பொலி
வரிகள்
  • தேஶாந்தராகத புதாஸ்தவ திவ்ய மூர்த்திம்
  • ஸந்தர்ஶனாபிரதி ஸம்யுத சித்தவ்ருத்யா
  • வேதோக்த மந்த்ர படனேன லஸந்த்யஜஸ்த்ரம்
  • ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவஸுப்ரபாதம்
விளக்கவுரை

உலகின் பல பாகங்களிலிருந்து வந்த அறிஞர்கள் உங்களுடைய தெய்வீகமான திருவுருவத்தை நன்கு தரிசிப்பதில் மிக்க விருப்பமுடன் கூடிய உள்ளப்பாங்கு உடையவர்களாய் வேதங்களில் சொல்லப்பட்ட மந்திரங்களை உச்சரிப்பதில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கிறார்கள். உங்களுக்குக் காலைப் பொழுது மங்களகரமானதாக இருக்கட்டும்.

பதவுரை
தேஶாந்தர வெளிதேசங்களிலிருந்து(அல்லது) தேசத்தின் பலபாகங்களிலிருந்து
ஆகத வந்த
புதா: அறிஞர்கள்
தவ உன்னுடைய
திவ்ய தெய்வீகமான
மூர்த்திம் திருவுருவத்தை
ஸம் நன்கு
தர்ஶன தரிசிப்பதில்
அபிரதி மிக்க விருப்பம்
ஸம்யுத உடன் கூடிய
சித்தவ்ருத்யா உள்ளப்பாங்கு உடையவர்களாய்
வேத வேதங்களில்
உக்த சொல்லப்பட்ட
மந்த்ர மந்திரங்களை
படனேன படிப்பதில்
லஸந்தி ஈடுபட்டிருக்கிறார்கள்
அஜஸ்த்ரம் எப்பொழுதும்
தேசாந்தராகத

இந்த ஆறாவது பாடல் ஸ்வாத்யாயத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. ஸ்வாத்யாயம் என்பது வேத நூல்களைப் படிப்பதாகும். இந்தப் பாடல் வேதத்தின் மேன்மையை விளக்குகிறது. உண்மையை அறியும் தாகம் வருகிற போது பக்தன், இறை நூல்களான வேதம், உபநிஷதம், கீதை ஆகியவற்றைப் படித்து மகிழ்கிறான். இவற்றை மனிதர்கள் எழுதுவதில்லை. இவையெல்லாம் ரிஷிகளின் மௌன நிலையில் கேட்கப்பட்டவை. இவற்றை முனிவர்கள் யோக நிலையில் அறிந்தார்கள். இந்த மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதால் மிக உயர்ந்த விழிப்புணர்ச்சியை உண்டாக்குவதை முனிவர்கள் கண்டார்கள். ஆகவே இவை தெய்வீகப் பாதையில் நடக்கும் போது அவர்களுக்குக் காப்பாகவும் நல் அனுபவமாகவும் இருந்தன. கீதை, உபநிஷதம், இவற்றைக் கற்றதால் தெளிவும் புத்திக் கூர்மையும் கிட்டின. இறையைத் தேடுகிறவர் குருவின் வார்த்தையின் புனிதத்தைத் தெரிந்து தவத்தில் முன்னேறுவார்கள். இவை விரைந்து இறையைக் காட்டின. இந்தப் பயணம் “விஞ்ஞானமய கோசம்” அல்லது அறிவின் மேன்மையில் அவனது உள்ளுணர்வைத் தூண்டுகிறது. அதாவது “நான் யார்” நான் எங்கே போகிறேன்? யார் கடவுள்? அவர் எங்கே இருக்கின்றார்? என்ற வினாக்களைத் தானே எழுப்பிக் கொண்டு ஒருவன் இறைவனைத் தேடுகிறான். “நமது சாதனையில் முக்கால் பாகம் இது போன்ற ஆத்ம விசாரமாக இருக்க வேண்டும்” என பாபா கூறுகிறார். இந்தக் கேள்விகளை எழுப்பிக் கொண்டு தவத்தில் ஈடுபட மேலும் மேலும் குரு நம்மைத் தூண்டுகிறார்.

அராவசுவின் நற்பண்புகள்

“உபாக்யானங்கள்” என்று போற்றப் பெறும் உவமையோடு கூடிய பலப்பல கதைகள் மஹாபாரதத்தில் நிறைந்து உள்ளன. அவற்றிலிருந்து ஒருவன் கணக்கற்ற நீதி நெறிகளை அறிந்து கொள்ள இயலும். கானகத்தில் வசித்த போது பாண்டவர்கள் வரிசையாக பல புண்ணிய நதிகளையும் முனிவர்களின் குடில்களையும் கண்டு வந்தனர். அவை ஒவ்வொன்றும் உட்பொருளோடு கூடிய வரலாற்று நிகழ்சிகளை ஒட்டி, பெருமை பெற்றிருந்தன. அது போன்ற ஒரு குடில், கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த முனிவர் ‘ரைப்யருடையது’.

அந்த முனிவருக்கு “பராவசு” “அராவசு” என்று இரண்டு புதல்வர்கள் இருந்தனர். அவர்களிருவருமே சாஸ்திரங்கள் பல கற்று அவற்றில் தேர்ந்து விளங்கினர். ஒரு முறை அரசன் ப்ரத்யும்னன் ஆற்றி வந்த வேள்வியில் பங்கேற்று நடத்திக் கொடுக்க முனிவர் ரைப்யர் தம் புதல்வர்களை அனுப்பினார். தந்தையரது கட்டளைப்படி இருவரும் அரசனது அரண்மனையை அடைந்தனர்.

ஒரு நாள் பராவசு தன் தந்தையாரின் குடிலுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது இரவு நேரம். ஒரு மரத்தடியில் பெரிய காட்டு விலங்கொன்று பதுங்கிப் பதுங்கிச் செல்வது போல அவன் கண்களுக்குத் தெரிந்தது. உடனே அம்பு எய்து அதைக் கொன்று விட்டான். ஆனால் அது இறந்து விழுந்த போது எழுப்பிய ஒலிகேட்டு நடுநடுங்கிப் போனான். ஏனெனில் அவன் கொன்றது அவன் தந்தையாரையே. உடனே விரைந்து ஈமக்கடன்களுக்கு ஆவன செய்து முடித்துத் தந்தையைத் தகனம் செய்து விட்டு மீண்டும் அரண்மனைக்குத் திரும்பினான்.

அங்கு தன் தம்பி அராவசுவிடம் எதிர்பாராது நிகழ்ந்து விட்டத் துயர நிகழ்ச்சியை விவரித்துக் கூறினான். “அரசனின் கேள்வியை மேற்பார்வையிட்டு நடத்திக் கொண்டிருந்த போது நம் பாதையில் துயர நிகழ்ச்சி ஏற்பட்டிருக்கக் கூடாது. இன்னும் சில காரியங்கள் இறந்து விட்ட நம் தந்தையாருக்காக நாம் செய்ய வேண்டியிருக்கிறது. சிறுவனான உன்னால் தனியாக நின்று இந்த யாகத்தை நடத்த முடியாது. அதனால் நீ மறுபடி நம் குடிலுக்குச் சென்று தந்தையாரது ஈமக் கடனை என் சார்பிலும், செய்து முடித்து விட்டுப் பிறகு மீண்டும் இங்கு என் உதவிக்கு வா. மேலும், நான் தலைமை சாஸ்திரியாக இருந்து யக்ஞத்தை நடத்துவதால் நான் இறுதிக் கடன் செய்ய முடியாது” என்று தம்பியிடம் கூறினான் பராவசு.

அராவசு தன் தமையனின் கட்டளையைத் தலைமேல் தாங்கி தன் தந்தையாரது குடிலுக்குச் சென்றான். அவன் தூய்மையான உள்ளம் பெற்றவன். அவனுடைய ஒரே குறிக்கோள் தனக்கு கிடைக்க பெற்ற பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பது ஒன்று தான். எந்த செயலைச் செய்தாலும் முழு மனதோடு ஒன்றிச் செய்து வந்தான் அவன். இத்தகைய உண்மை உள்ளம் பெற்ற பண்பு, அவனது முகத்தில் எதிரொலித்தது. ஒரு தனி ஒளி வீசியது.

