எப்படி தொடங்குவது?
- குழு நடவடிக்கைக்கான ஒரு மையக்கருத்தை அடையாளம் காணும் வகையில் வகுப்பில் விவாதத்தினை துவங்க வேண்டும். நாம் எடுத்துக் கொள்ளும் கருத்து/தலைப்பு குழந்தைகளின் ஆர்வத்தை கடைசி வரை நிலை நிறுத்துவதாக இருக்க வேண்டும். அவர்களின் சூழ்நிலை,வாழ்க்கை நடைமுறை தொடர்பான தலைப்பைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
- தலைப்பைத் தேர்ந்தெடுத்தவுடன்,அது தொடர்பான பரவும் சிந்தனையுடன் இக்குழுசெயல்பாட்டை ஆரம்பிக்கிறோம்.தலைப்பு தொடர்பாக அவர்கள் நினைவிற்கு வரும் வார்த்தைகளை சொல்ல ஆசிரியர் ஊக்கப்படுத்துகிறார்.அவர்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் கரும்பலகை/வெள்ளைபலகையில் எழுத வேண்டும். ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வெளிப்பட இது வாய்ப்பு அளிக்கிறது.சில நேரங்களில் ஆசிரியரே வியப்படையும் வகையில் விசித்திரமான,யோசிக்க வைக்கும் வார்த்தைகளைக் குழந்தைகள் கூறுவதை ஆசிரியர் காணலாம்.குழந்தைகளின் புரிதல் திறனை ஏற்றுக்கொண்டு,வார்த்தைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம்.
- சிந்தனை பரவுதல் பயிற்சி திருப்தி அளிக்கும் நிலையை அடைந்த உடன்,ஒருங்கிணைப்பு படம் தயாரிக்க தொடங்கலாம்.ஒருங்கிணைப்பு படத்தின் ஒவ்வொரு பகுதியும் வார்த்தைகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும்.குழந்தைகள் ஏற்கனவே அறிந்த பாடங்களான, விஞ்ஞானம்,கணக்கு,சமூக அறிவியல்,மொழி ஆகியவைகளின் கீழே வார்த்தைகளை ஒன்றிணைப்பதைக் காணலாம்.
- அடுத்து, ஒவ்வொரு பிரிவின் கருத்துக்களை வகுப்பில் பகிர்ந்து கொள்ளுதல் தொடங்குகிறது.ஒருங்கிணைப்புப் படம்,ஆரம்பத்தில்,மிகப் பெரியதாகவும் சிக்கலானதாகவும் தோன்றும்.வார்த்தைகளின் ஒருங்கிணைப்பில் பல இணைப்புகள் இல்லாததை,ஆசிரியர் மறைமுகமாக சுட்டிக்காட்டலாம்.படத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த ஊக்குவிக்கலாம். குழந்தைகள் வெளிப்படுத்தும் ஆர்வத்தின் அடிப்படையில், படத்தின் ஒரு சில இடங்களில் மேலும் சரிசெய்யச் சொல்லலாம்.
- ஒருங்கிணைப்புப்படம் செய்து முடித்த உடன், 5 அல்லது 6 குழந்தைகள் கொண்ட குழுக்களாக வகுப்பைப் பிரிக்க வேண்டும்.ஒவ்வொரு குழுவும், ஒருங்கிணைப்புப்படத்தின் ஒவ்வொரு உட்பிரிவைத் தேர்ந்தெடுத்து அந்த உட்பிரிவின் மேல் தங்கள் வேலையைத் துவக்கச் சொல்ல வேண்டும்.தங்களுக்குப் பிடித்தமான ஒரு உட்பிரிவை அவர்கள் தேர்ந்து எடுப்பது இயல்பான ஒன்றே.ஒரே உட்பிரிவைத் தொடர்ந்து தேர்ந்தெடுப்பதை ஊக்குவிக்கமால், அடுத்தடுத்த வகுப்புகளில்,தங்கள் எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் உட்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.
அடுத்து ,சாத்தியமான நடவடிக்கைகளை வரிசைப்படுத்துதல் துவங்குகிறது. குழந்தைகள் வெளிப்படுத்தும் செயல்திறமையைப் பொறுத்தே இது அமைகிறது. குழந்தைகள் தங்கள் செயல்திறமைகளை ‘மொழி (சிறு நாடகம், கவிதை,பாடல்கள்) கணிதம் (நில அளவைப் படம், மதிப்பீடு, அளவைகள், வரைபடம் ) படைப்பாற்றல் (இசை,கைவேலைப்பாடு,நடித்தல் மற்றும் கலை ஆற்றல்) செய்தித்தொடர்பு(பேட்டி காணுதல், எழுதுதல்,பேசுதல்,கதை சொல்லுதல்) ஆகிய திறமைகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
ஒவ்வொரு தலைப்பின் மீதும் செய்யும் ‘அனுபவம் மூலம் கற்றல்’ செயல்பாடுகள்,6 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை நடக்கலாம். பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் என ஒதுக்கலாம்.பள்ளிகளில் நெகிழ்வான பாடத்திட்டம் உள்ளதால் இது சாத்தியமான ஒன்றே.புதுமையான வழிமுறைகள் மற்றும் குறிப்பிட்ட வடிவமைப்பு இல்லாத வகுப்பு நேரங்களைப் பின்பற்ற ஆசிரியர்கள் உறுதி கொள்ள வேண்டும். - இந்தப் பயிற்சி அனைத்தும் முடிந்த பிறகு, இந்நிகழ்ச்சிகளை மற்ற வகுப்புகள்,பெற்றோர்கள் மற்றவர்கள் முன்னிலையில் செய்து காட்ட வாய்ப்பு அளிக்க வேண்டும். வரை படங்கள், மாதிரிப் படிவங்கள், குறு நாடகங்கள்,பாடல்கள்,கதைகள்,விளையாட்டு போன்ற நடவடிக்கைகள் மூலம் பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதன் பிறகு,வகுப்பில் அடுத்த தலைப்பைத் தேர்ந்தெடுத்து இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.
ஆசிரியரின் பங்கு:
மேற்கூறிய நடைமுறையில் ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். முக்கியமான குறிக்கோள்களை மனதில் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.ஆசிரியர், குழந்தைகளுக்கு ஒரு நண்பன்,வழிகாட்டி மற்றும் தத்துவ ஞானம் போதிப்பவர்.எளிதில் அணுகக்கூடியவராகவும், அவ்வப்போது ஊக்கமளிப்பதாலும்,ஆசிரியர் நண்பராகிறார். அணுகுமுறைகளை அதிகாரமாக சொல்லாமல்,ஆலோசனைகளாக சொல்லுவதால் ஆசிரியர் வழிகாட்டி ஆகிறார்.ஆசிரியரின் முன்னிலை அவரின் தாக்கம்,அவரின் ஆலோசனைகள், குறிப்புகள் குழந்தைகளை வசீகரித்து,தங்களிடம் மறைந்துள்ள மதிப்பீடுகளை கண்டுபிடித்து வெளிக் கொணர உதவுதால்,ஞானமளிப்பவராகிறார்.
சரியாக எழுதவும் பேசவும் வராத சிறு குழந்தைகளிடம்,குழுச் செயல்பாடு முடிந்தவுடன், கேள்வி கேட்டல்,விவாதித்தல் மிகவும் அவசியமானது. செயல் பாட்டின் போது என்ன செய்தார்கள்,என்ன புரிந்து கொண்டார்கள் என்பதை விவரிக்கச் சொல்ல வேண்டும்.வார்த்தைகளை பிரயோகிக்கும் திறன்,செய்திகளைப் பரிமாறும் திறன் இதனால் வளர்கிறது.மேலும்,சுய நம்பிக்கை,சுய திருப்தியும் பெறுகிறார்கள்.
‘அனுபவம் மூலம் கற்றல்’ என்பது ஒரு அணுகுமுறையே தவிர,விதிமுறைப்பயிற்சி அல்ல.பாடத் திட்டத்தைப் பற்றி மட்டும் கருதும் குறுகிய நினைப்பில் இருந்து வெளியே வர வேண்டும்.