தசராவின் உட்கருத்து

Print Friendly, PDF & Email
நவராத்திரியின் உட்கருத்து

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாகப் பல்வேறு விதங்களில் கொண்டாடப்படும் பொது விழாக்களில் நவராத்திரியும் ஒன்று. பல பகுதிகளில் அது துர்கா பூஜை என்று சொல்லப்படுகிறது. மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக மஹிஷன் என்ற அசுரனை பராசக்தி யுத்தத்தில் கொன்றாள். அதே யுத்த கோலத்தில்தான் துர்கா தேவியாக கொண்டாடப்படுகிறாள்.

அச்வின (புரட்டாசி) மாதத்தில் வரும் சுக்கில பட்சத்தின் முதல் நாளன்று நவராத்திரி விழா ஆரம்பிக்கிறது. ஹிந்துக்கள் நீண்ட நாட்கள் கொண்டாடும் பண்டிகை அநேகமாக இது ஒன்றுதான். ஒன்பது பகல்களும், ஒன்பது இரவுகளும் இவ்விழாக் கொண்டாடப் படுவதால் இது நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் காளி வழிபாட்டிலும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவி உபாஸனையிலும் கடைசி முன்று நாட்கள் சரஸ்வதி பூஜையிலும் சிறப்பிக்கப்படுகின்றன.

காளி தீமைகளை அழிப்பவள். ஆகவே மனிதருக்குள் உறையும் தீய குணங்களை அழிப்பதற்காக காளி பூஜை செய்யப்படுகிறது. இதயத்தின் தீய குணங்கள் அழிந்த பின்பே மனிதனுக்கு நன்மை ஏற்பட்டு வளர்ச்சியூட்டும் எண்ணங்கள் பிறக்கின்றன. நற்குணம் என்னும் செல்வத்தை லஷ்மி அதிகரிக்கிறாள். ஆகவே மனிதர்களுக்குள்ள நற்குணம் என்னும் செல்வத்தை வளர்ப்பதற்காக லஷ்மிதேவி வழிபடப்படுகிறாள். தீய குணங்கள் மறைந்து நற்குணங்கள் ஓங்கிய பின்பே ஞானத்தை அடைய முடியும். மனிதனுடைய அறிவைப் புனிதப்படுத்தி அவனை ஞான நெறிக்கு இட்டுச் செல்லவல்ல உபாயங்களை அருளுபவள் சரஸ்வதி. ஆகவே கீழ்நிலையிலிருந்து மேல்நிலையான ஞானநிலையை அடைவதற்குக் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவி பூஜிக்கப்படுகிறாள். இராவணனைக் கொல்வதற்கான சக்தியைப் பெறுவதற்காக பராசக்தியான துர்காதேவியை ஸ்ரீராமசந்திரமூர்த்தியே ஒன்பது இரவுகள் வழிபட்டார்.

நவராத்திரி நாட்களின் போது மூன்று வயதிலிருந்து பத்து வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு உணவூட்டி, துணிமணிகள் வழங்கி முறைப்படி பூஜிக்க வேண்டும் என்பது சில இடங்களில் ஐதீகம்.

வடநாட்டில் இராமாயணத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளை சித்தரித்து இராமலீலைகளை நடித்துக் காட்டுவதன் மூலம் தசரா கொண்டாடப்படுகிறது. இராமனுக்கும் இராவணனுக்கும் நடக்கும் யுத்த நிகழ்ச்சி கட்டாயமாகக் காட்டப்படுகிறது. அரக்கர்களை வெற்றி கொண்ட நிகழ்ச்சி விஜயதசமியன்று பத்தாவது நாள் கொண்டாடப்படுகிறது. அன்று இராவணனுடைய கொடும்பாவிகளை நிறுவி எரிக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் நவராத்திரியின் போது பத்து நாட்கள் கொலு வைக்கிறார்கள். சுற்றுப்புறத்திலுள்ள எல்லாப் பெண்களையும் கொலுவைப் பார்க்க அழைக்கப் படுகின்றனர்.பூமியில் உள்ள அனைத்தையும் பொம்மைகளாகச் செய்து அவைகளை இறைவடிவங்களாகக் கண்டு பூஜை செய்கிறார்கள்.இது அனைத்திலும் இறைவனைக் காண வழி வகுக்கிறது. நவராத்திரியின் கடைசிநாள் ஆயுத பூஜை நாளாகும். அன்று தொழிலாளர்கள் எந்தக் கருவிகளை வைத்துச் சம்பாதிக்கிறார்களோ அந்தக் கருவிகளுக்கும் உபகரணங்களுக்கும் (தெய்வமாகப் பாவித்து) பூஜை செய்யப் படுகிறது. தச்சனார், கொத்தனார் முதலிய தொழிலாளர்கள், ஆயுத பூஜை செய்வதால் பராசக்தியானவள் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதிப்பாள். அவர்களுக்குச் சிறந்த சக்தியையும் நிறைந்த பணியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அருளுவாள் என்று நம்புகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: