பீட்டர்
பீட்டர்
மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த நெதர்லாண்ட் என்று அழைக்கப்பெறும் ஹாலந்து நாடு, கடல் மட்டத்திற்கும் கீழே இருந்தது. கடல் நீர் உள்ளே புகுந்து விடாமல் நாட்டைக் காப்பாற்ற கடல் ஓரத்தில் அணைக்கட்டு போன்று நீளமான மதில் சுவர்கள் அமைத்திருந்தனர்.
வெகு நாட்களுக்கு முன்பு இது போன்ற அணை கட்டப்பட்ட போது, இப்போது கட்டப் பெறுவது போல் உறுதியோடு கட்டுவது இயலாது. அதனால் அவை அவ்வளவு உறுதியாக இல்லை. அடிக்கடி கடல் நீரால் அரிக்கப்பட்டு அந்த சுவரில் அவ்வப்போது ஒரு சிறு ஓட்டை விழுந்து நீர் கசிந்து உள்ளே வரத் துவங்கும் உடனுக்குடன் அதை கவனித்து சீர் செய்யா விட்டால் அது மேன்மேலும் அரித்து வந்து ஓட்டை பெரிதாகி கடல் நீர் நகரத்தினுள் புகுந்து கடலோரத்தில் குடியிருப்பவர்களை மூழ்கடித்து விடும். அதனால் இரவு பகலாக எப்போதும் அந்த சுவரை மிக எச்சரிக்கையாக கவனித்து விழிப்புடன் பாதுகாத்தனர்
ஒரு நாள் மாலை சூரியன் மேற்கே மறைந்த பிறகு, பீட்டர் என்ற பெயர் கொண்ட ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் அணையில் ஒரு சிறு கசிவைக் கண்டான். அங்கு இருந்த காவலாள் அப்போதுதான் வீட்டிற்கு போனான். அவன் திரும்பி வர கொஞ்ச நேரமாகலாம். பீட்டர் அந்த சுவரின் மோசமான நிலைமையையும் நெருங்கிவரும் ஆபத்தையும் உணர்ந்தான். பலம் கொண்ட மட்டும் கத்தி உதவிக்கு யாரையாவது வருமாறு கூப்பிட்டான். அதே சமயம் நீர் கசியும் ஓட்டையில் தன் சின்னஞ்சிறிய மெல்லிய விரலைவிட்டு அடைத்தான். அவனது கத்தல்களுக்கு எந்தப் பக்கத்திலிருந்தும் ஒரு பதிலும் இல்லை. குளிர் காற்று அவனது எலும்புகளில் ஊடுருவியது. சில்லென்ற தண்ணீர் விரலை விரைக்க வைத்தது. அதற்குள் ஓட்டையும் பெரிதாகவே அவன் ஒவ்வொரு விரலாகச்சேர்த்து வந்து இறுதியில் தன் கை முழுதும் விட்டு அடைத்தான். அப்போது அவன் குரலும் மங்கிகொண்டே வந்தது. அந்த கை பொருந்தியும் பலனற்று ஓட்டை பெரிதாகவே அவன் மற்றொரு கையையும் சேர்த்து வைத்து அடைத்தான்.
குளிரினாலும் நீரின் குளிர்ச்சியினாலும் அவன் மட்டும் விரைத்து போகாமலிருந்தால் அரித்துக் கொண்டு பெரிதாகிவரும் ஓட்டையில் தன் கால்களையும், ஏன் உடம்பையே கூட செருகி நீர் கசிவதை அடைத்திருப்பான். ஆனால் அதற்குள் அவன் விறைத்துபோய் நினைவிழந்து விட்டான். இந்த நிலையில் தான் அவனை காவலாளி காவலுக்கு வந்தபோது கண்டான்.
கேள்விகள்:
- உன் சொந்த சொற்களில் துணிவுமிக்க பீட்டரின் கதையை எழுது
- இதுபோன்ற ஒரு கதை உனக்கு தெரியுமா?