ஓம் – பிரபஞ்ச ஒலி
ஓம் – பிரபஞ்ச ஒலி
பகவான் கூறுகிறார்: “உன் இதயத்திலும் பிரபஞ்சத்தின் இதயத்திலும் ஒலிக்கும் மூல ஒலியான, ஆதி ஒலியான பிரணவத்தை உற்றுக் கவனி”. மாறாத, சாசுவதமான, பிரபஞ்ச, மற்றும் மேலான பரம்பொருளின் சின்னமே ஓம். விண்ணில் நட்சத்திரங்களின் இயக்கத்தின் ஒலியே ஓம். எப்பொழுது படைக்கும் எண்ணம் நிராகாரத்தை (குணங்களற்ற ஒன்றை)ச் செயலாக்கத்துக்குக் கொண்டு வந்ததோ அப்பொழுது வெளிப்படுத்தப்பட்ட ஒலியே ஓங்காரம். சமநிலைக்கு எந்த குறுக்கீடு வந்தாலும் அது எவ்வளவு நுண்ணியதாக இருந்தாலும் ஒலி உண்டாக்கப்படுகிறது. கண் இமைகளை இமைக்கும் பொழுது, இமைகள் ஒன்றோடொன்று பொருந்தும் பொழுது எவ்வளவு மென்மையாக இருந்தாலும் அங்கும் ஒலி எழும்புகிறது. மிகநுட்பமான இத்தகைய ஒலிகளை மனிதன் எந்தக் காதாலும் கேட்கமுடியாது. பூதங்கள் தோன்றி படைப்பு துவங்கிய பொழுது ஓம் என்ற ஒலி தோன்றியது. “அந்த ஒலியே முதன்மையான ஆதிஓலி”.
(ரேடியோசாய், வால்யும், 07/01-02-09)
ஓம் தான் ஆதி வார்த்தை, அதுவே மற்ற அனைத்து வார்த்தைகளுக்கும் உயிர் கொடுத்திருக்கிறது. ஓம் தான் இறைவனின் பெயர். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. கிறிஸ்தவர்கள் தினமும் தங்கள் பிரார்த்தனைகளில் ஆமென் என்று கூறுகின்றனர். அதுவும் ஓங்காரத்தின் பிறிதொருவடிவமே. ஓம், பிரபஞ்ச முக்கியத்துவமும் பயன்பாடும் கொண்டது. கால, இட, மத, கலாச்சாரத் தடைகளை ஓம் கடந்தது. அனைவரும் ஓதுவதற்கு உகந்தது.
(பிருந்தாவனில்கோடைமழை, 1979, பக். 124-125)
ஆதி ஒலியில் இருந்து தான் அனைத்து படைப்பும் வெளிப்பட்டன. படைப்பு பஞ்சபூதங்களால் ஆனது. அவை ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி என்பனவாம். ஓம்காரமே படைப்பின் ஜீவதத்துவம். ஆகவே அதற்குப் பிரணவம் என்ற பெயரும் உண்டு. பிரணவம் என்பதன் பொருள் பிராணன் வழியாக ஓடுவது (அ ) எல்லா ஜீவன்களையும் ஊடுருவிச் செல்வதாகும். பிரணவ மந்திரத்தின் உட்கருத்தையும், உயர்ந்த முக்கியத்துவத்தையும் பற்றிக் கூறும்பொழுது பகவான்பாபா, “ஓம் இதி ஏகாக்ஷரம் பிரம்மா”, ஓரெழுத்து ஓம் பிரம்மமே என்கிறார்.
மந்திரம் என்பது வார்த்தைகளின் தொகுப்பு மட்டும் கிடையாது. மந்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிக சக்தி வாய்ந்தது. மந்திரம், மனிதனின் அகசக்தியிலிருந்துத் தோன்றுகிறது. மந்திரத்தைச் சரியான முறையில் ஓதினால் மனிதனுக்குள்ளே உள்ள தெய்வீகசக்தி வெளிப்படுகிறது.
மந்திரத்தை ஓதும் பொழுது, தெய்வீக அதிர்வு ஏற்படுகின்றது. அது பிரபஞ்சத்திலுள்ள மூலஒலியையும், பிரபஞ்ச உணர்வையும் இணைக்கிறது. பிரபஞ்ச அதிர்வே வேதமாக உருவெடுத்துள்ளது.
(http://www.theprasanthireporter.org/2013/05/omkara/)
பிரபஞ்ச சக்தி உள்ளது என்பதை அறிவியல் உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. பிரபஞ்ச நுண்ணலை பின்புலக் கதிரியக்கத்தை (Cosmic microwave background radiation – CMB))க் கண்டுபிடித்ததற்காக 1978-ல் அர்னோபென்ஜியாஸ், ராபர்ட்வில்சன் ஆகிய இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது. 1964-ல் பெல்சோதனைக் கூடத்தில் இந்த இரண்டு ஆராய்ச்சியாளர்களும் தற்செயலாகப் பிரபஞ்சநுண்ணலையைக் கண்டுபிடித்தபொழுது, ஒரு வேளை தங்கள் ஆராய்ச்சிக் கருவி பழுதடைந்து விட்டதால் அது தோன்றியிருக்கலாமோ என்று கருதினர். அந்தப் பின்புலசப்தத்தைப் பறவை மலக்கழிவுகள் (white dielectric material) என்று சிறிது காலம் அவர்கள் கருதினர் (Fox, 2002, p.78).
மின்காந்த அலைகளை ஏற்கவும், பரப்பவும் உதவும் சாதனமான ஆன்டனாவை வானத்தை நோக்கிக் குவித்த பொழுது, மின்காந்த கதிரியக்கம் வானிலிருந்து வராமல், ‘ஹிஸ்’ அல்லது ‘ஹிம்’ என்ற தொனியுடன் வேறு எங்கிருந்தோ கேட்டது. இதைபற்றித் தெரிந்து கொள்ள பென்ஜியாஸும், வில்சனும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ராபர்ட்டைக்(Dicke) என்பவரின் உதவியை நாடினர். ராபர்ட்டைக்கும் அவருடன் பணிபுரிந்தவர்களும் ‘ஹிஸ்’, ‘ஹிம்’ என்ற அதிர்வுத்தொனி பெரும் திடீர் வெடியோசையின் (Big Bang) எதிரொலியே என்று கூறி புதிரை விடுவித்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னரே, வெடியோசை உண்மையில் நடந்திருந்தால், விண்ணில் இடைவிடாத ஒரு கதிரியக்கம் இருந்திருக்கும் என்று கருதப்பட்டது. ஆக அறிவியல் உலகம் பிரபஞ்சசக்தியின் இருப்பை ஏற்றுக்கொண்டது
(வெய்ன்பர்க், 1977, பக்கம் – 50; ஹோய்ல், 2000, பக்கம் -80.)