தெய்வீக வாழ்க்கை நிகழ்வுகள்

Print Friendly, PDF & Email
பகவான் ஸ்ரீ சத்ய ஸாயி அஷ்டோத்திர ஸதநாமாவளி
பிரிவு -1- நாமாவளிகள் -1- 27
முகவுரை

பாபா கூறுகிறார் “கடவுளின் நாமத்தை உன் நாவிலும், உருவத்தை கண்களிலும், புகழை இதயத்திலும் வைத்திரு. பிறகு இடி கூட உன்னை இதமாக தாண்டிச் செல்லும்.

சாயியின் நாமத்தையும் புகழையும் கொண்டுள்ளது சத்ய சாயி அஷ்டோத்திரம்.

இது ஏன் 108 (அல்லது) 1008 தடவை சொல்ல பரிந்துரைக்கப்படுகிறது ?

இதை நீண்ட நேரம் உரக்கக் கூறுவது கடவுளை மகிழ்விப்பதற்காக அல்ல. 108 (அல்லது) 1008 முறை உச்சரிக்கும்போது ஒரு தடவையாவது உள்ளார்ந்த பக்தியுடன் சொல்வதற்கு வாய்ப்புள்ளது அல்லவா? எந்நேரமும் விழிப்புடன் இருக்கும் கடவுள், நாம் பக்தியுடன் உச்சரிக்கும் அந்த ஒரு முறையைக் கேட்டு மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

இறைவனின் நாமங்களை உச்சரிக்கும் போது ஏன் 108 அல்லது 1008 முறைக் கூறுகிறோம்?

108 மற்றும் 1008 இல் உள்ள ஒன்று மற்றும் எட்டு ஆகிய இரு எண்களின் கூட்டுத்தொகை ஒன்பது. இந்த ஒன்பது என்பது தெய்வீகமான எண், பரபிரம்மத்தைக் குறிப்பது. ஏனெனில், அது நிலையான எண். ஒன்பது என்ற எண்ணை எப்படிப் பெருக்கினாலும் அதன் கூட்டுத்தொகை ஒன்பது மட்டுமே.

9×12=108:8+1=9

9×8=72:7+2=9

9×5=45:4+5=9

ஓம்காரம் உணர்த்தும் தத்துவம்:

பிரபஞ்சத்தின் இதயத்திலும் உன்னுடைய இதயத்திலும் எதிரொலிக்கின்ற ஓம் என்ற ஆதிமுதல் பிரணவத்தை உற்றுக்கேள் என்கிறார் பகவான்.

அநாதி காலத்தில் பிரம்மமே இருந்தது. தலை சிறந்த பேரமைதியின் தன்மையதாக இருந்தது. அவ்வொப்பற்ற பேரமைதியில் இருந்து, இறைவனின் வாக்காகவும் ஒலி அம்சமாகவும் நாதப் பிரம்மம் தோன்றியது. அதுவே முதல் ஒலி. அதுவே ஓம்காரம். முதல் ஒலியில் இருந்து, ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய பஞ்ச பூதங்களினால் ஆன படைப்பு முழுவதும் வெளிப்பட்டது. மேலும், ஓம்காரம் படைப்பு முழுவதும் ஊடுருவியுள்ளது. அது, படைப்பின் உயிர்த்தத்துவமாகும். அதனால்தான், பிராணனின் ஊடே இருப்பது, எல்லா உயிரிலும் பரவியிருப்பது என்னும் பொருள்பட பிரணவம் என்பது ஓம்காரம் என்று அழைக்கப்படுகிறது.

ஓம்காரம் கடவுளின் எந்த நாமத்தையும், ரூபத்தையும் உள்ளடக்கியது. ரயில் இன்ஜினுடன் இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் வேகமாக முன்னேறிச் செல்வது போல, ஓம்காரத்துடன் சேர்த்துச் சொல்லும் எந்த நாமம் அல்லது மந்திரத்தின் சக்தியும் பன்மடங்கு அதிகரிக்கிறது.

1. ஓம் ஸ்ரீ பகவான் ஸத்ய ஸாயி பாபாய நம:

நமக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கிற பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவுக்கு வணக்கம்.

ஸ்ரீ – தெய்வத்தின் பெருமை அல்லது மதிப்பு

சத்ய – உண்மை, எல்லோரிடமும் உள்ளே உறையும் உண்மை- கடவுள்

சாயி பாபா -ஸா -சர்வேஸ்வரன் / கடவுள் + ஆயி – தாய் + பாபா -தந்தை

பிரபஞ்சத்தின் தெய்வீகத் தாய் மற்றும் தந்தை., பிரபஞ்சத்தின் ஆதாரமும், பிரபஞ்சத்தை நிலை நிறுத்துபவரும் ஆகிய பகவான்.

நமஹ -பணிவான வணக்கம். கையைக் கூப்பி செய்யும் இந்த வெளிப்புறமான அர்ப்பணிப்பின் உட்பொருளாவது, ஐந்து ஞானேந்திரியங்களையும், ஐந்து கர்மேந்திரங்களையும், நான், எனது, எண்ணம், சொல், செயல் ஆகிய அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம் என்பதாகும்.

உள்ளிருக்கும் சரணாகதி தத்துவத்தை வெளிக் கொண்டு வரும் செயல்

2. ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்ய ஸ்வரூபாய நம:

சத்திய வடிவினனான ஸ்ரீ ஸாயிக்கு வணக்கம். ஸ்வரூபம் – வடிவம். சத்திய வடிவில் உள்ள கடவுள். இவர் ஈஸ்வரம்மா, பெத்த வெங்கப்ப ராஜு பெற்றோருக்கு நவம்பர் மாதம் 23ம் தேதி 1926ம் ஆண்டில் பிறந்தார். (அவதரித்தார்). ஒரு நாள் ஈஸ்வரம்மா கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கையில் வானத்திலிருந்து ஒரு தெய்வீக ஒளி அவர் உடலுக்குள் நுழைந்தது. உடனே அவர் தான் ஒரு தெய்வீகக் குழந்தையை பெற்றெடுக்கப் போகிறோம் என்பதை உணர்ந்தார். தெய்வீகக் குழந்தையின் வரவைக் குறிக்கும் மற்ற அறிகுறிகளாக, வீட்டில் இருக்கும் இசைக் கருவிகள் தாமாகவே இரவில் இயங்கத் தொடங்கின. நவம்பர் 23. 1926 அன்று பெத்த வெங்கப்ப ராஜுவின் தாயார் லஷ்மம்மா விடியற்காலையிலேயே சத்ய நாராயண பூஜை செய்வதற்காகச் சென்றார். பூஜை முடிந்து பிரசாதத்தையும் பூவையும் ஈஸ்வரம்மாவிற்கு கொடுத்தார். சிறிது நேரத்திலேயே பகவான் பிறந்தார். சத்ய நாராயணன் என்று பெயரிட்டனர். அவருடைய இடது கன்னத்தில் ஒரு சிறு மரு இருந்தது. தெய்வீகக் குறியீடாக அவருடைய உள்ளங்காலில் சங்கும் சக்கரமும் காணப்பட்டது.

அவரை அறையின் ஓரமாக ஒரு விரிப்பில் படுக்க வைத்திருந்தார்கள். சிறிது நேரம் சென்று பார்க்கும் போது அவரது விரிப்பின் கீழ் ஒரு நாகம் காணப்பட்டது.

3. ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்ய ஸ்வரூபாய நம:

சத்தியத்திலும் தர்மத்திலுமே ஈடுபட்டிருப்பவருக்கு வணக்கம். சத்யம் – உண்மை : தர்மம் – நன்னடத்தை: பராயணாய – ஈடுபட்டிருத்தல் உலகில் உண்மை, நன்னடத்தை, அமைதி மற்றும் அன்பு ஆகிய மனித தத்துவங்களை நிலைநிறுத்த பாபா அவதாித்தார்.

குழந்தை பருவத்திலேயே சத்யா, தன் நண்பர்களுக்கு சத்தியம், தர்மம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை போதித்தார். அவர் கூறினார் “எந்த சூழ்நிலையிலும் உங்கள் தினசரி வாழ்க்கையில் சத்தியத்தின் பாதையிலிருந்து தவறி விடாதீர்கள். உண்மை அல்லாததை பேசாதீர்கள். சத்தியத்தை விட சக்தி வாய்ந்தது வேறு எதுவுமில்லை. சத்தியம் ஒன்றே உங்களை காப்பாற்றும்.”

பகவான் பாபா ஒழுங்கு முறை மற்றும் நல்லொழுக்கத்தின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். அவர் கூறுகிறார் “கல்வியின் முடிவு நல்லொழுக்கமே ஆகும்”. அவர் பிரசாந்தி நிலையத்தில் பள்ளிக்கூடங்கள், கல்லூாிகள், மற்றும் பல்கலைகழகமும் நிறுவியிருக்கிறார். இங்கு மாணவ மாணவிகள் கல்வியில் சிறப்புற்றிருக்கும் திறமையோடு மட்டுமல்லாமல். தன்னைப் பற்றிய அறிவு, தன்னம்பிக்கையும் பெறுகிறார்கள். தெய்வீக விழிப்புணர்வு பெற்று சமுதாயத்திற்கும், தனி மனிதனுக்கும் ஒரு உதாரணமாக திகழ்கிறார்கள்.

4. ஓம் ஸ்ரீ ஸாயி வரதாய நம:

வரங்களைக் கொடுப்பவருக்கு வணக்கம். வர – வரம்: தாய – அளிப்பவர்/கொடுப்பவர் சத்யா தனது பிள்ளை பருவத்தில் ஒரு வெற்றுப் பையிலிருந்து தனது நண்பர்களுக்கு மிட்டாய், பென்சில் போன்ற பொருள்களை கொடுப்பார். சில சமயம் சிறுவன் சத்யா தனது நண்பர்களை சிறு குன்றின் மேல் அமைந்த ஒரு புளிய மரத்தடிக்கு அழைத்துச் சென்று நண்பர்களுக்கு பிடித்த பழங்களை அவர்கள்கேட்டது போல் அந்த மரத்திலிருந்து பறித்துக் கொடுப்பார். அவர்கள் கேட்கும் பழங்கள் அச்சமயத்தில் விளையும் பருவமாக இல்லாமல் இருந்த போதிலும் அவர்கள் கேட்ட பழங்களை கொடுப்பார். அந்த புளிய மரம் தான் பிற்காலத்தில் “கற்பக விருக்ஷம்” (விரும்பியதை அளிக்கும் மரம்) என பிரபலமாகியது.

நாட்கள் செல்லச் செல்ல மனிதர்கள் பெரிய ஆசைகளுடனும், பிரச்சனைகளுடனும் வரத் தொடங்கினார்கள். அவர்கள் கேட்ட வரங்களை எல்லாம் ஸ்வாமி அளித்தார். ஸ்வாமி தனது சொற்பொழிவுகளின் மூலமாகவும், தூய கல்வி நிலையங்களின் மூலமாகவும், மற்றும் எழுத்துக்கள் மூலமாகவும் அறிவு என்னும் மிக உயர்ந்த வரத்தை நமக்கு அளித்துள்ளார்.

ஒரு சமயம் பாபாவின் கல்லூாியில் படித்த மாணவன் நேர்முகத் தேர்விற்காக ஒரு அலுவலகத்தில் அதிகாாிகளின் முன் அமர்ந்நிருந்தான். ஒரு அதிகாரி அவனிடம் “உன் சாயிபாபா அனைவருக்கும் கை கடிகாரம், மோதிரம், செயின் எல்லாம் கொடுப்பார் என்று நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். உனக்கு என்ன கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார். அந்த மாணவன் புன்சிரிப்புடன் பதிலளித்தான்.” சார், நான் ஒரு ஏழ்மையான கிராமத்தை சேர்ந்தவன். இன்று இப்படி ஒரு மதிப்பிற்கு உாிய வேலைக்காக உங்களை போன்ற உயர்ந்த அதிகாாிகளின்முன்னால் உட்கார்ந்து இருக்கிறேன். இதை விட உயர்ந்த பாிசு சாயிபாபாவிடமிருந்து நான் என்ன கேட்க முடியும்?. முன்னமேயே முற்றிலும் இலவசமாக கல்வி என்னும் பரிசு எனக்கு அளித்துள்ளாரே” என்றான்.

5. ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்புருஷாய நம:

என்றும் நிரந்தரமான சாயிக்கு /ஆத்மாவுக்கு வணக்கம். சத் – நிரந்தரமான , மாறாத உண்மை : புருஷ – மிக உயர்ந்தவன்/ஆத்மன் கலியுகத்தில் மனித வடிவில் வந்திருக்கும் கடவுள் தான் சாயி. பகவத்கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார் – “தர்ம ஸம்ஸ்தாபனார்த்தா யா ஸம்பவாமி யுகே யுகே” (தர்மத்தை நிலைநாட்டுவதற்காக நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிப்பேன்) சிறுவன் சத்யா தனது பாட்டனார் திரு. கொண்டமராஜூவுடன் வசித்து வந்தார். சத்யா உறங்குகையில் தனது தெய்வீகத்தை வெளிப்படுத்தும் படியாக அவருடைய மூச்சுக் காற்றிலிருந்து ஓம்கார நாதத்தை கேட்டு அவர் ஆச்சரியப்பட்டார் . இன்னும் சில தருணங்களில் அவர் சுவாசிக்கும் போது “ஸோஹம்” என்ற ஒலி வருவதையும் கேட்டார்.

6. ஓம் ஸ்ரீ ஸாயி ஸத்ய குணாத்மனே நம:

என்றும் மாறாத கல்யாண குணங்களின் வடிவத்திற்கு வணக்கம். சத்ய – முக்காலத்திலும் மாறாதது: குண – கல்யாண குணங்களின்: ஆத்மனே – வடிவத்திற்கு ஒரு சமயம் மழைகாலத்தில் மும்பையிலிருக்கும் தர்மஷேத்திரத்திற்கு ஸ்வாமி வருகை தந்திருந்தார். மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் துவங்க இருந்தது. 5.15 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கனத்த மழை வந்தால் கூட்டம் தடைபடுமோ என்று அனைவரும் பயந்தனர். அலுவலக நிர்வாகிகள் சிலர் கூட்டத்தை சிறிது முன்னமேயே தொடங்கலாமா என்று யோசித்தனர். திரு.இந்துலால் ஷா அவர்கள் சுவாமியிடம், கூட்டத்தை சற்று முன்னாள் ஆரம்பிக்கலாமா? என்று வினவினார். ”ஏன்” என்றார் பாபா.

இந்துலால் அவர்கள் “பாபா! மழை வரும் போல் இருக்கிறது. இதனால் கூட்டம் தடைபடலாம். பக்தர்கள் அவதியுறலாம்” என்றார்.

பாபா முறுவலித்தார். இந்துலால் அவர்களின் கையைப் பற்றி ஜன்னல் அருகே அழைத்துச் சென்று மழை தொடங்கி விட்டது என்பதை காண்பித்தார்.

மேலும் பாபா கூறினார் “ஆம். மழை பெய்யும். கனத்த மழை பெய்யும்” பிறகு பாபா ஜன்னலருகே சென்று தன் இரு கரங்களையும் வெளியே உயர்த்திக் காட்டினார். ஒரே நொடியில் தூரல் நின்று கருமேகங்களும் காணாமல் போயின. குறித்த நேரத்தில் கூட்டம் தொடங்கியது. பாபா இறை அவதாரம் என்பதையும், பஞ்ச பூதங்கள் அவருடைய ஆளுகைக்குள் உள்ளன என்பதையும் கணப்பொழுதிற்கு மறந்ததை இந்துலால் ஷா உணர்ந்தார். பாபா அனைத்து சக்திகளையும் தன்னகத்தே கொண்டவர் என்பதற்கு முடிவான நிரூபணம் அவருக்கு கிடைத்தது.

7. ஓம் ஸ்ரீ ஸாயி ஸாது வர்தனாயா நம:

ஸாதுக்களைப் பெருக்குபவர்க்கு வணக்கம். சாது – நன்மைகள்: வந்தனாய – பெருக்குபவர்க்கு / காப்பவருக்கு சிறு வயதிலிருந்தே சத்யா ஜீவராசிகளை கொடுமைப்படுத்துவதை பொறுக்க மாட்டார். உணவிற்காக விலங்குகளை கொல்வதை தவிர்க்க வேண்டும் என்று தன் வீட்டினரையும் சேர்த்து அனைவருக்கும் அறிவுறுத்தினார். இரவு உணவிற்காக ஒரு பறவை கொல்லப்படும் போது சத்யா ஓடிச் சென்று அந்த பறவையை அணைத்துக் கொண்டு அதை விட்டு விடும் படி பெரியவர்களிடம் மன்றாடுவார். கிராமங்களில் நடைபெறும் எருதுகளின் ஒட்டப்பந்தயத்தையும், கோழி சண்டைகளையும் அவர் என்றுமே ஆதரித்ததில்லை.

“வாயில்லா ஜீவன்களையும் பறவைகளையும் தன் சுய கேளிக்கைகளுக்காக துன்புறுத்துகிறார்கள். இதை நான் ஒரு போதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்” எப்படியாவது இந்த போட்டிகளை நிறுத்த பெரியவர்களை இணங்க வைப்பார். ஸ்வாமியின் சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அஹிம்சை என்ற கொள்கைகள் பல்லாயிரக்கணக்கானவர்களின் உள்ளங்களை தொட்டு அவர்களிடம் மாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது.

பாபாவின் கல்வி நிலையங்கள் வழக்கமான கல்வி கோட்பாடுகளோடு மற்ற கல்வி நிலையங்கள் போல் அல்லாமல் மனித மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது. அப்படி ஆசீர்வதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் பொது வாழ்க்கையில் ஒழுக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் பளிச்சிடும் உதாரணங்களாக திகழ்கிறர்கள். பாபாவின் மாணவ மாணவியர் வாழ்க்கையில் அனைத்துத் துறையிலும் மாற்றத்தைக் கொண்டு வரும் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். பகவான் படைக்க வந்திருக்கும் இந்த புதுயுகத்தைப் பற்றி நமக்கு முன்கூட்டியே அறிவிக்க வந்திருப்பவர்கள் தான் இந்த மாணவ மாணவியர்கள்.

8. ஓம் ஸ்ரீ ஸாயி ஸாதுஜன போஷணாய நம :

ஸாது ஜனங்களை வளர்ப்பவருக்கு, காப்பவருக்கு வணக்கம். சாதுஜன – சாதுக்கள்: போஷணாய – வளர்ப்பவருக்கு / காப்பவர்க்கு பாபா எப்போழுதுமே நல்லவர்களின் நலனைக் காப்பவர். 2ம் உலக மகா யுத்தத்தின் போது, ஒரு நாள் காலை பாங்காக்கில் டாக்டர் ஆர்ட் ஆங் ஜூம்சாயியின் தாயார் வாயிற்கதவை தட்டும் ஓசையை கேட்டார். கதவைத் திறந்து பார்த்தபோது ஆரஞ்சு நிற உடையணிந்து ஒருவரைக் கண்டார். அவர் வெண்மையான ஒரு பொடியை அந்த அம்மாளிடம் கொடுத்து அதை வீடு முழுவதும் தூவச் சொன்னார். அவர், அந்த அம்மையாரின் தாய் மொழியில் அவருடன் பேசி, இந்த வெண்பொடி உங்கள் வீட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் என்று உறுதி அளித்தார். அந்த மாதுவும் அவர் சொன்னபடியே செய்தார். சிறிது நேரத்தில் அந்தப் பகுதியில் பெருத்த வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்ந்தது. இவருடைய வீட்டைத் தவிர சுற்றிலும் இருந்த அனைத்து வீடுகளும் சேதமடைந்தன. பல வருடங்களுக்கு பிறகு தான் அந்த வெண்பொடியான விபூதியை அவர் தாயாரிடம் கொடுத்தது தான் தான் என்பதை ஸ்வாமி ஜூம் சாயியிடம் வெளிப்படுத்தினார்.

9. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வக்ஞாய நம:

எல்லாவற்றையும் அறிந்தவருக்கு (உணர்ந்தவருக்கு) வணக்கம். ஸர்வ – எல்லாவற்றையும்: ஸர்வக்ஞாய – எல்லாவற்றையும் அறிந்தவருக்கு. தங்களின் கடந்த,நிகழ் மற்றும் எதிர் காலங்களை தாங்கள் சொல்லாமலேயே ஸ்வாமி அறிவார் என்பதை பக்தர்கள் அறிவார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை அவர்கள் கூறும் முன்பே ஸ்வாமி தெரிந்து கொண்டு அதற்கு தீர்வும் அளிக்கிறார். சத்யா குழந்தையாக இருக்கும் போது ஒரு ஆங்கிலேயரின் ஜீப் ஒன்று கிராமத்தின் முன் திடீரென்று நின்றது. எவ்வளவு முயற்சி செய்தும் அதை ஓட்ட முடியவில்லை. அவரது வண்டி ஓட்டுனர் அந்த கிராமத்தில் ஒரு அதிசயப் பையன் இருப்பதாகவும் அவனால் உதவ முடியும் என்றும் கூறினான். சத்யாவைத் தேடிக் கண்டுபிடித்து பிரச்சினைகளை கூறியவுடன் அவர் வண்டியை பார்க்க ஒப்புக் கொண்டார். ஜீப்பை நெருங்கியதும் சத்யா ஆங்கிலேயரிடம் கூறினார் “உனக்கு ஒரு தீங்கும் இழைக்காத ஒரு பெண் புலியை நீ கொன்று விட்டாய். அது தன் குட்டிகளை கவனித்துக் கொண்டிருக்கும் போது நீ அதை வேட்டையாடி விட்டாய். இப்பொழுது அந்த குட்டிகள் தன் தாயை தேடுகின்றன. இதை உனக்கு உணர்த்துவதற்காக, நான் தான் உன் வண்டியை நிறுத்தினேன்”. இதைக் கேட்ட ஆங்கிலேயர் திகைத்து நின்றார். மேலும் சத்யா கூறினார்” எந்த உயிரினத்தையும் உன் மகிழ்ச்சிக்காக நீ ஒரு போதும் கொல்லக் கூடாது. அந்த குட்டிகளை நீ விலங்குகள் காப்பகத்தில் கொண்டு சேர்ப்பதாக எனக்கு உறுதி அளித்தால் நான் உன் வண்டியை சரி செய்கிறேன்” என்றார். அந்த ஆங்கிலேயரும் அப்படியே உறுதி அளித்தார். சத்யா வண்டியைத் தொட்டவுடன் வண்டியும் நகரத் தொடங்கியது.

10. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஜன ப்ரியாய நம:

எல்லாவிதமான மக்களாலும் விரும்பப்படுபவருக்கு வணக்கம். சர்வஜன – எல்லாவித மக்களாலும்: பிாியாய – விரும்பப்படுபவர்க்கு குழந்தைப் பருவத்திலிருந்தே சத்யா குழந்தைகள் மத்தியில் மட்டுமல்லாமல் பெரியவர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர். பள்ளியிலும் ஆசிரியர்களுக்கும் அவர் மிகவும் பிடித்தமானவர்.

இன்று ஸ்வாமி எங்கிருந்தாலும், அனைத்து நாடுகளிலிருந்தும், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்று வாழ்க்கையில் எந்த படித்தரத்தில் உள்ளவராயினும், அவரது கடைக்கண் பார்வைக்காக ஒன்று கூடுகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரை அன்பிற்கும் அமைதிக்கும் தூதுவராகக் கருதி மரியாதை செலுத்துகிறார்கள். அவர் அனைவரையும் நேசிக்கிறார், அனைவராலும் நேசிக்கப்படுகிறார்.

11. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஸக்தி மூர்த்தயே நம:

எல்லாவித ஸக்திகளின் திருவுருவமாய் இருப்பவருக்கு வணக்கம். ஸர்வ – எல்லா: சக்தி -ஆற்றல்: மூர்த்தயே – உருவமுடையவருக்கு. சிகிச்சைக்கு அப்பாற்பட்ட நோய்களை குணப்படுத்துவது, ஒரே நேரத்தில் பல இடங்களில் வீற்றிருப்பது, தனிப்பட்ட காட்சிகள் அளிப்பது, விபூதி மற்றும் பல பரிசுகளை கையசைப்பிலேயே உண்டாக்குவது, உயிர் பிாிந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது, விபத்துக்களிலிருந்து மக்களை காப்பது போன்ற கணக்கிலடங்காத அற்புதங்களை நிகழ்த்தி தனது தெய்வீக சக்திகளை நிதர்சனமாக்குகிறார்.

ஒரு சமயம் பாபா பழைய மந்திாில் தங்கியிருந்த போது சித்ராவதி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தண்ணீர் மந்திர் வரை வந்து சூழ்ந்தது. இன்னும் சிறிது நேரத்தில் வெள்ளம் மந்திர் உள்ளே வந்து அனைத்தும் சேதமடையக் கூடும் என்று அனைவரும் பயந்தனர். அத்தருணத்தில் பாபா தண்ணீருக்கு மத்தியில் நடந்து “போதும் திரும்பிச் செல்” என்றார். உடனே வெள்ளம் பின் வாங்கியது. பாபாவின் கட்டளைக்கு பஞ்சபூதங்களும் கீழ் பணிந்து நடக்கின்றன என்பது உறுதியாகிறது.

12. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வேஸாய நம:

எல்லாவற்றுக்கும் தலைவராக இருப்பவருக்கு வணக்கம். ஸர்வ – எல்லா: ஈசன் – தலைவர் அனைத்து பெயர்களும் வடிவங்களும் எனதே ஆகும் என்கிறார். கிருஷ்ணரை தொழுபவருக்கு கிருஷ்ணனாகவும், கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஏசுவாகவும், சிலருக்கு ராமனாகவும், சிலருக்கு தெய்வீக அன்னையாகவும் காட்சி அளிக்கிறார். ஒரு சமயம் கத்தோலிக்க தம்பதியர் பிரசாந்தி நிலயம் சென்றார்கள். அந்தப் பெண்மணிக்கு பாபா மீது நம்பிக்கை இல்லை. ஆதலால் தயங்கினார். பாபா அவர்களை நேரடி சந்திப்பிற்கு அழைத்தார். அந்த மனிதர் பாபாவை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டார். பாபாவும் அனுமதித்தார். அவர்கள் திரும்பச் சென்று, புகைப்படங்களை நகல் எடுத்துப் பார்க்க அதில் பாபா இல்லாமல் ஏசுகிறிஸ்துவின் புகைப்படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

13. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஸங்க பாித்யாகினே நம:

எல்லாவிதப் பற்றுதலையும் விட்டு விட்டவருக்கு வணக்கம். ஸர்வ-எல்லாவிதமான, ஸங்க-பற்று(கள்), பாித்யாகம்-விட்டுவிடுதல், பாித்யாகினே – விட்டுவிட்டவருக்கு. 14 வயதில் சத்யா தன் அண்ணண் சேஷமராஜூவுடன் தங்கி உரவகொண்டா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 1920ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் நாள் வழக்கம் போல் பள்ளியிலிருந்து திரும்பினார் . வீட்டின் வெளிவாசலில் நின்று கொண்டு பள்ளிப் புத்தகங்களை ஒரு பக்கமாக வைத்து விட்டு, “நான் இனி உங்கள் சத்யா அல்ல. நான் சாயி. நான் செல்கிறேன். நான் உங்களை சார்ந்தவனல்ல. மாயை என்னை விட்டது. என் பக்தர்கள் என்னை அழைக்கிறார்கள். எனக்கு என் பணி இருக்கிறது.” என்று உரக்கக் கூறினார். அவரது அண்ணி பலமுறை அழைத்தும் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார். எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஆஞ்சநேயலு அவர்களின் தோட்டத்திலுள்ள ஒரு பாறையின் மேல் சென்று அமர்ந்தார். அவரை தொடர்ந்து சென்ற மக்கள் அவரை சுற்றி அமர்ந்தனர். இந்த இடத்தில் தான் சத்யா முதல் பஜனை பாடலான “மானஸ பஜரே குரு சரணம் துஸ்தர பவ சாகர தரணம்” என்ற பாடலைக் கற்றுக் கொடுத்தார் (ஏ மானிடா! குருவின் பதத்தை தொழு, அதுவே உன்னை வாழ்க்கை எனும் கடலைக் கடக்க உதவும்).

14. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வாந்தர்யாமினே நம:

எல்லாவற்றையும் உள்ளிருந்து இயக்குபவருக்கு வணக்கம். ஸர்வ – எல்லாவற்றையும் : அந்தர்-உள்ளே(உள்ளிருந்து) யாமினே – இயக்குபவருக்கு ஸ்வாமி நம் அனைவருள்ளும் வசிக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் எந்த நேரத்தில் என்ன தேவையோ அதை அந்தந்த நேரத்தில் வழங்குவார். ஒரு மாணவன் ஒரு சமயம், தன் பெற்றோர்களிடமிருந்து பணம் வந்து சேராததால் கவலையுடன் இருந்தான். ஸ்வாமி அவனிடம் கவலைக்கு காரணம் கேட்டார். அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாததை கண்ட ஸ்வாமி “நீ உன் தந்தையிடம் பணம் கேட்டு கடிதம் எழுதியிருந்தாய். ஆனால் இன்னும் அது வந்து சேரவில்லை அல்லவா? எனக்குத் தெரியும்” என்று கூறினார். பிறகு பக்தர்களிடமிருந்து சேகரித்த கடித உறைகளிலிருந்து ஒன்றை படித்துக் கொள்ளும் படி ஸ்வாமி அந்த மாணவனிடம் கூறினார். மாணவன் அதை திறந்து பார்த்து அதில் 500 ரூபாய் இருப்பதைக் கண்டு திகைத்தான். திகைத்துப் போயிருந்த மாணவனிடம், “நீ எடுத்துக் கொள். இது உனக்குத் தான். நீ 500 ரூபாய் தான் கேட்டிருந்தாய். நீ அதிகமாக கேட்டிருந்தால் நான் அதிகமாகக் கொடுத்திருப்பேன்” என்றார்.

