விநாயக சதுர்த்தியின் -உட்கருத்து
பிரம்மாவினால் படைக்கப்பட்ட முதல் யுகமான சத்ய யுகத்தில் சிந்தூராசுரன் என்ற அரக்கன் வசித்து வந்தான். அவன் மிகுந்த சக்தி படைத்தவனாக இருந்தான். அவன் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். ஆனால் அவன் தான் பெற்ற சக்தியை தீமை புரிவதற்கும் இழிவு செயல்களுக்கும் பயன்படுத்தினான்.
தெய்வங்களால் கூட அவனை ஜெயிக்க முடியாது என்ற நிலை உருவாகியது. அவன் சாதுக்களையும் முனிவர்களையும் சிறையில் அடைத்து துன்புறுத்தி வந்தான். இந்த பிரபஞ்சத்தில் தன்னுடைய வலிமைக்கு நிகராக யாருமே இல்லை என்ற இறுமாப்பில் இருந்தான்.
இவன் கொடுமைகள் தாங்காமல் சாதுக்களும் முனிவர்களும் பகவான் நாராயணரிடம் சரணடைந்தனர். சிந்தூராசுரன் பிடியிலிருந்து தங்களை விடுவிக்குமாறு வேண்டினர். பகவான் நாராயணன் அவர்களிடம்“பரித்ராணாய சாதூனாம் வினாசாய சதுஷ்க் ருதாம்” என்று கூறி அபயம் அளித்தார். அதாவது “நன்மையை காக்கவும் தீமையை அழிக்கவும் நான் காலந்தோறும் அவதரிக்கிறேன்” என்று கூறி சாதுக்களை அச்சமுறத் தேவையில்லை என்றும், சிவ பார்வதிக்கு தன் அம்சமான ஒரு குழந்தை பிறந்து சிந்தூராசுரனை அழிக்கும் எனவும் வாக்களித்தார்.
பார்வதி கருவுற்றிருந்த செய்தி சிந்தூராசுரனுக்கு தெரிந்தது. அவள் பெற்றெடுக்கும் பிள்ளை அவனை கொல்லுமென்றும் அவன் அறிந்திருந்தான். எனவே அவ்வசுரன் ஒரு சிறு உருவெடுத்து பார்வதியின் கருப்பையில் புகுந்து உருவாகி வந்த குழந்தையின் தலையை நீக்கிவிட்டு மறைந்தான். ஒன்பது மாதம் கழித்து பார்வதி குழந்தையை பெற்றெடுத்த போது அது தலையற்று இருந்தது. எனினும் நாராயணன் அம்சமென்பதால் உயிரோடு இருந்தது. குழந்தை பிறந்த பொழுது பார்வதி தலையற்ற முண்டத்தைக் கண்டு திகைத்து அலறினாள். சிவபெருமான் அவளை கவலையுற வேண்டாமென்று ஆறுதல் கூறினார். பின் தன் பூத கணங்களில் ஒருவனான வீரபத்திரனை அழைத்தார். அவனிடம் “நீ பூமிக்கு சென்று எந்த உயிர் தென் திசையில் தன் தலையை கால்மீது வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறதோ அதன் தலையைக் கொண்டு வருவாயாக” எனக் கூறினார். வீரபத்திரன் எவ்வளவு தேடியும் தென்திசையில் கால் மீது தலையை வைத்து உறங்கும் ஒரு உயிரையும் காண முடியவில்லை. ஏனென்றால் தென்திசை எமனுக்கு உரியது. ஆகவே இவ்விதம் யாரும் உறங்குவதில்லை. எனவே வீரபத்திரன் இறைவனின் ஆணையை நிறைவேற்ற முடியாமல் சிவனிடம் நடந்ததைக் கூறி ஒரே ஒரு யானை மட்டும் தென் திசையில் கால் மீது தலை வைத்து தூங்குவதாகவும், அதன் தலையை கொண்டுவரலாமா? எனவும் சிவனின் விருப்பத்தை கேட்டான். சிவன் கொண்டுவர ஆணையிட்டதும் வீரபத்திரன் யானை தலையை வெட்டி கொண்டு வந்தான். சிவன் அத்தலையை குழந்தையின் உடம்பில் பொருத்தினார்.
ஆனால் பார்வதி தேவிக்கு மனக்குறை அகலவில்லை. தெய்வீக புத்திரன் மனித உடலில் யானைத் தலையுடன் இருப்பதை கண்டு உலகம் நகைக்குமே என வருந்தினாள். சிவபெருமான் அவளை கவலையுற வேண்டாம் என்று சொல்லி, “இந்த தெய்வீகக் குழந்தை ‘வித்யாபதி’ என அழைக்கப்படும். ஞானத்தையும் அறிவையும் அடியவர்களுக்கு வாரி வழங்கும். உலக அறிவாளிகள் அனைவரும் அவரைப் போற்றி வணங்குவர். அவரே ‘விக்னஹர்த்தா’ அனைத்து இடையுறுகளையும் போக்க வல்லவர். உலக மக்கள் அனைவரும் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்பாக கணேசரைத் தான் முதலில் வழிபடுவார்கள்” என ஆசீர்வதித்தார்.