பராவசு தன் தம்பியின் ஒளி மிகுந்த வதனத்தைக் கூர்ந்து கவனித்தான். தம்பியின் ஞானச் சுடர் வீசும் முகமானது அவனைத் திடீரென ஒரு பொறாமை உணர்வு ஆட்கொண்டு அலைக்கழிக்க தொடங்கியது. அடுத்த கணமே அவனது அறிவு குரூரமாக வேலை செய்தது. அதன் விளைவாக அவன் கூடி இருந்தவர்களிடம் “பாருங்கள், இந்த மனிதன் ஒரு அந்தணனைக் கொன்று விட்டான். அதனால் அவனை, புனிதமான யக்ஞம் நடக்கும் எல்லை யில் நுழைய விடக் கூடாது” என்று உரக்கக் கத்தினான்.

அண்ணனின் இந்தக் கட்டளையைக் கேட்டவுடன் அராவசுவிற்கு ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது. அவனால் அண்ணனது நடத்தையைப் புரிந்து கொள்ளவே இயலவில்லை. சுற்றிலும் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் ஏதோ கொலைக் குற்றம் புரிந்து விட்டு வந்த ஒரு குற்றவாளி போல அவனை வெறித்து நோக்கினர். தன்னுடைய குற்றமற்ற தன்மையை அவர்களுக்கு எப்படி விளக்கிக் கூறுவது என்று தெரியாமல் தவித்தான். பிறகு அவன் துணிவாக முன் வந்து “ஓ பெரியோர்களே! தயவு செய்து நான் கூறுவதை உன்னித்துக் கேளுங்கள். நான் உண்மையைக் கூறுகிறேன். இவன் என்னுடைய தமையன். இவன் தான் உண்மையில் எங்கள் தந்தையாரைக் கொன்றவன். யக்ஞத்தை மேற்பார்த்து நடத்த வேண்டியுள்ளதால் தந்தையாருக்குரிய ஈமக் கடனை அவன் சார்பில் ஆற்ற என்னை இவன் பணித்து அனுப்பினான்” என்று கூறினான்.

குழுமியிருந்த அனைவரும் அராவசுவின் பேச்சை நம்பாமல் எள்ளி நகையாடினர். அவனது கூற்று நிலைமையை பின்னும் மோசமாகிவிட்டது. கூட்டத்தினர் அவனைப் பார்த்து ஒருவன் செய்த குற்றத்தை அவனுக்குப் பதிலாக தான் ஏற்று செயல்புரிய யாராவது முன் வருவார்களா? என்று இகழ்ந்து உரைத்தனர். தெய்வத் தன்மை பொருந்திய அராவசு தவறாகக் குற்றம் சாட்டப்பட்டதோடு நில்லாமல் “பொய்” பேசுகிறான் என்று வேறு பழி சுமத்தப் பட்டான். வாய்மையே மூச்சாக கொண்டுள்ள தூய உள்ளம் படைத்துள்ள அவனுக்கு இத்தகைய துன்பங் கள் தாங்கொணாததாக இருந்தன. அவன் மேலும் அங்கு தங்க பொறுமை அற்றவனாய், திரும்பி காட்டுக்குச் சென்று கடுந்தவம் செய்யலானான்.

தெய்வங்கள் அவனது கொடிய தவத்தினைக் கண்டு மனமிளகி, அவன் முன் தோன்றி அவனது விருப்பத்தைக் கூறும்படிக் கேட்டனர். அப்போது சில காலம் அவன் ஆற்றிய கடுமையான தவத்தின் வலிமையும், ஆழ்ந்த தியானமும், அவனது கோபத்தையும் பழி வாங்கும் உணர்வையும் ஆற்றி விட்டிருந்தன. அதனால் அவன் தன் தந்தையாரது உயிரை மீண்டும் தரும்படியும், அண்ணன் மனம் மாறி நல்லவனாகத் திருந்த வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டான். இங்ஙனம் அவன் கேட்டது தமையனின் நலத்திற்காக மட்டுமல்லாமல் தான் துன்புற்றது போல் மற்றவர்களும் அவனால் துன்புறக் கூடாதே என்ற எண்ணத்தில் தான்.