ஸ்வாமி கூறுகிறார் “நான் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கிறேன். ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ளேன். என் காலடி ஓசையை நீங்கள் எப்போதும் கேட்கலாம். ஏனென்றால் நான் உங்களுடன் நடக்கிறேன், உங்களுக்கு பின்னாலும் பக்கத்திலும் இருக்கிறேன். நீங்கள் வேதனைப்படும் நேரத்தில் என் செவிகள் அதை கேட்கும், உங்களைக் காப்பதற்கு என்னை அழையுங்கள். உங்களைக் கண்காணிப்பதற்கும் காப்பதற்கும் என் கண்கள் உங்கள் மேல் நிலைத்திருக்கும்”.

15. ஓம் ஸ்ரீ ஸாயி மஹிமாத்மனே நம:

மஹிமை ஸ்வரூபமாயிருப்பவருக்கு வணக்கம். மஹிமா – பெருமை (லீலா அல்லது திருவிளையாடல் பெருமை): ஆத்மனே – ஸ்வரூபமாயிருப்பவருக்கு சாயி மனித வடிவில் தெய்வீக அவதாரம். அவர் அனைத்தும் தெய்வீக குணங்களுக்கும் நீரூற்று ஆவார். அவர் உயர்ந்த கலைஞனும் சிற்பியும் ஆவார். தன் கையசைவில் வர்ணிக்க இயலாத அளவு அழகான பொருள்களை வரவழைப்பார். சிறு பிராயம் வரை தான் பள்ளிக்கு சென்றிருந்தாலும் அவர் அனைத்து சமயநூல்கள் பற்றியும், விஞ்ஞானத்தைப் பற்றியும் நன்கு அறிவார். பாபா நிகழ்த்தும் அனைத்து அற்புதங்களும், ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும், மற்றும் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்குமே ஆகும்.

டாக்டர் பிரபா என்பவர் ஸ்ரீ சத்ய சாயி பொது மருத்துவமனையில் 30 ஆண்டுகளாக மகளிர் நோய் மருத்துவராக பணிபுரிகிறார் . அவர் நைஜிரியா நாட்டில் மருத்துவராக இருந்த ஆரம்ப கால கட்டத்தில், ஒரு நபர் “சத்ய சாயிபாபா கொடுத்தார்” எனச் சொல்லி, விபூதி பொட்டலம் ஒன்றைக் கொடுத்தார். அவருக்கு பாபாவைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனாலும் அந்த பொட்டலத்தை வைத்துக் கொண்டார். சிறிது நாட்களுக்குப் பிறகு அவரது நோயாளி ஒருவர் அபாயகரமான நிலையில் இருந்தார். உடனே அவருக்கு அந்த விபூதி பொட்டலம் நினைவிற்கு வந்தது. அந்த நோயாளியின் மேல் அதை தடவினார். வியப்பூட்டும் விதமாக அந்த நோயாளி பழைய நிலைக்கு திரும்பினார். அவர் இந்தியா வந்த போது பாபாவை சென்று தரிசித்தார். அவர் தன்னைப் பற்றி கூறுகையில்” ஆராய வந்த மருத்துவர் ஆட்கொள்ளப்பட்டார், பாதகமலங்களை தொழுவதற்கு இங்கேயே நிலைத்து விட்டார்” என்றார்.

16. ஓம் ஸ்ரீ ஸாயி மஹேஸ்வர ஸ்வரூபாய நம:

மஹேஸ்வர வடிவினனுக்கு (சிவஸ்வரூபிக்கு வணக்கம்) மஹா – பெரிய: ஈஸ்வர- தலைவர்: மகேஸ்வர என்பது சிவபெருமானின் திரு நாமங்களில் ஒன்று: ஸ்வரூப – வடிவமுடையவருக்கு. பகவான் பாபா உரவகொண்டாவில் மாணவனாக இருந்த போது அவருடைய மூத்த சகோதரர் ஸ்ரீ சேஷமராஜூ ஆசிரியராக இருந்தார். அவர் மாணவர்களுக்கு ஹம்பி செல்ல ஒரு உல்லாசப்பயணம் ஏற்பாடு செய்தார். ஹம்பியில் உள்ள விரூபாக்ஷர் (சிவன்) கோவிலுக்கு சென்றார். பகவான் பாபா கோவிலுக்கு வெளியிலேயே இருந்தார். மற்ற மாணவர்கள் கோவிலுக்குள் சென்றனர். அங்கு அர்ச்சகர் ஸ்ரீ விரூபாக்ஷருக்கு (சிவன்) ஆரத்தி காட்டிய போது அங்கிருந்த பக்தர்கள் அங்கு விரூபாக்ஷர் இடத்தில் பாபாவை தரிசனம் செய்தனர். சேஷமராஜூவுக்கு மிகவும் கோபம் வந்தது. ஏனென்றால் அவர் பாபாவும் உள்ளே வந்து கர்ப்பகிரஹத்தில் இருப்பதாக நினைத்து மிக்க கோபத்துடன் வெளியே சென்ற போது அங்கு பாபா நிற்பதை பார்த்து அவரால் நம்பமுடியவில்லை. அவர் ஒருவரை கோவிலுக்குள் அனுப்பி அங்கு பார்க்கச் சொல்ல தானும் பாபாவை கவனித்துக் கொண்டு நின்றார். அப்போது அவர் பாபா உள்ளேயும் வெளியிலும் இருப்பதைக் கண்டு திகைப்படைந்தார் .

பகவான் பாபா, தன்னுடைய தெய்வீகம், சர்வ வியாபகத்தன்மை மற்றும் உண்மைத்தத்துவம் ஆகியவற்றை காணச் செய்தார்.

17. ஓம் ஸ்ரீ ஸாயி பர்த்தி க்ராமோத்பவாய நம:

பர்த்தி கிராமத்தில் அவதாித்தவருக்கு (பிறந்தவருக்கு) வணக்கம். பர்த்தி+க்ராம+உத்பவாய ஸ்ரீ பர்த்தி க்ராமோத்பவாய பவம் – பிறப்பு, உத்பவம் – சிறப்பான பிறப்பு; பவ-பிறந்தவன்; பவாய,உத்பவாய- பிறந்தவருக்கு, அவதாித்தவருக்கு.

ஸ்ரீசத்ய சாயி பாபா, ஈஸ்வரம்மா மற்றும் பெத்த வெங்கப்பராஜூ தம்பதியினருக்கு நவம்பர் 23ம் நாள் 1926ம் வருடம் ஆந்திர பிரதேசத்தில் புட்டபர்த்தி என்னும் கிராமத்தில் பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன் வீட்டில் உள்ள இசைக் கருவிகள் தானே இயங்கத் தொடங்கின. ஒரு தெய்வீக அவதாரம் நிகழப் போவதை சோதிடர்கள் ஊகித்தார்கள்.

