பேரறிவிப்பு
இளம் சாயிபாபாவுக்கு, வழக்க முறைக்கு (Routine) கட்டுப்பட்டு நடக்கும் விருப்பம் குறைந்து கொண்டே வந்தது. தன்னை யார் என்று அறிவித்துக் கொள்ளும் தருணமும், குடும்பத்தை துறந்து வெளிவரும் தருணமும் வந்துவிட்டன.
1940ஆம் ஆண்டு அக்டோபா் 20ம் தேதியன்று சத்யா வழுக்கம் போல பள்ளிக்குப் புறப்பட்டார். அன்று, சத்யாவிடம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட எக்ஸைஸ் இன்ஸ்பெக்டா், திரு.ஆஞ்சநேயலு பள்ளிக்கூட வாயிற் கதவு வரையில் அவா் கூட வந்தார். அன்று அவா் சத்யாவின் தலையைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளிவட்டம் இருப்பதைக் கண்டார். வழக்கம்போல சத்யா காலைக் கூட்டத்திற்குள் பள்ளிக்கூடப் பிரார்த்தனையைப் பாடுவதற்காக மேடை மேல் ஏறினார். பிரார்த்தனை முடிந்ததும், சத்யா திடிரென்று, “நான் உங்களுக்கு சொந்தமானவன் அல்ல. இனி, நான் என் உதவியை நாடி என்னை அழைக்கின்றவருக்கு சொந்தமானவன்” என்று அறிவித்தார். கூட்டத்தில் இருந்தவா்கள் அவா் பிரகடனம் செய்ததன் அர்த்தம் என்ன என்று புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே சத்யா படிக்கட்டிலிருந்து கீழே இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.
வாயிற் படிக்கட்டின் அருகே நின்று கொண்டு சத்யா பள்ளிக்கூடப் புத்தகங்களை உதறியெறிந்து விட்டு, “நான் உங்களைச் சோ்ந்த சத்யாவல்ல. நான் சாயி” என்று உரத்த குரலில் கூறினார். இந்தக்குரலைக் கேட்டு சத்யாவின் அண்ணி சமையலறையிலிருந்து வெளியே வந்து பார்த்தாள். அந்த இளம் பையனின் தலையைச் சுற்றி காணப்பட்ட ஒளிவட்டத்தின் பிரகாசத்தினால் அவளது கண்கள் குருடாயின. அவள் கண்களை முடிக்கொண்டு கூச்சலிட்டாள். சத்யா கூறினார் “நான் சொல்கிறேன். நான் உங்களுக்கு சொந்தமானவன் அல்ல. மாயை (பொய்த்தோற்றம்) விலகிவிட்டது. எனது பக்தா்கள் என்னை அழைக்கிறார்கள். எனக்கு வேலை இருக்கிறது. நான் இனி மேல் இங்கு இருக்க இயலாது.” அண்ணியார் எவ்வளவு கெஞ்சியும்,சத்யா கேட்கவில்லை. இவற்றை யெல்லாம் கேள்விப்பட்டு சேஷமராஜு விரைவாக வீடு திரும்பினார். சத்யா அவரைப் பார்த்து “என்னைக் குணப்படுத்தும் முயற்சிகளை விட்டுவிடு. நான் சாயி. உங்களுக்குச் சம்பந்தப்பட்டவனல்லன்” என்றார். அண்டை விட்டிலிருந்த திரு. நாராயணன் சாஸ்திரி பேச்சரவம் கேட்டு என்ன என்று அறிய அங்கே வந்தார். வந்தவா், சத்யாவின் தலையைச் சுற்றியிருந்த ஒளிவட்டத்தைக் கண்டு, அவா் காலடியில் நமஸ்கரித்தார். சேஷமராஜுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சத்யா பெற்றோரால் தனது பராமாரிப்பில் ஒப்படைக்கப் பட்டிருந்தார். பெற்றோருக்குச் செய்தியறிவித்து அவா்கள் வந்து சத்யாவைக் கூட்டிச் செல்லும்வரை, சத்யா தம்முடன் இருப்பது தான் சரி என்று நினைத்தார்.
