மக்கள் சேவையே மாதவன் சேவை

Print Friendly, PDF & Email
மக்கள் சேவையே மாதவன் சேவை

செருப்பு தைக்கும் தொழிலாளி மார்ட்டின் மார்பின் மீது புனிதநூலான பைபிளை வைத்துக்கொண்டு மனதில் கிருஸ்துவின் அறிவுரைகளை உன்னித்துக் கவனித்துக் கொண்டே உறங்கினான். “கவனியுங்கள்! நான் கதவருகே வந்த தட்டுவேன். எந்த மனிதனாவது என் குரலைக்கேட்டு கதவைத் திறந்துவிட்டால் நான் அவன் வீட்டுக்குள் வருவேன் அவனோடு உணவு உண்பேன். அவனோடு உறைவேன்.”

“அதுபோன்று மேற்கொண்டு வருபவனுக்கு வந்து என் தந்தையாரோடு என்னுடைய சிம்மாசனத்தில் என்னுடன் அமரும் பேற்றை அருளுவேன். நானும் அதுபோலவே வந்து என் தந்தையாரோடு அவருடைய சிம்மாசனத்தில் அமர்ந்தவனேயானாலும்”

Martin with his tea waiting for the Lord

இறைவன் அன்று இரவு அவன் உறங்கும்போது கனவில் வந்து மறுநாள் அவனைப் பார்க்க வருவதாக உறுதி கூறினார். அதனால் மறுநாள் விரைவாகத் தன் பணிகளை முடித்து விட்டு, இருவருக்கான உணவு, தேனீர் இவற்றை ஆயத்தம் செய்து, சூடாக இருக்க அடுப்பில் வைத்துவிட்டு வழிமேல் விழி வைத்து இறைவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான்

காலையில் பனிபெய்து கொண்டிருக்கும்போதே அவன் கண்களில் முதலில் பட்டது தெருக்களை சுத்தம் செய்யும் நகர் மன்றப்பணியாள். தெருவோர் விழித்தெழுந்து கதவுகளை திறப்பதற்குள் அவன் தெருவை சுத்தம் செய்து முடித்து விடவேண்டும். அவனைக் கண்ணுற்ற மார்ட்டின் பரிதாபப்பட்டான்.வீடுகளிலுள்ளவர்கள் தணல் அடுப்புகளை அறையினுள் மூட்டிச் சூடான அந்த அறைகளில் ஆனந்தமாக உறங்குகிறார்கள். அவர்களுடைய கதவுகளிலும், சன்னல் வெளிப்புறங்களிலும், உறைந்துள்ள பனிக்கட்டிகளை அப்புறப்படுத்துவதற்காக, அந்த வயதான பணியாள் குளிரில் விரைத்துப்போய் வேலை செய்துக்கொண்டிருந்தான். இந்த எதிர்மாறான நிகழ்ச்சி மார்ட்டினின் மனதைத் தாக்கித் துன்புறுத்தியது. உள்ளிருப்பவர்கள் கனத்த கம்பளிப் போர்வைக்குள் அடங்கியிருக்க நடுங்கும் குளிரில் வயதான கிழவன் வெளியே வேலை செய்தான்.

மார்ட்டின் அந்தக் கிழவனை வீட்டினுள் அழைத்து நடுங்கும் குளிரிலிருந்து அவனைக் காப்பாற்றினான். தன் பங்கு தேனீரை தந்து உபசரித்தான். தணல் அடுப்பருகே குளிர் காயச் செய்தான். தேனீர் அருந்தி உடலையும் சூடாக்கிக்கொண்ட பிறகு மார்ட்டினுக்கு நன்றி கூறிவிட்டு கிழவன் பணியாற்றச்சென்றான்

அடுத்ததாக மார்ட்டின் தன் வீட்டருகே பசியினாலும் குளிரினாலும் வாடியவளாய் ஓர் அடிகூட எடுத்துவைக்க இயலாது, துவண்ட ஒரு வயதான கிழவியைக் கண்டான். மார்ட்டின் அவளையும் உள்ளே அழைத்து, தன் கம்பளி போர்வையை அவளுக்குத் தந்து தன் பங்கு உணவையும் சாப்பிடத்தந்தான். அவளும் உண்டு முடித்து, அவனை வாழ்த்திவிட்டு அகன்றாள்

