நாமஸ்மரண மகிமை
கதை: நாரதரும் பகவான் விஷ்ணுவும்
Scene: ஒரு முறை நாரத ரிஷி ஸ்ரீமன் நாராயணனைச் சந்திக்கச் சென்றார். பகவான் விஷ்ணு நாரதரைப் பார்த்து கேட்டார். நாராயணன்: நாரதா, நலமாக உள்ளாயா? நாரதர்: நலம்தான் பிரபு. வழக்கம்போல் மூவுலகத்தையும் சுற்றிக்கொண்டிருக்கிறேன். நாராயணன்: சரி, நீ அப்படிப் பிரயாணம் செய்யும்போது, மனதில் என்ன நினைத்துக்கொண்டுச் செல்வாய்? நாரதர்: பிரபு! தங்களைத்தவிர வேறென்ன? எப்பொழுதும் “நாராயணா நாராயணா” தான். ஆனால் ஒரு சந்தேகம். பிரபுவின் நாமத்தை சொல்வதனால் என்ன பயன் கிடைக்கும்? நாராயணன்: நீ நாமஸ்மரணம் செய்கிறாய். ஆனால் அதன் ருசி அறியவில்லையே நாரதா? ஒரு வேலை செய். அதோ அந்த மரத்தின் மேல் ஒரு காகம் இருக்கிறதே அதனிடம் சென்று, என்ன பயனென்று கேள். நாரதர் உடனே காகத்திடம் சென்று “நாராயணா என்னும் நாமம் ஜபிப்பதனால் என்ன பயன்?” என்று கேட்டார். இதைக் கேட்ட மாத்திரத்தில் அந்தக் காகம் கீழே விழுந்து இறந்தது. நாரதர் அதிர்ந்தார். நாராயணனிடம் ஓடிச் சென்று கூறினார்: நாரதர்: பிரபு என்ன இது? நான் அந்தக் காகத்திடம் கேட்டேன். அது உடனே கீழே விழுந்து இறந்தது. இதுதான் பலனா? நாராயணன்: நாரதா! உண்மையை அறியவேண்டுமென்றால் நிறைய நேரம் செலவிடவேண்டும். அங்கு ஒரு ஏழைப் பிராமணர் வீடு உள்ளதே, அங்கு ஒரு கூண்டில் அழகான கிளி ஒன்றிருக்கும். அழகானப் பச்சை நிற மேனி சிவப்பு நிற அலகு. அதனிடம் சென்று கேட்டுப் பாரேன். உண்மை அறியும் ஆவலுடன் நாரதர் உடனே கிளியிடம் விரைந்தார்.“நாராயணன் நாமம் சொல்வதனால் என்ன பயன்?” என்று கிளியிடம் கேட்டார். உடனே கிளியும் கீழே விழுந்து இறந்தது. பதைத்துப்போன நாரதர் நாராயணனிடம் சென்றார். நாரதர்: நான் அந்தக் கிளியிடம் கேட்டேன். அதுவும் கீழே விழுந்து இறந்தது. இதுதான் கிடைக்கும் பலனா? நாராயணன்:ஒரு உண்மை அறியவேண்டுமென்றால் விடா முயற்சி வேண்டும் நாரதா. அந்தப் ப்ராமணர் வீட்டில் பசு ஒன்று நேற்றுதான் ஒரு கன்று ஈன்றிருக்கிறது. அந்தக் கன்றிடம் சென்று கேட்டு வா. நாரதர் அந்தக் கன்றிடம் சென்று “நாராயணன் நாமம் சொல்வதனால் என்ன பயன்?" என்று கேட்டார். கன்றும் கீழே விழுந்து இறந்ததைப் பார்த்தார். மிகவும் வருத்தத்துடன் மீண்டும் நாராயணனிடம் சென்றார். நாரதர்: உண்மைத் தெரியும் வரை நான் இந்த விஷயத்தை விடப்போவதில்லை பிரபு! கன்றும் விழுந்து இறந்தது. இதுதான் பலனா? நாராயணன்: அவசரப்படாதே. "பதறிய காரியம் சிதறிப்போகும்." அதுவே கவலைக்கு வழிவகுக்கும். அதனால் பொறுமையாய் இரு. இந்த நாட்டை ஆளும் அரசனுக்கு நேற்றுதான் ஒரு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையிடம் சென்று கேட்டுப்பார். நாரதர் பயந்துவிட்டார். “அந்தக்குழந்தையும் இறந்தால் அரச வீரர்கள் நம்மைச் சிறைபிடிப்பார்கள். நாமும் இறக்கவேண்டியதுதான் இதுதான் கிட்டும் பலனோ” என்று நினைத்தார். நாராயணன்: அவசரப்படாதே. சென்று அந்தக்குழந்தையிடம் கேட்டுப்பார். நாரதர் அந்த அரசனிடம் சென்று குழந்தையைக் காணவேண்டும் என்று கேட்டார். ஒரு தங்கத்தட்டில் குழந்தை எடுத்து வரப்பட்டது. குழந்தையிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என அரசரிடம் கேட்க, அரசரும் சம்மதித்தார். நாரதர்: நாராயணன் நாமம் ஜபிப்பதனால் என்ன பயன்? இதைக் கேட்டவுடன் குழந்தை இளவரசன் பேச ஆரம்பித்தான். இளவரசன்: நாரதரே இவ்வளவுதான் நீங்கள் கற்றதா? 24 மணி நேரமும் பகவன் நாமத்தையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அதன் ருசி உங்களுக்குத் தெரியவில்லையே. முதலில் நான் காகமாக இருந்தேன். என்னை வந்து கேட்டீர்கள், “நாராயணன் நாமம் ஜபிப்பதனால் என்ன பயன்” என்று அதனைக் கேட்டவுடன் என் வாழ்க்கைக் கடைத்தேறியது. நான் உயிரைத்துறந்து மீண்டும் ஒரு கிளியாகப் பிறந்தேன். தாங்கள் மீண்டும் வந்து அதே கேள்வியைக் கேட்டீர்கள். நான் மீண்டும் ஒரு கன்றுக்குட்டியாகப் பிறந்தேன். காகத்தைவிட கிளி சிறந்தது. கிளியைவிடப் பசுங்கன்று சிறந்தது. ஏனென்றால் மக்கள் பசுவை வணங்குகிறார்கள். அப்பொழுதும் நாராயணன் நாமம் கேட்டேன். உயிரைத் துறந்து இப்பொழுது இளவரசனாகப் பிறந்திருக்கிறேன். இறைவன் நாமத்தை ஜபிப்பதனால் பிறவியின் அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல முடியும். இப்பொழுது நான் ஒரு இளவரசனாகப் பிறந்திருப்பது என் அதிர்ஷ்டம். நாராயணன் நாமத்தின் மகிமை இதுதான்.
- நம்பிக்கை அன்பு மற்றும் பக்தி இந்த மூன்றும் இருந்தால் நாம் நம் பிறவியின் உயர்ந்த நிலையை அடையலாம்.
- இறைவனின் நாமத்தைக் கேட்ட காகம் கிளியானது. பிறகு கன்றானது. முடிவில் ஒரு இளவரசனானது. அதற்கு ஒரு மானிடப் பிறவி கிடைத்தது.
- இறைவன் நாமத்தைக் கேட்டதற்கே இவ்வளவு சக்தி என்றால் அவருடைய நாமத்தை ஜபிப்பதன் சக்தி எப்படி இருக்கும்? அதனால் நாம ஸ்மரணத்தின் சக்தி அபாரமானது.