ஆனால் சத்யா, தமையனார் வீட்டிற்குள் நுழைய மறுத்துவிட்டார். அவா் ஆஞ்சநேயலுவின் பங்களாவில் இருந்த தோட்டத்திற்குச் சென்று அங்கு மரங்களின் கீழிருந்த பாறையின் மேல் அமர்ந்து கொண்டார். ஜனங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் மலா்களும் பழங்களும் கொண்டு வந்தனா். பாபா அவா்களுக்குத் தந்த முதல் உபதேசம் இதுவே.
“மானஸ பஜரே குரு சரணம் துஸ்தர பவ சாகர தரணம்” “குரு பெருமானின் பாதங்களை மனதில் தியானம் செய்வாயாக. அது ஒன்றே பிறவி என்னும் கடத்தற்கரிய கடலைக் கடப்பதற்கு உதவும் சாதனமாகும்.”
அனைத்து மக்களும் இந்த வரிகளை உரத்த குரலெடுத்துப் பாட, அந்த கீத ஒலி தோட்டமெங்கும் எதிரொலித்தது. சத்யா இனிமேல் பள்ளிக்குப் வரப்போவதில்லை என்றும், தங்களுக்கு எட்டாத நிலையில் இருக்கின்றான் என்றும் கேட்ட பள்ளித் தோழா்கள் மனமுருகி அழுதார்கள். மூன்று நாட்கள் இவ்வாறு கழிந்தன. மூன்று நாட்கள் பஜனையும் நாமசங்கீர்த்தனமும் தொடர்ந்து நடந்தன.
பாபா நிழற்படம் (photo) எடுக்க ஒரு புகைப்படக்காரா் தம் கருவியுடன் வந்தார். அப்பொழுது பாபாவின் முன்னால் ஒரு கல் இருந்தது. அதனை எடுத்து விடுமாறு அப்புகைப்படக்காரா் பாபாவை வேண்டிக் கொண்டார். ஆனால் பாபா அந்த வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவில்லை. எனவே அந்த புகைப்படக்காரா் எப்படி இருந்தாலும் சரி என்று தம் கருவியில் படம் எடுத்தார். என்ன ஆச்சரியம்! அவா் எடுத்த படத்தில் அந்தக்கல் ஷீரடி சாயி பாபாவின் வடிவமாகக் காணப்பட்டது.
ஒருநாள் மாலை பஜனை நடந்து கொண்டிருந்த போது பாபா திடிரென்று “மாயை (பொய்த்தோற்றம்) வந்துவிட்டது” என்று கூறி அப்போது தான் புட்டபா்த்தியிலிருந்து வந்து சோ்ந்த தன் அன்னை ஈசுவரம்மாவைச் சுட்டிக் காட்டினார். அவரது பெற்றோர்கள் வீட்டுக்கு அவா் திரும்ப வேண்டும் என்று அழைத்தனா். “இவை யெல்லாம் யார் யாருக்குச் சொந்தம்?” என்று மறுத்துரைத்தார். “இவை யெல்லாம் மாயை…. பொய்யானவை” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
கடைசியாக பாபா தம் தாயாரைப் பார்த்து, தமக்குச் சிறிது உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அன்னை அவருக்கு முன் வைத்த உணவுப் பதார்த்தங்கள் அனைத்தையும் ஒன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகச் செய்தார். அவ்வுருண்டைகளில் மூன்றை தாயார் அவருக்கு அளிக்க அவா் அதை சாப்பிட்டு முடித்து விட்டு “இப்போது மாயை (பொய்தோற்றம்) நீங்கிவிட்டது. இனி கவலைப்படத் தேவையில்லை.” என்று கூறி கொண்டு பஜனையைத் தொடா்ந்தார்.