அடுத்தபடி, அவன் பார்த்தது பசியினால் துடிக்கும் குழந்தையை சுமந்து சென்ற ஒரு தாய். அவளையும் மார்ட்டின் உள்ளே கூப்பிட்டு கடவுளுக்காக வைத்திருந்த உணவை அவளுக்குத் தந்து அவருக்காக வைத்திருந்த பாலைக் குழந்தைக்கு அருந்தக்கொடுத்தான். இறந்து போன தன் மனைவியின் எஞ்சியிருந்த உடுப்புகளை அவளுக்கு உடுத்திக்கொள்ளத் தந்தான். அவளும் பிறகு நன்றி கூறிவிட்டு குழந்தையுடன் சென்று விட்டாள்

Lord in the form of old man, woman and mother

இதற்குள் மாலை வந்து சூரியன் மங்கத் துவங்கி விடவே இனிமேல் இறைவனை எதிர்பார்ப்பது இயலாத செயலாகி விட்டது என்று எண்ணினான் மார்ட்டின்.துயரமும் ஏமாற்றமுமான ஒரு கலவையான எண்ணங்களால் அலைக்கழிக்கபட்டு அவன் துவண்டு தன் நாற்காலியில் அமர்ந்தான். ஒருவேளை அந்த நேரத்தில் ஆண்டவன் வந்துவிட்டால் அவருக்குத் தர அவன் என்ன வைத்திருந்தான்? அவனிடம் உணவும் இல்லை. பாலும் இல்லை இத்தகைய நினைவுகள் அவனை அலைக்கழித்தபோது அவன் மனதை துயரத்தினால் ஓர் இருள் கவ்வியது, அந்த இருள் இரவு வந்துவிடவே உலகையும் பற்றியது. அப்போது தன் குடிசைக்குள் யாரோ நடப்பது போன்ற காலடி ஓசையைக்கேட்டான் மார்ட்டின், அவர் அந்த வீட்டினுள் ஓர் ஒளியை ஏற்றுவதையும் கண்டான். துயர நினைவுகளால் குழம்பியிருந்த அவன் அதுவரை விளக்கு கூட ஏற்றவில்லை. அதனால் திடீரென வீட்டினுள் ஒளியைக் கண்டதும் வியந்து திடுக்குற்றான்.

அந்த ஒளிவெள்ளத்தில் மார்ட்டின் குளிரில் நடுங்கிய வயதான நகர்மன்ற பணியாளைக் கண்டான். நன்றி கூறிவிட்டு அவன் மறைந்ததும் அடுத்து அந்த வயதான பெண்மணி வந்தாள். அவளும் மார்ட்டினை வாழ்த்திவிட்டு அகன்றதும் இறுதியாக பசியால் வாடிய தாயும் சேயும் தோன்றினர். அவர்களும் வந்தனை செலுத்தி விட்டு மறைந்தனர். பிறகு அந்த ஒளியில் தோன்றுவது யார்? முன் வந்த எவரும் இல்லை.ஆ! அது இறைவரே தான். காலையிலிருந்து மார்ட்டின் அவருக்குத் தான் பணிபுரிந்து வந்திருக்கிறான்.” நான் தான்! அங்ஙனம் வந்ததும் நானேதான்! என்று மகிழ்ந்துகூறி எட்ட இருந்தே அவனை அரவணைத்து வாழ்த்திவிட்டு மறைந்து விட்டார்

கேள்விகள்:
  1. மார்ட்டின் எத்தைகைய மனிதனாக இருந்தான்?
  2. உறக்கத்தில் அவனிடம் இறைவன் என்ன கூறினார்?
  3. தெரு சுத்தம் செய்பவனுக்கு அவன் எங்ஙனம் உதவினான்?
  4. அடுத்ததாக மார்ட்டின் யாரைச் சந்தித்தான்?
  5. இந்த கதையினால் நீ என்ன கற்றுக் கொள்கிறாய்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: