இறை அர்ப்பணம்
தினமும் நாம் உறங்கச் செல்லும் முன், அன்றைய தினத்தில் நாம் செய்த அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். அப்படி இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டிய செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? நற்செயல்களாக இருக்க வேண்டும் அல்லவா? நாம் தினமும் செய்யும் இந்த இறை அர்ப்பணம், நம்மை நற் செயல்கள் செய்வதற்குத் தூண்டுகிறது. மேலும், தீய எண்ணம் மற்றும் சொற்களைத் தவிர்க்கவும், தவறி செய்துவிட்டால் அவற்றை நினைத்து மனம் வருந்தவும் நமக்கு வழி காட்டுகிறது.
இதற்கு உதாரணமாகத் திகழ்ந்த ஒரு பக்தையின் அழகிய கதையைப் பார்க்கலாம்
மஹாராஷ்ட்ராவில் வாழ்ந்த பக்தை ஜனாபாய் எதைச் செய்தாலும், பாண்டுரங்கா என்று சொல்லித்தான் ஆரம்பிப்பாள். எந்தச் செயலும் பாண்டுரங்கனுக்கே அர்ப்பணிப்பதாகக் கருதிச் செய்வார். குடும்ப உறுப்பினர்களுக்கான எல்லாப் பணிகளையும் செய்து முடித்தவுடன், ஒவ்வொரு பிற்பகல் வேளையிலும் தரையை பசுஞ்சாணம் கொண்டு மெழுகி சுத்தம் செய்வார். மீதமுள்ள சாணத்தையும் “பாண்டுரங்கார்ப்பணம்” என்று சொல்லி தூர எறிந்து விடுவார். தான் செய்யும் ஒவ்வொரு காரியமும் பாண்டுரங்கனுக்கு அர்ப்பணிப்பதாகவே எண்ணிச் செய்வார். ஆகவே விளைவுகளையும் செயலையும் பாண்டுரங்கனுக்கே அர்ப்பணிப்பார்.
அந்த கிராமத்தில் பாண்டுரங்கர் கோயில் ஒன்று இருந்தது. ஜனாபாய் எறிகின்ற சாணம் ஒவ்வொரு நாளும் அந்த கோவிலிலுள்ள பாண்டுரங்க விக்ரஹத்தில் போய் ஒட்டிக் கொள்ளும். ஒவ்வொரு நாளும் இதை பார்த்த அர்ச்சகர் அதிர்ச்சியுற்றார்.
அவர் இந்த குற்றத்தை செய்பவர் யார் என்று அறிய முற்பட்டார். அடுத்த நாள் பிற்பகலில் ஜனாபாய் வீட்டிற்கு அருகில் வந்தபோது அன்று மிகுந்த சாணம் வீட்டிற்கு வெளியே வந்து விழுந்தது. உள்ளேயிருந்து பாண்டுரங்கார்ப்பணம் என்ற குரலும் கேட்டது.
அந்த செயல் செய்வது ஜனாபாய் என்று அறிந்து, அவளது வலது கையைப் பிரம்பு கொண்டு அர்ச்சகர் கோபத்துடன் நையப்புடைத்து விட்டார். ஜனாபாய் “பாண்டுரங்கார்ப்பணம்” “பாண்டுரங்கார்ப்பணம்” என்று சொல்லி அடிகளைப் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார். அர்ச்சகர் அடித்த அடிகளில் ஜனாபாயின் கைகள் துவண்டு, ஒன்றுக்கும் உதவாமல் போயிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு ஒன்றுமே ஆகவில்லை. அர்ச்சகர் கோவிலுக்குச் சென்று பார்த்த போது, பாண்டுரங்க விக்ரஹத்தின் வலது கை ஒடிந்து கீழே விழுந்து கிடந்தது. அப்போது தான் ஜனாபாயின் பெருமையை உணர்ந்தார். அவர் ஒரு புனித ஆத்மா என்பதை அறிந்து, அவரிடம் அர்ச்சகர் மன்னிப்பை வேண்டினார்.
ஜனாபாயைப் பற்றி மற்றுமொரு கதை உண்டு. அவர் சாணத்தைக் கொண்டு வரட்டிகள் தட்டும் போது “பாண்டு ரங்கார்ப்பணம்” என்று சொல்லித் தட்டி, வெய்யிலில் காய வைப்பார். அதை அடுப்பிலிட்டு எரிக்கும் போது அதிலிருந்து வெளி வருகின்ற புகையிலிருந்து, ‘பாண்டுரங்க பாண்டுரங்க’ என்ற ஒலி எழும். அனைத்து வரட்டிகளும் பாண்டுரங்கனுடையவை.
ஒவ்வொரு நாளின் முடிவிலும், நம்முடைய அன்றைய அனைத்துச் செயல்களையும், தீமைகளை ஒழிக்கின்ற இறைவன் சிவபெருமானுக்கே என்று அர்ப்பணித்து விடவேண்டும். நாம் இவ்வாறு பணிவுடன் செய்தால் நமது செயல்கள் அனைத்தும் சிவபெருமானால் ஏற்றுக் கொள்ளப்பட்டு புனிதமாக்கப்படுகின்றன. ஆகவே நாம் அவருக்கு அர்ப்பணிக்கத் தகுந்த நற்காரியங்களே செய்ய முனைவோம்.
[Illustrations by Sai Easwaran, Sri Sathya Sai Balvikas Student]
[Source: Sri Sathya Sai Balvikas Gurus Handbook – Year I]