கணேசரும் வளர ஆரம்பித்தார். அவர் எதற்காக அவதரித்தாரோ அந்த காரியம் நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர் சிந்தூராசுரனுடன் நர்மதை ஆற்றங்கரையில் போரிடக் கிளம்பினார். அது நீண்ட உக்ரமான யுத்தமாக நடந்தது. இறுதியில் “பரசு” என்ற ஆயுதத்தால் சிந்தூராசுரனை சம்ஹாரம் செய்தார். அவனுடைய தலையை கணேசர் துண்டித்ததும் கணேசரின் உடல் முழுவதும் இரத்தம் தெறித்தது. அதனால் கணேசரின் நிறம் சிவப்பாக ஆகியது. இது உண்மைக்கும் நன்மைக்கும் எதிரே தீமையும் மாயையும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்பதை குறிக்கின்றது. அதனால் நர்மதை ஆற்றின் கரைகளில் உள்ள செந்நிறக் கற்கள் எல்லாம் கணேசராகவே வழிபடப்படுகின்றன.
போர் முடிந்தவுடன் பகவான் கணேசர் ஓய்வெடுத்துக் கொள்வதற்காக குளுமையான நிழலாக உள்ள அடர்ந்த பசுமையான புல்தரையில் சிறிது தங்கினார். புத்துணர்வு பெற்றவுடன் அந்த அருகம்புல்லிற்கு ஒரு வரத்தை அளித்தார். யாரெல்லாம் அந்த புல்லைக் கொண்டு அவரை பூஜிக்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் அருள் பாலிப்பேன் என்று கூறினார். இனி இந்த கதையின் உள்ளார்ந்த முக்கியத்துவத்தை காண்போம்!
சிந்தூராசுரன் ஒரு அசுரனாக இருந்தாலும் அவன் செய்த தவத்தின் பயனாக மிகுந்த சக்தியை பெற்றிருந்தான். தவம் என்பது என்ன? ஏதேனும் ஒரு குறிக்கோளை வேண்டி இறைவனை நோக்கி ஆழ்ந்த நிலையில், மனதை ஒரு முகப்படுத்தி தன்னை மறந்த நிலையில் தியானம் செய்வதே தவமாகும்.
சாதுக்களும் யோகிகளும் இறைவனிடம் தீவிரமும், கவனமும், விருப்பமும் எந்த அளவு காட்டுகின்றார்களோ, அந்த அளவு இறையருள் கிட்டும் என்பது உணர்த்தப்படுகின்றது. அனைத்து சக்திகளும் அறிவும் ஆற்றலும் பெற்றபின் அவற்றை நல்லவற்றிற்கு பயன்படுத்தினோம் என்றால் அது தெய்வீகமாகும். அவ்வாறு இல்லாமல் தீயவைகளுக்கு பயன்படுத்தினால் நாமும் அசுரர்களாவோம். நல்லவையும் கெட்டவையும் எண்ணங்களால் ஏற்படுவன.
இரண்டாவதாக சிந்தூராசுரன் ஒரு சிறிய உருவில் பார்வதி தேவியின் கருப்பைக்குள் நுழைந்தான். இது வினோதமான தேவதைகளின் கதையைப் போல தோன்றும். எண்ணங்களின் சக்தியும் அதிர்வும் விளைவுகளை ஏற்படுத்தும். மந்திரம் (Mantra) என்ற சொல்லில் உள்ள Man என்பது மன அல்லது எண்ணுதல் என்றும் ‘tra’ என்ற பகுதி ஜம்புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுதல் என்றும் பொருளாகும். மந்திரம் என்பது பல எழுத்துக்களைக் கொண்ட குறிப்பிட்ட பொருள் கொண்ட ஒரு சொல். பேரொளி வாய்ந்த சக்தியின் கூட்டமைப்பாகும். அனைத்து சக்திகளும் ஆன்மாக்களுக்கெல்லாம் சிறந்த ஆத்மாவாகிய பரமாத்மாவிடமிருந்தே வெளி வருகின்றன. இறைவனின் தெய்வீக அருள் ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய அளவுக்கு நம் அனைவர் மீதும் பரவுகின்றது. இந்த சக்தியை, அருளை, நாம் எவ்வாறு பயன் படுத்துகிறோம் என்பது, அவரவர்களின் இதயத்தூய்மையைப் பொறுத்ததே.