புட்டபர்த்தியின் முந்தைய பெயர் கொல்லப்பள்ளி அதாவது இடையர்களின் கிராமம் என்பதாகும். அது மிகவும் செழுமை மிக்க கிராமமாகவும் இருந்தது. ஒரு நாள் ஒரு இடையன் தனது பசு தினசரி வெறுமையான மடியுடன் பாலில்லாமல் திரும்புவதை கண்டான். காரணத்தைக் கண்டு பிடிப்பதற்கு அதனைத் தொடர்ந்து சென்றான். ஒரு பாம்பு புற்றிலிருந்து வெளியே வந்து பசுவின் மடியிலிருந்து பாலை அருந்தி விட்டு செல்வதைக் கண்டு திகைப்படைந்தான். இடையன் மிகுந்த கோபம் அடைந்து கனமான ஒரு கல்லை வீசி அந்த பாம்பை கொன்று விட்டான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இடையர்களின் எண்ணிக்கை குறைந்து எங்கு பார்த்தாலும் பாம்பு புற்றுகள் தோன்றத் தொடங்கின. கிராமமக்கள், இது, அந்த பாம்பின் சாபம் என்று கருதத் தொடங்கினர் . இப்படியாக கொல்லப்பள்ளி என்ற பெயர் மருவி புட்டபர்த்தி என்றானது.(பாம்பு புற்றுகள் அடங்கிய கிராமம்). பகவான் பாபா அவதாித்த பிறகு இந்த கிராமம் மீண்டும் செழிப்படைந்தது.

18. ஓம் ஸ்ரீ ஸாயி பர்த்திக்ஷேத்ர நிவாஸினே நம:

பர்த்தி க்ஷேத்திரத்தில் வசிப்பவருக்கு வணக்கம். க்ஷேத்திரம் – புண்ணிய ஸ்தலம்: பர்த்திக்ஷேத்ரம் – புட்டபர்த்தி க்ஷேத்ரம்: நிவாசம் – வாழ்விடம்: வாசி – வசிப்பவர்: நிவாசினே – வாசிப்பவருக்கு பாபா தனது 14ம் வயதில் தனது தெய்வீகப்பணி /நோக்கத்தை வெளிப்படுத்தினர். நாளடைவில் தொலைதூரத்திலிருந்தெல்லாம் மக்கள் அவரை தரிசிப்பதற்கு வந்து தங்கள் ஊருக்கும் வருகை தரும்படி வேண்டும் போது, மகன் தங்களை விட்டு சென்று விடுவானோ என்று பெற்றோர்கள் கவலைக் கொண்டனர். தாயார் ஈஸ்வரம்மா கூறுவார் ” மகனே! நீ புட்டபர்த்தியிலேயே இருப்பாய் என்று வாக்கு கொடு. உனது பக்தர்கள் இங்கு வரட்டும். நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்” இதற்குசத்யா பதில் கூறுவார்

”புட்டபர்த்தியை நான் எனது க்ஷேத்திரமாக (புனிதத் தலமாக) தேர்ந்தெடுத்து இருக்கிறேன். இந்த வரம் உங்களுக்கு மட்டுமல்ல. இந்த கிராமத்திற்கும், இந்த உலகிற்கும் வழங்கப்பட்டுள்ளது”

பகவானின் புகழ் பரவி உலக நாடுகளிலிருந்தும் தரிசனத்திற்கு மக்கள் வந்து குவிந்தனர். ஒரு சிறிய கிராமமாக இருந்த இடம், பெரிய ஆன்மீக மையமாகி பிரசாந்தி நிலையம் (அமைதியின் இருப்பிடம்) என்றாகியது. பாபா வெளியிட்டார்” இந்த பர்த்தி ஒரு நாள் திருப்பதியாகவும், மதுராவாகவும் மாறும்” என்று.

19. ஓம் ஸ்ரீ ஸாயி யஸ: காய ஷீரடிவாஸினே நம:

புகழுடம்பில் ஷீரடியில் வசிப்பவருக்கு வணக்கம் யஸ – புகழ்: காய – உடம்பு: ஷீரடி வாஸினே- ஷீரடியில் வசிப்பவருக்கு ஷீரடி சாயிபாபா அபாரமான தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தினார். அவரது புகழ் வேகமாக பரவியது. அவர் தன பூத உடலை துறப்பதற்கு சிறிது காலம் முன் பக்தர்களிடம் தனது மறைவை நினைத்து துயரம் கொள்ளக்கூடாது என்றும், அவர் எட்டு ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் பிறக்கப் போவதாகவும் கூறினார். அவர் 1918ஆம் ஆண்டு மறைந்தார். சத்யசாயி பாபா 1926ம் ஆண்டு பிறந்தார். சிறுவன் சத்யா குழந்தைப் பருவத்திலேயே ஷீரடி பாபாவுடனான தனது ஒற்றுமைகளை பற்றி அவ்வப்போது வெளிப்படுத்தி உள்ளார். ஷீரடி பாபாவைப்பற்றியோ, ஷீரடி என்ற புண்ணிய ஸ்தலத்தைப் பற்றியோ அந்தப் பகுதியில் யாரும் அறிந்திராத நிலையில், அவர் தனது தோழர்களுக்கு, ஷீரடி சாயி பாபாவின் மேலான பாடல்கள் கற்றுக் கொடுத்தார். சத்ய சாயி பாபா தனது பதினான்காம் வயதில் தான் ஷீரடி பாபாவின் அவதாரம் என்று அறிவித்தார். அதை நிரூபணம் செய்யக் கோரிய பொழுது அவர் கொஞ்சம் மல்லிகைப்பூ கொடுக்கும்படி கேட்டார். அந்த மலர்களை நிலத்தில் தூவிய போது அற்புதமாக தானாகவே “சாயி பாபா” என்று தெலுங்கு மொழியில் அமைந்தது.

பல வருடங்களுக்குப் பிறகு சின்சோலி என்ற ராஜ்யத்தின் ராணியின் அழைப்பை ஏற்று ஸ்வாமி வருகை தந்தார். அந்த ஊர் ராஜா ஷீரடி பாபாவின் பரம பக்தர். அவர் பல வருடங்களுக்கு முன்பே காலமாகி விட்டிருந்தார். ஷீரடி பாபா, ராஜாவிற்கு அளித்த ஒரு ஆஞ்சனேயரின் விக்ரஹத்தை பற்றி ஸ்வாமி ராணியிடம் வினவினார். அப்படி ஒரு விக்ரஹம் இருப்பதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று ராணி கூறினார். பாபா அந்த அரண்மனையிலிருந்து தானே அதை கண்டுபிடித்துக் கொடுத்தார்.