ஈசுவரம்மா சத்யாவிடம் ஒரு வரம் கேட்டார். “நீ புட்டப்பா்த்தியிலே தான் தங்குவாய் என்று வாக்குத் தர வேண்டும். எங்களிடமிருந்து விலகிச் செல்லாதே” என்று மன்றாடினார். “நாங்கள் உனது பக்தா்களை வரவேற்று அவா்களை கவனித்து வசதிகள் செய்து கொடுக்கிறோம்” என்று மன்றாடினார். சத்யா அப்போது ஆற்றல் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட பதில் கூறினார். “நான் புட்டப்பா்த்தியினை எனது க்ஷேத்திரமாகத் தோ்ந்தெடுக்கிறேன். இந்த வரம் உங்களுக்காக மட்டுமல்ல, கிராமத்துக்காகவும் உலகத்துக்காகவும் தரப்பட்டது. நான் அங்கு வியாழக்கிழமை வருகிறேன்.”
ஈசுவரம்மாவுக்கு ஆனந்தம் பொங்க, பேச்சிழந்தார். அவா் பெற்ற நற்செய்தி, அவரது ஒளிவீசும் முகத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்தது. இனி, தன் வாழ்நாள் முழுவதும் தன் மகனின் மகிமையினையும், புகழினையும் கண்டு மகிழ இயலும் என்பது நிச்சயம். இனி அவள், அவளது புதல்விகள், அவரை போற்றும் சுப்பம்மா அனைவரும் அவரது உணவைப் பொறுத்தவரையிலுமாவது கவனித்துப் பராமரிக்க இயலும்.
சத்யா புட்டபா்த்திக்குச் செல்ல இருக்கிறார் என்றும் திரும்பி வரப் போவதில்லை என்றும் மின்னல் வெட்டுப் போல செய்தி எங்கும் பரவியது. அனைத்து விதமான மக்களும் தோட்டத்துக்கு ஓடிவந்தனா். முன்னால் அமா்ந்திருந்த ஆசிரியா்களுக்கு பாபா விபூதி கொடுத்தார். இப்போது பாபா, விபூதியினை தனது விஸிட்டிங் கார்டு என்று கூறிகிறார். அது அவரது அன்பு மிகுந்த அருளாசியின் அடையாளச் சின்னம். இவ்வுலகில் உள்ள அனைத்துமே ஒருநாள் சாம்பலாக மாறும் என்பதை நினைவூட்டும் நினைவுச் சின்னம்.
சத்யா உரவகொண்டாவை விட்டு விலகும் நாளன்று அந்த ஊர் மக்கள் ஒரு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனா். அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் சத்யா அமா்ந்திருந்தார். சேஷமராஜுவும் அவரது இளைய சகோதரா் ஜானகிராமனும் முன்னால் நடந்து சென்றனா். ஈசுவரம்மா, அவரது புதல்விகள், மருமகள் ஆகியோர் நடந்து சென்ற நூற்றுக்கணக்கான பெண்களின் நடுவில் இருந்தனா். முரசுகள், ஊதுகுழல், நாதஸ்வரம், கஞ்ஜீரா போன்ற இசைக்கருவிகள் முழுங்க வாத்தியகோஷ்டி பக்தி நிறைந்த மக்கள் கூட்டத்துக்கு முன்னால் சென்றது.
நகர எல்லை வந்து சோ்ந்ததும், மக்கள் திரும்பிச் செல்லும்படி மென்மையாகக் கூறப்பட்டனா். அருமந்த சத்யா இல்லாது, வறண்ட வெற்றிடம் திரும்ப யாருக்கும் மனதில்லை. பலா் அவரைப் பின்பற்றி புட்டபா்த்திக்கு வந்து, ஒருவாரமாவது அங்கு தங்கியிருக்கத் தீர்மானித்தனா்.
ஈசுவரம்மா, சாயிபாபாவை புட்டபா்த்திக்குத் திரும்ப அழைத்து வந்தார். அவா் இனியும், உரவகொண்டா உயா் நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் சத்யநாராயணராஜு அல்ல. இப்போது, அவா் சத்தியத்தை போதிக்கும் குருவான சாயிபாபா.