பகவான் கிருஷ்ணன் உத்தரையின் கருப்பைக்குள் கருவாக வளர்ந்து கொண்டிருந்த பரீக்ஷித்தை அசுவத்தாமாவின் கோபக்கனலாகிய அம்பிலிருந்து காப்பாற்ற அச்சக்தியை உபயோகப்படுத்தவில்லையா? இறைவனை மனமார மெய்யுருகி வேண்டினால், தன்னிடமுள்ள அனைத்து சக்திகளையும் அவர் அளிப்பார். சிந்தூராசுரன் தன்னால் பெறப்பட்ட சக்தியை இறைவனிடமே உபயோகித்து இறுதியில் தன் அழிவுக்குத் தானே காரணம் ஆனான்.
கணேச பகவானுக்கு யானைத் தலையை தந்த சிவபெருமானால் ஒரு மனிதத் தலையை தந்தருள முடியாதா? சிவபெருமான் உணர்த்த விரும்பியது, ஒருவரது உருவமோ, செய்கையோ, முகச்சாயலோ எந்த சிறப்பையும் தருவதில்லை. அவன் எதை அடைந்தான் என்பதே முக்கியம். மனிதன் தன்னை உடலோடு ஒருமைப்படுத்திக் காண்பதற்கு அவனுடைய ஆணவமே காரணம். தன்னுள்ளே உறைந்திருக்கும் தெய்வீகத்தை உணர்ந்து கொள்வதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட சாதனம் தான் இந்த உடல். உடலை இயக்கும் மனம், ஐம்புலன்கள் ஆகியவற்றை அடக்கி ஆள வேண்டும். மாறாக ஐம்புலன்கள் மனதை ஆளவிட்டால் இறைவனை நாம் காணமுடியாது. இந்த உடல் அழகாக இருந்தாலும், அழகில்லாமல் இருந்தாலும் உடலை சாதனமாகக் கொண்டு உண்மையான தெய்வீகம் அதனுள்ளே இருப்பதை உணர வேண்டும்.
யானையின் தலை
யானை காட்டில் வசிக்கும் மிருகங்கள் அனைத்திலும் மிகப் பெரியது. அது மிகவும் புத்திசாலி, நல்ல ஞாபகசக்தியும் உடையது. அது காட்டின் வழியாக நடந்து சென்றால், பின்வரும் அனைத்து மிருகங்களுக்கும் தடம் அமைத்துக் கொடுக்கிறது. அது போன்று கணேச பகவானை நாம் தியானித்தால் அவர் அறிவு, ஞானம், ஞாபகசக்தி ஆகியவற்றை அளித்து தீய பழக்கங்களும், பாவங்களும் நம்மை அணுகாத வண்ணம் காப்பாற்றுவார்.
கணேச பகவானுக்கு நான்கு கரங்கள். அவை சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை ஆகியவற்றை வழங்குகின்றன. அவருடைய ஒற்றை தந்தம் அறிவுகூர்மையையும், மன ஒருமைப்பாட்டையும் குறிக்கும்.
இறைவன் நமக்கு கைகளை வழங்கியது மற்றவர்களுக்கு தேவையானதை கொடுப்பதற்குத் தான். பெறுவதற்கு அல்ல. ஆனால் நாம் அவற்றை தவறாக மாற்றி பயன்படுத்துகிறோம். அவர் கொடுத்த மந்திரம் “தா” (daa) அதாவது கொடுத்தல். தனம் (செல்வம்) கொடுப்பதற்கு பதிலாக தானம் பெறுகின்றோம். முன்பெல்லாம் மக்கள் தர்மத்திற்காகத்தான் வாழ்ந்தார்கள். இப்போது மக்கள் (Dhana) செல்வத்திற்காக வாழ்கின்றார்கள். இறைவன் மனிதனுக்கு சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை ஆகிய அனைத்தையும் அளித்திருக்கிறார். ஆனால் மனிதன் விவேகமின்மையால் தன்னுள்ளே உறையும் இந்த நான்கையும் உணராமல் வெளியே உள்ள செல்வத்தைத் தேடி அடைகின்றான்.
கணேச பகவானுக்கு மிகப் பெரிய வயிறு உள்ளதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு மற்றொரு பெயர் ‘விக்னஹர்த்தா’.அதாவது அவரை வழியடுகின்ற பக்தர்களின் வழிகளில் குறுக்கிடுகின்ற இடையூறுகளை விழுங்கி விடுவது போன்று பெரிய (பாத்திரம் போல்) வயிறு உள்ளது.
கணேச பகவானின் இரு பக்கங்களிலும் இரு பெண்கள் ரித்தி (Riddhi) சித்தி (Siddhi) உள்ளனர். ரித்தி செல்வங்களையும், சித்தி வெற்றியையும் குறிக்கன்றனர் கணேசர் இவ்விரண்டையும் நமக்கு வழங்குவார்.
கணேச பகவானது வாகனம் மூஞ்சூறு. கணேசரது உடல்வாகு எங்கே? இந்த சிறிய பிராணியின் உடல்வாகு எங்கே? இச்சிறிய பிராணியால் எவ்வாறு கணேசரை சுமந்து செல்ல முடியும்? இதனுள் தத்துவம் ஒன்று புதைந்திருக்கிறது. இப்பிராணி எவ்வளவு உணவுப் பொருள் கிடைத்தாலும் கொறித்துக் கொண்டே இருக்கும். திருப்தியே அடையாமல் மேலும் மேலும் உணவை தேடிக்கொண்டே இருக்கும். ஆனால் அந்த எலி, கணேச பகவானிடம் பணிவுடன் பூரண சரணாகதி அடைந்து அமைதி அடைகிறது. எலி எவ்வளவு உண்டாலும் திருப்தியில்லாமல் மேலும் மேலும் உணவுக்காக அலைகின்றதோ, அவ்வாறே மனிதனும் ஓர் ஆசை பூர்த்தி அடைந்தவுடன் மற்றொரு ஆசையால் கவரப்பட்டு அலைவான். விருப்பங்கள் நிறைவேற மேலும் மேலும் விருப்பங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இறைவனது பேரருளை வேண்டி நிற்காமல் அற்ப விருப்பங்களை தேடி அலைகின்றான்.
“கணேச” என்ற வார்த்தையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? கண என்றால் உயிரினங்கள். ஈச என்றால் இறைவன். எனவே அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் கணேசா. அவருக்கு மற்றொரு பெயர் கஜானனா. கஜ என்றால் யானை. ஆனனா என்றால் முகம். யானை முகத்தை உடையவர்.
ஒருநாள் பரமேஸ்வரன் தன் இரு மகன்களையும் அழைத்து யார் இந்த பிரபஞ்சத்தை முதலில் சுற்றி வருகின்றார்களோ அவர்களுக்கு ஒரு பரிசு தருவதாக அறிவித்தார். உடனே முருகப் பெருமான் தன் மயில் வாகனத்தில் ஏறி பிரபஞ்சத்தை சுற்றி வரச் சென்றார். ஆனால் பெரிய உடலை உடையவரும் மூஞ்சூரை வாகனமாகக் கொண்டவருமான கணேசர் உணவு அருந்திக் கொண்டிருந்தார். ஈசனும் தேவியும் உலகை சுற்றி வா என்று சொன்ன பிறகும் அவர் தன்னிலையிலிருந்து மாறவில்லை. முருகப் பெருமான் உலகைச் சுற்றி முடிக்கும் தருவாயில், கணேசர் வந்தார். அம்மை அப்பரே பேருலகம் என்று பெற்றோரை சுற்றி விட்டு தானே முதலில் உலகை வலம் வந்தவன் என்று கூறி, பழம் தர வேண்டினார். இறைவனே! யாவும் படைத்தவரே, நீங்கள் ஒவ்வொரு படைப்பிலும் ஊடுருவி இருப்பவர். ஆகவே உங்களைச் சுற்றி வருவது பிரபஞ்சத்தையே சுற்றி வருவதற்கு ஒப்பாகாதா? என்று கேட்டு அம்மையப்பரிடம் சரியான தீர்ப்பை கணேசர் பெற்றார்.
விநாயக சதுர்த்தி கொண்டாடும் போது இந்த புனிதமான உண்மையை நினைவு கூர்கிறோம்.
வித்யா– அறிவு, அதர்– தருபவர். அறிவை அளி்ப்பவர் வித்யாதரர். அந்த நாட்களில் குழந்தைகள் பள்ளியில் சேரும் போது முதன் முதலில் கற்றுத் தரும் வாக்கியம் “ஓம் ஸ்ரீ கணேசாய நம:“ அதாவது கணேச பகவானின் மலரடியை வணங்குகிறேன்.
லோகமான்ய திலகர் பூனாவில் இந்திய சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்த நாட்களில் முதன் முதலில் இவரே மக்களை கூட்டி கணேச பூஜையை கொண்டாட ஆரம்பித்து வைத்தவர். இந்த கூட்டங்களில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற உறுதியை மேற்கொள்வதற்கும், கருத்துக்கள் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும், மக்களை ஒன்றாகக் கூடச் செய்தார். நமது பெறற்கரிய சுதந்திரம் கூட முதலில் விநாயகரை தொழுத பின்தான் கத்தியின்றி இரத்தமின்றி கிடைத்தது என்பர்.