20. ஓம் ஸ்ரீ ஸாயி ஜோடி ஆதிபள்ளி ஸோமப்பாய நம:

குழந்தையைக் காப்பாற்றிய அம்மை அப்பனுக்கு வணக்கம். ஜோடி – தம்பதியாக வந்த ஜோடி: ஆதி – முதல்: பள்ளி – ஊர்: ஆதிபள்ளி – கைலாயம்: ஸோமப்பா – ஸ + உமா + அப்பா – அம்மையப்பன் : ஸ + உமா + அப்பா = ஸ + ஆயி + பாபா – இரண்டும் ஒன்றே. 1958ம் ஆண்டு ஸ்வாமியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள பெங்களூரிலிருந்து வந்திருந்த குடும்பத்தினர், விழா முடிந்து திரும்புகையில் அவர்களது 2 வயது குழந்தைக்கு வலிப்பு வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது. குடும்பத்தினர் உதவிக்காக அங்குமிங்கும் தேடும் போது எங்கிருந்தோ வந்த ஒரு முதியவர் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டார். அவரது ஸ்பரிசத்தால் குழந்தை உயிரோட்டத்துடன் அழத் தொடங்கியது . அதன் பெற்றோர்கள் அபரிமிதமான ஆனந்தத்தை அடைந்தார்கள். முதியவரிடம் கேட்ட போது தனது பெயர் “ஜோடி ஆதிபள்ளி ஸோமப்பா” என்று அறிவித்தார். பிற்காலத்தில் அந்த பெண் குழந்தையை காப்பாற்றியது தானே என்றும் பாபா அறிவித்தார். அந்த பெயரின் உட்பொருளையும் பாபா விளக்கினார்.

ஆதிபள்ளி என்றால் அசலான கிராமம் – கைலாயம் சிவபெருமானின் இருப்பிடம். ஜோடி – தம்பதியர், சோமா – உமையுடன் கூடிய சிவபெருமான், அப்பா – தந்தை ஆகையால் ஸ்வாமி சிவசக்தி. பகவான் தான் உண்மையில் சிவசக்தி ஸ்வரூபம் என்பதை வெளிப்படுத்தினார்.

21. ஓம் ஸ்ரீ ஸாயி பாரத்வஜ ரிஷி கோத்ராய நம:

பாரத்வஜ ரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவருக்கு வணக்கம்.

பாரத்வாஜ ரிஷி – இராமயண காலத்திலேயே ஸ்ரீ இராமனுடன் நட்புக் கொண்டிருந்தவர். கோத்ரம் – வம்சம்: கோத்ராய – வம்சத்தைச் சேர்ந்தவருக்கு.

1940ம் ஆண்டு மே மாதம் 23ம் நாள் காலை எப்பொழுது போல் சத்யா எழுந்தார். சிறிது நேரம் கழித்து குடும்பத்தினரை அழைத்து வெட்ட வெளியிலிருந்து கல்கண்டும் மலர்களும் அளித்தார். இதை கேள்வியுற்று அண்டை வீட்டார்கள் ஓடோடி வந்தார்கள். சத்யா அவர்கள் அனைவருக்கும் தன் கை அசைவினால் பாலில் சமைத்த அன்னத்தை அளித்தார்.அவரது தந்தை திரு. வெங்கப்பராஜூ இதையெல்லாம் ஏமாற்று வித்தை என எண்ணினார். கையில் ஒரு கழியை எடுத்துக் கொண்டு சத்யாவிடம் நெருங்கி “நீ யார்? கடவுளா? அல்லது பேய் பிசாசா அல்லது பைத்தியக்காரனா? சொல்லு” என்று கேட்டார். சத்யா அமைதியயாக பதிலளித்தார். “நான் ஸாயி பாபா. நான் ஆபஸ்தம்ப சூத்திரத்தை சேர்ந்தவன். எனது கோத்திரம் பாரத்வாஜ கோத்திரம். உங்களுடைய பிரச்சனைகளை தீர்க்க நான் வந்திருக்கிறேன்” என்றார்

22. ஓம் ஸ்ரீ ஸாயி பக்தவத்ஸலாய நம:

பக்தவத்ஸலனுக்கு வணக்கம். வத்ச – கன்றுக்குட்டியைக் காப்பவனாதலால், கடவுள் பக்தவத்சலன் பக்தர்கள் எனும் கன்றுக்குட்டியைக் காப்பவனாதலால், கடவுள் பக்தவத்சலன் என்று அழிக்கப்படுகிறரர். நாம் அனைவரும் தெய்வீகத் தாய் சத்ய சாயி பாபாவின் பிள்ளைகள். ஒரு சமயம் ஒரு மாணவனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பாபா அந்த மாணவனை அழைத்து ஒரு களிம்பை தன் சக்தியால் வரவழைத்து, அந்தக் களிம்பை தானே அவன் காலிலும் தடவினார். அந்த மாணவன் இக்கட்டான நிலமைக்கு ஆளானான். அவன் ஸ்வாமியிடம் அப்படி செய்ய வேண்டாமென்று மன்றாடினான். அதற்க்கு ஸ்வாமி “நீ உன் வீட்டில் இருந்தால் உன் தாய் உனக்கு இதை செய்யமாட்டார்களா? நான் உன் தாய்!” என்றார்.

23. ஓம் ஸ்ரீ ஸாயி அபாந்தராத்மனே நம:

பிறவிக் கடலைக் கடக்கச் செய்பவருக்கு வணக்கம். அபாம் – நீர் (இங்கு சமுத்திரத்தைக் குறிக்கிறது) சமுத்திரம் என்பது ஸம்சார சாகரத்தைக் குறிக்கிறது. (ஸம்சார = பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் சிக்க வைக்கும் உலக வாழ்க்கை . சாகரம் = கடல்) தராத்மனே – கடைக்கச் செய்பவருக்கு ஸ்வாமி கூறுகிறார் “அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கும் ஆன்மா நான் தான்”. ஒரு சமயம் பாபா மாணவர்களுடன் கொடைக்கானலில் தங்கிய போது ஒரு மாணவனை நோக்கி “நேற்று இரவு நீ நன்றாக தூங்கினாயா?” என்று வினவினார். மேலும் “நீ நிம்மதியாக உறங்கவில்லை என நான் அறிவேன். உனக்கு வயிற்றில் தொல்லை ஏற்பட்டது அல்லவா?” என்றார். கோடையில் இரவு உணவின் போது பாபா உணவு பரிமாறும் சமயம் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவார். ஒவ்வொருவருக்கும் பிடித்தமான உணவை அவர்கள் சொல்லாமலேயே போதிய உணவு கிடைக்கும்படி கவனித்துக் கொள்வார். இதையெல்லாம் அவர் எப்படி அறிவார்? ஏனென்றால் அவர் ஒவ்வொரு ஆன்மாவிற்குள்ளும் வசிக்கிறார் என்பது நிரூபணமாகிறது.

24. .ஓம் ஸ்ரீ ஸாயி அவதார மூர்த்தடய நம:

அவதார மூர்த்திக்கு வணக்கங்கள். அவதரணம் – கீழ் இறங்கி வருதல், அவதார – கீழ் இறங்கி வந்தவர். எங்கும் எப்பொழுதும், நிறைந்து நிற்கும் பரம்பொருள் ஓரிடத்தில் ஒரு காலத்தில் கண்னுக்குத் தோன்றும் வண்ணம் செய்யும் செயலைக் கீழிறங்கி வருதல் என்கிறோம். ஸ்வாமி தனது அவதாரத்தில் பல வடிவங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் ராமனாகவும், கிருஷ்ணனாகவும், விநாயகராகவும், காளிமாதாவாகவும் அவரவர்க்கு பிடித்தமான தெய்வமாக காட்சி அளித்துள்ளார். சிறுவனாக இருக்கும் போது சத்யா தனது நண்பர்களுடன் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்றார். அவர் நண்பர்களிடம் “நீங்கள் அனைவரும் பிரதஷிணம் செய்து வாருங்கள், நான் இங்கேயே இருக்கிறேன்” என்று கூறினார் ஆனால் நண்பர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அவரையும் கூட வருமாறு வற்புறுத்தினார்கள். சத்யா சம்மதித்து கோயிலை சுற்றத் தொடங்கினார். திடீரென்று எங்கிருந்தோ ஒரு பெரிய உருவம் கொண்ட வானரம் தோன்றி அவரை சுற்ற விடாமல் தடுத்தது. குழந்தைகள் எவ்வளவோ முயன்றும் அதை விரட்ட அவர்களால் முடியவில்லை. வானரம் நகரைவே இல்லை. அந்த வானரம் ஆஞ்சிநேயரே என்பதை அவர்கள் உணரவில்லை. அவர் ஸ்வாமியிடம் வேண்டினார்” ஸ்வாமி! நான் தான் உங்களை பிரதக்ஷணம் செய்ய வேண்டும் நீங்கள் என்னை செய்யக் கூடாது.”