பராவசு, அராவசு, கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள். ஆனால், பராவசு குரூரமான எண்ணங்களாலும் பொறாமை உணர்வாலும் அலைக்கழிக்கப்பட்டான். நல்லொழுக்கங்கள் நிறைந்த அராவசு அன்பான இதயமும், மற்றவர்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் தன்மையும் பெற்றிருந்தான். வெறும் படிப்பு மட்டும் ஒருவனைச் சான்றோனாக்க முடியாது என்பது இதனால் தெரிகிறதல்லவா? செழுமையான நல்லெண்ணங்களும் சொற்களும், செயல்களுமே மேன்மையைத் தரவல்லன.

அனுபவ அறிவு புத்தகத்தால் வருவதில்லை

டாப்ரிஸ் (TABRIZ) என்று பார்ஸிய முனிவர் ஒரு நாள், தனது நண்பர் மௌலானா ருமி என்ற தத்துவப் பேராசிரியரைக் காணச் சென்றார். வழக்கம் போல பேராசிரியர் ஒரு குட்டையின் அருகே அமர்ந்து தன் வசமிருந்த கையெழுத்துப் பிரதியைப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். டாப்ரிஸ் முனிவர் “நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்” என்று கேட்டார். மௌலானா ருமி சொன்னார் “ஓ” உனக்கு இது புரியாது. இது ஒரு ஆழ்ந்த தெய்வீக மெய்மையைச் சொல்லுகின்ற ஒன்று. நீர் சிறந்த புத்திசாலியாக இருந்தாலன்றி இந்த வேதம் பற்றி புரிந்து கொள்ள முடியாது” என்றார். டாப்ரிஸ் ஒன்றும் சொல்லாமல் சிரித்தார். டாப்ரிஸ் கொஞ்சம் முன் வந்து மௌலானா ருமி கையிலிருந்த பிரதியை வாங்கி “தெய்வீக அறிவு என்பது புத்தகத்தில் இல்லை. இதை அறிவாய் நண்பனே” என்று சொல்லி குட்டையில் எறிந்தார். மௌலானா ருமி இதைக் கண்டு அதிர்ந்தார். ஆனால் கோபப்படவில்லை. அவர் சோகச் சிரிப்போடு சொன்னார். “நீர் என்ன செய்து விட்டீர்? அறியாத பக்கிரி” என்றார். “இந்த மென்மையான பிரதியை இழந்ததின் மூலம், இந்த உலகம் பெரிதும் வருந்தும் என்பதை நீர் என்றும் அறியப் போவதில்லை” என்றார்.

டாப்ரிஸ் சிரித்துக் கொண்டு, நீரில் கையை விட்டு அந்த பிரதியை எவ்வித பாதகம் இல்லாத நிலையில் எடுத்துச் சொன்னார். “மௌலானா! சிறு பிள்ளை, விளையாட்டுப் பொருளை இழந்து தவிப்பது போல நீர் மனம் கலங்க வேண்டாம்” என்று சொல்லி, அந்த பிரதியை எடுத்தார்.

மௌலானா நடந்ததைப் பார்த்து அதிர்ந்தார். இப்போது டாப்ரிஸ் பக்கம் இறைவனின் சக்தி இருப்பதைப் பார்த்தார். அதாவது அந்தப் பிரதி தண்ணீரில் நனையவில்லை. உண்மை அறிவு என்பது எது என்பதை இப்போது இறைவன் உணர்த்தியதாக மௌலானா தெரிந்து கொண்டார். இந்தப் புத்தகத்தை எறிந்தது என்பது அவரை முழுவதும் மாற்றியது. இப்போது மௌலானாவுக்கு டாப்ரிஸ் நெருக்கமானவரானார். அவருக்கு உள்ளொளி ஏற்பட்டது. பார்ஸியின் புகழ் வாய்ந்த முனிவருள் ஒருவராக டாப்ரிஸ் ஆனார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன