இளம் பருவக்கதைகள் – III
சத்யாவின் பெற்றோர்கள் அவர் உயர் நிலைப்பள்ளியில் படிக்க வேண்டுமென்று விரும்பினர். சத்யா கமலாபுரத்துக்குச் சென்று அங்கு தன் அண்ணன் சேஷமராஜுவுடன் வசிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அமைதியான நன்னடத்தையுள்ள சிறுவனாக இருந்ததால் சத்யா கமலாபுரம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் பிரியத்துக்கு உகந்தவராக இருந்தார்.
அப்பள்ளியில் இருந்த சாரணத்தலைவர் சத்யாவை தனது இயக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மிக ஆவலுடன் இருந்தார். ஆகவே நேரடியாகவும் தோழர்கள் மூலமாகவும் சத்யாவை அதில் சேருமாறு தூண்ட முயற்சி செய்தார். அந்த சமயம் சத்யாவிடம் ஒரே ஒரு சட்டையும் இரண்டு காற்சட்டைகள் மட்டும்தான் இருந்தன. அவற்றை மிக கவனத்துடன் பராமரித்து வந்தார். தினமும் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியதும் துண்டினால் தன்னை சுற்றிக் கொண்டு தன் துணிகளை துவைப்பார். நிலக்கரியால் ஆன நெருப்பு துண்டுகள் கொண்ட பித்தளை பானையைக் கொண்டு இஸ்திரி போடுவார். சரியான மடிப்புகள் கொண்டு வர சட்டையினையும் காற்சட்டைகளையும் ஒரு கனத்த தகரப்பெட்டியின் அடியில் இரவில் வைப்பார். இவ்வாறு அவர் துணிகள் தூசு இல்லாமலும் மடிப்பு கலையாமலும் எப்போதும் இருந்தன.
புஷ்பகிரியில் நடக்கும் திருவிழாவிற்கும் அங்கு நடைபெரும் கால்நடை கண்காட்சிக்கும் சாரணர் படை செல்வதாக இருந்தது. தவறிப்போன குழந்தைகளை கண்டுபிடித்து தாய் தந்தையிடம் சேர்ப்பதும், யாத்ரீகர்களுக்கு குடிதண்ணீர் கொடுப்பதும், சுகாதாரத்தை கண்காணிப்பதும், கால்நடை கண்காட்சியிலே முதலுதவி செய்வது, போன்ற வேலைகளை இவர்கள் செய்ய உத்தேசித்திருந்தார்கள்.
ரமேஷ் என்ற பெயருள்ள சக மாணவன் சத்யாவிடம் சாரணர் உடுப்பு இல்லை என்று அறிந்து ஒரு உடுப்பு நன்கொடையாக தர விரும்பினான்.
நன்கொடைதருதல் அவர்களது நட்பைகெடுக்கும் என்று கூறினார். உண்மையான நட்பு இதயத்திலிருந்து இதயத்துக்குத் தொடர்புள்ளதாக இருக்க வேண்டுமே தவிர பொருட்களை கொடுக்கல் வாங்கல் செய்வதில் அமையலாகாது என்றார்.
முகாமுக்கு உள்ள கட்டணம்- போக வர செலவு-ஒரு பையனுக்கு ரூ.12- சாரணர் படை முகாமுக்குச் செல்லும் தினத்தன்று கையில் செலவுக்குப் பணமில்லாத சத்யா வயிற்று வலியால் துன்பப்படுவது போல் நடித்து படுத்துக் கொண்டார்.
மற்ற பையன்கள் அனைவரும் பஸ்ஸில் சென்ற பிறகு அவர் எழுந்திருந்து, ஒன்பது மைல்கள் நடந்தே சென்று புஷ்பகிரியை அடைந்தார். அங்கு தன்னலமற்ற சேவை செய்வதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து சகமாணவர்களை ஊக்குவித்தார். ஊருக்குத் திரும்பும் நேரம் வந்தபோது அவர் யாரும் காணாமல் முகாமிலிருந்து மறைந்து சென்று முழுத்தொலைவும் நடந்து திரும்பினார். யாரும் அவர் திரும்பியதை அறியவில்லை.
இவ்வாறு தன் குழந்தை பருவத்திலிருந்தே ஸ்வாமி சமூகத்திலிருந்த கெட்ட குணங்களை விலக்குவதிலும் நற்குணங்களை வளர்ப்பதிலும் ஈடுபட்டிருந்தார்.
பின்னர், சேஷமராஜு உரவகொண்டா உயர் நிலைப்பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட்ட போது சத்யாவும் அவருடன் கூடச் சென்றார். பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியரும் சத்யாவைப் பற்றி சிலர் பெருநன்மதிப்புக் காரணமாகவும், சிலர் அறிவார்வம் காரணமாகவும் முடிந்த அளவு தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். சத்யா விரைவிலேயே பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல, உரவக்கொண்டா நகரத்திலும் கூட அனைவரின் அன்புக்கும் பாத்திரமானார். வகுப்புகள் தொடங்குமுன் பாடும் காலை வணக்கப் பாடல்களை அவரே முன்னின்று பாடினார். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவரவர்களது பொறுப்பான கடமைகளை நிறைவேற்ற அவரே ஊக்குவித்து ஆர்வமூட்டியதாகத் தோன்றியது. சத்யாவின் அபாரமான இசைத்திறமை, இலக்கியத்திறமை, நாடகம் எழுதும் திறமை இவையனைத்தும் ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்தது. நாடகக் குழுவின் தலைவரான ஆசிரியர் சத்யாவை ஒரு நாடகம் எழுதும்படி கேட்டுக் கொண்டார். சத்யாவும் மிகுந்த உற்சாகத்துடன் நாடகம் எழுதத் தொடங்கினார். நாடகத்தின் தலைப்பு “செப்பினட்டு சேஸ்தாரா?” என்பதாகும். “சொன்னபடி செய்கிறார்களா?” என்ற இந்த நாடகம் வெற்றிகரமாக நடைபெற்றது. மனிதன் பிறருக்குத் தரும் நல்லுபதேசங்களை தான் பின்பற்றுவதில்லை என்பதே தலைப்பின் சாராம்சம். பன்னிரண்டு வயதான சத்யாவே இந்த நாடகத்தில் முக்கிய பங்கேற்று தத்ரூபமாக நடித்து அதன் உட்கருத்தை அனைவருக்கும் உணர்த்தினார். சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக இருத்தல், வெறும் கபட நாடகம், வெளிவேஷம், பாசாங்கு, ஆகியவை கூடாது என்பது இந்நாடகத்தின் மூலம் சக மாணவருக்கு, ஆசிரியருக்கு, கிராமத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நாடகம் பெரியோர்களின் கண்களைத் திறந்தது. இது சத்யாவின் தீர்க்க தரிசனத்தையும் உண்மையான கல்விக்குள்ள ஆர்வத்தையும் வெளிக்காட்டியது.
[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]