ஸ்வாமி ” இந்த மனித வடிவில் அனைத்து தெய்வீக தத்துவங்கள், மனிதனால் வர்ணிக்கப்பட்ட அணைத்து நாமங்களும், வடிவங்களும் வெளிப்படுகின்றன. இப்படிப்பட்ட ஸர்வதேவதாஸ்வரூபத்தை இந்தப் பிறவியில் காண்பதற்கு நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள்” என்றார்.

25.ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வபய நிவாாினே நம:

எல்லாவித அம்சங்களையும் போக்குபவருக்கு வணக்கம். ஸர்வ – எல்லாவித, பய -பயம், பயன்களையும், அச்சங்களையும், நிவாரின் – போக்குபவர், நிவாரினே – போக்குபவருக்கு. ஸ்வாமி இரண்டு கைகளையும் உயர்த்தி அபயஹஸ்தம் தரிசனம் கொடுப்பது, நம் அனைவரையும் கண்டிப்பாக காப்பாற்றுவேன் என்று உறுதி கூறும்வகையில் எவரும் எதற்கும் அஞ்ச வேண்டாம் என்னும் பாவனையில் உள்ளது. அந்த பாவனை நம்மை நோயிலிருந்து, இகழ்ச்சியிலிருந்து, பெரும் நாசத்திலிருந்து, சந்தேகங்கள் மற்றும் பயம் இவைகளிலிருந்து காப்பாற்றுவேன் என்பதாகும். நாம் கோரிக்கை விடும் முன்னே அவர் வேகமாக நமக்கு அபயம் அளிக்க முன் வருகிறார். ஒரு சமயம் பிரசாந்தி நிலையத்தில் கட்டிட பணிபுரியும் ஒரு சிறுவனின் காலில் ஒரு கனமான வண்டி ஏறி முறிவு ஏற்படுத்தியது. சிறுவனின் அண்ணன் ஸ்வாமியிடம் வந்து தன் தம்பியின் கால் சேதமாகிவிட்டது என்று கதறி அழுதான். ஸ்வாமி அவனிடம் கூறினார் “கவலை வேண்டாம். அவன் காலிற்கு ஒன்றும் நேரவில்லை” அவர் தன் உள்ளங்கையை காண்பித்தார். அதில் அந்த வாகனத்தின் கனமான சக்கிரத்தின் அடையாளம் தெளிவாக தெரிந்தது. அந்த சிறுவன் உதவிக்காக ஸ்வாமியை அழைப்பதற்கு முன்பே, ஸ்வாமி, அவனைக் காப்பாற்றுவதற்காக தனது உள்ளங்கையை அந்த சிறுவனின் கால்களுக்கும் சக்கரத்திற்கும் நடுவில் நுழைந்து விட்டார்.

26. ஓம் ஸ்ரீ ஸாயி ஆபஸ்தம்ப ஸூத்ராய நம:

ஆபஸ்தம்பர் இயற்றிய ஸூத்திரங்களைப் பின்பற்றி நடக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவருக்கு வணக்கம்.

ஸூத்ர-ஸூத்திரம், ‘ஸூத்ரம்’ என்பது இரத்தினச் சுருக்கமாக ஆக்கப்பட்ட பா வகையில் ஒன்று. ஆபஸ்தம்ப- ஒரு ரிஷியின் பெயர். ஆபஸ்தம்பர், கௌதமர் போன்ற மஹரிஷிகள் மக்கள் நடந்து கொள்ளவேண்டிய ஒழுக்க முறைமைகளை- ஸூத்ரங்களை இயற்றினார். இத்தகைய ஸூத்ரங்கரளப் பின்பற்றுவோர் ஸூத்ர எனபட்டனர். ஸூத்ராய என்றால் இத்தகைய தர்ம ஸூத்ரங்களைப் பின்பற்றுவோனுக்கு எனப் பொருள்படும்.

ஆபஸ்தம்ப என்ற பெயர் கொண்ட ரிஷி பல வருடங்கள் தவ வாழ்க்கை மேற்கொண்டதன் பலனாக சிவபெருமானின் தரிசனம் கிடைத்தது. அவர் ஆன்மீக பயிற்சிகள் மற்றும் விதிமுறைகள் பற்றியும் சூத்ரம் எழுதினார். தன்னுடைய பதினான்காவது வயதில் பாபா ‘தான் ஆபஸ்தம்ப ரிஷியின்’ பரம்பரையை சேர்ந்தவர் என்று அறிவித்தார்.

27. ஓம் ஸ்ரீ ஸாயி அபயப்ரதாய நம:

அஞ்சாமையை அளிப்பவருக்கு (அருள்பவருக்கு) வணக்கம். பய– அச்சம், அபய– அஞ்சாமை, தா– கொடுத்தால், தாய– கொடுப்பவருக்கு, ப்ர– சிறப்பைக் குறிக்கிறது நான் அருகில் இருக்க பயமேன்? நான் உன்னுள் இருக்கிறேன், உன்னுடன் இருக்கிறேன், உன்னை சுற்றி இருந்து உன்னை வழி நடத்தி மற்றும் பாதுகாக்கிறேன் என்று நம் அனைவரும் பாபா உத்திரவாதம் அளிக்கிறார். அவரே நம்முடைய தேவையில் கைகொடுக்கும் (அ) கைவிடாத நண்பன். அவர் நம்மை அனைத்து விதமான தீங்குகளிலிருந்தும் காப்பாற்றுகிறார், நம்மை துயரத்திலிருந்து விடுவிக்க அவருடைய சொரூபத்திலேயோ அல்லது வேறு எதாவது ரூபமாகவோ வருகிறார்.

ஸ்ரீ கஸ்தூரியின் புதல்வன், மூர்த்தி அஸ்ஸாமின் காட்டுப் பகுதியில் வேலைக்கு சென்றிருந்தபோது அவர் தனியாக இருக்கும்போது ஒரு வன கரடி துரத்தியது. அவர் அக்கரடியிடமிருந்து தப்பித்து ஓடும் போது தடுக்கி விழுந்தவுடன் ‘பாபா பாபா’ என்று அழித்துக்கொண்டே இருந்தார். சகுன நேரத்தில் எங்கிருந்தோ ஒரு ட்ரக் வந்து மூர்த்தியை ஏற்றிச் சென்று காப்பாற்றியது. சில மாதங்களுக்குப் பிறகு அவர் பிரசாந்தி நிலையம் சென்றிருந்த போது ஸ்வாமி அவரிடம் கூறினார், ‘நீ என்னை தொலைபேசியில் அழைத்தவுடன் நான் ஒரு டிரக்கை அனுப்பி வைத்தேன், அது சமயத்திற்கு உன்னை வந்து சேர்ந்ததா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன