எல்லா உயிர்களையும் நேசித்தல்

Print Friendly, PDF & Email
எல்லா உயிர்களையும் நேசித்தல்

ஆசிரியர் மெதுவாக, நிறுத்தி, நிதானமாகப் பயிற்சியைப் பற்றி வாசித்தல்

பின்னணியில் மென்மையான இசையை இசைக்கவும்.

உங்கள் நாற்காலிகளில் வசதியான விதத்தில் உட்காருங்கள் அல்லது கால்களை மடித்துத் (சம்மணமிட்டு) தரையில் அமரவும். முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து தலையை நிமிர்த்தவும். நன்றாகக் காற்றை உள்ளிழுத்து, உடலைத் தளர்த்தி மூச்சை வெளிவிடவும். கண்களை மூடிக்கொள்ளவும், அல்லது தரையைப் பார்க்கவும். இப்போது செய்தது போலவே இன்னம் இரண்டு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்……

ஒரு கிராமத்தின் அழகிய இயற்கைச் சூழலில் நீ நடப்பதாகக் கற்பனை செய்துகொள்…

அந்த இடம் மிகவும் ரம்யமாக இருக்கிறது. கதிரவன் இதமான கதகதப்பைத் தருகிறார். …

ஒரு பிரம்மாண்டமான மரத்தின் நிழலில் நீ அமர்ந்து இயற்கையை ரசிக்கிறாய். …

அதோ, அங்கே ஒரு முயல் குட்டி எத்தனை அழகாகப் புல்லைக் கொறித்துக்கொண்டு இருக்கிறது!…

அதோ, அந்த மரத்தின் மேல் அழகியதொரு அணில். …

சற்றுத் தொலைவில் மான்கள் மகிழ்ந்து மேய்ந்துகொண்டு இருக்கின்றன. ….

இயற்கைப் பொலிவு நிறைந்த கிராமங்களில் பல்வேறு அழகிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றை எல்லாம் நீ ரசித்து, வியந்து பார்த்துக்கொண்டு இருக்கிறாய்….

நீ அசைவின்றி, அமைதியாக இருந்தால் அவை உன் அருகிலேயே வரும்…

அவை உண்டு களித்து மகிழட்டும்….

அவற்றில் ஒன்றைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்காதே, அவற்றின் இல்லம் இது தான்….

நீ விளையாடும்போது உன்னை யாரேனும் பிடித்துக் கொண்டு போவதை நீ விரும்புவாயா? இல்லை. அல்லவா?.. அப்படித்தான் அவைகளும். அவைகள் இங்கு சுதந்திரமாக, மகிழ்ச்சியாகத் திரிகின்றன. அதைக் கண்டு உன் நெஞ்சமும் பூரிக்கிறது. (நீண்ட அமைதி)

மெல்லிய மணி ஓசை கேட்டதும், மெதுவாகக் கண்களைத் திறந்து, உங்கள் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துப் புன்னகை செய்யவும்.

கலந்துரையாடல்:

(அடுத்த முறை இத்தகைய பயிற்சி செய்யும்போது குழந்தைகளின் மனக்குவிப்பை அதிகரிக்க)

  1. நீ எத்தகைய காட்சிகளை எல்லாம் கண்டாய்?
  2. இயற்கைச் சூழலில் இருந்தபோது எவ்வாறு உணர்ந்தாய்?

[புத்தகக் குறிப்புகள்:
1) மனித விழுமியங்களில் சத்ய சாயி கல்வி,
2) கரோல் ஆல்டர்மேன் எழுதிய ‘நற்பண்புகளையும் உணர்ச்சிகளைக் கையாளும் அறிவையும் வளர்ப்பதற்கான பாடத்திட்டம்’]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன